சினிமா
தொடர்கள்
Published:Updated:

ட்ரிகர் - சினிமா விமர்சனம்

ட்ரிகர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரிகர் - சினிமா விமர்சனம்

ஆதரவற்ற குழந்தைகள் கடத்தப்படுவது என்கிற பழைய ஐடியாவில் சிற்சில புது யுக்திகளைப் புகுத்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.

`அண்டர்கவர் போலீஸும் அவர்தம் சாகசங்களும்' என்கிற ஜானரின் மற்றுமொரு சினிமா இந்த ‘ட்ரிகர்.'

காவல்துறையில் ஸ்பெஷல் ஸ்குவாட் ஒன்றில் பணியாற்றுகிறார் அதர்வா. ஒரு பிரச்னையில் அவர் சீனியர்களின் ஆணையை மீறியதாகப் புகார் வர, வேலையை விட்டு அனுப்பி விடுகிறார்கள். காக்கிச்சட்டையிடமிருந்து விலகியிருப்பவருக்குத் தேடி வருகிறது ஒரு வேலை. சென்னை மாநகரம் முழுக்க இருக்கும் காவல் நிலையங்களையும் அங்கு பணியாற்றும் போலீஸ்காரர்களையும் இரவு பகலாய்க் கண்காணித்து ஒழுங்கீனமானவர்களை ரிப்போர்ட் செய்யவேண்டும் என்கிற அண்டர்கவர் ஆபரேஷனைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்துவருகிறார். அவருக்கே தெரியாமல் ஒரு கடத்தல் கும்பலின் திட்டம் ஒன்றில் மாட்டிக்கொள்ள, மெல்ல நூல்பிடித்துக் கரையேறுவதுதான் கதை.

ட்ரிகர் - சினிமா விமர்சனம்

துறுதுறுவென ஐ.டி கம்பெனியிலிருந்து பார்ட் டைமாய் போலீஸ் வேலைக்கு வருபவர் போல ப்ரெஷ்ஷாய் இருக்கிறார் அதர்வா. முகத்தில் காவலதிகாரிக்கான மிடுக்கு கொஞ்சம் கம்மியாய் இருந்தாலும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் வழியே அதைச் சரிக்கட்டிவிடுகிறார். மசாலாப் படத்தின் வழக்கமான நாயகியாக தான்யா ரவிச்சந்திரன். அருண் பாண்டியன் - அதர்வா காட்சிகள் ஒன்றிரண்டு இடங்களில் நன்றாகவே எடுபடுகின்றன. சின்னி ஜெயந்த் என்ன செய்யப்போகிறார் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டாலும் அந்தக் காட்சியில் தன் பங்களிப்பை நிறைவாகவே வழங்கியிருக்கிறார். வில்லனாய் வரும் தேவ் ஷெட்டி பயங்கர பில்டப்போடு அறிமுகமாகி, இறுதியில் பன்ச் பேசும் சராசரி எதிராளியாய் சுருங்கிப்போகிறார்.

பாடல்களில் காணாமல்போகும் ஜிப்ரானின் முத்திரை, த்ரில்லர் படத்தின் பின்னணி இசையில் பளிச்சென்று தெரிகிறது. தங்கு தடையில்லாமல் வேகமாய் ஓடும் கதையமைப்பில் தன் பங்கிற்கு வேகத்தைக் கூட்டிப் பரபரக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வெங்கட். திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சியமைப்புகளும் படத்தின் ப்ளஸ்.

ட்ரிகர் - சினிமா விமர்சனம்

ஆதரவற்ற குழந்தைகள் கடத்தப்படுவது என்கிற பழைய ஐடியாவில் சிற்சில புது யுக்திகளைப் புகுத்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். நிஜ சம்பவங்களோடு தொடர்புபடுத்தி அந்தக் குற்றங்களை விவரிப்பதும் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ஆனால், படம் எங்கெல்லாம் லாஜிக்காக அடிவாங்குகிறதோ அங்கெல்லாம் ‘ஹேக்கிங்' என்கிற சப்பைக்கட்டுதலைக் கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர். தமிழ் சினிமாவில் இதுவரை ஹேக் செய்யப்படாத ஒரே விஷயம் படம் பார்ப்பவர்களின் மூளைதான்போல. ‘பாரத விலாஸ்' என்கிற செட்டப்பில் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் என நான்கு பேரை யோசித்தவர் அவர்களுக்கான காமெடி ஏரியாவையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். ‘டார்க் ஹியூமர்' எதிர்பார்த்துக் காத்திருக்கும் நமக்கு ஏமாற்றமே கிடைக்கிறது.

தடுமாறும் திரைக்கதையினால் பாதியிலேயே குறிதப்பிப்போகிறது இந்த ட்ரிகர் அனுப்பிய தோட்டா.