சினிமா
Published:Updated:

வாரிசு - சினிமா விமர்சனம்

வாரிசு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாரிசு - சினிமா விமர்சனம்

குடும்ப உறவுகளின் பிரச்னைகளை சரிசெய்வது, தொழில்போட்டியில் எதிரியைத் தோற்கடிப்பது என்ற இரண்டு பாதைகளையும் ஒன்றிணைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி.

கண்டிப்பும் கரன்சியும் மிகுந்த பணக்கார அப்பாவுக்கு, மூன்று மகன்களில் யார் ‘வாரிசு' என்பதே கதை.

சுரங்கத்தொழில் மூலம் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கும் சரத்குமார், தன் குடும்பத்தையே தொழில் நிறுவனம்போல் பாவிக்கிறார். தன் அடுத்த வாரிசு யார் என்று தன் மகன்களையே போட்டி போடச் சொல்கிறார். இந்த ரேஸ் பிடிக்காமல் விலகி வாழும் விஜய், ஒரு சந்தர்ப்பத்தில் வேறு வழியின்றி குடும்பத்துக்குள்ளும் அப்பாவின் பிசினஸுக்குள்ளும் வர நேர்கிறது. அவருக்கு என்னென்ன பிரச்னைகள் வந்தன, வாரிசாகத் தன்னை நிரூபித்தாரா என்பதை நாம் பலமுறை பார்த்துப்பழகிய காட்சிகளை நிரப்பிச் சொல்லியிருக்கிறார்கள்.

வாரிசு - சினிமா விமர்சனம்

‘ஒட்டுமொத்தப் படத்தையும் தாங்கிப்பிடிப்பது விஜய்' என்று எழுதினால் உண்மையில் ஒரு வார்த்தையும் பொய்யில்லை. தன் பழைய படங்கள் முதல் இதே படம் வரை படத்துக்குள்ளேயே கலாய்ப்பது, தன் அண்ணன்களை ஜாலியாக டீல் செய்வது, தெறிக்கவிடும் நடன அசைவுகள் என எனர்ஜி எந்திரமாகப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் விஜய். சில இடங்களில் அது ஓவர்டோஸ் ஆனாலும், பல இடங்களில் விஜய்யை அவ்வளவு ரசிக்கலாம். ‘இரண்டு டூயட் பாடல்களுக்கு ஹீரோயின் தேவை' விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்ததைப் போல் அட்டென்டன்ஸ் போடுகிறார் ராஷ்மிகா மந்தனா. முதல் பாதியில் கறாரும் இரண்டாம் பாதியில் கனிவும் காட்டி முதிர்ச்சியுடன் நடித்திருக்கிறார் சரத்குமார். குடும்பத்துக்குள் எல்லோரையும் அனுசரித்துப் போகும் அம்மாவாக ஜெயசுதா பொருத்தம். மற்றபடி ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு, சங்கீதா, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா, விடிவி கணேஷ், ஸ்ரீமன் எனப் பெரிய நடிகர் பட்டாளம் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. நட்புக்காக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் போர்ஷன் ஸ்வீட் சர்ப்ரைஸ். செல்லத்தனமாக வில்லத்தனம் செய்வார் என்று பார்த்தால் பிரகாஷ்ராஜை அநியாயத்துக்கு வீணடித்திருக்கிறார்கள்.

விஜய்க்கு என்று மாஸ் கூட்டுவது முதல் ‘ரஞ்சிதமே' பாடல் வரை அடி பொளக்கிறது தமன் இசை. பெரும்பாலான படம் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டதால் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பெரிய அளவு ஒளிகூட்டவில்லை. படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வி.எஃப்.எக்ஸ் சராசரிக்கும் குறைவான தரம்.

குடும்ப உறவுகளின் பிரச்னைகளை சரிசெய்வது, தொழில்போட்டியில் எதிரியைத் தோற்கடிப்பது என்ற இரண்டு பாதைகளையும் ஒன்றிணைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி. ஆனால் எந்தத் திருப்பமும் இல்லாத திரைக்கதை, யூகங்களுக்குக் கொஞ்சமும் தப்பாத காட்சிகள் ஆகியவற்றால் ‘ஆட்ட நாயகன்' விஜய் மட்டும் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க ஆடினாலும் ஆட்டம் சுவாரஸ்யமில்லை.