தற்போது நடைபெற்று வரும் 'வாரிசு' ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பேசிய வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ,
"தமிழ்த் திரையுலகில் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கும் பொற்காலத்தை மீட்டுருவாக்கம் செஞ்சுருக்காரு விஜய்" என்று பேசியுள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர், "ஒரு காலத்தில் தமிழ்த் தயாரிப்பாளர்கள் தெலுங்குல படம் பண்ணுவாங்க. தெலுங்குத் தயாரிப்பாளர்கள் தமிழ்ல படம் பண்ணுவாங்க. விஜய் சார் எனக்கு படம் கொடுத்து அந்தப் பொற்காலத்தை மீட்டுருவாக்கம் செஞ்சுருக்காரு. வம்சி 30 நிமிடம்தான் விஜய் சார்க்கிட்ட கதை சொன்னாரு. அப்பவே விஜய் சார் இந்தப் படம் பண்றோம்னு சொல்லிட்டாரு. விஜய் தயாரிப்பாளர்களின் ஹீரோ!

இந்தப் படம் ஒவ்வொரு வீட்டின் அப்பாக்கும் அம்மாக்கும் சமர்ப்பணம். விஜய் சாரின் அப்பா - அம்மா உட்பட! இந்தப் பொங்கல் நம்ம பொங்கல். தமிழ்ல மட்டுமில்ல, ரிலீசாகுற எல்லா இடத்துலயும் பட்டைய கிளப்பப் போறோம்!" என்று கூறினார்.
இதையடுத்துப் பேசிய 'வாரிசு' நாயகி ராஷ்மிகா மந்தனா, "நான் இங்க தமிழ்ல பேசணும்னு முடிவு செஞ்சு வந்திருக்கேன். தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க. 'கில்லி' படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி அப்பாவோட போனேன். விஜய்யை அப்பவே பிடிச்சிருச்சு. 20 முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கேன். 'உங்க க்ரஷ் யார்'ன்னு எப்போ கேட்டாலும் விஜய்சார்ன்னுதான் சொல்வேன். இந்தப் படம் பத்தி தெரிஞ்சோன, இயக்குநர் வம்சிகிட்ட, 'இந்தப் படத்துல் நான் இல்லைன்னாலும் விஜய்யோட ஒரு போட்டோ எடுக்கணும்'ன்னு சொன்னேன். ஷூட்டிங்கில் அவரை கண்ணெடுக்காமல் பார்த்துக்கிட்டே இருப்பேன். ஐ லைக் யூ விஜய் சார்!" என்று சொல்லிவிட்டு மேடையில் விஜய்க்கு திருஷ்டி சுற்றிப் போட்டார்.

இயக்குநர் வம்சி பேசுகையில், "இது ரொம்பவே எமோஷனலான தருணம். அதனாலதான் என்னோட ஒட்டுமொத்த குடும்பத்தையும் இங்கக் கூட்டிட்டு வந்துருக்கேன். கேமரா மேன் கார்த்திக் பழனி உயிரைக் குடுத்து உழைச்சிருக்கார். விவேக் ஒரு பாடலாசிரியரா மட்டுமில்லாம திரைக்கதை, வசனத்துலயும் பெரிய உதவியா இருந்தாரு. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாருன்னு ராஷ்மிகாகிட்ட கேட்டேன். அப்பவே விஜய் சார்னுதான் சொன்னாங்க. எனக்கு 'வாரிசு' ஒரு படமல்ல. ஒரு பெரும் மதிப்புமிக்க நினைவு.
'Spread love spread hope', 'Silence is the powerful weapon' - இதையெல்லாம் நான் விஜய் சாரிகிட்ட கத்துக்கிட்டேன். இந்தப் படம் நடக்குமா நடக்காதான்னு சந்தேகம் வந்தப்போ விஜய் சார்தான் 'என்னோட அடுத்தப்படம் உங்களுக்குதான்னு' நம்பிக்கைக் கொடுத்துட்டே இருப்பார். விஜய் சாரைப் பற்றிப் பேசும் போது எமோஷனளாக இருக்கிறது. விஜய் சார் ரசிகர்களை பற்றி மட்டும்தான் முழுவதுமாகச் சிந்திப்பார். விஜய் சார் என் மேல் வைத்த நம்பிக்கைக்கான பலனை பொங்கல் அன்று காண்பிப்பேன். எல்லாரும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வாருங்கள்!" என்றார்.