மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: ரத்னகுமார் - 13

குடும்பத்துடன் இயக்குநர் ரத்னகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் இயக்குநர் ரத்னகுமார்

‘ஆடை’ உருவான கதையைச் சொல்கிறார் இப்படத்தின் டைரக்டர்...

“ராமராஜன் சார் கல்யாணத்துல பிரச்னை வந்துடக்கூடாதுன்னு மாட்டு வண்டியில சிலம்பக் கலைஞர்களை ஏத்திக்கிட்டு அவருக்குப் பந்தோபஸ்து கொடுத்தவர், எங்க அப்பா முருககனி. பிரின்டிங் வேலை, பிளாஸ்டிக் கம்பெனி, சிலம்பக் கலைக்கூடம், பத்திரிகையாளர் வேலை.. இப்படிப் பல வேலைகளைப் பார்த்துக்கிட்டிருந்தார். அவர்கிட்ட இருந்து நான் சினிமாவை எடுத்துக்கிட்டேன்!” - ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமாருக்கு சினிமா ஆர்வம் வர முக்கிய காரணம் அப்பா. மிக முக்கியமான காரணம், ரத்னகுமாரின் பொய்கள்!

“அப்பாவுக்குப் பூர்வீகம் தூத்துக்குடி, அம்மாவுக்குக் கோவில்பட்டி. கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா சென்னையில் செட்டில் ஆகிட்டதால, ரெட்ஹில்ஸ்லதான் பிறந்து வளர்ந்தேன். இதுதான் வேலைன்னு தீர்மானிச்சுக்காம பல வேலைகள் பார்த்தவர் அப்பா. ‘வெல்கம் பிரின்டிங் பிரஸ்’ வெச்சிருந்தார், ‘சி.பா.ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூடம்’ ஆரம்பிச்சு மாணவர்களுக்கும் சினிமாக் கலைஞர்களுக்கும் சிலம்பம் சொல்லிக் கொடுத்தார். ராமராஜன் படங்களுக்கு சிலம்பப் பயிற்சியாளரா இருந்திருக்கார். ‘தேசிய கீதம்’ படத்துல மாண்டேஜ் சீன்ல சிலம்பம் சுத்துவார். சிம்பு ஹீரோவா அறிமுகமான சமயத்துல அவருக்கும் சிலம்பம் சொல்லிக் கொடுத்திருக்கார். வடிவேலுவுடன் ஒருசில காட்சிகளில் நடிகராகவும் தலைகாட்டியிருக்கார். இடையில் மலேசியாவுக்குப் போனார். ‘தினகரன்’ பத்திரிகையில் 20 வருடம் நிருபரா வேலை பார்த்தார், இப்பவும் பகுதிநேர நிருபரா இருக்கார். அவருக்கு என்னை ஒரு நல்ல சிலம்பக் கலைஞர் ஆக்கணும்னு ஆசை. ஆனா, அம்மா அமுதா அதுக்குச் சம்மதிக்கல. ‘தினமணி’ பத்திரிகையில நானும் இரண்டு வருடம் நிருபரா வேலை பார்த்தேன்.” அப்பாவிடமிருந்து சிலம்பமும் பத்திரிகையாளர் பணியும் ஒட்டிக்கொண்டாலும் சினிமா ரத்னகுமாரை வாரி அணைத்திருக்கிறது.

Title Card: Director Rathna Kumar
Title Card: Director Rathna Kumar

“ரெட்ஹில்ஸைச் சுத்தியிருக்கிற கென்னடி, செயின்ட் மேரீஸ் பள்ளிகள்ல ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சது. என் தம்பி ரத்ன லோகேஷ். பிளாஸ்டிக் ரீ-சைக்கிளிங் கம்பெனி வெச்சிருக்கார். தங்கச்சி ரத்ன புஷ்பாதேவி. கல்யாணம் ஆகிடுச்சு. ப்ளஸ் டூ முடிச்சுட்டு, டிப்ளோமா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் படிச்சேன். பிறகு, ‘மல்டி ஆர்க் இந்தியா’ங்கிற கம்பெனியில் ஷிஃப்ட் சூப்பர்வைஸர் வேலை. அதுக்குப் பிறகு சி.ஐ.டி நகர் ‘ஹெச்.சி.எல்’ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். மதர் போர்டு மாத்தியே நாள்களைக் கடத்துற வேலை. மிஷின்கூடவே வேலை பார்க்கிற அந்த மனநிலை எனக்குப் பிடிக்கல. ‘வேற ஏதாச்சும் பண்ணணும்’னு யோசிச்சுக்கிட்டிருக்கும்போது, அகமதாபாத்ல ஒரு டிரெயினிங் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அகமதாபாத் மக்கள் ராத்திரி 3 மணிக்குத் தூங்குறாங்க, காலையில பார்லேஜி பிஸ்கெட்டை டீயில முக்கிச் சாப்பிடுறாங்க, மதியம் கிடைக்கிற ‘குஜராத்தி தாலி’யில சாம்பார் இனிப்பா இருந்தது... சுருக்கமாச் சொன்னா, அந்த வாழ்க்கை எனக்கு செட் ஆகல.

சினிமாவுக்கு வர இதுவும் ஒரு காரணம். அகமதாபாத்ல இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ்ல சென்னைக்குத் திரும்பும்போது, ‘கிரியேட்டிவ்’ ஃபீல்டுக்குப் போகலாம்னு முடிவெடுத்தேன். கூட வேலை பார்க்கிறவங்ககிட்ட, மேனேஜர்கிட்ட டிஸ்கஸ் பண்ணினேன். ‘நீ நிறைய பொய் சொல்வ, அந்தப் பொய்களெல்லாம் கிரியேட்டிவா இருக்கும். அதனால, உன் முடிவு சரிதான்!’னு அனுப்பி வெச்சுட்டாங்க. அந்தச் சமயத்துல, இயக்குநர் விஷ்ணுவர்தன் ஒரு பேட்டியில் ‘லயோலா காலேஜ்ல விஸ்காம் படிச்சேன், விளம்பரத் துறையில வேலை பார்த்தேன்’னு சொல்லியிருந்தார். எனக்கும் விஸ்காம் மீது ஆசை வந்தது” என்பவர், ‘விஸ்காம்’ சேர்ந்த கதை பெரும்பாடு.

“அப்பாவுக்கு சினிமாவின் நெளிவுசுளிவு தெரியும். ‘சினிமாவுல சேர்றேன்’னு சொன்னா, ஏதாச்சும் சொல்வாரோன்னு நினைச்சு ‘விளம்பரத்துறையில் வேலை பார்க்க ஆசை’ன்னு சொன்னேன். படிப்பு முடிஞ்சு சில வருடம் வேலை பார்த்ததால காலேஜ்ல சீட்டு கிடைக்கிறதுல பிரச்னை. ‘இந்த வருடம் இல்லைன்னா என்ன, அடுத்த வருடம் படி’ன்னு நம்பிக்கை கொடுத்தார் அப்பா. அப்போ எனக்கு அறிமுகமானவர்தான், ‘ஆடை’ கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன். ‘மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ்ல அப்ளை பண்ணியிருந்தேன், என் பெயர் லிஸ்ட் அவுட் ஆகியிருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க’ன்னு அவர்கிட்ட சொல்லியிருந்தேன்.

போய்ப் பார்த்தவர், என் பெயர் இல்லைன்னு சொல்லிட்டார். நேரடியாப் போய் விசாரிக்கலாம்னு கல்லூரிக்குப் போனா, ‘உங்க பெயர் இருந்தது. நீங்க வரலைன்னு வேற ஒருத்தருக்கு சீட்டு கொடுத்துட்டோம்’னு சொல்லிட்டாங்க. எங்கேயோ சின்ன தப்பு நடந்திருக்கு. அது என்ன ஏதுன்னு விசாரிக்க நேரமில்லாம, நானும் அப்பாவும் காலேஜ் டீன்கிட்ட கெஞ்சிப் பேசி சீட்டு வாங்கினோம். நானும் விஜயகார்த்தியும் சேர்ந்து கல்ச்சுரல்ஸ்ல கலந்துகிட்டோம், பொம்மலாட்டம் போட்டோம், குறும்படங்கள் எடுத்தோம். விஸ்காம் முடிச்ச பிறகு, ‘இன்டோ ஓவர்சீஸ் பிலிம்ஸ்’ கம்பெனியில போஸ்ட் புரொடக்‌ஷன் சூப்ரவைஸரா வேலை பார்த்தேன். ஜாக்கி சான், டோனி ஜா, ஜெட்லி படங்களை டப்பிங் பண்ணி இந்தியா, இலங்கை, வங்காளதேசத்துல ரிலீஸ் பண்ற நிறுவனம் அது.

இங்கேதான் ஒரு படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், ரிலீஸ் வேலை களெல்லாம் எப்படி நடக்குதுன்னு கத்துக்கிட்டேன்.” பிறகு சீனியர் ஒருவர் சினிமா எடுப்பது தெரிந்து வேலையை உதறியிருக்கிறார், ரத்னகுமார்.

Title Card: Director Rathna Kumar
Title Card: Director Rathna Kumar

“ஒரு குறும்படப் போட்டிக்காக எடுத்திருந்த குறும்படத்தை எடுத்துக்கிட்டு, ஷங்கர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்த பிரபு ராஜசோழன் இயக்கிக்கிட்டிருந்த ‘கருப்பம்பட்டி’ படத்துல உதவி இயக்குநரா சேரலாம்னு போனேன். ஏற்கெனவே பலபேர் இருந்ததால, சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார். ‘வேடிக்கை பார்க்கவாவது வரட்டுமா’ன்னு கேட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். கூட இருந்த சில உதவி இயக்குநர்கள் ‘நீயா வேலைகளை எடுத்துப் பண்ணு’ன்னு சொன்னாங்க. நானும் களத்துல இறங்கிட்டேன். என்னைக் கவனிச்சுக்கிட்டிருந்த இயக்குநர், ‘அடுத்த ஷெட்யூலுக்கு இவனையும் சேர்த்துக்கோங்க’ன்னு மைக்ல அறிவிச்சார். உதவி இயக்குநர்களுக்கு உதவியாளரா ‘ஸ்டேஷனரி’ பேக்கை முதுகுல சுமந்து சுத்திக்கிட்டிருந்தேன். ஒரு பிரச்னையில, கிளாப் போர்டு அடிச்சுக்கிட்டிருந்த உதவி இயக்குநர் ஒருத்தர் படத்திலிருந்து விலக, ‘கிளாப் போர்டு’ என் கைக்கு வந்தது. ஃபைனான்ஸ் பிரச்னையால இடைவெளி விட்டு இடைவெளி விட்டு எடுத்த படம் அது. படம் தொடங்கி முடியறதுக்குள்ள என்னைத் தவிர எல்லா உதவி இயக்குநர்களும் போயிட்டாங்க. ‘கருப்பம்பட்டி’ ஷூட்டிங்ல இருந்து ரிலீஸ் வரை நான் மட்டும் இயக்குநர்கூடவே இருந்தேன். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப்போன நான், ரிலீஸான படத்துல ‘இணை இயக்குநர்’ ஆகியிருந்தேன்” உதவி இயக்குநர் ஆன விஷயம் வீட்டிற்குத் தெரியாது. வட்டிக்குப் பணம் வாங்கி ‘சம்பளம் இது’வெனக் கொடுத்த ரத்னகுமார், வழக்கம்போல பொய்களைச் சொல்லியே சமாளித்திருக்கிறார்.

“காமெடி என்னன்னா, பிறகு ஒருநாள் வீட்டுல விஷயத்தைச் சொல்லும்போது ‘இதை முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாதா’ன்னு சிம்பிளா சீன் வெச்சுட்டாங்க. இடையில நான் ஒரு த்ரில்லர் கதையை எழுதி முடிச்சு, விஜய் கார்த்திக்கிட்ட படிக்கக் கொடுத்தேன். ‘ஆரம்பம்’ படத்துல உதவி ஒளிப்பதிவாளரா வேலை பார்த்துக்கிட்டிருந்த அவர், அதிலிருந்து விலகி ‘உடனே இந்தக் கதைக்குத் தயாரிப்பாளரைத் தேடுவோம்’னு சொன்னார். ஆனா, முதல் படமா அதை எடுக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நாலைஞ்சு மாசம் அலைஞ்சு திரிஞ்சு, ‘முதல்ல ஒரு குறும்படம் எடுக்கலாம்’னு முடிவெடுத்தோம். அதுதான், ‘மது’ங்கிற குறும்படம். பிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒளிப்பதிவுக்குப் படிச்சுக்கிட்டிருந்த விவேக் பிரசன்னாவை நடிக்க வெச்சோம். நண்பர்கள்கூட சேர்ந்து தயாரிச்சு, யூ-டியூப்ல ரிலீஸ் பண்ணினோம். விஜய் சேதுபதி அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு போன் பண்ணிப் பாராட்டினார். கார்த்திக் சுப்பராஜ் ‘பென்ச் டாக்கீஸ்’ல ரிலீஸ் பணணினார்

Title Card: Director Rathna Kumar
Title Card: Director Rathna Kumar

. பிறகு, அந்தக் குறும்பட டிவிடியையும், என் ஸ்க்ரிப்டையும் வெச்சுக்கிட்டு, கிட்டத்தட்ட 50 தயாரிப்பாளர்களைச் சந்திச்சுப் பேசினேன். யாரும் தயாரிக்க முன்வரல. பிறகு ஒருநாள் கார்த்திக் சுப்பராஜ் கூப்பிட்டு, ` ‘மது’வைப் பெரிய படத்துக்கான திரைக்கதையா எழுதுங்க’ன்னு சொன்னார். ‘அப்படி வேணாம். 20 நிமிட ‘மது’ குறும்படம் அப்படியே இருக்கட்டும். அதுக்குப் பிறகு அந்தக் கதை எப்படியிருக்கும்னு எழுதுறேன், புதுசா இருக்கும்’னு சொன்னேன். அவரும் சம்மதிச்சார். அதுதான், ‘மேயாத மான்’ படமா உருவானது. ஃபிரெண்டு தங்கச்சியைக் காதலிக்கிறது, காதலுக்காக சாகப்போறது... வழக்கமான விஷயங்கள் படத்துல இருந்தாலும், அதைப் புதுசா சொன்னதுதான் அந்தப் படத்தோட வெற்றி” என்பவர், திருமணத்திற்கும் ஒரு பொய் சொல்லியிருக்கிறார்.

“ ‘மேயாத மான்’ கமிட் ஆகுறதுக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் முடிஞ்சது. தம்பி காதல் திருமணம். ஆனா, அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணாம எப்படின்னு சொந்தங்கள் ஏதாச்சும் சொல்வாங்களேன்னு எனக்கும் பொண்ணு பார்த்தாங்க. வீட்டுல எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க, அவங்களுக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். வர்ற பொண்ணுகிட்ட, ‘சினிமா இல்லைன்னா தாங்க மாட்டேன் தூங்கமாட்டேன்’னு சொன்னா, ‘நான் உன்கூட வாழமாட்டேன்’னு போயிடுமோன்னு பயந்து, ‘தம்பிகூட சேர்ந்து பிசினஸ் பண்றேன்’னு சொன்னேன். மனைவி பெயர், அருணா தேவி. பிறகு, நான் சினிமாவுக்காக தீவிரமா அலைஞ்சுக்கிட்டிருக்கும்போது அவங்க வேலைக்குப் போய் எனக்கு ஆதரவா இருந்தாங்க. இப்போ எங்களுக்கு ‘குரலினியாள்’னு ஒரு பெண் குழந்தை இருக்கு” என்றவர், ‘ஆடை’ உருவான கதையைச் சொன்னார்

“ ‘Trapped’ சினிமாக்களில் உயிர்தான் முக்கியமான பேசுபொருளா இருக்கும். நம்ம ஊர்ல உயிரைவிட மானம்தானே பெருசு?! அதனால, மானத்தை முக்கியமான களமா வெச்சு ‘ஆடை’ ஒன்லைனை எழுதினேன். அமலாபால் நடிப்புக்கு மட்டுமல்ல, படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். இப்போ அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கிறேன்!” என்கிறார்.

- கே.ஜி.மணிகண்டன்