மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: ரமேஷ் - 20

குடும்பத்துடன் இயக்குநர் ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் இயக்குநர் ரமேஷ்

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக இயக்கிய குறும்படங்கள், ‘தெகிடி’ படம் என் வாழ்க்கையில ரொம்ப வேகமா நடந்த விஷயங்கள்’

ன்ஷூரன்ஸ் நிறுவனத்தை மையப்படுத்தி நடக்கும் ரத்த வேட்டையைத் ‘தெகிடி’ என்ற த்ரில்லர் கதையாகச் சொல்லி கவனம் ஈர்த்தவர், ரமேஷ். ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’ டைட்டில் வின்னர்.

“அப்பா பழனிக்குப் பூர்வீகம் தஞ்சாவூர், அம்மா குமாரிக்குப் பூர்வீகம் திருப்பதி. சின்ன வயசுலேயே அவங்க சென்னையில செட்டில் ஆகிட்டதால, நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான். அப்பா தாம்பரம் ‘மெப்ஸ்’ல ஒப்பந்த அடிப்படையில் கேட்டரிங் பண்ணிக்கிட்டிருந்தார். அக்கா மீனா, நான், தம்பி செந்தில்... அழகான மிடில் கிளாஸ் குடும்பம் நாங்க.

Title Card
Title Card

குடும்பத்துல யாருக்கும் சினிமாப் பின்னணி கிடையாது. எனக்கும் சினிமா இயக்குநர் ஆசை சின்ன வயசுல இருந்தெல்லாம் இல்லை. ஓரளவுக்குப் படிப்பேன். ரொம்பத் தீவிரமா ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். எங்க குடும்பத்துல யாரும் முழுநேரக் கல்லூரியில படிச்சதில்லை. நானும் ப்ளஸ் டூ முடிச்ச பிறகு, கம்ப்யூட்டர் கத்துக்கிட்டு, புரொகிராமர் ஆகிடணும்னு தான் நினைச்சேன், அதையே படிச்சேன்.” படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்தால், அழுது அடம்பிடித்து வேண்டாமெனச் சொன்ன ரமேஷ், இன்று இயக்குநர்.

“ஏன்னு தெரியல... ஆறேழு வயசுல எல்லோருக்கும் படம் பார்க்கிறப்போ கிடைக்கிற அனுபவம் எனக்குக் கிடைக்காது, ‘அவ்ளோ நேரம் உட்கார்ந்திருக்கணுமே!’ன்னு நினைச்சு, வரமாட்டேன்னு சொல்லிடுவேன். ஆனா, அதுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தின் முதல் காட்சியே எனக்குப் பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. பிறகு, ஷங்கர் சார் படம் பார்த்தேன். பிறகென்ன... மணிரத்னம் படங்களின் அழகியல், ஷங்கர் படங்களின் பிரமாண்டம் ரெண்டும் என்னைத் தொடர்ச்சியா சினிமா பார்க்கிற ஆர்வத்தைத் தூண்டுச்சு. தினமும் சினிமா பார்க்க ஆரம்பிச்சேன். ஆனா, மனசுல இருந்த ஆசையெல்லாம் கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆகணும்ங்கிறதுதான்; ஆகிட்டேன்.

குடும்பத்துடன் இயக்குநர் ரமேஷ்
குடும்பத்துடன் இயக்குநர் ரமேஷ்

சென்னை நந்தனம் ஏரியாவில் ஒரு மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைக்குச் சேர்ந்தேன். விஷூவல் பேசிக், ஜாவா படிச்சு, புரொகிராமர் ஆனேன். பிறகு, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புராஜெக்ட் லீடர். வேலையில் வளர்ச்சி இருந்தாலும், என் சிந்தனை யெல்லாம் சினிமாவுலதான் இருந்தது. எல்லோரும் ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதுக்காக உழைக்கணும்னு சொல்வாங்க. நான் சினிமாதான் இலக்குன்னு தீர்மானிச்சுட்டேன். ஆனா, அதுல என்ன ஆகப்போறோம்னு ஐடியா இல்லை. கட் பண்ணுனா... எனக்குக் கல்யாணம்.

மனைவி ஹரிப்ரியா. இன்ஜினீயரிங் படிச்சவங்க; என்கூட வேலை பார்த்தவங்க. ரெண்டுபேருக்கும் நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருந்தது, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ எங்களுக்கு கெளதம்னு ஒரு பையன்.” திருமணத்திற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து, ‘இயக்குநர் ஆவது’ எனத் தீர்மானித்திருக்கிறார் ரமேஷ்.

“சின்ன வயசுல எனக்கு காமிக்ஸ் படிக்கிற பழக்கம் இருந்தது. கடைக்குப்போற அப்பாகிட்ட அடம்பிடிச்சு காமிக்ஸ் வாங்கிட்டு வரச்சொல்லிப் படிச்சிருக்கேன். சினிமாவுல என்ன ஆகலாம்னு முடிவெடுக்க பழைய ஆர்வங்களை யெல்லாம் புரட்டிப் பார்த்தப்போ, ‘கதை சொல்லி’ ஆகலாம்னு தோணுச்சு. சினிமாவுல கதை சொல்லி இயக்குநர்தானே!

Title Card: Director Ramesh
Title Card: Director Ramesh

நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். திரைக்கதை எழுதுவது எப்படின்னு தேடித் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பவே சினிமாவுக்காக ரெண்டு, மூணு கதைகளை எழுதினேன். ‘நீங்க சினிமாவுக்குப் போகலாம். செட் ஆகலைன்னா, திரும்ப வந்திடலாம். ஒரு பிரச்னையும் இல்லை’ன்னு சொல்ல, மாரல் சப்போர்ட்டா மனைவி இருந்தாங்க. வீட்டுக்கும் நான் பொறுப்பான பையனா இருந்ததால, என் முடிவுக்கு ‘சரி/தவறு’ங்கிற பரிசீலனை நிலையே வராது. ஏன்னா, நான் அவங்களுக்குத் தேவையானதையும் பண்ணிக் கொடுத்துட்டுதான், படம் பண்ணனும்ங்கிறதுல தெளிவா இருந்தேன்” என்பவர், தொடர்ந்தார்.

“இயக்குநர் ஆகணும்னு முடிவெடுத்த பிறகு, ‘கெளடில்யன்’ என்ற குறும்படத்தை இயக்கினேன். அந்தக் குறும்படம் என்னை ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’ நிகழ்ச்சியில் நிறுத்தியது. அந்த சீஸனில் சிவநேசன் சார் எனக்குப் பெரிய பக்கபலமா இருந்தார்.

நான் எழுதுற கதைகளுக்கு என் மனைவி, பார்வையாளர் பார்வையில் அவங்க கருத்தைச் சொல்வாங்க, விமர்சனம் பண்ணுவாங்க. அவங்க கருத்து எனக்குப் பெரிய உதவியா இருக்கும். என் தம்பி செந்தில், என் குறும்படங்களுக்கு உதவி இயக்குநர் மாதிரி வேலை பார்த்துக் கொடுப்பார். இப்படியான ஆதரவோடு, குறும்படங்கள் இயக்கிக்கிட்டே வேலையிலும் தொடர்ந்தேன். காரணம் என்னன்னா, எல்லோரும் கரியரைத் தொடங்கும்போது ‘இங்கேயிருந்து அங்கே போகணும்’னு ஒரு இலக்கு வெச்சிருப்பாங்க. ஆனா, நான் அப்படி எந்தக் கம்பெனிக்கும் மாறமாட்டேன். அப்படி இருக்கும்போது வேலையில ஒரு கம்போர்ட் ஜோன் கிடைக்கும். அந்த வளையத்துக்குள்ளே இருந்துக்கிட்டு, நான் என் சினிமா கனவுகளை நோக்கி ஓடுனா, யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது இல்லையா! தவிர, சினிமா நமக்குள்ளே முழுமையா இருந்தா, அதுவே நம்மளை இழுத்துப் பிடிச்சு அதுகூட சேர்த்துக்கும். அதனால, நான் வேலையை விடல; சினிமா என்னை விடல!” என்பவர், தனி ஒருவனாகத் திரிந்த ‘நாளைய இயக்குநர்’ அனுபவங்களைச் சொன்னார்.

“எப்பவுமே நான் எனக்கு என்ன வருதுன்னு தெரிஞ்சுக்கிறதுல ஆர்வமா இருப்பேன். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில்கூட எல்லோரும் ஒரு குழுவா இருப்பாங்க, நான் தனியா இருப்பேன். மத்தவங்களோடு கதை விவாதம் பண்ணக்கூடாதுன்னு இல்லை. இயற்கையான ஒரு படைப்பு என்கிட்ட இருந்து உருவாகணும்னு நினைப்பேன். நான் பண்ற தப்பை நானே திருத்திக்கணும், பிறகு நானே நல்ல படைப்பைக் கொடுக்கணும்னு நினைப்பேன். எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல்களில் இருக்கிற தனித்துவம் ஒரு சினிமாவுக்கும் இருக்கணும். அதுக்கு, இந்த ‘யுனிக்’ தகுதி எனக்குத் தேவையா இருந்தது. நாளைய இயக்குநர்ல ‘கெளடில்யன்’, ‘அடர்நிழல்’, ‘பரமபதம்’, ‘கைக்குள் சொர்க்கம்’, ‘பார்த்திபன்’, ‘பாடவிதானம்’, ‘பரிதி மாறன்’ ஆகிய குறும்படங்களை இயக்கினேன், டைட்டில் வின்னர் ஆனேன்.

பெற்றோருடன்
பெற்றோருடன்

பிறகு, சினிமா இயக்கலாம்னு யோசிக்கும்போது, ஒடிசாவில் இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்றதுக்காக ஒருவர் தன் மனைவியைக் கொலை பண்ணுன விஷயத்தைச் செய்தியில் படிச்சேன், ‘தெகிடி’ ஐடியா கிடைச்சது. அதிலிருந்து தொடங்கி, அதை ஒரு திரைக்கதையா எழுதி முடிச்சதும்

சி.வி.குமார் சார்கிட்ட படிக்கக் கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘உடனே பண்ணலாம்’னு சொல்லிட்டார். நான் நின்னு நிதானமா ஓடுற கேரக்டர். நான் உருவாக்குற படைப்பு முதல்ல எனக்குத் திருப்தியா இருக்கணும்னு மெனக்கெடுகிற ஆள். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக இயக்கிய குறும்படங்கள், ‘தெகிடி’ படம் என் வாழ்க்கையில ரொம்ப வேகமா நடந்த விஷயங்கள்” என்பவர், ‘தெகிடி’க்குப் பிறகான இடைவெளி குறித்து விவரித்தார்.

“இந்த இடைவெளியில் நான் இயங்கிக்கிட்டுதான் இருந்தேன். வேலை பார்த்தேன், கதை எழுதினேன். ‘தெகிடி’ படத்துக்குப் பிறகு எல்லோரும் ‘தெகிடி 2’ எடுக்கலாம்னு சொன்னாங்க. முதல் படத்துக்குப் பிறகு, பார்ட் டூ எடுக்கிற ஐடியா எனக்கு அப்போ இல்லை. இதுக்கிடையில ஒரு கன்னடப் படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணச் சொல்லியும் கேட்டாங்க. பார்ட் டூ, ரீமேக் எதையும் பண்ணக்கூடாதுன்னு இல்லை. இயக்குநரா அறிமுகமான சமயத்துல அது சரிவருமான்னு ஒரு தயக்கம். அதனால தவிர்த்தேன்.

தவிர, கிடைச்ச நேரத்துல ஃபேன்டஸி, த்ரில்லர், ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்ல மூணு கதைகளை எழுதி முடிச்சேன். 2017-ல் ஒரு படம் தொடங்குவதா இருந்தது. சில காரணங்களால நடக்கல. சிலபேர், ‘உடனே அடுத்த படம் பண்ணலைன்னா, சினிமா உங்களை மறந்திடும்’னு சொல்றாங்க. அது உண்மைதான். அப்படி மறந்தா, என்னை நான் திரும்ப ஞாபகப்படுத்திக்கலாம்னு இருக்கேன். ஏன்னா, என் அடுத்த பட வேலைகள் இப்போ தொடங்கியிருக்கு!” என்கிறார் ரமேஷ்.

- கே.ஜி.மணிகண்டன்

- தி எண்டு