மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: ராஜ்குமார் - 18

குடும்பத்துடன் இயக்குநர் ராஜ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் இயக்குநர் ராஜ்குமார்

‘ரங்கூன்’ படத்திற்காகப் பல எபிசோடு கஷ்டங்களைக் கடந்திருக்கிறார்...

பர்மா தமிழர்களின் பின்னணியை சஸ்பென்ஸ் த்ரில்லர் தளத்தில் பதிவு செய்தவர், ‘ரங்கூன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. பொதிகை டிவியில் பார்த்த படங்கள் ஒருவரை இயக்குநர் கனவுக்கு இழுத்துச் செல்லுமா... சென்றது என்கிறார் ராஜ்குமார்.

Title Card: Director Raj kumar
Title Card: Director Raj kumar

“பூர்வீகம், இராமநாதபுரம் மாவட்டத்துல இருக்கிற பரமக்குடி. நான் பிறந்து வளர்ந்தது புழல் ஏரிக்குப் பக்கத்துல தண்டல்கழனி கிராமம். எனக்கு மணிவண்ணன், பாலகுமார்னு ரெண்டு தம்பிங்க. ஒருத்தர் ஐ.டியில வேலை பார்க்கிறார். இன்னொருத்தர் நெட்வொர்க் இன்ஜினீயரா இருக்கார். நாங்க ஒரு மிடில்கிளாஸ் குடும்பம்'' என்றவருக்கு, பொதிகை டிவியில் ஒளிபரப்பான படங்கள் ஏதோவொரு தாக்கத்தை விதைத்திருக்கின்றன.

அப்பா-அம்மாவுடன்
அப்பா-அம்மாவுடன்

“தாத்தாவும், சித்தப்பாவும் நிறைய புத்தகங்கள் படிப்பாங்க. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே நானும் கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து படைப்புகள், சுபா, ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள், காமிக்ஸ் கதைகள், ஆனந்த விகடன்... இப்படி வரையறை இல்லாம வாசிச்சுக்கிட்டிருந்தேன். வீட்டுல கேபிள் கனெக்‌ஷன் கிடையாது. பொதிகை டிவிதான் என் வீட்டுல ஒரே பொழுதுபோக்கு.

என் மனசை அடிக்கடி பாரமாக்குறதுல பொதிகை டிவிக்குப் பெரிய பங்கு இருக்கு. அதுல மாநில மொழிப் படங்கள் ஒளிபரப்புவாங்க. ஒரியா, மராட்டிய சினிமாக்கள் வரும். சமயத்துல தமிழ்ப்படங்களும் வரும். நான் பார்த்த வழக்கமான சினிமாக்களில் இருந்து பொதிகையில் பார்த்த ‘வீடு’, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘மூன்றாம்பிறை’ன்னு பல படங்கள் புதுசாத் தெரிஞ்சது. அந்த பாதிப்பு ஏன்னு அம்மா, அப்பாகிட்ட கேட்டப்போ, ‘ஒவ்வொரு படத்துக்கும் இயக்குநரோட திறமைதான்டா காரணம்’னு சொன்னாங்க. அப்போதான் இயக்குநர் என்பவர் யார்னு தெரிஞ்சதோடு, அந்தத் தொழில்மீது அதீத மரியாதை வந்தது.” ஆனால், ராஜ்குமாருக்கு இயக்குநர் கனவு அப்போது இல்லை.

“ப்ளஸ் டூ முடிச்சதும், இன்ஜினீயரிங் சேரக்கூடாது என்பதுல மட்டும் தெளிவா இருந்தேன். ஏன்னா, எல்லோருமே அதைத்தான் படிச்சுக்கிட்டிருந்தாங்க. இன்ஜினீயரிங் சீட் கிடைச்சாலும், ‘விஸ்காம்’தான் படிப்பேன்னு சொல்லி, லயோலா காலேஜ்ல சேர்ந்தேன்.

குடும்பத்துடன் இயக்குநர் ராஜ்குமார்
குடும்பத்துடன் இயக்குநர் ராஜ்குமார்

அங்கே இராஜநாயகம், ஜெரோம், விக்டர், சுரேஷ்னு நல்ல ஆசிரியர்கள் இருந்தாங்க. அவங்க பாடத்திட்டமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. படம் பார்க்கலாம், விவாதிக்கலாம், டிராமா போடலாம்... இப்படியே இருந்த கல்லூரி வாழ்க்கை அலாதி இன்பம்தான். இறுதியாண்டு படிக்கும்போது, விஜய் டிவியில ‘இன்டர்ன்ஷிப்’ பண்ற வாய்ப்பு கிடைச்சது. அது, படிப்பு முடிஞ்சதும் விஜய் டிவியிலேயே வேலைக்குச் சேரவும் உதவியா இருந்தது.

அதே சமயத்துல கே.எஸ்.ரவிக்குமார், விஷ்ணுவர்தன் இவங்ககிட்ட உதவி இயக்குநரா சேரவும் வாய்ப்பு வந்தது. தம்பிங்க ரெண்டுபேரும் படிச்சுக்கிட்டிருந்ததால, பொறுப்பை உணர்ந்து விஜய் டிவியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன்.” இயக்குநர் ஆகும்வரை விஜய் டிவி மட்டும்தான் ராஜ்குமார் வேலை பார்த்த ஒரே இடம்.

“2005-ல் வேலைக்குச் சேர்ந்தேன். ‘அழகி’ நிகழ்ச்சியில ஆரம்பிச்ச பயணம், ‘சூப்பர் சிங்கர்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘விஜய் அவார்ட்ஸ்’, ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘பிக் பாஸ்’ வரை தொடர்ந்தது. விஜய் டிவி வேலையை விடும்போது, நான் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா இருந்தேன். மனசுக்குப் பிடிச்ச வேலை, நல்ல சம்பளம்... ஆனா, உதவி இயக்குநரா சேர்ந்திருக்கலாமோன்னு அடிக்கடி தோணும். பிறகு ஒருநாள், ‘இனி சினிமாதான்’னு முடிவெடுத்தேன்.

தம்பியுடன்...
தம்பியுடன்...

உதவி இயக்குநர்களுக்கு அப்போ சினிமா உலகில் போட்டி அதிகம். இப்போ குறும்பட இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிற மாதிரியான சூழல் அப்போ இல்லை. விஜய் டிவி மகேந்திரன் சார் வழியா முருகதாஸ் சாரைச் சந்திச்சு அவர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன்.” ‘முருகதாஸின் உதவி இயக்குநர்’ என்பது மட்டுமல்ல, அவரிடம் வேலை பார்த்த அனுபவமும் அத்தனை சுவாரஸ்யமானது என்கிறார் ராஜ்குமார்.

“அப்போ அவர் ‘ஏழாம் அறிவு’ படத்துல பிஸியா இருந்தார். ‘துப்பாக்கி’ படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் நடந்துகிட்டிருந்தது. நான் ‘துப்பாக்கி’ பட வேலைகளைப் பார்த்துக்கிட்டேன். முருகதாஸ் சாரைப் பற்றி வெளியே யாரும் என்னவும் பேசட்டும். அவர் எப்படின்னு அவர்கிட்ட வேலை பார்த்தவங்களுக்குத்தான் தெரியும். அவர்கிட்ட இருந்துகிட்டே, வெளியே ஏதாவது வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சாலும் ‘பண்ணுங்க’ன்னு என்கரேஜ் பண்ணுவார். ‘அதை என் உதவி இயக்குநர்தான் பண்ணுனான்’னு சொல்றதுல அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ‘துப்பாக்கி’ ப்ரீ புரொடக்‌ஷன் டு ரிலீஸ் வரை மூணு வருடம் அவர்கூட இருந்தேன். கிடைக்கிற நேரத்துல மூணு கதையை எழுதி வெச்சிருந்தேன்.” படிப்பு, வேலை, சினிமா என மூன்றே எபிசோடில் ராஜ்குமாரின் இயக்குநர் கனவு ஜம்ப் ஆனாலும், ‘ரங்கூன்’ படத்திற்காகப் பல எபிசோடு கஷ்டங்களைக் கடந்திருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்
ஷூட்டிங் ஸ்பாட்

“நான் ‘ரங்கூன்’ கதையை எழுதும்போதே, ‘கெளதம் கார்த்திக்தான் சரியான சாய்ஸா இருப்பார்’னு நண்பர்கள்கிட்ட சொல்வேன். நினைச்சமாதிரி, அவரே இந்தப் படத்துல கமிட்டானது சந்தோஷம். 2012 டிசம்பர் மாசம். ‘ரங்கூன்’ படத்தைத் தொடங்கினோம். தயாரிப்பாளர்கிட்ட இருந்து அட்வான்ஸ் பணத்தை வாங்கும்போது, ‘இயக்குநர் ஆகிட்டோம்’னு முகம் முழுக்கச் சிரிப்பு. ஆனா, அடுத்த ரெண்டு மாசத்துல தயாரிப்பாளர்கள் காரணமே சொல்லாம படத்தைக் கைவிட்டுட்டாங்க. பிறகு, வேறொரு தயாரிப்பாளர் கிடைக்க, இரண்டாவது முறையா படத்தைத் தொடங்கி வேகமெடுத்தோம். போட்டோஷூட் முடிஞ்சதோடு, படம் திரும்ப ட்ராப் ஆனது.

நிறைய பரிதவிப்பு, வலி, வேதனையோடு சுத்திக்கிட்டிருந்த அந்தச் சமயத்துலதான், முதல்முதலா ‘ரங்கூ’னைத் தயாரிக்கிறதா இருந்து கைவிட்டவர், முருகதாஸ் சார்கிட்ட ‘என்னால பண்ண முடியலைன்னாலும், அது ரொம்ப நல்ல கதை’ன்னு சொல்லியிருக்கார். உடனே என்னைக் கூப்பிட்ட முருகதாஸ் சார், ‘ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லலை’ன்னு அதட்டி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுக்குப் போன் போட்டார். ஃபாக்ஸ் ஸ்டாருக்கு ‘ரங்கூன்’ கதையைச் சொன்னேன், அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. 2014 நவம்பர் மாதம் மறுபடியும் படம் ஆரம்பமானது.” 2015-ல் ஷூட்டிங் முடிந்த படம், 2017-ல் ரிலீஸ் ஆனதற்கும் ஒரு பின்கதை இருக்கிறது.

“எங்க தாத்தா, பாட்டி பர்மால வேலை பார்த்துட்டுத் திரும்பியவங்கதான். நானும் சென்னை பர்மா பஜார்ல நிறைய சுத்தியிருக்கேன். அதனால, யாரும் தொடாத அந்த ஏரியாக் கதையை நாம சொல்லலாம்னு முடிவெடுத்துதான் கதை எழுதினேன்.

ஆனா, படத்தை இணைந்து தயாரிச்ச ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ‘ரங்கூன்’ படத்தை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையா மட்டும்தான் பார்த்தது. நேரத்தைக் குறைக்கணும்னு அதுல இருந்த வாழ்வியல்ல கைவெச்சாங்க. டீட்டெயிலிங் பண்ணிவெச்சிருந்த காட்சிகளின் ‘தலை - வால்’ ரெண்டையும் வெட்டவேண்டிய கட்டாயம். வேற வழியில்லாம வெட்டினோம். இப்போவும், எனக்கு அந்த வாழ்க்கையை முழுசா பதிவு பண்ணமுடியாமப்போன வருத்தம் இருக்கு” என்பவருக்கு, குடும்பம்தான் அத்தனை சூழல்களிலும் பெருந்துணை.

கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்

“இதைத்தான் படிக்கப்போறேன்னு சொன்னப்போவும் சரி, இந்த வேலைக்குத்தான் போகப்போறேன்னு சொன்னப்போவும் சரி, வேலையை விட்டுட்டு சினிமாவுல சேரப்போறேன்னு சொன்னப்போவும் சரி, எடுத்த படம் ரிலீஸுக்கு லேட் ஆகும்போதும் சரி... எந்தச் சூழலிலும் என் குடும்பம் என்னை மன அழுத்தத்துக்கு ஆளாக விட்டதில்லை. சுருக்கமா சொன்னா, என் பொதியை அம்மா அப்பா, தம்பிகள், என் மனைவின்னு எல்லோரும் சேர்ந்து சுமந்தாங்க. மனைவி ஜஸ்வினி நல்ல தோழி, உறுதுணை, ஊக்கம்.’’ இவர்களின் காதலுக்கு சாட்சி மகன் கிருஷ் அபிஜித்.

``இப்போ, உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஒரு கதை, ஆக்‌ஷன் த்ரில்லர் கதை, பயோபிக்... இப்படி மூணு கதை ரெடியா வெச்சிருக்கேன். சீக்கிரமே ஒரு படத்துக்கான அறிவிப்பு வரும்!” என்கிறார், ராஜ்குமார் பெரியசாமி.

- கே.ஜி.மணிகண்டன்