
தீபிகா மாதிரி ஒரு அழகான தேவதை புரப்போஸ் பண்ணும்போது வெயிட் பண்ண வைக்கணும்னு யாராவது நினைப்பாங்களா?
'வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் இல்லாம மனசுக்குப் பிடிச்சு நான் தேர்ந்தெடுத்தது டிஜே தொழில். என் மனைவிக்கும் அந்த வேலை பிடிச்சிருந்ததனால, பார்த்துட்டிருந்த வேலையை விட்டுட்டு அவங்களும் டிஜே ஆகிட்டாங்க. திருமணமாகி ஜோடியா டிஜே பண்ற முதல் ஜோடி நாங்கதான்!’’ எனப் புன்னகைக்கிறார் நவீன். டிஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த இளம் காதல் ஜோடிகளைக் காதலர் தின ஸ்பெஷல் இதழுக்காகச் சந்தித்தோம்.
“என்னோட சொந்த ஊர் சென்னை. ஃபேமிலியில் எல்லாரும் டாக்டர், இன்ஜினீயர் என்பதால் என்னையும் இன்ஜினீயரிங் சேர்த்து விட்டாங்க. ஆனா, ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே டிஜே துறை மீது எனக்கு ஆர்வம் இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போது டிஜே பண்ணி ஒரு கல்ச்சுரல் போட்டியில் ஜெயிச்சேன். அதிலிருந்து, இதுதான் எனக்குன்னு முடிவுக்கு வந்துட்டேன். படிச்சிட்டு இருக்கும்போதே பிரபல தனியார் ஹோட்டலில் ஒரு வருடம் டிஜே கான்ட்ராக்டில் நல்ல சம்பளத்துடன் செலக்ட் ஆகிட்டேன்” என்றவரை நிறுத்தி, “நவீனை நான் செல்லமா நவ்ஸ்னுதான் சொல்லுவேன்... டிஜே நவ்ஸ் என்றுதான் அவரை எல்லாருக்கும் தெரியும். அதைச் சொல்லாம விட்டுட்டாரு” என்றவாறு தொடர்கிறார் காதல் மனைவி தீபிகா.

“என்னோட தாய்மொழி மராத்தி. படிச்சது, வளர்ந்தது எல்லாம் சென்னை. என் ஃப்ரெண்ட் மூலமா இவர் அறிமுகமானார். நண்பர்களா பழகும்போது எனக்கு இவரை ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் காதலைச் சொல்லிட்டேன். ஆனா, அவர் மூணு வருஷம் ஓகே சொல்லவே இல்லை. நானும் இன்னைக்குச் சொல்லுவார், நாளைக்குச் சொல்லுவார்னு மூணு வருஷம் காத்திருந்தேன்” என்று ஒரு எதிர்பார்ப்புடன் நிறுத்த, நவீன் தொடர்ந்தார்.
“தீபிகா மாதிரி ஒரு அழகான தேவதை புரப்போஸ் பண்ணும்போது வெயிட் பண்ண வைக்கணும்னு யாராவது நினைப்பாங்களா? அதெல்லாம் இல்லைங்க. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஒருத்தன் காதல் தோல்வியானதால் இறந்துட்டான். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே லவ், பிரேக் அப், மறுபடி லவ்னு பண்றவங்களை நேரடியா பார்த்திருக்கேன் என்பதால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒரு பொண்ணைக் காதலிச்சா, கடைசி வரைக்கும் அவங்ககூடதான் வாழணும்னு நினைச்சேன்.


எங்க ரெண்டுபேரின் தாய்மொழி, கலாசாரம் எல்லாமே வேற. பொண்ணு வீட்டில் சம்மதிப்பாங்களா என்கிற தயக்கம் இருந்தது. இவங்க நான்தான் வேணும்னு ரொம்பவே உறுதியா இருந்தாங்க. அதனால, ஓகே சொன்னேன். அவங்க வீட்டிலும் அவங்களே பேசி சம்மதம் வாங்கினாங்க” என்றதும் தீபிகா பேசினார்.
“ஆரம்பத்தில் நவீன் டிஜேன்னு சொல்லும்போது இது புதுத் துறையா இருக்கு... இதுல நிரந்தர வருமானம் வருமா என்கிற தயக்கம் எங்க ஃபேமிலியில் இருந்தது. அவர் என்ன பண்ணப் போறார் என்பதை ரொம்பத் தெளிவா என் அப்பா, அம்மாகிட்ட எடுத்துச் சொன்னார். அவங்களும் சம்மதிச்சாங்க. திருமணத்துக்குப் பிறகு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ ஆரம்பிச்சோம். ஒருநாள் என்கிட்ட நீ டிஜே பண்ணுறியான்னு கேட்டார். எனக்கு அந்தச் சூழல் புதுசு... அந்தத் துறை எனக்கு எப்படி செட் ஆகும் என்கிற கேள்வி இருந்துச்சு. ‘நானும் உன்கூடவே இருப்பேன்... பிடிச்சிருந்தா டிரை பண்ணிப் பாரு, டிஜேவாக பெண்கள் ரொம்பக் குறைவாதான் இருக்காங்க. நீ பண்ண ஆரம்பிச்சா இந்தத் துறையில் உனக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு’ன்னு சொன்னார். அவர் டிஜே பண்ண ஆரம்பித்ததிலிருந்து நான் அவர் கூடவே இருந்ததனால எனக்கும் அந்தத் துறையில் ஆர்வம் இருந்தது. அதனால, கத்துக்கிறேன்னு சொன்னேன்” என்றவரைத் தொடர்ந்து நவீன் பேசினார்.
“நான் கேட்டதும் தீபிகா, ‘நான் சொல்லிக் கொடுத்ததை ரொம்ப சீக்கிரமாகவே கத்துக்கிட்டாங்க. நான் டிஜே பண்றேன்னு சொன்னப்பவே ஃபேமிலியில் தயக்கம் காட்டினாங்க. தீபிகாவையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதும் எல்லாரும் பயந்தாங்க. நம்ம ஊரில் டிஜே என்றாலே கலாசாரச் சீரழிவு என்கிற மாதிரி பார்க்கிறாங்க. நானும் சரி, தீபிகாவும் சரி, டீ டோட்டலர். பார்ட்டியில் டிஜே பண்றதனால நாங்க தப்பானவங்க இல்லை. கிளப்களில் மட்டுமல்லாமல் நிறைய கல்யாண வீடுகளில், பிறந்தநாள் விழாக்களில் டிஜே பண்றோம்” என்றார் நவீன். “ஆமாங்க, டிஜே பற்றிய தப்பான இமேஜை மாத்தணும்” என்று ஆமோதிக்கும் தீபிகா “2017 நியூ இயர்தான் என்னோட முதல் ஷோ. நான் டிஜே பண்றதையும், அந்தச் சூழலையும் பார்க்கிறதுக்காக எங்க ஃபேமிலியையும், அவரோட ஃபேமிலியையும் கூட்டிட்டுப் போயிருந்தோம். எல்லாரும் நேரில் அந்தச் சூழலைப் பார்த்ததும் பார்ட்டி என்றாலே தவறு என்கிற கண்ணோட்டத்தை மாத்திக்கிட்டாங்க. அதைத் தொடர்ந்து ஜோடியா டிஜே பண்ண ஆரம்பிச்சோம். டிஜேவிற்காக நானும், நவீனும் நிறைய விருதுகள் வாங்கினோம். அந்த அவார்டு விழாக்களில் பெண் டிஜேக்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருந்தாங்க. டிஜே ஆகணும்னு ஆசைப்படுற பல பெண்களுக்கு என் இன்ஸ்டாகிராம் மூலமா விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் கொடுத்துட்டு இருக்கேன். நவீனை இம்ப்ரஸ் பண்ணணும் என்பதற்காகவே டிஜே பண்ணும்போது புதுப்புது டிராக் மிக்ஸ் பண்ணி ரொம்ப மெனக்கெடுவேன். ஆனாலும், அவர்கிட்ட எந்த ரியாக்ஷனும் வராது. இதுவரை ஐ லவ் யூன்னுகூட அவரா சொன்னதில்லைங்க” என்றவரைச் செல்லமாய் அடித்துவிட்டு, நவீன் தொடர்ந்தார்.


“எனக்குக் காதலை வெளிப்படுத்தத் தெரியாது. லவ் யூ என அடிக்கடி சொல்லிட்டு இருந்தோம்னா அதில் எந்த ஃபீலும் இருக்காதுங்கிறது என்னோட எண்ணம். ரெண்டு பேரும் சேர்ந்து டிஜே பண்ண ஆரம்பிச்சதுமே ‘Hub at Ecr’, ‘Dj’s For u’ என்கிற ரெண்டு பிராண்டுகளை உருவாக்கிட்டோம். பெரிய அளவில் டிஜேவிற்கு எங்கே கற்றுக் கொள்ளணும்னு பலருக்கும் தெரியலை. சுலபமா இலவச ஆப்களிலேயே டிஜே கத்துக்கலாம் என்பதையும், டிஜே குறித்துக் கற்றுக் கொடுக்கவும் ஆன்லைன் கிளாஸும் நடத்திட்டு இருக்கோம். இப்ப பெண்கள் இந்தத் துறைக்குள்ளும் வர ஆரம்பிச்சிருக்காங்க. பார்ட்டிக்கு டிஜே பண்ண விருப்பம் இல்லாத பெண்கள் தாராளமா கல்யாண வீடுகளில் டிஜே பண்ணலாம்.
முதல் முறை விஜய் டி.வி-யில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சி பண்ண தனியா வாய்ப்பு வந்தப்ப தீபிகா கொஞ்சம் தயங்கினாங்க. இப்போ பல விஷயங்கள் கத்துக்கிட்டு ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் கலக்கிட்டிருக்காங்க” என்றவரின் தோள் சாய்ந்து தீபிகா பேச ஆரம்பித்தார்,
“ரெண்டு பேரும் ஒரே துறையில் இருக்கிறதனால உங்களுக்குள் சண்டை வராதான்னு பலர் கேட்பாங்க. ஈகோ எங்க ரெண்டு பேர்கிட்டேயும் இல்லை. ‘நான் சம்பாதிக்கிறேன்... இது என் பணம்’னு நாங்க நினைச்சதே இல்லை. எனக்கு சோஷியல் மீடியாவை எப்படி ஆக்டிவா வச்சுக்கணும்னு தெரியும். எங்களோட பெரும்பாலான கஸ்டமர்ஸ் ஆன்லைன் மூலமாதான் எங்களை ரீச் பண்றாங்க என்பதால் அந்த வேலைகளை நான் பார்த்துப்பேன். நவீனைப் பொறுத்தவரை அவர் டெக்னிக்கலா ரொம்ப ஸ்ட்ராங். ஆபரேஷன்ஸ், பிசினஸ் பிளானிங் எல்லாம் அவர் பார்த்துப்பார். எங்களோட பலமும் பலவீனமும் எங்களுக்குத் தெரியும். வீட்ல கணவன், மனைவிக்கு இடையே நடக்கிற குட்டிக் குட்டி சண்டைகள் எங்களுக்குள்ளேயும் நடக்கும், அவ்வளவுதான்” என்று கண்களைச் சிமிட்டிச் சிரிக்கிறார்.
காதலின் தீபங்கள் கணநேரத்தில் சுடர் விடுகின்றன.