சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாய்தா - சினிமா விமர்சனம்

வாய்தா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாய்தா - சினிமா விமர்சனம்

ஏற்கெனவே இருக்கும் கதைக்குள் இன்னொரு கிளைக்கதையாய் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் நாசரின் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

சலவைத் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையில் நீதித்துறையும், ஆதிக்க சாதியின் அதிகார மனப்பான்மையும் இணைந்து அலைக்கழிக்கும் ஆட்டமே இந்த ‘வாய்தா.’

அந்த நாளுக்கான இஸ்திரி போடும் பணிக்குத் தயாராகிறார் அப்புசாமி. கவனக்குறைவாக வண்டி ஓட்டி வரும் ஒரு இளைஞன் அப்புசாமியின் மீது வண்டியை மோதிவிட, அப்புசாமியின் வலது கை எலும்பு முறிந்துவிடுகிறது. பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என ஒரு கும்பலும்; நீதிமன்றமே தீர்வு என ஒரு கும்பலும் முஷ்டி முறுக்குகிறது. வாய்தா மேல் வாய்தா வாங்கும் வழக்கின் தீர்ப்பு விநோதமாய் வந்து முடிய, அடுத்தகட்டமாக இன்ஷூரன்ஸ் வழக்கு நோக்கிக் கட்டங்கள் திசை மாறுகின்றன. இதனிடையே ஆதிக்க சாதிகள் ஒன்றிணைந்துவிட, இந்தச் சமூகம் பன்னெடுங்காலமாய் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தந்த நீதியையே நீதிமன்றமும் வழங்குகிறது. தாமதிக்கப்பட்ட நீதி என்பதும் மறுக்கப்பட்ட நீதிதான் என்பதை இன்னொருமுறை அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது வாய்தா.

அப்புசாமியாக மு.ராமசாமி. வலதுகை செயலாற்ற மறுத்து, இடதுகையால் பந்தம் தூக்க முற்படுபவரை உதாசீனம் செய்கிறது ஊர். அந்தக் காட்சிக்குப் பின் உணவு உண்ணும் காட்சியில் அதை நினைத்து உருகும்போது நம்மையும் இளக வைத்துவிடுகிறார். தறியில் வேலை செய்யும் காதலர்களாக புகழ் மகேந்திரனும், பௌலின் ஜெசிகாவும். கதையைக் கடந்து இவர்களின் காதல் டிராக் அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், இவர்களின் காட்சிகளிலும் சாதிய அடுக்குமுறைகள்தான் முதன்மையாய்ப் பேசப்படுகின்றன. வழக்கறிஞர்களாக வரும் ரெஜின் ரோஸும், திருநாவுக்கரசும் கவனம் ஈர்க்கிறார்கள்.

வாய்தா - சினிமா விமர்சனம்

சில கதைகள் சமூகத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பும். சில கதைகள் இங்கு என்றுமே மாறாத சில விஷயங்களை நம்முன் காட்டி நம்மை ரணமாக்கும். மகிவர்மன் இயக்கியிருக்கும் ‘வாய்தா’ இதில் இரண்டாம் வகையைத் தொட முயற்சி செய்திருக்கிறது. பாராட்டுகள்!

லோகேஸ்வரனின் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. நவ கவியின் ‘இல்லான் ஓர் புறம்’ வரிகளும், பாரதிதாசனின் ‘வலியோர் சிலர்’ வரிகளும் பயன்படுத்தப்பட்ட விதம் அருமை. யதார்த்தமான ஒரு நீதிமன்றத்தை வடிவமைத்ததில் ஜாக்கியின் கலை அமைப்பு பேச வைக்கிறது.

ஏற்கெனவே இருக்கும் கதைக்குள் இன்னொரு கிளைக்கதையாய் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் நாசரின் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். காதல் காட்சிகள் கொண்ட இன்னொரு கிளைக் கதையும் எந்தவித முடிவும் இல்லாமல் அப்படியே நின்றுவிடுவது படத்திற்கு வலுச்சேர்க்க மறுக்கிறது.

வாய்தா - சினிமா விமர்சனம்

குற்றத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய நீதி அமைப்புகள், எளியோர்களை எப்படிச் சுரண்டுகின்றன என்பதை இன்னும் நம்பகத் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருந்தால் இந்த `வாய்தா’ இன்னும் பேசப்பட்டிருக்கும்.