மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டைட்டில் கார்டு: விஜய்குமார் - 19

Title Card: URIYADI Director Vijay kumar
பிரீமியம் ஸ்டோரி
News
Title Card: URIYADI Director Vijay kumar

`உறியடி’யில் சந்திச்ச எந்தப் பிரச்னையும் ‘உறியடி 2’-ல் எனக்கு இல்லை...

சினிமா பின்னணி இல்லை. கல்லூரியில் படிக்கும்வரை `ஜாலியா இருக்கணும்' என்பதுதான் குறிக்கோள். ஆனால், இயக்குநராக அறிமுகமானபோது சாதிக்கு எதிராக `உறியடி' நடத்தினார், விஜய்குமார்.

``அம்மா பார்வதிக்கு தர்மபுரி, அப்பா பத்ரப்பாவுக்குச் சித்தூர் சொந்த ஊர்கள். அண்ணன் நாகராஜ், சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அக்கா மகேஷ்வரி அரசுப் பள்ளி ஆசிரியை. நான் கடைக்குட்டி! மிடில் கிளாஸ் குடும்பமா இருந்தாலும், அன்பும் ஆதரவுமான வாழ்க்கை எனக்குக் கிடைச்சது. 10-ம் வகுப்பு வரை ஈ.சி.ஆர் செயின்ட் ஜோசப் ஸ்கூல், 12-ம் வகுப்பு வரை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. பிறகு, சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ‘உலோகவியல்’ படிச்சேன். அப்பாவுக்கு கிரானைட் ஃபேக்டரியில் வேலை. சின்ன வயசிலேயே சென்னையில செட்டில் ஆகிட்டதால, நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்கேதான்.

Title Card
Title Card

படிக்கும்போது இயக்குநர் ஆவேன்னு நினைச்சதில்லை. நல்லாப் படிக்கிற பையனா இருந்ததோடு, தான்தோன்றித் தனமாவும் சுத்திக்கிட்டிருந்தேன். நான் ரொம்பச் சின்னப் பையனா இருந்தப்போ, அப்பா வேலை பார்த்த கிரானைட் ஃபேக்டரியில ‘தங்கமகன்’, ‘பணக்காரன்’ படங்களோட ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தது ஞாபகம் இருக்கு. இவ்ளோதான் எனக்கும் சினிமாவுக்குமான உறவு. பிறகு, நான் பார்த்த ஷூட்டிங் ‘உறியடி’தான்!” என்பவருக்கு, சினிமா மீதான ஈர்ப்புக்கு முக்கிய காரணம் தனிமை.

``காலேஜ் படிக்கும்போது, ‘உறியடி’யில் பார்த்த பையன் மாதிரிதான் இருந்தேன். கொலை மட்டும்தான் செய்யல... மத்தபடி, ‘ஜாலியா இருக்கணும்’ மனநிலைதான். படிப்பு முடிஞ்சதும் நண்பர்கள் இல்லாத வெறுமை. தவிர, நான் அதிகமா வெளியே சுத்துற ஆளும் கிடையாது. இன்னைக்குவரை சென்னையில எந்த ஏரியாவுக்குப் போகணும்னாலும் மேப் உதவி இல்லாமப் போகமாட்டேன். அப்படி இருந்த சூழல்ல நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.

பிறகு, நல்ல பிள்ளையா வேலைக்குப் போயிட்டாலும், படம் பார்க்கிற பழக்கம் கூடவே வந்தது. ஐ.பி.எம், அதிதி டெக், இன்ஃபோஸிஸ் இப்படி எந்தக் கம்பெனிக்கு வேலைக்குப் போனாலும், நல்ல சம்பளத்தோடு, நல்ல நிலைக்கு வந்திடுவேன். அதனால, வீட்டுல எப்போவும் என்மேல நம்பிக்கை அதிகம். சென்னை, கேரளா, பெங்களூர்னு பல இடங்களில் வேலை பார்த்திருக்கேன். வேலை முடிஞ்சு திரும்பினா, நாலு டிவிடி இருந்தால் போதும். சினிமாக்கள் வழியா உலகமே என்கூட இருக்கும். சினிமாவுல வர்ற மக்களெல்லாம் என் பக்கத்துல இருப்பாங்க... அப்படி ஒரு ஃபீல் கிடைச்சது.

URIYADI DIRECTOR VIJAY KUMAR
URIYADI DIRECTOR VIJAY KUMAR

படம் பார்க்கிறதோடு, `இப்படி நடக்காமப்போயிருந்தா, இந்தப் படம் எப்படி இருக்கும்', `அங்கே அப்படி நடந்திருந்தா, படம் எப்படி இருக்கும்'னு பார்த்த படங்களின் திரைக்கதையை மாத்தி யோசிப்பேன். அதுவே, திரைக்கதை எழுதுற ஆசைக்கு அடிப்படையா இருந்தது. `நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் முதல் சீஸன் அது. ‘ஹெவென்லி ஃபன்’னு ஒரு குறும்படம் எடுத்து நிகழ்ச்சிக்கு அனுப்பித் தேர்வானேன். பிறகு, ‘நல்லதோர் வீணை’ங்கிற குறும்படம் எடுத்தேன். அப்போ எனக்கு நடந்த ஒரு விபத்தினால் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தொடர முடியல. ஓய்வுக்குப் பிறகு, வேலைக்குப் போயிட்டேன். இதுக்கிடையில காதலிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மனைவிக்கு அமெரிக்காவில் வேலை. ரெண்டு குறும்படம் இயக்கிய அனுபவம், ‘சினிமாவும் எடுத்திடலாம்’னு நம்பிக்கை தரவே, நானும் கதை எழுதுறதுக்காக அவங்ககூட அமெரிக்கா போயிட்டேன்.” வேலையை விட்டு விலகும் முன் மேனேஜரிடம் இவர் சொன்ன காரணம், சினிமாமீதான காதல்!

``கிட்டத்தட்ட எட்டு வருடம் சாஃப்ட்வேர் துறையில் வேலை. கடைசியா வேலை பார்த்த இன்ஃபோஸிஸ்ல வேலையை விடும்போது, `சினிமா எனக்குத் தொழில் கிடையாது, பேஷன்! நிச்சயம் நான் நல்ல சினிமா எடுக்கணும்'னு சொன்னேன். பிறகு, அமெரிக்காவின் அர்கான்ஸா மாகாணத்தில் இருந்துகிட்டு `உறியடி'க்குத் திரைக்கதை எழுத ஆரம்பிச்சேன்.

நாம நினைக்கிற சினிமாவைக் கொடுக்கணும்னா, நாமதான் தயாரிக்கணும்னு தோணுச்சு. வீட்டுலகூட 'சொத்தையெல்லாம் விற்கவேண்டி இருக்கும், ரெடியா இருங்க!'ன்னு சொல்லியிருந்தேன். அப்போ அவங்க அதைக் காமெடியா நினைச்சிருப்பாங்க. ஆனா, எல்.ஐ.சி பாலிசி பணத்தையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கமாட்டாங்க’’ என்பவருக்கு, `உறியடி' கொடுத்த அனுபவம், தனிப் படமாக எடுக்கும் அளவுக்குக் கொடுமையானது.

விஜய்குமார்
விஜய்குமார்

``அம்மா, அக்கா எப்போவுமே எனக்கு சப்போர்ட். ஆரம்பத்துல கொஞ்சம் பயந்தாங்க. `சினிமாவுல நடிக்கிறவங்களே, சாஃப்ட்வேர் இன்ஜினீயரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நீயென்ன சினிமாவுக்குப்போற!'ன்னு அம்மா சொன்னாங்க. அண்ணனோ, சினிமாவுல உதவி இயக்குநரா இருந்தே காலத்தைக் கடத்துனவங்களோட கண்ணீர்க் கதை வீடியோவை டவுன்லோடு பண்ணிப் போட்டுக்காட்டினார். அவங்க சொல்றதெல்லாம் 99% உண்மைதான். ஆனா, நான் மிச்சம் இருக்கிற 1% லிஸ்ட்டுலதான் வருவேன்னு நம்பிக்கை இருந்தது.

ஆனா, ஆரம்பத்துல அவங்க பயந்ததுதான் நடந்தது. மனதளவுல பாதிக்கப்படுற காயங்களின் தழும்பு வெளிப்படையா தெரியிற ஆப்ஷன் இருந்ததுன்னா, இங்கே பல படைப்பாளிகளோட காயத்தைக் கண்ணால பார்க்கலாம். புதுசா படம் எடுக்க வர்றவன் நேர்மையா ஓர் படைப்பைக் கொடுக்க நினைச்சா, அவனுக்கு என்ன கதி ஏற்படும்னு ‘உறியடி’யைத் தயாரிச்சது மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். முதல் முறையா படம் பண்ற பலரையும் `இவன்லாம் படம் பண்ணி, ரிலீஸ் பண்ணி...'ங்கிற டோன்லதான் இங்கே அணுகுறாங்க. நான் கமிட் பண்ணுன இசையமைப்பாளர் 6 லட்சம் சம்பளம் வாங்கிட்டு, அங்கேயும் இங்கேயும்னு அலைக்கழிச்சு, கடமைக்கு சில பாடல்களைப் போட்டுக்கொடுத்தார். வேறொரு இசையமைப்பாளர்கிட்ட போய் நின்னா, ரெண்டு பாட்டுக்குக் கம்போஸிங் பண்ணிக் கொடுத்ததோடு, காணாமப்போயிட்டார். அந்தப் பாடல்கள் ‘உறியடி’யில் வரலைங்கிறது தனிக்கதை.

Title Card: URIYADI Director Vijay kumar
Title Card: URIYADI Director Vijay kumar

பின்னணி இசைக்கு என்ன பண்றது, நிகழ்ச்சிகளுக்கு டிராக் வாசிக்கிறவங்களைப் பிடிச்சு, 25 நிமிட மியூசிக் டிராக் வாங்கினேன். அதை சிஸ்டத்துல இறக்கி, அப்படி இப்படின்னு மாத்திப்போட்டு பரிசோதனை பண்ணிப் பார்த்தேன். கிடைச்ச இசை புதுசா இருந்தது. நானே பின்னணி இசை அமைச்சேன். இதுமட்டுமா, ‘உறியடி’க்கு ரெண்டு எடிட்டர் மாறிட்டாங்க. `சரிதான் போங்க’ன்னு ஒரு வெர்ஷனை நானே எடிட்டும் பண்ணினேன். குருவி குப்பையைக் கிளறிக்கிட்டு இருக்கும்போது, அது உருவாக்கப்போற அழகான கூடு கண்ணுக்குத் தெரியாது. அப்படித்தான் இருந்தது, `உறியடி'க்கான முன்கதை.

அதுக்குப் பிறகு, 2.15 மணிநேரப் படத்தை எடுத்துக்கிட்டு சென்சாருக்குப் போனா, `வன்முறை அதிகமா இருக்கு', `மாணவர்கள் போராடுறமாதிரி இருக்கு'ன்னு சொல்லிப் பல காட்சிகளை வெட்டினாங்க. `உறியடி’யைவிட அதிக வன்முறைக் காட்சி நிறைந்த படத்துக்குக்கூட ‘யு’ சான்றிதழ் கிடைச்சதைப் பார்த்திருக்கேன். ஆனா, என் படத்துக்கு `ஏ' சான்றிதழ்தான். பிறகு, டிவி வெர்ஷனுக்காக வன்முறையைக் குறைச்சு `யு/ஏ' வாங்கினாலும், இன்னைக்குவரை சேட்டிலைட் ரைட்ஸ் விற்காமதான் இருக்கு.” இப்படியான பயணத்தில், ரிலீஸில் பிரச்னை இல்லை என்றால்தான் ஆச்சர்யம்!

``இயக்குநர் நலன் குமாரசாமி அவர் நண்பரோடு சேர்ந்து படத்தை ரிலீஸ் பண்ண முன்வந்தார். `மசாலா காபி'யைக் கமிட் பண்ணி, படத்துக்குப் புதுசா பாடல்களைச் சேர்த்தாங்க. விளம்பரம் பண்றதுல சிக்கல், தியேட்டர் கிடைக்கிறதுல சிக்கல்... பிறகு ‘உறியடி’ எப்படி ரிலீஸாச்சு, ரெஸ்பான்ஸ் என்னங்கிற வரலாறு இன்டஸ்ட்ரியில இருக்கிறவங்களுக்குத் தெரியும். இந்தப் படம் மூலமா நான் இழந்த பணம் அதிகம். ஆனா, விகடன்ல நல்ல மார்க் கொடுத்தாங்க, ‘சிறந்த அறிமுக இயக்குநர்’ விருதும் கிடைச்சது. போலந்து நாட்டின் ‘வ்ரோக்ஸ்வாக்ஸ்’ யுனிவர்சிட்டியில் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு ‘உறியடி’யைத் திரையிட்டு, விவாதம் நடத்தினாங்க. அதெல்லாம் மனநிறைவா இருந்தது.

“ரெண்டு குழந்தையைப் பெற்றெடுத்த அம்மாவுக்கு இருக்கிற மனவலி, உடல்வலியோடு இருக்கேன். அதனால, இப்போதைக்குக் கதை மட்டும்தான் எழுதறேன், டைரக்‌ஷனுக்கு பிரேக்!

மத்தபடி, இந்தப் படத்தை ஆன்லைன்ல இலவசமாப் பார்த்தவங்க எண்ணிக்கைதான் அதிகம். பரவாயில்ல... எனக்குப் பணம் வரலைன்னாலும், மக்களுக்கு ஏதோ ஒருவகையில படம் போய்ச் சேர்ந்ததே! `உறியடி’க்கு உழைச்ச மாதிரி இன்னொரு முறை நான் உழைச்சா, நிச்சயம் செத்துடுவேன். ஆனாலும் ஏன் கடைசிவரை விடாமப் பிடிச்சுக்கிட்டேன்னா, இந்தப் படத்துல என் உயிரைத் தவிர எல்லாத்தையும் கொடுத்துட்டேன். அது எனக்கு என்ன திருப்பித் தருதுன்னு பார்க்கணும்.

ஏன்னா, நான் சினிமாவை அவ்ளோ நேசிக்கிறேன். எவ்வளவு கொடூரமான மனநிலை இருந்தாலும், ஒரு இசை டக்குனு நம்ம மனசை மாத்திடுது இல்லையா. அப்படி ஒரு மனநிறைவை, மனமாற்றத்தை சினிமா மூலமா கொடுக்கலாம்” என்பவர், ‘உறியடி 2’ உருவான கதையைச் சொன்னார்.

“சூர்யா சார் நடிக்கிற ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதச் சொன்னாங்க, இயக்குநர் சுதா. அப்போ சூர்யா சாரைச் சந்திச்சுப் பேசும்போது, அவரே தயாரிக்க முன்வந்ததால் ‘உறியடி 2’ சாத்தியமாச்சு. `உறியடி’யில் சந்திச்ச எந்தப் பிரச்னையும் ‘உறியடி 2’-ல் எனக்கு இல்லை. ஒரு படைப்பாளிக்கான முழுச் சுதந்திரமும் எனக்குக் கிடைச்சது. நம்மளைச் சுத்தி இருக்கிற கெமிக்கல் ஃபேக்டரி ஒவ்வொண்ணும் எரிமலைக்குச் சமம். இதை மக்களுக்குச் சொல்லணும்னு நினைச்சேன், ‘உறியடி 2’ மூலமா சொன்னேன்” என்பவர், இப்போது நடிகராக ஒரு படத்தில் பிஸி.

“ரெண்டு குழந்தையைப் பெற்றெடுத்த அம்மாவுக்கு இருக்கிற மனவலி, உடல்வலியோடு இருக்கேன். அதனால, இப்போதைக்குக் கதை மட்டும்தான் எழுதறேன், டைரக்‌ஷனுக்கு பிரேக்! ஒரு படத்துல நடிக்கக் கேட்டிருக்காங்க. அந்த அறிவிப்பு சீக்கிரமே வரும். தவிர, இனி நான் எடுக்கப்போற எல்லாப் படங்களிலும் சமூகப் பொறுப்பு நிச்சயம் இருக்கும். ஏன்னா, சுதந்திரப் போராட்டமாகட்டும், மொழிப்போர் ஆகட்டும்... சிலநூறு மனிதர்களின் போராட்டம்தான், ஒட்டுமொத்த மக்களுக்கான விடுதலையா இருக்கு. இந்தச் சமூகம் நமக்கு நிறைய கொடுக்குது பிரதர்... நாம கொஞ்சமாச்சும் திருப்பிக் கொடுக்கணும். என் சினிமா அதைத்தான் பண்ணும்!” எனச் சிரிக்கிறார் விஜய்குமார்.

- கே.ஜி.மணிகண்டன்