மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: ஸ்ரீ கணேஷ் - 5

Title Card: Director sri ganesh
News
Title Card: Director sri ganesh

நான் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’ படத்தை ரஜினி சார் பார்த்துப் பாராட்டினார்...

முதல் படத்திலேயே அழுத்தமாக அறம் பேசியவர், ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ். முதல்பட கதை போலவே தேடலும் ஓடலுமானது அவர் வாழ்க்கை.

Title Card: Director sri ganesh sharing experience
Title Card: Director sri ganesh sharing experience

“கும்பகோணம் பக்கத்துல திருவைகாவூர்ல பிறந்தேன். அப்பா சங்கரனுக்காக எங்க அம்மா அலமேலு சென்னையிலதான் இருந்தாங்க. நான்காம் வகுப்பு வரை கும்பகோணத்துல தாத்தா-பாட்டி அரவணைப்புல வளர்ந்தேன். பிறகு, நானும் சென்னைக்கு வந்துட்டேன். குரோம்பேட்டை செயிண்ட் பால் ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். எனக்கு விபரம் தெரிஞ்சு, அப்பா எங்களைப் பார்த்துக்கிட்டதில்லை; எல்லாமே அம்மாதான். விசேஷங்களுக்கு சமைச்சுக் கொடுக்கிறது, சின்னச் சின்ன வேலைகள்... இதுதான் எனக்கும், என் தம்பி சிவக்குமாருக்கும் சோறுபோட அம்மா தேர்ந்தெடுத்த வழி. நானும் ஏதோ ஒரு வகையில அம்மாவுக்கு உதவியா இருக் கணும்னு, ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அம்மா தயாரிக்கிற முறுக்கு, சீடையைக் கடை கடையா போட்டுட்டு வருவேன். வீட்டுலேயே அம்மா மெழுகுவத்தி தயாரிப்பாங்க. பிறகு, மெழுகுவர்த்திப் பாக்கெட்டுகளும் என் குட்டி சைக்கிள்ல ஏறி கடை கடையா பயணிக்கும். கேட்டரிங் சர்வீஸுக்கும் போவேன். அம்மாவுக்கு நான் இதையெல்லாம் பண்றது பிடிக்காதுன்னாலும், அவங்களுக்காக சைக்கிள் மிதிக்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது.

Title Card: Director sri ganesh sharing experience
Title Card: Director sri ganesh sharing experience

வறுமை எனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி வெச்சிருந்தது. படிப்புல கவனம் இல்லை. கூடப் படிக்கிற பசங்கெல்லாம் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கும்போது, நமக்கு ரெண்டுமே வரலையேனு வருத்தப்படுவேன். ஸ்கூலுக்குப் பக்கத்துல இருந்த ஒரு நூலகமே கதினு கெடப்பேன். பாடப் புத்தகங்கள் தந்த பயம், நூலகத்துல இருந்த புத்தகங்கள் மேல இல்லை. ஆனாலும், போட்டிகள்ல பசங்க வாங்கும் பரிசுகளைப் பார்த்து, நமக்கும் ஏதாவது பண்ணனும்னு யோசனையாவே இருக்கும். திடீர்னு ஒருநாள் வீட்டுக்கு ஓடிவந்து, தொளதொளனு இருக்கிற சட்டையை மாட்டிக்கிட்டு, பள்ளியில நடந்த மாறுவேடப் போட்டியில கலந்துக்கிட்டு, ஏதேதோ பேசினேன். ஸ்கூலே விழுந்து சிரிக்க, பரிசும், கைத்தட்டலும் கிடைச்சது. என் வாழ்வின் முக்கியமான தருணம் அது. அதுக்குப் பிறகு ஆறாவது, ஏழாவது படிக்கும்போது நிறைய நாடகங்கள் போட ஆரம்பிச்சேன். வில்லுப்பாட்டு பாடினேன். சிவானந்தினு ஒரு டீச்சர், ‘நீ நல்லா நடிக்கிற, நாடகம் எழுதுற.. எதிர்காலத்துல சினிமாவுக்குப் போ’னு சொன்னாங்க. இயக்குநர் ஆனதற்கான முதல் விதை அதுதான்!” கனவுகளை விரட்டும் முன், வறுமையை விரட்டவேண்டுமே! பள்ளி மாறியிருக்கிறார், ஸ்ரீகணேஷ்.

Title Card: Director sri ganesh sharing experience
Title Card: Director sri ganesh sharing experience

“பத்தாம் வகுப்பு படிக்கிறப்போதான், அம்மா அவங்க சக்திக்கு மீறி ஸ்கூல் ஃபீஸ் கட்டுறது புரிஞ்சது. அதனால, குரோம்பேட்டை அரசுப் பள்ளியில சேர்ந்து, சுமையைக் குறைக்கலாம்னு முடிவெடுத்தேன். அங்கே ஓரளவுக்குப் படிச்சேன். அங்கே இருந்த வனஜா டீச்சர், எல்லாப் போட்டிகளுக்கும் என்னை அனுப்பி, கைத்தட்டல் வாங்க வைப்பாங்க. ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து இப்போவரை கூடவே இருக்கிற தீபன்... தவிர, விக்னேஷ், முருகேசன், சீனி, பாலா, சாலை, அரவிந்தன், மதன், யுவராஜ் இப்படிப் பல நண்பர்கள் கிடைச்சாங்க. எங்க சித்தி வித்யா, எங்களுக்காகவே லேட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. மாமா சங்கர் கணேஷ் - அக்கா செளமியா காதல் ஜோடிகள். இப்போவரை மாமாதான் எனக்கு அப்பா மாதிரி. ஆடிட்டரா இருக்கிற அவர், என்னையும் ஆடிட்டர் ஆக்கணும்னு ஆசைப்பட்டார்” எனச் சிரிப்பவர், தொடர்ந்தார்.

Title Card: Director sri ganesh sharing experience
Title Card: Director sri ganesh sharing experience

“ஜெயின் காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். அங்கே படிச்சதைவிட நாடகம் போட்டதுதான் அதிகம். நாடகங்கள் மூலமா கிஷோர் அறிமுகமானார். உலக சினிமாவை முதல் முதலா அறிமுகப்படுத்தியவர், கூடவே வீதி நாடகங் களுக்கும் என்னைச் சேர்த்துக்கிட்டார். கல்லூரி வாழ்க்கையில ஸ்ரீகாந்த், நாகப்பன், ரவிச்சந்திரன், கணேஷ் பாபு.. இன்னும் பலர் அறிமுகமானாங்க. நாட்டுப் பிரச்னைகளை வீதி நாடகங்கள் மூலமா அரங்கேற்றினோம்” என்பவர், மறைந்த கிரேஸி மோகனின் மாணவர்.

“காலேஜ்ல சேர்றதுக்கு முன்னாடி, கும்பகோணத்துல கிரேஸி மோகனின் ஒரு நாடகத்துக்குப் போனேன். என்ன நினைச்சேன்னு தெரியல, மேடைக்கு முன்னால உட்காராம பின்னாடி போயிட்டு, ‘சார்.. என்னையும் உங்ககூட சேர்த்துக்கோங்க. என்ன வேலை கொடுத்தாலும் செய்றேன்’னு நின்னுட்டேன். அவரோ, ‘அடுத்த வாரம் சென்னையில நாடகம் இருக்கு, வா பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டார். நான் நின்னேன். பிறகென்ன, காலேஜ், வீதி நாடகங்களோடு, கிரேஸி மோகன் நாடகக் குழுவில் அப்ரண்டீஸ் வேலையும் சேர்ந்துக்கிட்டது” என்பவர், விஸ்காம் படிக்கும் எல்லோரையும் நாளைய இயக்குநர்கள் என்றே நம்பித் திரிந்திருக்கிறார்.

“ஆபீஸ் புராஜெக்ட்டுக்காக நண்பர் ஒருவருக்கு, ‘நான் உணர்ந்த தருணம்’னு ஒரு குறும்படத்தை முதல்முதலா எடுத்துக் கொடுத்தேன். ஒருசில குறும்படங்கள்ல வொர்க் பண்ண அனுபவம் இருந்ததனால, ‘நாம ஈஸியா குறும்படம் எடுத்துடலாம்’னு நினைச்சு இதைப் பண்ணேன். அந்த ரணகளமான குறும்படம் உண்மையிலேயே ‘நான் உணர்ந்த தருணம்’தான்!” எனச் சிரிக்கிறார்.

Title Card: Director sri ganesh sharing experience
Title Card: Director sri ganesh sharing experience

“ஆனா, மாமாவுக்கு நான் பண்ற முயற்சிகள் மீது வருத்தம். ‘அம்மாவோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கோடா’னு சொல்வார். அம்மாவோ, ‘உனக்குப் பிடிச்சதைப் பண்ணுப்பா’னு சொல்வாங்க. அம்மாவுக்காக ஏதாச்சும் சம்பாதிச்சுக் கொடுக்க நினைச்சேன். அதுக்காகப் பல வினோதமான வேலைகளைப் பார்த்திருக்கேன். ‘கிழிக்கிற’ வேலை அதுல முக்கியமானது. ஏஜென்ஸி மூலமா, அரசு அலுவலங்களில் இருக்கிற பழைய ஃபைல்களையெல்லாம் கம்ப்யூட்டர்ல ஏத்திட்டு, அதையெல்லாம் கிழிச்சுப் போடணும். ஒரு பண்டலைக் கிழிச்சா, 30 ரூபாய். ஒரு நாளைக்கு ஐந்து பண்டலைக் கிழிச்சுப்போட்டு, 150 ரூபாய் சம்பாதிப்பேன். பல்கலைக்கழகங்களின் தேர்வுகளுக்கு, ஆன்சர் சீட்டையும், கோடிங் சீட்டையும் பிரிச்சு வைக்கிற வேலை பார்த்தா, 300 ரூபாய் கிடைக்கும்” என்பவர் ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியின் முன்னாள் ஊழியர்.

“கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகியிருந்தேன். ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியில எனக்கு நைட் ஷிஃப்ட். ராத்திரி 2 மணியில இருந்து, காலையில 11 மணி வரை வேலை. பிறகு, குட்டித் தூக்கம். அந்த வேலையில இருந்த காலத்துல எனக்குத் தூக்கமே கிடையாதுனுதான் சொல்லணும். வேலைக்குப் பிறகு, தீவிரமான வாசிப்பு, சினிமா, நாடகம்.. இப்படியேதான் பொழுதுகள் கழியும். அப்போ, ‘தமிழ் ஸ்டுடியோ’ அமைப்புல ‘படிமை’ என்கிற உதவி இயக்குநர்களுக்கான பயிற்சியைத் துவக்கியிருந்தாங்க. நானும், ‘படிமை’ மாணவன் ஆனேன். ஆறுமாத காலம் தீவிர இலக்கியம் என்பதுதான், அங்கே முதல் பயிற்சி. அதுவரை கிடைக்கிறதையெல்லாம் வாசிச்சுக்கிட்டிருந்த எனக்கு, அங்கே கிடைச்ச படிப்பினை அதிகம். கூடவே, ‘தமிழ் ஸ்டுடியோ’ இணையதளத்திற்கு குறும்பட விமர்சனம் எழுதினேன். அழகிய பெரியவன், பவா செல்லத்துரை, பிரபஞ்சன்.. இப்படிப் பல ஆளுமைகளைப் பேட்டி எடுத்தேன். அம்மாவுக்காகக் கொஞ்சம் பணத்தைச் சேர்த்துக் கொடுத்துட்டு, வங்கி வேலையை விட்டுட்டேன்.

அப்போதான், ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’ தொடங்கியிருந்தது. நான் இயக்கிய ‘நிழல்’ குறும்படத்தைப் போட்டிக்கு அனுப்பி வெச்சேன். அது தேர்வாச்சு. ‘படிமை’யில் படித்துக்கொண்டே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில கலந்துக் கிட்டேன். எஸ்.ரா-வின் ‘இரு குமிழ்கள்’ சிறுகதையை ‘ஒரு கோப்பைத் தேநீர்’ குறும்படமா எடுத்தேன். அசோகமித்ரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ சிறுகதையை ‘டைம் அவுட்’ குறும்படம் ஆக்கினேன். அந்த சீஸனில் என் குறும்படம் சில விருதுகளை வாங்கியது. ‘குரங்கு பொம்மை’ நிதிலன், ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன், அந்த நிகழ்ச்சியிலிருந்து என்கூடவே இருக்கிற கார்த்தி எனப் பலரும் நண்பர்கள் ஆனாங்க” என்பவர் மிஷ்கினிடம் சினிமா கற்றுக்கொண்ட கதை சொன்னார்.

“மிஷ்கின் சாரிடம் இரண்டு வருடம் உதவியாளரா இருந்தேன். ஏராளமான கதை விவாதம், படம், அரட்டை... மிஷ்கின் சார் ஆபீஸ் இப்படித்தான் இருக்கும். ‘ஓநாயும் ஆட்டிக்குட்டியும்’ படத்தை அவரே தயாரிச்சு, நடிக்க முடிவெடுத்தார். வியந்து பார்த்த ஒரு இயக்குநரின் படத்தில் நானும் வேலை பார்த்தேன். சமயத்துல நானே கிளாப் போர்டு அடிச்சு, நானே ஓடிப்போய் கிரவுடைக் கிளியர் பண்ணிட்டு, நானே மானிட்டர் பார்க்கவும் உட்கார்ந்துக்குவேன். அந்த ஒரு படத்துல நான் கத்துக்கிட்டது ஏராளம். சினிமா குறித்தும், ஃபிலிம் மேக்கிங் குறித்தும் அவர் வாங்கி வெச்சிருந்த பல அதிக விலையுள்ள புத்தகங்களை எனக்குக் கொடுத்து, படிக்கச் சொன்னார். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்குப் பிறகு, ‘நீ தனியா ஒரு கதை எழுது’னு மிஷ்கின் சார் என்னை அனுப்பி வைக்க, 2013-ல் வெளியே வந்தேன். மூன்று கதைகளை எழுதி வெச்சிருந்தேன். ஆனா, சினிமாவோட சூழல் எனக்குப் பல தயாரிப்பாளர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிஞ்சது.” என்பவர், ‘8 தோட்டாக்கள்’ அனுபவத்தைச் சொன்னார்.

“தயாரிப்பாளர்களைத் திருப்திப்படுத்துற கதைகள் இருந்தால்தான் படம் பண்ண முடியும்னு தெரிஞ்சதால, எழுதி வெச்சிருந்த என் திரைக்கதைகளை ஒதுக்கி வெச்சுட்டு, ‘ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கி காணாமபோனா என்னாகும்’ங்கிற புது திரைக்கதையை எழுதினேன். மூன்று வருடப் போராட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர் கிடைச்சார். தயாரித்து, நடித்த வெற்றிக்கும் அது முதல் படம்; எனக்கும் முதல் படம். அதனால, விறுவிறுனு படத்தை எடுத்து முடிச்சோம். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ரஜினி சார் படம் பார்த்துப் பாராட்டினார். அந்தப் படத்துக்குப் பிறகு, அதர்வா நடிக்க ‘குருதி ஆட்டம்’ படத்தைத் தொடங்கினோம். அது இப்போ முடியுற தருவாயில் இருக்கு. இதுவரை என்கூட பயணித்த அத்தனைபேருக்கும்தான் நன்றி சொல்லணும். அம்மா இப்போவும் உழைக்கிறாங்க. ‘போதும், வேலையை விட்டுடும்மா’னு அப்பவே சொன்னேன். “ ‘8 தோட்டாக்கள்’ படம் ரிலீஸ் ஆகட்டும்”னு சொன்னாங்க. இப்போ, “ ‘குருதி ஆட்டம்’ நல்லபடியா முடிஞ்சு, ரிலீஸ் ஆகட்டும். அதுக்கப்புறம் வேலையை விட்டுடுறேன்”னு சொல்றாங்க!” வெள்ளந்தியாகச் சிரிக்கிறார், ஸ்ரீகணேஷ்.

- கே.ஜி.மணிகண்டன்