
ஒரு பயணம் ரவிக்குமாரைப் பார்வையாளர் வரிசையிலிருந்து பங்கேற்பாளர் வரிசைக்கு மாற்றியிருக்கிறது.
‘இன்று நேற்று நாளை’ மூலமாக டைம் டிராவலைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி யவர், இயக்குநர் ரவிக்குமார். திருப்பூர் டு சென்னைக்கான இவரது பயணத்தில் உழைப்பும் அதிகம், உழைப்பாளர்களும் அதிகம்!
“திருப்பூர் தோழர்கள்கிட்ட ‘குமரானந்தபுரம் ராஜேந்திரன்’னு சொன்னா, எங்க அப்பாவை எல்லோருக்கும் தெரியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கார். மேடைப் பேச்சு, கொடியேற்றம், கட்சிக்கிளையில் போஸ்டருக்குப் பசை கிண்டுறது, போஸ்டர் ஒட்டுறது, தட்டி கட்டுறது, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், தமுஎகச... இப்படித் தோழர்களும், தோழர்கள் சார்ந்த இடங்களிலும்தான் என் தினசரி வாழ்க்கை இருந்தது. அப்பா, பனியன் கம்பெனியில ‘அயர்ன் மாஸ்டர்.’

அம்மா, தையல் நூலைக் கோன்ல சுத்திக் கொடுக்கிற வேலை பார்த்தாங்க. தங்கச்சி காய்த்ரி, நான் ரெண்டுபேர் மட்டும்தான் பெரும்பாலும் வீட்டுல இருப்போம். ப்ளஸ் டூ வரை பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். அறிவியல்ல ஆர்வம் அதிகம். அந்த வயசுல கண்ணாடி பாட்டில்ல தண்ணி ஊத்தி, சூரிய வெளிச்சத்தைப் பாய்ச்சி, பிலிம் சுருள்ல பசங்களுக்குப் படம் ஓட்டிக் காட்டுனது, சினிமா ஆர்வத்தினால இல்லை; அறிவியல் ஆர்வத்தினாலதான்!” என்பவர், தொலைதூரக் கல்வியில் பி.காம் படித்திருக்கிறார்.
“திருப்பூர்ல ‘கனவு’, ‘பதியம்’ உட்பட பல அமைப்புகள் நடத்துற இலக்கியக் கூட்டங்கள்ல கலந்துக்குவேன். ‘பின்னல் நகரம்’ங்கிற பெயர்ல பிளாக் எழுதிக்கிட்டிருந்தேன். இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும்போதுதான், குறும்படங்கள் அறிமுகம். அங்கே குறும்படங்களைப் பார்க்கும்போது, ‘இதை நானே எடுக்கலாம்போல!’ன்னு நம்பிக்கை வந்தது. அப்போதான், ஒரு ஓவியக் கண்காட்சி மூலமா ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் அறிமுகமானார். அவருக்கும் குறும்படக் கனவு; எனக்கும் குறும்படக் கனவு.

பள்ளி நண்பர்கள் காளிதாஸ், தேவராஜ் ரெண்டுபேரையும் நடிக்க வெச்சு, நான் ஒரு குறும்படம் எடுத்தேன். ராம் ஒரு சீனில் தலைகாட்டினார். ராம் எடுத்த ‘முற்றுப்புள்ளி’ குறும்படத்துல நானும் ஒரு சீன்ல தலைகாட்டினேன். தொடர்ந்து நாங்கள் எடுத்த குறும்படங்களை இலக்கியக் கூட்டங்கள்ல திரையிட்டு நானும் ராமும் பரிசுகள் வாங்கியிருக்கோம்.
வீடு கட்டி, தங்கச்சிக்குக் கல்யாணம் முடிவாகியிருந்த சமயத்துலதான் ‘நாளைய இயக்குநர் 2’ நிகழ்ச்சி அறிமுகமானது. ஏ.ஏ.ஹெச்.கே.கோரியின் சிறுகதையை ‘அவன் அவர்கள் அது’ என்ற பெயரில் குறும்படமா எடுத்தேன். ராமும் ஒரு குறும்படம் எடுத்தார். ரெண்டுபேரும் குறும்படங்களை அனுப்பிவைக்க, ராம் மட்டும்தான் நிகழ்ச்சிக்குத் தேர்வானார்; நான் வெயிட்டிங் லிஸ்ட்!” - ஆனால், ஒரு பயணம் ரவிக்குமாரைப் பார்வையாளர் வரிசையிலிருந்து பங்கேற்பாளர் வரிசைக்கு மாற்றியிருக்கிறது.
“ராம் தேர்வாகிட்டார். அவரை வெச்சு எபிசோடு ஷூட் பண்ண சென்னைக்கு வரச்சொல்லிட்டாங்க. ‘நாமதான் செலக்ட் ஆகலையே’ன்னு இருக்க, ‘நீங்களும் சும்மா வாங்க’ன்னு கூட்டிக்கிட்டுப் போனார் ராம். நிகழ்ச்சியின் இயக்குநர் சிவநேசன்கிட்ட, ‘வந்த குறும்படங்களைப் பார்க்கிறப்போ, என் குறும்படம் ஒண்ணும் அவ்வளவு மோசமா இல்லையே’ன்னு சொன்னேன். ‘எல்லாம் இறுதியாகிடுச்சு, அடுத்தமுறை பார்க்கலாம்’னு சொல்லிட்டார். ராம் மேக்கப் போட உள்ளே போக, நான் ஸ்டூடியோவுக்கு வெளியே காத்திருந்தேன்.

என்ன நினைச்சாரோ, என்னைக் கூப்பிட்டு, ‘குறும்படத்தைக் கையில வெச்சிருக்கியா?’ன்னு கேட்டார் சிவநேசன். சென்னையில வேலை பார்க்கிற நண்பர்கிட்ட விமர்சனத்துக்காகக் கொடுத்தது ஞாபகத்துக்கு வரவே, கொஞ்சமும் தாமதிக்காம ‘ரூம்ல இருக்கு சார்’னு சொன்னேன். ‘சரி’ எடுத்துட்டு வா’ன்னு அனுப்பிட்டார். அடிச்சுப் பிடிச்சு ஃபிரெண்டு வீட்டுக்குப் போய், குறும்படத்தை எடுத்து வந்து கொடுத்தேன். வேர்த்து விறுவிறுத்து ஓடிவந்த எனக்கு, ‘நாளைய இயக்குநர்’ ஷூட்டிங்கிற்காக மேக்கப் போட்டாங்க! ராம் இருந்த நால்வர் டீம்ல அவருடைய குறும்படம்தான் சிறந்த குறும்படம். நான் இருந்த நால்வர் டீம்ல என் குறும்படம்தான் சிறந்த குறும்படம். ஸ்டூடியோவுல இருந்து வெளியே வரும்போது, ரெண்டுபேரும் ‘பெஸ்ட்’டா வெளியே வந்தோம். அந்தநாள் என் வாழ்க்கையில மறக்கவே முடியாதது!” என்றவர், ‘நாளைய இயக்குநர்’ அனுபவங்களை விவரித்தார்.
“பிறகு, நிகழ்ச்சிக்காக கேபிள் சங்கரின் ‘போஸ்டர்’, சா.அறிவழகன் எழுதிய ‘மரண அடி’ சிறுகதை, ராஜாராம் எழுதிய ‘பசி’ சிறுகதை ஆகியவற்றைக் குறும்படங்களா எடுத்தேன். கடைசியா எடுத்ததுதான், ‘ஜீரோ கி.மீ’ குறும்படம். நலன் மூலமா எனக்குப் பழக்கமான ‘காக்கா முட்டை’ மணிகண்டனும் அந்தக் கதைக்கு வொர்க் பண்ணிக் கொடுத்தார். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின்போது ‘குலேபகாவலி’ கல்யாண் போன்ற நண்பர்கள் அறிமுகம் ஆனாங்க. ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில எனக்கு 3-ஆம் இடம் கிடைச்சது. இயக்குநர் பாண்டிராஜ் உதவி இயக்குநரா சேர்த்துக்கிறதா சொல்லியிருந்தார். அந்தச் சமயத்துலதான், விஜய் டிவியில் ‘கனா காணும் காலங்கள்’ தொடரை இயக்க, நலன் குமரசாமிக்கு வாய்ப்பு வந்தது. நானும் சேர்ந்துக்கிறேன்னு அவர்கூட வந்துட்டேன்.” - உதவி இயக்குநராகப் பணியாற்றிவர், பிறகு ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் இயக்குநராகவும் மாறியிருக்கிறார்.
“ ‘கே5 - கல்லூரியின் கதை’ என்ற பெயரில் வந்த அந்தத் தொடருக்கு, நான் செகண்ட் யூனிட் இயக்குநர். பிறகு, நலன் குமரசாமி ‘சூதுகவ்வும்’ வேலைகளில் பிஸியாகிட்டதால, நானே 40 எபிசோடுகளை இயக்க வேண்டிய சூழல் வந்தது, இயக்கிக் கொடுத்தேன். பிறகு, ‘சூதுகவ்வும்’ல உதவி இயக்குநரா சேர்ந்துட்டேன். ‘முண்டாசுப்பட்டி’, ‘சூதுகவ்வும்’ படங்கள் மூலமா பழக்கமான தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘கதை ஏதும் இருக்கா?’ன்னு கேட்டார், ‘டைம் மெஷின்’ ஐடியாவைச் சொன்னேன்.

பிறகு, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணி, ‘இன்று நேற்று நாளை’யை உருவாக்கிட்டேன். அறிவியல் சப்ஜெக்ட்ல இருந்த ஆர்வம், அறிவியல் பரிசோதனைக்காக நான் ‘பிலிம் காட்டிய’ சம்பவம் எல்லாமே, சொந்த ஊரில் சிவன் தியேட்டர்ல ‘இன்று நேற்று நாளை’ படத்தைப் பார்க்கும்போது கண்முன்னாடி வந்துட்டுப் போச்சு” என்று சொல்லும் ரவிக்குமாரின் திருமணமும் ஒரு சுவாரஸ்யம்தான்.
“தமுஎகச-வில் பொறுப்பில் இருந்த பி.ஆர்.கணேசன் எனக்குப் பழக்கம். அவர்கூட நிறைய கதை விவாதம் பண்ணியிருக்கேன். என் குறும்படங்கள்ல நடிக்க வெச்சிருக்கேன். ‘இன்று நேற்று நாளை’ வரை அவர்கிட்ட விவாதிச்சிருக்கேன். அவரின் பொண்ணு பிரியங்காவைப் பொண்ணு கேட்கலாம்னு எனக்கு ஒரு எண்ணம். எங்க வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க. வேற வேற சாதியா இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தவராச்சே... அவரும் ஓகே சொல்லிட்டார். 2016-ல் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில, சடங்குகள் ஏதுமில்லாம, எனக்கும் பிரியங்காவுக்கும் கல்யாணம் நடந்தது.

இப்போ எங்களுக்கு ‘நறுமுகை’ன்னு ஒரு பெண் குழந்தை!” என்பவர், தொடர்ந்தார்.
- கே.ஜி.மணிகண்டன்
“ ‘இன்று நேற்று நாளை’ படத்தைப் பார்த்துட்டு கருணாகரன் மூலமா எனக்கு போன் பண்ணினார், சிவகார்த்திகேயன். நான் வெச்சிருந்த இன்னொரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையில சிவகார்த்திகேயன் சூப்பரா செட் ஆவார், படமும் நல்லா வரும்னு நம்பிக்கை வந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். இந்தப் படமும் அறிவியலைத் தெளிவாக விளக்கும். மத்தபடி, நான் இன்னும் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அம்மா அப்பா உட்கார்ந்து சொல்லிக் கொடுக்காம, வாழ்ந்து புரியவெச்ச எளிமையான வாழ்க்கையை நானும் ஃபாலோ பண்றேன்!” என்று புன்னகைக்கிறார் ரவிக்குமார்.
- கே.ஜி.மணிகண்டன்