லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

டி.வி. பிரபலங்களின் டிரெண்டு செட்டர்ஸ்!

டி.வி. பிரபலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.வி. பிரபலங்கள்

நட்சத்திர உடைகள்

சாமானியப் பெண்கள், வெள்ளித்திரை நடிகை நயன்தாராவில் ஆரம்பித்து சின்னத்திரை தொகுப்பாளர் டிடி வரை ஃபாலோ செய்துதான் தங்களது ஃபேஷன் சென்ஸை மேம்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு உதவுகிறவர்கள், பிரபலங்களின் ஃபேஷன் க்ரியேட்டர்களே. பிரபலங்களின் வழியாக சாமானியப் பெண்களுக்கான டிரெண்ட்டை செட் செய்பவர்கள் இவர்கள்தாம். அப்படி, சேனல் செலிபிரிட்டிகளுக்கு அமர்க்களமாக காஸ்ட்யூம் டிசைனிங் செய்துகொடுத்துவரும் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்.

டிடி உடன் பயணம் இப்படித்தான் ஆரம்பிச்சது!

டிரெடிஷனல், டிரெண்டி என அனைத்துத் தோற்றத் திலும் வசீகரிக்கும் டிடி, சமீபகாலமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றும் புகைப்படங்களுக்கான கேப் ஷனில் இடம்பெறுபவர் டிசைனர் ராஜேஸ்வரி நித்யானந்தம்!

“சென்னை கவின் கலைக் கல்லூரியில் டெக்ஸ்டைல் டிசைனிங்கும் NIFT-ல் மாஸ்டர் டிகிரியும் முடிச்சேன். டெல்லியில் டிசைனிங், டிரெண்டு, மார்க்கெட் வேல்யூனு எல்லா ஏரியாவையும் கத்துக்கிட்டேன். அந்த அனுபவத்தில் ‘வால்மார்ட்’ மாதிரி பல இன்டர்நேஷனல் பிராண்டுகளுக்கெல்லாம் டிசைனிங் செய்யும் வாய்ப்பு கிடைச்சது. ‘பாரிஸ் ஃபேஷன் வீக்’ நிகழ்ச்சியில் என் பிராண்டு இடம்பெற்றிருக்கிறது.

டி.வி. பிரபலங்களின் டிரெண்டு செட்டர்ஸ்!

ஜுவல்லரி டிசைனிங்கும் செய்வேன்...

2014-ல் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து, இங்கே ஒரு யூனிட் வெச்சு டிசைன் பண்ணி, அதை டெல்லியில இருக்கும் எங்க டிரஸ் ஸ்டூடியோவுக்கு அனுப்பிட்டிருக்கேன். என் கணவரும் டிசைனிங் ஃபீல்டுதான்; விஜய் டி.வி-யில வேலைபார்க்கிறார். அவர் மூலமாதான் நான் டி.வி மீடியத்துக்கு வந்தேன். முதன்முதலா ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ நிகழ்ச்சி ஆங்கர் பிரியங்காவுக்கு டிசைன் செய்தேன். சொன்னால் நம்புவீர்களா... டிராவல், ஃபிரெண்ட்ஸ்னு வேற பொழுதுபோக்குகள் இருந்ததால், அப்போ எங்க வீட்டுல டி.வியே இல்ல. நிகழ்ச்சியோட பேரு, தொகுப்பாளர்கள், செட் டிசைன்னு எதுவுமே தெரியாம வேலைசெய்யுறது கஷ்டம்னுதான் டி.வியே வாங்கினோம்.

தொடர்ந்து, விஜய் டி.வியில ‘ஜோடி ஃபன் அன் லிமிட்டெட் நிகழ்ச்சியில் வேலைபார்த்தப்போ, ‘யாஷிகா, மஹத், மாகாபா ஆனந்த், ரியோ இவங்களுக்கு டிசைன் பண்ணணும், டிடி அவங்களோட டிசைனர்கிட்ட பண்ணிப்பாங்க’ன்னு சொன்னாங்க. ஆனா, அந்த நிகழ்ச்சியோட மூணாவது எபிஸோடிலேயே, ‘எனக்கும் டிசைன் பண்ணிக்கொடுங்க’ன்னு கேட்டாங்க டிடி. அப்படித்தான் ஆரம்பிச்சது எங்க காம்போ. அடுத்ததா ‘என்கிட்ட மோதாதே நிகழ்ச்சி’யில் டிடியின் சாய்ஸ் புடவை. நெசவு செய்யும் பெண்களை ஊக்குவிக்கிறதுக்காக டிடி எடுத்த முடிவு அது. நாங்களும் புடவை நெய்கிற பெண்கள்கிட்ட, வித்தியாசமான கலர்ல ப்ளைன் புடவைகளை வாங்கி, அதுக்குப் பொருத்தமா பார்டர் எம்ப்ராய்டரி செய்யுறது, பிளவுஸ் டிசைனிங்னு பார்த்துப் பார்த்து செய்தோம்.

ஒருமுறை, யூனிட்ல எம்ப்ராய்டரி செய்றவருக்கு உடம்பு சரியில்லாமப் போக, வேற வழியில்லாம எம்ப்ராய்டரி டைப்பில் ஹேண்டு பெயின்டிங் பண்ணினேன். டிடி என்ன சொல்வாங்களோனு தயக்கம். ஆனா, அவங்க சூழலைப் புரிஞ்சுக்கிட்டு, ‘வாவ் பியூட்டிஃபுல்’ னு உற்சாகப்படுத்தினாங்க.

நூல் உருவாக்கிறதுல ஆரம்பிச்சு, நெய்யுறது, தையல், எம்ப்ராய்டரி, க்ரோஷா, ஹோம் ஃபர்னிஷிங் ஃபேப்ரிக் டிசைன்ஸ், நகைகள், ஹேண்டு பேக்னு எல்லா வகையான ஆர்ட் ஃபார்மிலும் வேலைசெய்யுற ஒரு முழுமையான டிசைனரா இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்படி என்னோட பலவித டிசைன்களில் உருவான பொருள்களின் கண்காட்சி நடத்தும் கனவிருக்கு!’’

நனவாக வாழ்த்துகள்!

சர்ப்ரைஸ் ஆகிடுவாங்க!

ன்ஜினீயரிங் படித்திருந்தாலும், ஃபேஷன் மேல் இருந்த ஆர்வத்தால் இந்தத் துறைக்கு வந்தவர் ஜோத்ஸனா.

‘`2014-ல் அண்ணா நகர்ல என்னோட ‘சஜ்னா பிரைடல் ஸ்டூடியோ’ ஆரம்பிச்சேன். இப்போ லண்டன் மற்றும் சிங்கப்பூரிலும் என் பிராண்டு ஸ்டூடியோவை நடத்திட்டு வர்றேன். எங்களோட ஸ்பெஷல், எம்ப்ராய்டரி. குறிப்பா பிரைடல் பிளவுஸ்ல வித்தியாசமான எம்ப்ராய்டரி வேலைகள் செய்து டிரெண்ட் செட் பண்ணினோம். இப்ப டிரெண்டாகி இருக்கும் ‘வெயிஸ்ட் பெல்ட்’டைக்கூட நாலு வருஷங்களுக்கு முன்னாடியே எம்ப்ராய்டரி வெயிஸ்ட் பெல்ட்டா நாங்க அறிமுகப்படுத்தினோம்.

டி.வி. பிரபலங்களின் டிரெண்டு செட்டர்ஸ்!

கிட்டத்தட்ட எட்டு வருஷங்களாக இந்த ஃபீல்டுல இருந்தாலும், ஐந்து வருஷங்களுக்கு முன்னாடிதான் டி.வி ஷோக்களுக்கு காஸ்ட்யூம் செய்ய ஆரம்பிச்சேன். விஜய் டி.வி, சன் டி.வி, கலைஞர் டி.வின்னு வேலைபார்த்திருக்கேன். அப்படியே டி.வி செலிபிரிட்டிகளுக்கு காஸ்ட்யூம் செய்ய ஆரம்பிச்சேன். சன் டி.வி தியா, நட்சத்திரா நாகேஷ், ஜீ தமிழ் ஆயிஷா, ‘பிக் பாஸ்’ யாஷிகா, ஐஸ்வர்யா, ஷெரின், லாஸ்லியா, ரேஷ்மா பசுபுலேட்டினு இவங்க எல்லாருக்கும் டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாம பொது நிகழ்ச்சிகளுக்கும் டிசைன் பண்றேன்.

ஒரு டிரஸ்ஸுக்கு டிசைன் செய்ய ஸ்கெட்ச் போடும்போதே, அது யாருக்குப் பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணி, அந்த ஸ்கெட்ச், அதுக்கான கலர், மெட்டீரியல்னு எல்லாத்தையும் படம் பிடிச்சு அவங்களுக்கு அனுப்பிடுவேன். சம்பந்தப்பட்ட செலிபிரிட்டி பயங்கரமா சர்ப்ரைஸ் ஆகிடுவாங்க. ‘அடுத்த நிகழ்ச்சிக்கு இந்த டிரஸ்தான்’னு புக் பண்ணிடுவாங்க. நான் டிசைன் செய்கிற செலிபிரிட்டி ஒவ்வொருத்தரோட டேஸ்ட்டும் எனக்கு அத்துபடி. அதனால, அவங்களும் என்னை முழுசா நம்புறாங்க. என் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வர்ற அளவுக்கு, எங்களுக்குள்ள அழகான நட்பும் இருக்கும். நான் ஒரு டான்ஸரும்கூட என்பதால, ஒவ்வொரு பிரபலத்துடனும் டான்ஸ் செய்து வீடியோ எடுப்பது என் வழக்கம்!”

டிசைனர் டான்ஸர்!

‘இனி நீங்கதான் என் டிசைனர்’னு அஞ்சனா சொன்னாங்க!

ஃபேஷன் துறையில் 11 வருடங்களாக இருக்கும் ஜீவா மோகன், சைக்காலஜி படித்தவர். தொகுப்பாளர் அஞ்சனா உடைகளின் பிரம்மா!

“கார்ப்பரேட் கம்பெனியில நாலு வருஷங்கள் வேலைபார்த்தேன். எனக்குள்ள இருந்த ஃபேஷன் ஆர்வம், என் திசையை மாத்திடுச்சு. ஃபேஷன் போட்டோ ஷூட்டிங்ல ஸ்டைலிஸ்ட்டாதான் வேலையை ஆரம்பிச்சேன். அப்புறம் பெங்களூர்ல ஃபேஷன் கோர்ஸ் படிச்சிட்டு, முழுநேர டிசைனரா மாறிட்டேன். நாலு வருஷங்களுக்கு முன்னாடி பெசன்ட் நகர்ல ‘மேஜிக் ஜீனி பிரைடல் ஸ்டூடியோ’வை ஆரம்பிச்சேன். மறுபயன்பாட்டை ஊக்குவிக்கும் `சஸ்டைனபிள் ஃபேஷன்'தான் என் கான்செப்ட். ஒரு டிரஸ்ஸை குறைந்தது மூணு விதமா பயன்படுத்துகிற மாதிரி கஸ்டமருக்கு ஐடியா கொடுப்பேன்.

டி.வி. பிரபலங்களின் டிரெண்டு செட்டர்ஸ்!

டி.வி மீடியத்தில் அங்கீகாரம் கிடைச்சது, அஞ்சனாவாலதான். அவங்க என் ஏரியாதான். ஒரு நாள் திடீர்னு போன் பண்ணிட்டு என் ஷோரூமுக்கு வந்தாங்க. அவங்களுக்கு எங்க டிசைன்கள் ரொம்பப் பிடிச்சிடுச்சு. ‘இனி என்னோட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நீங்கதான் டிசைனர்’னு சொன்னாங்க. அவங்களுக்கான உடைகளைப் பெரும்பாலும் செலிபிரிட்டிகள் மட்டும் இல்லாம அனைத்துத் தரப்புப் பெண்களும் பயன்படுத்துற மாதிரி, அதே நேரம் வித்தியாசமாவும் டிசைன் செய்வோம். ஒருமுறை எங்க ஷோரூமுக்கு அஞ்சனாவோட தீவிர ரசிகர் ஒருத்தர், தன் மனைவியுடன் வந்தார். ‘அஞ்சனா போட்ட டிரஸ் எல்லாம் மட்டும் எடுத்துக் காட்டுங்க’ன்னு அவங்க ரெண்டு பேரும் ஸ்வீட்டா ஆர்டர் போட்டாங்க. அஞ்சனாகிட்ட சொன்னப்போ, ‘என்னய்யா சொல்ற... நெஜமாவா!’ன்னு ஆச்சர்யப்பட்டாங்க!”

அஞ்சனா அஞ்சனா!