
- பாடகி வாணி ஜெயராம் நினைவுகள் பகிரும் தங்கை
- ஆரா
சங்கீத உலகின் கலைவாணியாக கோலோச்சிய வாணி ஜெயராம், திரை யிசைக்குக் கிடைத்த ‘அபூர்வ ராகம்’. இசை வானில் அரை நூற்றாண்டாக ஜொலித்த இந்த நட்சத்திரம், சமீபத்தில் உதிர்ந்தது. பின்னணிப் பாடகியாக 19 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய வாணி, விட்டுச் சென்றிருக்கும் சாதனைகளும் நினைவு களும் எண்ணற்றவை. வாணியின் பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார், அவரின் தங்கை உமா.
“எங்க பெற்றோருக்கு ஆறு மகள்கள்; மூணு மகன்கள். அதுல, வாணி எட்டாவது பொண்ணு; நான்தான் கடைசி. பால்யத் துலயே அவருக்கு இசையில அபார திறமை இருந்துச்சு. அதனால, கடவுள் தங்களுக்குக் கொடுத்த பரிசாகத்தான் வாணியை எங்க பெற்றோர் நினைச்சாங்க. நாங்க எதிர்பார்த்ததைவிடவும் இசைத் துறையில அக்கா உச்சத்துக்குப் போனாங்க. பெரிய பாடகியா புகழ்பெற்ற பிறகும்கூட, வாணியின் குணத்துல எந்த மாற்றமும் ஏற்படலை. கடைசிவரைக்கும் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரிதான் பழகினாங்க.
சுய விளம்பரத்தை துளியும் விரும்பாத அக்கா, எதுக்காகவும் யாரையும் நாடின தில்லை. தன் கரியர், குடும்பம், தனிப்பட்ட விருப்பங்கள்னு எல்லாத்துக்கும் சரியா நேரம் ஒதுக்கினாங்க. சமையல் மற்றும் வீட்டு வேலைகளை ரசிச்சுப் பண்ணு வாங்க. தன்னைப் பிரபலமாவே அவங்க நினைச்சுக்கிட்டதில்லை. தன் கூடப் பிறந்தவங்களோட பிள்ளைகளை தன் குழந்தைகளா நினைச்சு பாசம் காட்டினாங்க. அக்காவுக்கும் எனக்கும் ஆறு வருஷங்கள் இடைவெளி. அதனா லயே, என்மேல அளவுகடந்த அன்பு வெச்சிருந்தாங்க. கூடப் பிறந்தவங்கள்ல எனக்குன்னு இருந்தது அக்கா மட்டும்தான். அவர் எனக்கு இன்னோர் அம்மா மாதிரி. இப்போ அவரையும் இழந் துட்டேன்'' என்று நெகிழ் பவரின் குரலும் பேச்சும் வாணியை கண்முன் நிறுத்து கின்றன.
“டெல்லியில ஒரு பதிப்பகத்துல உயர் பொறுப்புல இருந்தேன். வாணியின் கணவர் தவறின பிறகு, அக்காவுடன் அதிக நேரம் செலவிடணும்னு என் வேலையை விட்டுட்டு சென்னையில குடியேறினேன். ரெண்டு மாசம் என் வீட்ல தங்கவெச்சு அக்காவைப் பார்த்துக்கிட்டேன். ‘என்னைப் பார்க்க ரசிகர்கள் வருவாங்க. உனக்கு எந்த விதத்துலயும் நான் இடையூறா இருக்க விரும்பலை’னு அவங்க வீட்லயே தனியா வசிச்சாங்க. யாருக்கும் பாரமா இல்லாம வாழுறதைத்தான் அக்கா விரும்பினாங்க” என்றவர், வாணியின் தனிமை வாழ்க்கை குறித்துப் பேசினார்.
“எங்க குடும்பத்துல பலரும் நல்லா படிச்சு, பெரிய பொறுப்புகள்ல இருந்த வங்க. எங்க உறவுல அன்புக்கு இணையா கண்ணியத்தையும் கடைப்பிடிச்சோம். அவரவர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நேரம் கிடைக்கிறப் போல்லாம் அக்காவும் நானும் அவுட் டிங் போவோம். சமீபத்துல திருநள்ளாறு போனோம். நானே தான் கார் ஓட்டினேன். வர்ற வழியில புதுச்சேரியில பீச்சுக்கு போனோம்; பிடிச்ச உணவு களைச் சாப்பிட்டோம்; அரட்டை அடிச்சு சிரிச்சோம்.
வயசாகிறது எல்லோருக்கும் இயல் பானதுதான். அந்த நேரத்துல பிறர் உதவியை எதிர்பார்க்கிறது அவங்கவங்க விருப்பம். ஒருத்தர் தனியா வசிக்கிற தாலயே அவங்க வருத்தத்துலயோ சிரமத்துலயோ இருப்பாங்கன்னு சொல்லிட முடியாது. அவங்கமேல கருணைப் பார்வை காட்ட வேண்டியதில்லை. விதிப்படி போகணும்னு தீர்மானிக்கப்பட்ட உயிரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வாணி தனக்குப் பிடிச்சதுபோல வாழ்ந்துட்டுப் போயிட்டாங்க” - யதார்த்தம் உணர்ந்து பேசுகிறார் உமா.
விண்ணுலகைவிட்டு வாணி பிரிந்தாலும், அவரின் பாடல்களும் நினைவுகளும் நம் மனதில் என்றென்றும் நிழலாடிக்கொண்டே இருக்கும்.

என் கேள்விக்கு பதில் ஏதம்மா?
ரசிகையாக ஆரம்பித்து, வாணியின் பர்சனல் உலகத்தில் இடம்பிடித்தவர் செய்தி வாசிப்பாளர் ரத்னா. அவரிடம் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன்பு, என் வீட்டு நவராத்திரி கொலு நிகழ்வுலதான் எனக்கும் வாணிம்மாவுக்குமான பந்தம் ஆரம்பிச்சது. அவங்க பிரைவேட் பர்சன்தான். ஆனாலும், அவரின் பர்சனல் உலகத்துல எனக்கும் நல்ல தோர் இடம் கிடைச்சது, என் வாழ்நாள் பாக்கியம். அவங்க பொண்ணு மாதிரி என்கிட்ட பழகினாங்க. அவர் தயா ரிச்சுக் கொடுக்கிற டீ, எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ‘நீ செஞ்சு கொடுத்த மசால் தோசை சூப்பர்’னு அவங்க சொல்லும்போது, என் மனசும் நிறையும். எத்தனை சந்திப்புகள், எவ்வளவு பேச்சுகள்... என்மேல அவங்க ஏன் இவ்வளவு அன்பு காட்டினாங்க? அம்மாவின் பாடல்லேருந்து, ‘கேள்வியின் நாயகியே, இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா...’னுதான் கேட்கத் தோணுது” என்று தாள முடியாத தவிப்பில் கலங்குகிறார் ரத்னா.