
ஆங்காங்கே ட்விஸ்ட்கள், என்ன பிரச்னை என்றாலும் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு காமெடி மட்டுமே ஃபோகஸ் எனச் சிறப்பானதொரு ஸ்கெட்ச்
தந்தையின் மரணத்தைப் பயன்படுத்தி, குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சரி செய்ய முயலும் பிள்ளைகளின் கதையை அவல நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படமே இந்த ‘உடன்பால்.'
கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் மகன், தன் கணவர் சொந்தத் தொழில் தொடங்க பணம் எதிர்பார்க்கும் மகள் என இருவரும் தங்கள் அப்பாவான சார்லியிடம் வீட்டை விற்றுப் பணம் தரச் சொல்கிறார்கள். அந்த யோசனையை விடாப்பிடியாக நிராகரிக்கிறார் சார்லி. அதன் பின்னர் எதிர்பாராவிதமாக அவர் இறந்துவிட, வீட்டின் பத்திரத்தில் சிக்கல் இருப்பதால் அதை விற்கவே முடியாது என்பது தெரியவருகிறது. உடனே பணம் சம்பாதிப்பதற்காகக் குரூரமாக யோசிக்கும் பிள்ளைகள், அப்பாவின் பிணத்தை வைத்து என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கலகலப்பான காட்சிகளால் சொல்லியிருக்கிறார்கள்.

மூத்த மகன் பரமனாக வரும் லிங்கா, அவரின் மனைவியாக வரும் அபர்ணதி இருவரின் நடிப்புமே யதார்த்தம். குறிப்பாக குற்றவுணர்வு இருந்தாலும் அதைத் தாண்டி எட்டிப்பார்க்கும் பேராசையைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறார் அபர்ணதி. மகள் கண்மணியாக வரும் காயத்ரி, காமெடி சினிமா என்பதால் மிகை நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். ஆனால், காமெடியில் சிறப்பாக ஸ்கோர் செய்வது என்னவோ விவேக் பிரசன்னாதான். ‘‘இரு, மச்சான் சொல்வாரு’’ என டைமிங்கில் அப்ளாஸ் அள்ளுகிறார். மீண்டும் ஓர் அற்புதமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் அப்பா விநாயகமாக நடித்து நம் நெஞ்சமெல்லாம் நிறைகிறார் சார்லி. கடைசியில் சில காட்சிகளுக்கு மட்டும் இளையமகனாக வந்துபோகிறார் தீனா. தனம், குழந்தை நட்சத்திரங்கள் உட்பட திரையில் தோன்றும் அனைவருமே சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
ஒற்றை இலக்கத்தில் கதாபாத்திரங்கள், ஒரு வீட்டுக்குள் மட்டுமே நடக்கும் கதை, அவல நகைச்சுவை மட்டுமே பிரதானம், நெஞ்சைக் கனமாக்கும் க்ளைமாக்ஸ் என சவாலான ஸ்க்ரிப்ட்டைத் திறம்படக் கையாண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன். ஆங்காங்கே ட்விஸ்ட்கள், என்ன பிரச்னை என்றாலும் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு காமெடி மட்டுமே ஃபோகஸ் எனச் சிறப்பானதொரு ஸ்கெட்ச். ஆனால், காவல்துறையினர் அத்தனை பேர் இருக்க, தயக்கமே இல்லாமல் இவர்கள் போடும் திட்டம் அவ்வளவு லாஜிக்கானதாக இல்லை. இடிபாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இத்தனை லட்சங்களை நிவாரணமாக வழங்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
குறுகிய எல்லைக்குள் சிறப்பாக உழைத்திருக்கிறது மதன் கிறிஸ்டோபரின் கேமரா. படத்தை நீளச் செய்யும் சில தேவையற்ற காட்சிகளை எடிட்டர் மதன் தயக்கமின்றிக் கத்தரித்திருக்கலாம். சக்தி பாலாஜியின் பின்னணி இசை படத்துக்கு பலம்.
நீளத்தைக் குறைத்து, ஒன்றிரண்டு லாஜிக் பிரச்னைகளைச் சரி செய்திருந்தால் கூடுதலாகச் சிரிக்க வைத்து, க்ளைமாக்ஸில் அதிகமான தாக்கத்தையும் கடத்தியிருக்கும் இந்த ‘உடன்பால்.'