
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வருவதற்குக் காரணமான பல பாடல்களை பாடிய டி.எம்.எஸ்., அவர் இருந்த காலத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்று கூறப்பட்டாலும், அது பற்றி அவரோ, அவர் குடும்பத்தினரோ வருத்தப்பட்டதில்லை.
அதிகாலை சாலைப் பயணத்தில் ஊர்களைக் கடந்து செல்லும்போது, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’ என்று தூரத்து ஒலிபெருக்கியிலிருந்தோ, டீக்கடை ரேடியோவிலிருந்தோ காற்றில் மிதந்து வரும் இந்தப் பாடல் ஏற்படுத்திய சிலிர்ப்பை அனுபவித்திருக்கிறீர்களா?
பல பக்திப் பாடல்களால் மக்கள் மனதை அமைதிப்படுத்திய இதே குரல், மனதுக்கு எழுச்சி தரும் வகையில் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடைமையடா...' என்று தி.மு.க மேடைகளிலும், ‘தம்பி, நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று...' என்று அ.தி.மு.க விழாக்களிலும், ‘இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு...' என்று காங்கிரஸ் கூட்டங்களிலும், ‘ஒன்று எங்கள் ஜாதியே... ஒன்று எங்கள் நீதியே' என்று கம்யூனிஸ்ட் மாநாடுகளிலும் வெவ்வேறு உணர்வுகளாக ஒலித்த ஆச்சர்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
அதே கணீர்க் குரல், ‘நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்...’, ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்’ என்று திரையிசையில் காதல் குரலாக உருக, மனம் கரைந்து போயிருக்கிறீர்களா?

விவசாயிகள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களையும் அவர்களது தினசரி பாடுகளுக்கிடையே தூளியில் போட்டுத் தாலாட்டி, தட்டிக்கொடுத்து தத்துவம், உற்சாகம், நம்பிக்கை எனப் பொழுதுகளை மலரச்செய்த குரலுக்கு மனம் மயங்கியிருக்கிறீர்களா? இந்த இசை ஆச்சர்யங்களின் சுரங்கம்... தமிழ் இசைக்குக் கிடைத்த வரம்... டி.எம்.எஸ்!
இந்த ஆண்டு, டி.எம்.எஸ்-ஸின் நூற்றாண்டு. சென்னை, மந்தைவெளியில் அவர் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்டி பெருமை சேர்த்திருக்கிறது தமிழக அரசு. அவர் பிறந்த மதுரையில் உருவச்சிலை அமைக்கும் வேலைகளும் நடக்கின்றன. 60 ஆண்டுக்கால இசைப்பயணம், 10,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையும் குரலும் என... இந்த இசை வரலாற்றின் கர்ஜனை இணையற்றது.
கலை, இலக்கியம், இசை, திரைத்துறை, அரசியல் எனப் பல துறைகளுக்கு ஆளுமைகளை வழங்கியிருக்கும் மதுரையின் மற்றொரு பெருமை, சிம்மக் குரலோன் டி.எம்.எஸ். மதுரையில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களால் நெசவுத் தொழிலுக்காக குஜராத்திலிருந்து அழைத்துவரப்பட்ட சௌராஷ்டிர மக்கள், பல தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்துவருகிறார்கள். அந்தச் சமூகத்திலிருந்துதான் தமிழிசைக்கு அருட்கொடையாகக் கிடைத்தார் டி.எம்.எஸ். 1950-ல் ‘ராதே என்னைவிட்டுப் போகாதடி' என்ற பாடல் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தவர், அடுத்த சில தசாப்தங்களில் திரையரங்கம் முதல் டீக்கடை வரை, திருவிழாக்கள் முதல் அரசியல் மேடைகள் வரை எனத் தமிழகம் முழுக்கத் தன் குரலுக்குச் சிம்மாசனம் போடவைத்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு பெரும் சினிமா ஆளுமைகளுக்குப் பாடும்போது, ‘எம்.ஜி.ஆர் பாடுற மாதிரியே இருக்கு’, ‘சிவாஜி முக பாவனைகளுக்கு ஏற்பக்கூடப் பாட முடியுமா?’ என்றெல்லாம் இசை ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு ரசிக்கும் அளவுக்கு, இருவருக்கும் தன் குரல் பொருந்திப்போகும் லாகவத்தில் டிம்.எம்.எஸ் குரல் ஜாலம் காட்டினார். இந்த ஜாம்பவான்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு நடிகருக்குமான தன் பாடலிலும் அவர் ரசிகர்களுக்கு ஒரு பரிசு வைத்திருக்கவே செய்தார். ‘காதலின் பொன் வீதியில்...’ பாடலை உருகி உருகி நேசத்தில் ததும்பும் குரலில் மு.க.முத்துவுக்காகப் பாடினார். ஹைபிட்ச்சில் புல்லரிக்க வைக்கும் அந்தக் சிங்கக்குரல், மென்குரலில் பாடிய சில பாடல்களில் ‘ஓராயிரம் பார்வையிலே’, பூமிக்கு வலிக்காமல் வந்து விழும் பூவின் மென்மையை ஒத்தது. காதல் வயப்பட்டவர்களின் உள்ளத்தை உருக்கும் இந்த மென்சோகப் பாடலை அவர் பாடியது வில்லன் நடிகர் அசோகனுக்காக. எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், நாகேஷ், கமல், ரஜினி, விஜயகாந்த் என அந்தப் பட்டியல் பெரிது.
‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் ‘பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால்....’ ரொமான்டிக் பாடலின் இளமை, இனிமை. ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ பாடலில் அவர் குரலில் கசியும் காதல் ஏக்கம், நுண்ணுணர்வின் ஆகச்சிறந்த வெளிப்பாடு.

‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்...’ டூயட் பாடலில் அவர் குரலில் காதலின் சரணாகதி குடியிருக்கும். சோகப் பாடல் பாடினால், கேட்பவர்களையும் அந்தச் சோகம் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு உணர்வுக்குவியலாக இருக்கும். ‘சோகம் ததும்பும் காதல் பாடல்களுக்கு இளமைக்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்வியும், மகிழ்ச்சி பொங்கும் காதல் பாடல்களுக்கு மனைவி மீதான பரிபூரண அன்பும்தான் காரணம்’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
'சூர்யகாந்தி' படத்தில் கண்ணதாசனே மேடையில் பாடுவது போன்று உருவாக்கப்பட்ட 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது... கருடா சௌக்கியமா?' என்ற பாடல், இன்றளவுக்கும் அரசியல் அரங்குகளில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கம், அளவிட முடியாதது. ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ பாடலை கவிஞர் கண்ணதாசன், தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் சூட்டோடு எழுதியதாகச் சொல்வார்கள். அதே போன்று டி.எம்.எஸ்-ஸுக்கும் உறவுகளால் நேர்ந்த ஒத்த அனுபவங்களால்தான், அந்தப் பாடல் அவ்வளவு உயிர்ப்புடன் அமைந்தது என்று சொல்பவர்களும் உண்டு. ஒவ்வொரு பாடலையும் உணர்ந்து பாடுவதுதான் டி.எம்.எஸ்-ஸின் நிகரற்ற அடையாளம். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தின் ‘அம்மம்மா தம்பி என்று நம்பி...’, ‘ஜிஞ்சினுக்காம் சின்னக்கிளி...’, ‘பைரவி’ திரைப்படத்தின் ‘நண்டூருது...’, ‘பாகப்பிரிவினை’ திரைப்படத்தின் ‘ஏன் பிறந்தாய் மகனே..,’, ‘துலாபாரம்’ திரைப்படத்தின் ‘பூஞ்சிட்டு கன்னங்கள்...’ எனக் குரலிலேயே நடித்திருப்பார். நடிகர்கள் அந்த கேரக்ட ராகவே மாறிவிடுவதைப் பார்த்திருப்போம். டி.எம்.எஸ் அளவுக்குக் குரலில் நடிப்பைக் கொண்டுவந்தவர்கள் யாருமில்லை.

பக்திப் பாடல்கள்... டி.எம்.எஸ்-ஸின் ராஜாதி ராஜாங்கம். பரவசம் ஏற்படுத்தும் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’யில் அட்சர சுத்தமான அவரது தமிழ் உச்சரிப்புக்கும், `புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்று நம்மையும் பக்தி வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்கும், ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...’ என்று அவதாரக் குரலாகிக் கிடுகிடுக்க வைக்கும் அவரது கம்பீரத்துக்கும் இசையறிவையும் தாண்டி... அவரது இறை பக்திக்கும் பங்குண்டு. அவர் உள்ளத்தில் தளும்பிய பக்தியே குரலிலும் வழிந்தது. நையாண்டிப் பாடல்களில் இன்றும் மாஸ்டர் பீஸாக விளங்கும் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலும், 90-களில் ‘ஆண்களை நம்பாதே’ படத்தில் பாடிய ‘வாராயோ தோழா வாராயோ’ பாடலும், நையாண்டி கலந்த தத்துவப் பாடலான ‘பார்த்தா பசுமரம்’ பாடலும் மறக்க முடியாதவை. மரண வீடுகளில் இன்றுவரை ஒலிக்கவிடப்படும் ‘வீடுவரை உறவு, வீதிவரை மனைவி’, ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’, ‘போனால் போகட்டும் போடா’ பாடல்கள்... வாழ்வின் நிலையின்மையின் குரல் வடிவம்.
டி.எம்.எஸ்... பட்டுக்கோட்டையார், உடுமலை நாராயணகவி, கா.மு.ஷெரீப், மருதகாசி, கண்ணதாசன், புலமைப்பித்தன், வாலி, டி.ராஜேந்தர் போன்றோரின் வரிகளை தன் குரல் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சில் பதியவைத்தவர். மனோஜ் கியான் இசையில் பாடிய ‘உன்னை தினம் தேடும் தலைவன்’ என்ற பாடல் வரிகளைப்போல, பாட்டுத் தலைவனான டி.எம்.எஸ்-ஸின் குரலை தினம் தேடுபவர்கள் இன்றும் பலர்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வருவதற்குக் காரணமான பல பாடல்களை பாடிய டி.எம்.எஸ்., அவர் இருந்த காலத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்று கூறப்பட்டாலும், அது பற்றி அவரோ, அவர் குடும்பத்தினரோ வருத்தப்பட்டதில்லை. நூறாவது ஆண்டிலும் ஒரு கலைஞன் மக்களால் ரசித்து நெகிழ்ந்து கொண்டாடப்படுகிறார் என்றால்... இதைவிடப் பெரிய பேறு வேறு என்ன?!