சினிமா
பேட்டிகள்
Published:Updated:

உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்

உடன்பிறப்பே
பிரீமியம் ஸ்டோரி
News
உடன்பிறப்பே

உடன்பிறப்பேவின் உயிர் ஜோதிகா. பற்றாக்குறைக்கும் மிகைநடிப்பிற்கும் இடையிலான மெல்லிய கோட்டில் பிசகாமல் பயணித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

மண்மணம் மாறாத கிராமத்துப் பரப்பில் அண்ணன் - தங்கை ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமே இந்த ‘உடன்பிறப்பே.’

வேங்கைவாசலின் அதிரடி ஆசாமி சசிகுமார். ‘நியாயத்திற்காக சண்டை போடலாம், தப்பேயில்லை’ என வீம்பாய் முறைத்துக்கொண்டு நிற்கும் அவருக்கு, தங்கை என்றால் உயிர். ஜோதிகாவுக்கும் அண்ணன் மேல் அளவுகடந்த பாசம். ஜோவின் கணவர் சமுத்திரக்கனி. ‘சர்பத் குடித்தால்கூட சட்டப்படிதான் குடிக்கவேண்டும்’ என்கிற கறார் பேர்வழி. இதனாலேயே சசிகுமாருக்கும் சமுத்திரக்கனிக்கும் முட்டிக்கொள்ள அண்ணனுக்கும் கணவருக்கும் இடையே கிடந்து அல்லாடுகிறார் ஜோதிகா. ஒரு சுபயோக சுபதினத்தில் இரு குடும்பங்களும் சேரும் நிகழ்வு கூடிவர, அதைத் தடுக்கும்வகையில் வரிசையாய் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு யார் காரணம், இரு குடும்பங்களும் சேர்ந்தனவா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

உடன்பிறப்பேவின் உயிர் ஜோதிகா. பற்றாக்குறைக்கும் மிகைநடிப்பிற்கும் இடையிலான மெல்லிய கோட்டில் பிசகாமல் பயணித்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் கதையமைப்பு அவரின் திறனுக்கு நியாயம் சேர்க்காததால், உழைப்பு அனைத்தும் தரிசில் பாய்ந்த தண்ணீராகிறது.

கோபமும் குழைவும் கொண்ட வேடம் சசிகுமாருக்கு. இப்படியான கதாபாத்திரங்கள் ஏற்றுப் பழகிய காரணத்தால் சுளுவாகச் செய்துவிட்டுப் போகிறார். மறுபக்கம் சமுத்திரக்கனிக்கும் அறிவுரை மழை பொழியும் அதே கதாபாத்திரம். போதிய வித்தியாசம் காட்டாததால் இது அவருக்கு மற்றுமொரு படம். சிரிப்பு கொஞ்சம், சென்டிமென்ட் கொஞ்சம் என மெகா சீரியல் ரக காட்சிகளுக்கு நடுவேயான பெருமூச்சு சூரி.

‘அண்ணே யாரண்ணே’ பாடல் முதல்தடவை கேட்க ஓகே. ஆனால் அதையே படம் நெடுக பின்னணி இசையாய்ப் பயன்படுத்தியிருப்பது சலிப்பு. மற்ற பாடல்களுக்கும் கொஞ்சமும் மெனக்கெடவில்லை இமான். வேல்ராஜின் ஒளிப்பதிவும் ஓகே ரகம்தான்.

உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்

அரதப்பழைய காட்சியமைப்புகள் ஒருபக்கம் நெளிய வைத்தால், மறுபக்கம் படம் முழுக்க யாராவது ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். போதாக்குறைக்கு, ‘பாசம்னா என்னன்னு தெரியுமா?’ என ஊர் மொத்தமும் நியாயஸ்தர்களாகவே இருக்கிறார்கள். புனைவென்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? வில்லனாக வரும் கலையரசன் கதாபாத்திரமும் 80களின் சினிமா பாணியில் இருக்கிறது.

‘அவங்கவங்க வாழ்க்கையை அவங்களே முடிவு பண்ணிக்கணும்’ என வசனம் வந்த அடுத்த காட்சியில் சமுத்திரக்கனியே மகள் திருமணம் குறித்த முடிவுகள் எடுக்கிறார். பாலியல் வன்முறையை குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்கிறார் ஒருவர். இப்படிப் படம் நெடுகத் தென்படும் அரசியல் போதாமைகள், படத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.

‘பெரிய நடிகர்கள் இருந்தால் போதும். கதையெல்லாம் அப்புறம்தான்’ என இயக்குநர் இரா.சரவணன் கோட்டை விட்டிருப்பது காட்சிக்குக் காட்சி தெரிகிறது. அண்ணன் - தங்கை பாசம், கணவன் - மனைவி புரிதல் என எதைப் பற்றியும் முழுதாகப் பேசாத பலவீனமான கதையமைப்பு.

உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்

கவனமாகக் கையாண்டு கலைநேர்த்தியுடன் உருவாக்கியிருந்தால் ‘உடன்பிறப்பே’ நிச்சயம் நெகிழ வைத்திருக்கும்.