கடைக்குட்டி விஜய்... நிஜத்திலும் பாசக்கார பிள்ளை! - நடிகை ஜெயசுதாவின் ‘வாரிசு’ அப்டேட்ஸ்

தெலுங்குல என்.டி.ராம ராவ் சார், நாகேஸ் வர ராவ் சார்லேருந்து சிரஞ்சீவி வரைக்கும் அந்தக் காலகட்டத்துல எல்லா ஹீரோக் களுடனும் ஜோடியா நடிச்சிருக்கேன்
விஜய்யின் நடிப்பில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு வெளியாகும் ‘வாரிசு’ படத்துக்கு ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். இதில், விஜய்யின் அம்மாவாக நடித்திருக்கிறார் ஜெயசுதா. அம்மா – மகன் உறவின் ஆழம் சொல்லும் ‘ஆராரிராரோ கேட்குதம்மா’ பாடல் பலராலும் முணுமுணுக்கப்பட, ‘வாரிசு’ அப்டேட்ஸ் குறித்து ஜெயசுதாவிடம் உரையாடினோம்.
“தயாரிப்பாளர் தில் ராஜின் பெரும்பாலான படங்கள்ல நான் நடிச்சிருக்கேன். டைரக்டர் வம்சியின் கடைசி மூணு படங்கள்லயும் நடிச் சேன். விஜய்கிட்ட ‘வாரிசு’ படத்தின் கதை யைச் சொல்லிட்டு, அம்மா ரோல்ல நான் நடிக்கிறது பத்தியும் சொல்லியிருக்காங்க. விஜய் சந்தோஷமா ஓகே சொன்னதா கேள்விப்பட்டேன். அந்த மகிழ்ச்சியை ஷூட்டிங் முடியுறவரை அவர்கிட்ட பார்த் தேன்” - ‘வாரிசு’ என்ட்ரி பற்றி சொன்ன ஜெயசுதா, தமிழில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பின்னர் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

உங்க கேரக்டர்ல என்ன ஸ்பெஷல்?
“ ‘வாரிசு’ல கதைக்கு எந்த அளவுக்கு அம்மா ரோலுக்கான தேவை இருக்கோ, அதுக்கேற்ப எனக்கும் முக்கியத்துவம் கொடுத் திருக்கார் வம்சி. இது குடும்ப ஒற்றுமையை பத்தி பேசுற படம். பணம் இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி... ஒவ்வொரு குடும்பத்துல யும் ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும். உறவுகள் கூடி வாழுற குடும்பத்துல மனித உணர்வுகளை உணர்வுபூர்வமா பேசுற படம்தான் ‘வாரிசு’. கதைப்படி எனக்கு மூணு பசங்க. விஜய்தான் கடைக்குட்டி. எங்க ரெண்டு பேருக்குமான பாசத்தை, ‘ஆராரி ராரோ கேட்குதம்மா’ பாடல் அழகா வெளிப் படுத்தும்.”
விஜய் என்ன சொன்னார்?
“விஜய்கூட நான் நடிக்கிற முதல் படம் இது. அதனால கூடுதல் சந்தோஷம் எனக்கு. பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கிறதுலயும் சரி, பேசுற விதத்துலயும் சரி... ரொம்பவே பக்குவத்துடன் நடந்துப்பார். அவர் ரொம்ப கம்மியாதான் பேசுவார். ஆனா, தேவைக்கேற்ப எல்லார்கிட்டயும் கலகலப்பா பேசுவார். தெலுங்குல மகேஷ் பாபு, ரவிதேஜா, ராம் சரண்னு நிறைய நடிகர்களுக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். படம்ங்கிறதைத் தாண்டி, ஷூட்டிங் நடக்கும்போதே சம்பந்தப்பட்ட நடிகருடன் அம்மா - மகன் சென்டிமென்ட் மனசுல தங்கிடும். அந்த உணர்வு விஜய் கிட்டயும் எனக்கு ஏற்பட்டுச்சு.”
70, 80-கள்ல ஹீரோயினா கோலோச் சினதுக்கும், இப்போ முன்னணி நடிகர்களுக்கு அம்மாவா நடிக்கிறதுக்குமான கால மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீங்க?
“தெலுங்குல என்.டி.ராம ராவ் சார், நாகேஸ் வர ராவ் சார்லேருந்து சிரஞ்சீவி வரைக்கும் அந்தக் காலகட்டத்துல எல்லா ஹீரோக் களுடனும் ஜோடியா நடிச்சிருக்கேன். ஹீரோக்கள் என் கால்ஷீட்டுக்கு காத்திருந் தாங்க. ‘சாகர சங்கமம்’ (தமிழில் ‘சலங்கை ஒலி’) படத்துல நான்தான் நடிக்கணும்னு படக் குழு ரொம்பவே மெனக்கெட்டாங்க. நேர மின்மையால அந்தப் படத்துக்கு வாங்கின அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத் தேன். எனக்கு பதிலா என் தோழி ஜெயபிரதா அந்தப் படத்துல நடிச்சாங்க. இப்படி ஒவ்வொரு படத்துக்குப் பின்னாடியும் நிறைய சுவாரஸ்ய கதைகள் இருக்கு.
அந்தக் காலகட்டத்துல நல்ல கதைகளைத் தேர்வுசெஞ்சு, சரியா உழைச்சதால எனக்கான அடித்தளம் உறுதியாச்சு. அதனாலதான், சினிமாவுல 50 வருஷங்களைத் தாண்டியும் இப்பவும் நல்ல வாய்ப்புகள் வருது. முன்பு போல பரபரப்பு இல்லாம நிதானமா நடிக்கிறது மட்டும்தான் இப்போ வித்தியாசமா தெரியுது. சினிமாவுல நடிகைகளுக்குப் பாகு பாடுகள் அதிகம். அதை நானும் பலமுறை எதிர்கொண்டிருக்கேன். எவ்வளவு புறக்கணிப்புகள் வந்தாலும் அதைத் தாண்டி உறுதியா நிற்கணும்ங்கிறது என் வைராக்கியம். அதைத்தான் இத்தனை காலமா பண்ணிட்டிருக் கேன்.”

“கங்கனா ரனாவத்தைப் பத்தி நீங்க பேசினது சமீபத்துல வைரலாச்சு. இந்தச் சர்ச்சைக்கு காரணம்?”
“ஓ.டி.டி தளத்துல நடிகர் பால கிருஷ்ணா தொகுத்து வழங்குற நிகழ்ச்சியில நானும் ஜெயபிரதாவும் சிறப்பு விருந்தினர்களா கலந்து கிட்டோம். விருது விஷயத்துல தென்னிந்திய மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்படுறது பத்தி பால கிருஷ்ணா கேள்வி எழுப்பினார். வெளிப்படையா பதில் சொன்னேன். நீண்டகாலமா நடிச்சுகிட்டிருக்கிற தென்னிந்திய நடிகர்களுக்கு மத்திய அரசின் அங்கீகாரங்கள் சரியாவே கிடைக்கிறதில்லை. ஆனா, சினிமாவுக்கு வந்து சில வருஷத்துலயே கங்கனாவுக்கு பத்ம விருது கொடுத்தாங்க. அவங்க திறமையான நடிகைதான். அவங்க நடிப்பை நானும் ரசிச்சிருக்கேன். ஆனா, சில படங்கள்ல நடிச்சதுமே கங்கனா உள்ளிட்ட சிலருக்குப் பெரிய அங்கீகாரம் கொடுப்படுறது சரியா? அதேநேரத்துல தென்னிந்தியாவி லேருக்கிற மூத்த கலைஞர்களைத் திட்டமிட்டு புறக்கணிச்சுக்கிட்டே இருக்கிறதை மட்டும் எப்படி ஏத்துக்க முடியும்?
சிவாஜி சார், கமல்ஹாசன் போன்ற பலருக்கும் பத்ம விருதே நீண்டகாலத்துக்கு அப்புறமாதான் தரப் பட்டுச்சு. இந்தி சினிமாவுல மட்டும் நடிக்க வந்த கொஞ்ச காலத்துலயே பலருக்கும் பத்ம விருதுகள் தரப்படுது. தென்னிந்திய கலைஞர்களுக்கு மட்டும் ரொம்ப தாமதமா பத்ம விருதுகள் கொடுக்கப்படுறதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவா இருக்கிறவங்களை மட்டுமே கெளரவப்படுத்துறதும், மத்த கலைஞர்களைப் புறக்கணிக்கிற செயல்.
‘ஊர்வசி’ சாரதா அம்மா மூணு முறை தேசிய விருது வாங்கினவங்க. என் அத்தை விஜய நிர்மலா, 48 படங் களை இயக்கி கின்னஸ் சாதனை செய்தவங்க. இவங்கள மாதிரி தென்னிந்தியாவுல பெருமைப்படுத்தப்படாத கலைஞர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. எஸ்.ஜானகி அம்மா எவ்ளோ பெரிய பாடகி. அவங்களுக்குக் காலம் கடந்து ‘பத்ம பூஷண்’ விருதை அறிவிச்சாங்க. ‘ பாரத ரத்னா விருது கொடுத்தா வாங்கிப்பேன். இந்த விருது எனக்கு வேண்டாம்’னு அவங்க விருதை நிரா கரிச்சது சரியான பதிலடி. நியாயமான இந்தப் பிரச்னை பத்தி அந்த நிகழ்ச்சியில தைரியமா பேசினேன். என் கருத்துக்கு எவ்ளோ பெரிய தாக்கம் ஏற்பட்டாலும் அதுக்கு நான் கவலைப்பட மாட்டேன்.