Published:Updated:

வாத்தி - சினிமா விமர்சனம்

வாத்தி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாத்தி - சினிமா விமர்சனம்

‘காதலுக்கு கைடு இல்லை', ‘நாடோடி மன்னன்' பாடல்களிலும் பின்னணி இசையிலும் மனம் கவர்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கல்வி வியாபாரத்துக்கு எதிராகத் தன்னந்தனியாகப் போராடுபவரே ‘வாத்தி.'

1998-ல் சில அரசுப்பள்ளிகளைத் தனியார்பள்ளிகள் தத்தெடுக்கின்றன. அந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள ஒரு கிராமத்துப்பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கச் செல்லும் ஆசிரியரே தனுஷ். யாருமே படிப்பதற்கு ஆர்வமில்லாத கிராமத்தில் எல்லா மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்துத் தேர்ச்சியும் பெற வைத்துவிடுகிறார். ‘இது தங்கள் கல்வி வியாபாரத்தை பாதிக்கும்' என்று தனுஷைக் கிராமத்துப்பள்ளிக்கு அனுப்பிய கல்வி நிறுவன முதலாளி சமுத்திரக்கனியே அவருக்கு எதிராகப் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபடுகிறார். அதையெல்லாம் எப்படி தனுஷ் முறியடித்தார் என்பதை ஏகப்பட்ட மசாலாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கம்போல் தனுஷ் தனக்குக் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார். உற்சாகத்துடன் பாடம் சொல்லிக்கொடுப்பது, தடைகளைக் கண்டு முடங்கிவிடாமல் தொடர்ந்து செயல்படுவது, ஒருகட்டத்தில் ‘எல்லாமே முடிஞ்சிடுச்சு' என்று உடைந்து அழுவது என்று நடிப்பு வாத்தியாக அசத்தியிருக்கிறார். மாணவர்கள்மீது அக்கறை கொண்ட பயாலஜி டீச்சராக நம்பிக்கைக்குரிய விதத்தில் அறிமுகமாகும் ஹீரோயின் சம்யுக்தா, சில காட்சிகளுக்குப் பிறகு வழக்கமான ஹீரோயினாகச் சுருங்கிப் போகிறார். சில காட்சிகள் என்றாலும் வில்லத்தனத்தில் முத்திரை பதித்திருக்கிறார் சமுத்திரக்கனி. கென் கருணாஸ் முக்கியமான பாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். தனுஷ், சமுத்திரக்கனி, கென் கருணாஸ், ஷாரா என்று விரல்விட்டு எண்ணத்தக்க அளவுதான் தமிழ் நடிகர்கள். மற்றபடி தெலுங்கு நடிகர்களே திரையை ஆக்கிரமிக்கிறார்கள்.

வாத்தி - சினிமா விமர்சனம்
வாத்தி - சினிமா விமர்சனம்

‘காதலுக்கு கைடு இல்லை', ‘நாடோடி மன்னன்' பாடல்களிலும் பின்னணி இசையிலும் மனம் கவர்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் பின்னணி இசையில் இருக்கும் ஜீவன் காட்சிகளில் இல்லாததால், விழலுக்கு இறைத்த நீராய்ப் பாய்வதுதான் துயரம். ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவும் நவீன் நூலியின் எடிட்டிங்கும் ஓகே ரகம்.

வெங்கி அத்லூரி தெலுங்கு இயக்குநர் என்பதால் நடிகர்கள் முதல் காட்சிகள் வரை தெலுங்கு வாடை தூக்கல். கல்வி வியாபார எதிர்ப்பு என்ற ஒன்லைன் ஓகேதான். ஆனால் உலகமயம், கல்வி தனியார்மயம் குறித்த எந்த ஆய்வுகளும் இல்லாமல் முழுக்க முழுக்கக் கற்பனையிலேயே கதை எழுதியிருக் கிறார்கள். அதனால் 1998-ல் கிராமத்து அரசுப்பள்ளியில் எல்லாப் பாடங் களையும் தனுஷ் ஆங்கிலத்திலேயே நடத்துவது போன்ற ஏராளமான அபத்தங்கள் படம் முழுவதும்.

வாத்தி - சினிமா விமர்சனம்
வாத்தி - சினிமா விமர்சனம்

கல்வியின் அருமையை உணராமல் யாரும் பள்ளிக்கூடத்துக்கே வர மறுக்கிறார்களா, மாணவர்கள் மத்தியில் சாதிப்பிரச்னை இருக்கிறதா? எல்லாவற்றுக்கும் தீர்வாக தனுஷ் பத்துநிமிடம் லெக்சர் அடித்ததும் ஊரே மாறிவிடுகிறது. முதல்பாதியில் குறைவாக இருக்கும் நாடகத்தன்மை, இரண்டாம் பாதியில் உச்சத்தை அடைகிறது.

இயல்பான கதை, எதார்த்த பாத்திரங்கள், நம்பகமான காட்சிகள் இருந்திருந்தால் இந்த ‘வாத்தி' தேர்ச்சியடைந்திருப்பார்.