மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: சுரேஷ் சங்கையா - 10

குடும்பத்துடன் இயக்குநர் சுரேஷ் சங்கையா
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் இயக்குநர் சுரேஷ் சங்கையா

இலக்கியத்தையும் சினிமாவையும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் இணைத்தவர், இயக்குநர் சுரேஷ் சங்கையா.

சென்னையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிய இவருடைய ஃபிளாஷ்பேக் ராஜபாளையத்தில் தொடங்குகிறது.

“ராஜபாளையம் பக்கத்துல கரிசல்குளம் எங்க ஊர். அப்பா சங்கையா, சிமென்ட் ஃபேக்டரியில வேலை பார்த்தவர். அம்மா, சுபாலட்சுமி. தங்கச்சி சுமதி, நான். இதுதான் எங்க குடும்பம். தங்கச்சிக்குக் கல்யாணமாகி, ஒரு பையன் இருக்கான். எனக்குக் கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்கா. மனைவி பெயர் தனீஷ் பாத்திமா, பொண்ணு அதிரா. 5-ஆம் வகுப்பு வரை கரிசல்குளத்திலும், 12-ஆம் வகுப்பு வரை ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படிச்சேன். 11-ஆம் வகுப்புல ஃபெயில் ஆனதால, வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வந்துட்டேன்!” முதல் முறையாகச் சென்னைக்கு வந்தபோது, ஒருமணிநேரம் இருந்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார் இவர்.

Title Card
Title Card

“நான் கலாய்ச்ச பசங்கெல்லாம் என்கூட ஒரே வகுப்புல உட்காரப்போறாங்களேன்னுதான் வீட்டை விட்டு ஓடிட்டேன். பிராட்வே பஸ் ஸ்டாண்டுல ஒருமணி நேரமும் உட்கார்ந்தே இருந்தேன். நகரம் கொடுத்த பயம், மதுரை வண்டியைப் பார்த்ததும் ‘ஊருக்குப் போயிடு’ன்னு சொல்லிடுச்சு.

வீட்டுக்குப்போக பயந்து, மதுரை மீனாட்சி தியேட்டர்ல படம் பார்த்துட்டு அந்த நாளை அப்படியே முழுங்கிடலாம்னு நினைச்சேன். யதார்த்தமா என்னைப் பார்த்த ஊர்க்காரர் ஒருத்தர், ‘ஊரெல்லாம் உன்னைத் தேடிக்கிட்டிருக்காங்க’ன்னு இழுத்துட்டுப் போயிட்டார்.

அம்மாவுக்கு அப்போ கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணியிருந்த சமயம். அவங்க அழுததையும், அலைஞ்சதையும் கேள்விப்பட்ட பிறகு, முட்டாள்தனமான முடிவெடுத்திருக்கோமேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன். வொகேஷனல் குரூப் படிச்ச நான், கணக்குல மட்டும்தான் ஃபெயில். திரும்ப ரீ-எக்ஸாம் எழுதி, அந்தப் பேப்பரை பாஸ் பண்ணிட்டேன்.

ஸ்கூல் படிக்கும்போதும் சரி, காலேஜுக்குப் போகும்போதும் சரி... சினிமா இயக்குநர் ஆகணும்னு நான் நினைச்சதில்லை. ஆனா, சினிமா பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். மாமா தன் வீட்டுக்கு முன்னாடி டிவியை வெச்சு ஊருக்கெல்லாம் சிடி போட்டுப் படம் காட்டுவார்; ஆர்வமா நானும் உட்கார்ந்துடுவேன்.

பொதிகை டிவியில வெள்ளி, சனியில போடுற படங்களை மிஸ் பண்ணாம பார்ப்பேன். ஸ்கூல் படிக்கிறப்போ ஜெயச்சந்திரன், ஆனந்த்னு ரெண்டு நண்பர்கள். தமிழ்ப் படங்களைவிட ஆங்கிலப் படங்களுக்குத்தான் அதிகமா கூட்டிக்கிட்டுப் போவாங்க.

சமயத்துல ஸ்கூலைக் கட்டடிச்சுட்டு சிவகாசியில படம் பார்க்கிற நாங்க, பஸ்ஸுக்குக் காசில்லாம நடந்தே ஊருக்குத் திரும்புவோம். படம் பார்க்கிற பழக்கம் காலேஜ் வாழ்க்கையிலேயும் தொடர்ந்தது” என்றவருக்கு, ஒரு அரியர் நிற்கவிடாமல் ஓடவைத்திருக்கிறது.

Suresh Sangaiah family
Suresh Sangaiah family

“சட்டம் படிக்கலாம்னு மதுரையில பத்து நாளைக்கு ‘எல்.எல்.பி’ எக்ஸாமுக்குப் படிச்சு ஃபெயிலானேன். அதுக்கப்புறம், கிருஷ்ணகிரி கலசலிங்கம் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். நிறைய படம் பார்க்கிற பழக்கம் இருந்ததால, காலேஜ் கல்சுரல் புரொகிராம்ல நாடகம் போட்டிருக்கேன். இளையராஜாவின் பல பாடல்களைக் கதை வடிவமா மாத்தி மேடையேத்தியிருக்கேன்.

சுமாரா பல கவிதைகள் எழுதியிருக்கேன். கவிதைகள் எழுதுற ஆர்வம், பிறகு என்னைக் கதை எழுதவும் தூண்டியது. இப்போவும் என் வீட்டுல காகிதக் குவியலா பல கதைகள் இருக்கு. ஆனா, இதையெல்லாம் சினிமாக் கனவோடு நான் பண்ணல. ‘யாரும் பண்ணாததைப் பண்ணணும்; பெரிய ஆளா வரணும்’னு மட்டும் நினைச்சிருக்கேன். காலேஜ் முடிக்கும்போது, எனக்கு ஒரு அரியர் இருந்ததால கம்பெனியில வேலைக்குச் சேர முடியல.

திருப்பூர்ல கொஞ்சநாள் வேலை பார்த்தேன். ஊர் பசங்கெல்லாம் சென்னைக்கு வேலைக்கு வந்திருந்த தைரியத்துல, நானும் அவங்களை நம்பி சென்னைக்கு வந்தேன். ஆனா, இங்கே எனக்கு செக்யூரிட்டி வேலைதான் கிடைச்சது. 6,000 ரூபாய் சம்பளத்துல ஏடிஎம் செக்யூரிட்டியா இருந்தேன். பிறகு, ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல செக்யூரிட்டியா வேலை பார்த்தேன்.

பிறகு, ஊர்க்காரப் பையன் மூலமா ஐசிஐசிஐ வங்கியில டேட்டா என்ட்ரி வேலை கிடைச்சது. ரெண்டு வருடம் அந்த வேலையில இருந்துகிட்டே, காலேஜ் அரியரைக் கிளியர் பண்ணிட்டேன். டிகிரி முடிச்ச தைரியத்துல பேங்க் எக்ஸாம் எழுதி மேனேஜர் ஆகிடலாம்னு திட்டம். அதுக்காகத் தேர்வும் எழுதி பாஸானேன். ஆனா, சினிமாவுக்கும் எனக்கும் இருக்கிற கனெக்ட் அப்பப்போ சினிமாவைப் பற்றி யோசிக்க வைக்கும்.

காலேஜ்ல ‘எதிர்காலத்துல என்னாகப்போற’ன்னு கேட்டப்போ, ஏதோ ஒரு எண்ணத்துல ‘டைரக்டர் ஆகப்போறேன்’னு பதில் சொல்லியிருந்ததும் ஞாபகத்துக்கு வந்தது.

பாக்யராஜ் சார் பாரதிராஜாகிட்ட கதையைக் கொடுத்து உதவி இயக்குநரா சேர்ந்ததா சொல்வாங்க. நாமளும் அப்படிப் பண்ணி, சினிமாவுல இயக்குநர் ஆகிடலாம்னு தோணுச்சு.

வேலையை விட்டுட்டு, கோடம்பாக்கம் ஏரியாவுலேயே சுத்திக்கிட்டிருந்தேன். அங்கிருந்த ஒருத்தர்கிட்ட பேசும்போது, ‘பேருக்குத்தான் கோடம்பாக்கம் சினிமா ஏரியான்னு சொல்வாங்க; இப்பெல்லாம் வடபழனி, வளசரவாக்கம் பக்கம் போயிடுச்சு, அந்தப் பக்கமா சுத்து’ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பினார்.

Title Card: Director Suresh Sangaiah
Title Card: Director Suresh Sangaiah

அப்போ, கார்த்திக் என்ற நண்பர் அறிமுகமானார். அவர்தான் எனக்கு சினிமா இயக்குநர்களோட முகவரியை வாங்கித் தருவார். சமயத்துல தினத்தந்தி ‘குருவியார் கேள்வி - பதில்கள்’ல இயக்குநர்களோட முகவரி கேட்டு நானும் லெட்டர் போடுவேன்.

அப்படிப் பலபேர்கிட்ட உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு நின்னிருக்கேன்; நிராகரிக்கப்பட்டிருக்கேன். கார்த்திக் மூலமா ‘தெருநாய்கள்’ படத்தின் இயக்குநர் ஹரி உத்ரா அறிமுகம் கிடைச்சது. நாங்கெல்லாம் அடிக்கடி சினிமாக் கதைகள் பேசினோம்.

வீட்டுக்கும் நான் வேலைக்குப் போகாம உதவி இயக்குநர் வாய்ப்பு தேடுறது தெரிஞ்சுபோச்சு. அப்பா அதட்டினார். அம்மாவும் தங்கச்சியும் எனக்கு ஆதரவா இருந்தாங்க.” சுரேஷ் சங்கையாவுக்கு உலக சினிமாவை மட்டுமல்ல, இலக்கிய அறிவையும் புகுத்தியது அவரின் அம்மா கைகாட்டிய ஒரு நபர்.

“அவர், செல்வம் அண்ணன். ‘சினிமாவுல வேலை பார்த்தவர்’, ‘பல இயக்குநர்கள் அவர் வீட்டுக்கு வருவாங்க’ இப்படிப் பலரும் சொல்ல அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். அவர் வீட்டுல இல்லாத புத்தகங்களே இல்லை. தவிர, ஊர்ல ஸ்க்ரீன் கட்டி, அப்போவே அகிரா குரசோவா படங்களைப் போட்டுக் காட்டுவார். ‘குன்னாங்குன்னாங்குர்’ அமைப்பை நடத்திய அவருக்கு, ஆட்டுக்குக் கிடை போடுறது தொழில். சினிமாவும் இலக்கியமும் வாழ்க்கை! ‘ஒருத்தர்கிட்ட சேர்ந்து கத்துக்கிறதில்ல சினிமா, நிறைய படிச்சு வாழ்வியல்ல இருந்து வரணும்’னு சொல்வார். செல்வம் அண்ணன் மூலமாதான் என்னென்ன படங்கள் பார்க்கணும், என்னென்ன படிக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். அவர் சொல்லி முதல்முறையா ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ பார்த்தப்போ, ‘ஏன் இந்தமாதிரி சினிமாக்கள் நம்மூர்ல வர்றதில்லை’ன்னு தோணுச்சு. அவர் காட்டுறதுதான் வழின்னு உணர்ந்தேன்.

அ.முத்துலிங்கம், கி.ரா-வின் படைப்புகள்னு வாழ்வியல் கதைகளைத் தேடித் தேடிப் படிச்சேன்.

Title Card: Director Suresh Sangaiah
Title Card: Director Suresh Sangaiah

வேலையை விட்டுட்டு, சினிமா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்த சமயத்துல சேகர், இசக்கி, ரமேஷ், கண்ணன்... இப்படிப் பல நண்பர்கள்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க.

இவங்கதான் எனக்குச் சாப்பாட்டுச் செலவு, தங்குற செலவு எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. தினமும் வேலைக்குப் போகும்போது இவங்கதான் பாக்கெட்ல பணம் வெச்சுட்டுப் போவாங்க.

நான் சிடி வாங்கிப் படம் பார்த்து, வாய்ப்பும் தேடிக்கிட்டிருப்பேன். பிறகு, செல்வம் அண்ணன் மூலமா ‘காக்கா முட்டை’ மணிகண்டன் சார் அறிமுகம் கிடைச்சது. ஒரு ஸ்க்ரிப்டை ‘தங்கிலீஷ்’ல டைப் பண்றதுக்காக என்னைச் சேர்த்துக்கிட்டு, அந்த வேலையை முடிச்சதுக்காக எனக்குப் பணம் கொடுத்தார். ‘பணம் வேணாம்; உதவி இயக்குநரா சேர்ந்துக்கிறேன்’னு சேர்ந்துட்டேன். அவர் இயக்கிய குறும்படங்கள் தொடங்கி, ‘காக்கா முட்டை’ வரை நான்கு வருடம் அவர்கூட இருந்தேன்.

பிறகு, கதை எழுதலாம்னு முடிவு பண்ணி ஊருக்கு வந்துட்டேன். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஐடியா உருவாச்சு.

ஒரு எழுத்தாளரை வெச்சு எழுதினா நல்லா இருக்கும்னு, ‘மண்ணின் மைந்தர்கள்’ புத்தகத்தை எழுதிய குருநாதன் ஐயாவைச் சந்திச்சேன். அவர்கூடவே தங்கி, கதையை எழுதி முடிச்சுட்டு, மணிகண்டன் சார்கிட்ட படிக்கக் கொடுத்தேன். அப்போ அவர் ‘குற்றமே தண்டனை’ முடிச்சிருந்தார்.

‘நல்லா இருக்கு; நானே தயாரிக்கிறேன்’னும் சொல்லியிருந்தார். சில காரணங்களால அது நடக்கல. பிறகு, விதார்த்கிட்ட போச்சு. இப்படியே ஒரு வருடம் கதையோடு சுத்திக்கிட்டிருந்தப்போ, கடைசியா ‘ஈராஸ்’ நிறுவனத்துக்குப் புடிச்சுப்போய் தயாரிக்க முன்வந்தாங்க. படமும் ரெடியாச்சு!

Title Card: Director Suresh Sangaiah
Title Card: Director Suresh Sangaiah

‘ஒரு ஊரே சேர்ந்து ஒரு கொலை பண்ணுனா எப்படி இருக்கும்’னு யோசிச்ச கதை, கிராமம், ஆடு, குலசாமி வழிபாடு... இப்படிப் பல படிகளைக் கடந்து, ‘ஒரு கிடாயின் கருணை மனு’வா உருவானது. எங்க ஊர்ல படம் பார்த்த மக்கள் எந்திரிச்சு நின்னு கைதட்டுனதா அம்மா, அப்பா என்கிட்ட சொன்னப்போ, அவ்ளோ சந்தோஷமா இருந்தது. ரிலீஸுக்குப் பிறகு எனக்குக் கல்யாணம் முடிஞ்சது. அடுத்த படத்துக்குக் கதை எழுதுற வேலைகளில் இறங்கினேன். இப்போ, ஒரு கதையை முழுமையா முடிச்சுட்டு ஷூட்டிங் கிளம்ப ரெடியாகிட்டிருக்கேன்.

300 பேர் நடிக்கிற ஒரு படமா இது இருக்கும். இதுவரை பார்க்காத அரசியல், இதுவரை பார்க்காத கிராமம் - இரண்டும் கலந்த ஒரு களமா இந்தப் படத்தை உருவாக்கப்போறேன்!” என முடிக்கும் சுரேஷ் சங்கையாவுக்கு, நகரம் மீதான பயம் இப்போது இல்லை!

- கே.ஜி.மணிகண்டன்