
ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்.’ அக்கட தேசத்திலிருந்து அமெரிக்க தேசம் வரை இனி ஓடிடியில் நேரடி ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
திரைகடல் ஓடியும் திரையரங்கம் தேடு’ எனப் பழமொழியை மாற்றிச் சொல்வார்கள்.
தங்கள் பெயரை ரசிகர்களுடன் சேர்ந்து பெரிய திரையில் பார்க்க விரும்பிய கலைஞர்களின் மனநிலையை மொத்தமாய் மாற்றியிருக்கிறது கொரோனா. அதிகம் அறிந்திராத முகங்களால் நிரம்பியிருந்தன ஓடிடி சேவைகள். ஆனால் இந்த சீசனில், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ஆயுஷ்மான் என முன்னணிக் கலைஞர்களின் படங்கள் நம் ரிமோட் பட்டன் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றன. பார்க்கிங், ஸ்நாக்ஸ் என எவ்வளவு செலவு தெரியுமா என அங்கலாயத்துக்கொண்டிருந்த ரசிகர்களும் வீட்டுக்குள்ளே ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்.’ அக்கட தேசத்திலிருந்து அமெரிக்க தேசம் வரை இனி ஓடிடியில் நேரடி ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
பெண்குயின் ~ ஜூன் 19
2018 முழுக்கவே சர்கார் ராஜ்ஜியம் செய்த நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ், தேசிய விருதுக்குப் பின்னர், கதை களைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார். 2019-ல் அவரது எந்தப் படமும் வெளியாகவில்லை. புதுமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்தி இயக்கத்தில், கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருக்கும் ‘பெண்குயின்’ படத்தில், கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘மெஹந்தி சர்க்கஸ்’ நாயகன் ரங்கராஜ் இந்தப் படத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தி ருக்கும் இப்படம், அமேசான் ரிலீஸுக்கு வெயிட்டிங். கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்தி ருக்கும் மிஸ் இந்தியா திரைப் படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்பிருக்கிறது.

குளாபோ சிதாபோ ~ ஜூன் 12
தன் மனைவியைப் பார்த்துக் கொள்வதற்காக சினிமாவுக்குத் தற்காலிக ஓய்வு கொடுத்திருந்த ஆயுஷ்மான் குரானா, தன் தாய்வீடான தொலைக்காட்சி மூலம் ரீ என்ட்ரி தந்திருக்கிறார். ஷூஜித் சர்கார் இயக்கிய விக்கி டோனரில்தான் (தமிழில் தாராள பிரபு) அறிமுகமானார் ஆயுஷ்மான். அமிதாப் பச்சனை வைத்து பிகு என்னும் காமெடிப் படத்தை எடுத்த ஷூஜித், இந்த முறை இருவரையும் வைத்து காமெடிக் கதகளி ஆடி யிருக்கிறார். வீட்டு ஓனர் அமிதாப், வாடகைக்கு வசிக்கும் ஆயுஷ்மான், இவர்கள் இருவருக்குமான சண்டைகள், சச்சரவுகள்தான் கதை, ஏப்ரல் மாதமே வெளி யாகியிருக்க வேண்டிய படம், கொரோனா ரூபத்தில் அமிதாப்பை ஓடிடி பிளாட் பாரத்துக்கு அழைத்து வந்திருக்கிறது.

லா & ஃபிரெஞ்சு பிரியாணி
கன்னட கமர்ஷியல் ஸ்டாரான புனித் ராஜ் குமாருக்கு இது தயாரிப்பாளர் சீசன். கவலுதாரி, மாயாபஜார் என அவர் தயாரித்த இரண்டு த்ரில்லர் படங்களும் பாக்ஸ் ஆபீஸில் செம ஹிட். கவலுதாரியின் தமிழ்ப் பதிப்பில் சிபிராஜ் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு அவர் தயாரிப்பில் லா, ஃபிரெஞ்சு பிரியாணி என இரண்டு படங்கள் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவிருக்கின்றன. ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கும், ஃபிரான்சிலிருந்து வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கும் நடக்கும் உரை யாடல்கள்தான் ‘ஃப்ரெஞ்சு பிரியாணி’ படத்தின் கதை. வழக்கறிஞரான நாயகி ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்ள அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள்தான் லா படத்தின் கதை. லா திரைப்படம் ஜூன் 26-ம் தேதியும், ஃபிரெஞ்சு பிரியாணி ஜூலை 24-ம் தேதியும் அமேசான் ப்ரைமில் வெளியாகவிருக்கின்றன.

அந்தகாரம்
அட்லி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் ஒரு கண்பார்வையற்ற மந்திரவாதி, தன் கரியர் குறித்த விரக்தியில் இருக்கும் கிரிக்கெட் வீரர், ஒரு மனநல மருத்துவர் என மூன்று பேரின் கதை. டிரெய்லரிலேயே கவனம் ஈர்த்த இந்த சூப்பர்நேச்சுரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்கி யிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னராஜன்.

சகுந்தலா தேவி
அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா என்பதுபோல, பர்பாமன்ஸ் என்ற சொல்லுக்கு வித்யா. அதிலும் பயோபிக்குகள் என்றால், `நான்தான் இருக்கேன்’ல என ஜாலியாக சிக்ஸர் விளாசுவார். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை. கணித மேதை என்பதைத் தாண்டி, தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றி இந்தியாவில் அதிகம் பேசியவர் சகுந்தலா தேவி. நசீருதின் ஷாவை வைத்து ‘வெயிட்டிங்’ என்னும் படத்தை இயக்கிய அனு மேனன் இப்படத்தை இயக்குகிறார். தேசிய விருதுப் போட்டியில் நிச்சயம் கலந்துகொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் விரைவில் அமேசான் ப்ரைமில் .

சூஃபியும் சுஜாதாயும்
லாக்டௌன் நாள்களில் மக்கள் மொத்தமாய் மலையாளம், கொரியன் என மாற்று மொழி சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மலையாள சினிமாக்களில் ஓடிடியை அறிமுகம் செய்கிறது ஜெய்சூர்யா மற்றும் அதிதி நடிப்பில் வெளியாகவிருக்கும் சூஃபியும் சுஜாதாயும். ரொமான்ட்டிக் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் அதிதி கதக் நடனக்கலைஞராக நடிக்கிறார்.
ஹாலிவுட் படங்கள்
ஜூலையில் ரிலீஸ் செய்து விடலாம் எனப் பெரிய நம்பிக்கையில் காத்துக்கிடந்த கிறிஸ்டோபர் நோலனின் டெனட்டும்(Tenet) கேள்விக் குறியில்தான் நிற்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய வசூலை அள்ளிய வொண்டர் வுமனின் அடுத்த பாகம் ஆகஸ்ட் மாதத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. சீனாவின் பல்லா யிரக்கணக்கான திரையரங்கு களைக் குறிவைத்துக் காத்தி ருக்கும் ஜேம்ஸ் பாண்டின் No Time To Die தவிர ஏனைய பல படங்கள் Pay On demand அல்லது பிற வழிகளில் இணையத்தைத் தொடவிருக்கிறது. நவம்பர் இறுதி வரை ஜேம்ஸ் பாண்டின் படத்தை ஒத்தி வைத்திருக் கிறார்கள். TROLLS படத்தின் சீக்குவலான TROLLS 2, பணம் கட்டிப் பார்க்கலாம் என்ற PAY ON DEMAND முறையில் வெளி யாகிக் கல்லா கட்டியிருக்கிறது. இயக்குநர் ஸ்பைக் லீயின் அமெரிக்க போர்த் திரைப்படமான da 5 Bloods நெட்ஃபிளிக்ஸ் வசம். வால்ட் டிஸ்னியின் ஃபேண்டஸி படமான ஆர்டெமிஸ் ஃபௌல் டிஸ்னி+ல் வெளியாகிறது.



இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருப்பதால், பெரிய ஹீரோக்களின் படங்கள் தவிர்த்து, இந்த ஆண்டு அனைத்துப் படங்களும் அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லைவ், சன் நெக்ஸ்ட், நெட் ஃபிளிக்ஸ் என ரிமோட்டுக்குள் நுழையதான் அதிகம் வாய்ப் பிருக்கிறது. எனவே, பாக்கெட் பாக்கெட்டாக பாப்கார்ன் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.