Published:Updated:

வேதம் புதிது: சத்யராஜ் என்னும் மகா நடிகன்; சாதிய மனநிலை கொண்டவர்களைக் கன்னத்தில் அறைந்த படம்!

வேதம் புதிது

கே. கண்ணன் எழுதிய ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற நாடகம்தான் ‘வேதம் புதிது’ திரைப்படமாக உருமாறியது. படத்தில் வெளிப்பட்ட சமூக நீதி வசனங்கள் ஆழமாகவும் சிறப்பாகவும் அமைந்ததற்குக் கண்ணனின் எழுத்து ஒரு முக்கியமான காரணம்.

Published:Updated:

வேதம் புதிது: சத்யராஜ் என்னும் மகா நடிகன்; சாதிய மனநிலை கொண்டவர்களைக் கன்னத்தில் அறைந்த படம்!

கே. கண்ணன் எழுதிய ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற நாடகம்தான் ‘வேதம் புதிது’ திரைப்படமாக உருமாறியது. படத்தில் வெளிப்பட்ட சமூக நீதி வசனங்கள் ஆழமாகவும் சிறப்பாகவும் அமைந்ததற்குக் கண்ணனின் எழுத்து ஒரு முக்கியமான காரணம்.

வேதம் புதிது
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘வேதம் புதிது’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

ஸ்டூடியோவின் உள்ளே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த கேமராவைப் பிடுங்கிக் கொண்டு வந்து வயல்வெளியில் நட்டு வைத்த பெருமை பாரதிராஜாவைச் சேரும். இவரின் திரைப்படங்களில் வரும் இளம் காதலர்கள் சம்பிரதாயமானவர்களாக அல்லாமல் தங்களின் மத அடையாளங்களைத் தூக்கி எறியும் புரட்சிக்காரர்களாக இருந்தார்கள்.

இப்படியாக, தமிழ் சினிமாவைப் புறவயமாகவும் அகவயமாகவும் புரட்டிப் போட்ட முக்கியமானவர்களில் ஒருவராக பாரதிராஜாவைச் சொல்லலாம். சினிமாவின் நிறம், மொழி, களம், திரைமொழி, பாத்திரங்கள் என்பது போன்ற பல விஷயங்களில் பெரும் பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய முன்னோடி. பாரதிராஜாவின் வருகைக்குப் பின்புதான் அசலான கிராமத்தையும் மனிதர்களையும் தமிழ் சினிமா பார்த்தது. தென்றல் போன்ற ரொமான்ஸோடு புயல் போன்ற சமூக நீதியையும் கலந்து கதை சொன்னவர்.

பாரதிராஜா
பாரதிராஜா
பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களுள் முக்கியமானது ‘வேதம் புதிது’. சாதிக்கும் சாதிய வன்முறைக்கும் சமூகத்தின் பாரபட்சங்களுக்கும் எதிராகத் தனது உரத்த குரலைப் பதிவு செய்த படம் இது. அந்த வகையில் ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்களின் முன்னோடி என்றும் சொல்லலாம்.

பாலுத் தேவர் என்கிற மறக்க முடியாத கதாபாத்திரம்

கிராமத்தின் பெரிய மனிதர் சத்யராஜ். சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் சரிசமமாகப் பழகுபவர். நாத்திகம் பேசும் அவரது சொல்லுக்கு ஊரே கட்டுப்படும். ஊரில் எந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தாலும் சத்யராஜ் வீட்டிலிருந்துதான் சீதனம் செல்லும். சிறிய பஞ்சாயத்து என்றாலும், சாதி தொடர்பான வம்பு அங்கு எழுந்தால் ஊர் எளிதில் பற்றிக் கொள்ளும். சத்யராஜ்தான் சாமர்த்தியமாகப் பேசி அந்த நெருப்பை அணைப்பார்.

சத்யராஜின் ஒரே மகன் ராஜா. வெளியூரில் படிப்பை முடித்து விட்டு வந்திருப்பவன். பிராமண சமூகத்தைச் சேர்ந்த சாருஹாசனின் மகளான அமலாவைக் கண்டதும் காதலில் விழுகிறான். தன்னுடைய குடும்பத்தின் ஆச்சாரம் அறிந்தும் காதல் உணர்வைத் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறார் அமலா. ஒரு சிக்கலான சூழலில் இந்தக் காதல் வெளிப்பட நேரும் சமயத்தில் அமலாவைக் காப்பாற்றி பழியைத் தான் சுமக்கிறார் ராஜா.

ராஜாவும் அமலாவின் தந்தையும் ஒரு விபத்தில் இறந்து போகிறார்கள். அமலாவின் தம்பி அநாதையாக நிற்கிறான். பாலுத் தேவர் அவனைத் தத்தெடுக்கிறார். இறந்ததாகக் கருதப்பட்ட அமலா, ஒரு நல்லவரின் உதவியால் ஊர் திரும்புகிறார். “இது அழிவிற்கான சகுனம்” என்று எண்ணி ஊரே திரண்டு வந்து அமலாவை வெளியேற்றத் துடிக்கிறது. அவர்களின் குறுக்கே நிற்கிறார் சத்யராஜ். அனல் பறக்கும் வெப்பத்தோடும், கண்ணீர் திரளும் உருக்கத்தோடும் படம் நிறைகிறது. அடுத்த தலைமுறைச் சிறார்கள், சாதியப் பித்துப் பிடித்த தங்களின் பெற்றோர்களின் கையை விட்டு முன்னே நகர்கிறார்கள். அவர்கள் கற்றுக் கொண்ட ‘புதிய வேதத்தோடு’ படம் நிறைகிறது.

வேதம் புதிது
வேதம் புதிது
பாலுத் தேவர் – சத்யராஜின் நடிப்புப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் இந்தப் பாத்திரம். தமிழ் பார்வையாளர்களாலும் அத்தனை எளிதில் மறக்க முடியாத கேரக்டர். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்று முழங்கிய பெரியாரின் பிரதிநிதித்துவக் குரலாகவே படம் முழுவதும் ஒலித்தார் சத்யராஜ். வில்லன் பாத்திரங்களிலிருந்து விலகி மெல்ல ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டமாக இருந்தாலும் ஒரு முதியவரின் பாத்திரத்தை ஏற்க சத்யராஜ் தயங்கவில்லை. பாரதிராஜாவின் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஏறத்தாழ படத்தையே தூக்கிச் சுமந்தவர் பாலுத் தேவர்தான்.

தனது பிரத்யேகமான உடல்மொழி மற்றும் நக்கலான வசனங்களின் மூலம் படம் முழுக்க மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வசனங்களைப் பேசி நடித்தார் சத்யராஜ். படத்தைத் தாண்டி வெளியிலும் அவருக்கு இதே கொள்கைகள் இருந்ததால் பாத்திரத்துடன் ஒன்றி நடிக்க முடிந்தது. ‘பாலுத் தேவன்’ என்று தன்னுடைய பெயரை சமூகத்தின் பெயரோடு இணைத்து தன்னிச்சையான பெருமிதத்துடன் அடிக்கடி சொல்பவராக இருந்தாலும் சாதிய பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்யும் பெரிய மனிதராக வலம் வருவார். பிராமணப் பெண்ணின் திருமணத்திற்குச் சீதனம் அனுப்புவது முதற்கொண்டு ஊரால் அநாதையாக்கப்பட்ட பிராமணச் சிறுவனைத் தத்தெடுத்து வளர்ப்பது வரை மனிதனை மட்டுமே முக்கியமாகக் கருதுகிற அவரது நல்லியல்பு படம் முழுவதும் பிரகாசிக்கும். சிறுவனின் சவுக்கடி கேள்வியால் மனம் மாறி வன்முறையைக் கைவிட்டு இறுதிக்காட்சியில் ஊராரின் ஒட்டுமொத்த பகையைக் கம்பீரமாக எதிர்கொள்ளும் பாத்திரத்தில் அசத்தியிருப்பார்.

சர்க்கரைப் பொங்கலில் காதலை மிக்ஸ் செய்த பாரதிராஜா

சத்யராஜின் பாத்திரத்திற்குப் பிறகு நம்மை அதிகமாகக் கவர்ந்தவர் என்று அமலாவைச் சொல்லலாம். ஐரிஷ் தாய்க்கும் பெங்காலி தகப்பனுக்கும் பிறந்த அமலா, அய்யர் சமூகத்துப் பெண்ணாகவே மாறியிருக்கும் அதிசயத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். நேர்த்தியாகக் கட்டப்பட்ட புடவையுடன், மூக்குத்தி பிரகாசிக்க, அதன் வெளிச்சத்தைத் தலையில் வைத்திருக்கும் மல்லிகைப்பூ எதிரொலிக்க, எரியும் சுடர் போலவே அத்தனை அழகுடன் வலம் வருவார். தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அமலாவின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞனான ராஜா மீது இவருக்குக் காதல் ஏற்படும். ஆனால் அதே சமயத்தில் தனது ஆச்சாரமான குடும்பத்தை நினைத்து தயக்கமும் இருக்கும். இரண்டிற்குமான தத்தளிப்பைப் பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் அமலா.

அமலா - வேதம் புதிது
அமலா - வேதம் புதிது

ஒரு காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். ராஜா படிப்பு முடித்து விட்டு வந்த காரணத்திற்காக அவர்களின் குடும்பத்தார் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள். அந்தப் பக்கமாக அமலாவும் தம்பியும் வர, ராஜாவின் தாய் பிரசாதம் தருவார். “எங்க வீட்டுல செஞ்சதையெல்லாம் சாப்பிடுவீங்களா தாயி?” என்று தயக்கத்தோடு அவர் தர, வாங்கிக் கொண்டு நகர்வார் அமலா. “இதை சாப்பிட்டா அப்பாவுக்குப் பிடிக்காது” என்று தம்பி பயமுறுத்த, கோயில் சுவரில் சர்க்கரைப் பொங்கலை வைத்து விட்டு வந்துவிடுவார். ஆனால் ஆசை தாங்காமல் கையில் ஒட்டியிருக்கும் பொங்கலை வாயில் இட்டுச் சுவைப்பார். இரு சாதிகளுக்கு இடையில் ஆசைக்கும் யதார்த்தத்திற்கும் நடுவே ஒரு பெண் தத்தளிப்பதை இதை விடவும் கவித்துவமாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. அமலாவின் நடிப்பு அட்டகாசம் என்பது ஒருபுறம் இருக்க, பாரதிராஜாவின் ‘கிளாசிக்கல் டச்’ என்று சொல்வது சரியாக இருக்கும்.

சத்யராஜின் மனைவியாக சரிதா நடித்திருந்தார். பொதுவாக இந்தப் பாத்திரத்தில் வடிவுக்கரசி அல்லது ராதிகாதான் வருவார்கள். ஆனால் சரிதாவின் நடிப்பு மிக இயல்பாகவும் அருமையாகவும் இருந்தது. இறந்து போன தன் மகனை, பிராமணச் சிறுவனின் வடிவில் ஆசையாகப் பார்ப்பதாக இருக்கட்டும், “வீடெல்லாம் ஏன் சாம்பிராணிப் புகையா இருக்கு?” என்று சத்யராஜ் எரிச்சல்படும் போது “நம்ப புள்ள அந்தப் பொண்ணை கட்டியிருந்தா நம்ம வீடும் அப்படித்தான் இருந்திருக்கும்” என்று உருக்கத்துடன் சொல்வதாகட்டும்... இப்படிப் பல காட்சிகளில் ஒரு தாயின் உள்ளத்தை மிகச் சரியான தொனியில் பதிவு செய்திருந்தார்.

பாரதிராஜாவின் படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் இருந்தால் ‘கௌரவத் தோற்றத்தில்’ நடிக்க சில பலியாடுகள் மாட்டுவார்கள். அப்படி வருபவர்களில் ஒருவர் ராஜா. இதிலும் அப்படியே! ஆனால் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தன் பங்கைச் சரியாகச் செய்திருந்தார். அமலாவைக் காதலோடு பார்க்கும் காட்சிகள், கோயிலில் மாட்டிக் கொள்ளும்போது ஏற்படும் பதைபதைப்பு, காதலியைக் காட்டித் தராத கண்ணியம் போன்ற காட்சிகளில் ராஜா ரசிக்க வைத்திருந்தார். ஏறத்தாழ பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஜனகராஜிற்கு ஒரு பாத்திரம் கிடைத்து விடும். அமலாவிடம் காதலைச் சொல்லி கன்னத்தில் அறை வாங்கி பிறகு க்ளைமாக்ஸில் நுட்பமாகப் பழிவாங்கும் வில்லனும் காமெடியனும் கலந்த பாத்திரத்தில் நடித்திருந்த ஜனகராஜ், நம்மைக் கவரத் தவறவில்லை. “நீங்களும் வடமா... நாங்களும் வடமா...” என்று இவர் பெண் கேட்கும் காட்சியே அத்தனை நகைச்சுவையானது.

வேதம் புதிது
வேதம் புதிது

அமலாவின் தந்தை நீலகண்ட சாஸ்திரியாக சாருஹாசன். தன்னிடம் வேதம் கற்க வரும் ராஜாவிற்கு ‘சவுந்தர்ய லஹரி’யை பாடம் சொல்லித் தரும் சமயத்தில், ராஜாவோ அமலாவை சௌந்தரியமாக சைட் அடிப்பதைப் பார்த்துத் திகைத்துப் போகும் இடத்தில் நன்கு நடித்திருப்பார். நடிகர் இளவரசு அடிப்படையில் ஒளிப்பதிவாளர். அவர் பிறகு நடிகராக உருமாறியதை சினிமாவிற்கு நல்ல விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படத்தில் அவருக்குச் சிறிய வேடம். “உனக்கு என்ன வேலையெல்லாம் தெரியும்?” என்று சிறுவனிடம் விசாரிக்கும் அந்த ஒரே காட்சியில் தான் ஒரு இயல்பான நடிகர் என்பதைப் பதிவு செய்து விடுவார். இளவரசு என்றொரு நல்ல நடிகர் உருவாகப் போவதற்கான அடையாளம் இதிலேயே தெரிந்து விடும். அமலாவிற்கு அடைக்கலம் தரும் நல்ல மனிதராக நிழல்கள் ரவி சில காட்சிகளில் வந்து போனார்.

சத்யராஜைக் கன்னத்தில் அறைந்த சிறுவன்

ஏறத்தாழ சத்யராஜிற்கு நிகரான பாத்திரத்தில் நடித்தவர் மாஸ்டர் தசாரதி. படத்தின் பிற்பாதியை ஆக்கிரமித்திருப்பவன் இந்தச் சிறுவன்தான். தந்தையையும் அக்காவையும் இழந்து ‘பகவதி பிக்ஷாந்தேஹி’ என்று ஒவ்வொரு வீட்டு வாசலில் நின்று உணவுக்காகக் கையேந்தும் காட்சியில் கலங்கடித்து விடுவான். ஆடும் கோழியும் நிறைந்திருக்கும் சத்யராஜின் வீட்டிற்குள் நுழையத் தயங்குவது, “எனக்கு வேதம் கத்துக்கணும்னு ஆசை. அதுக்கு ஏற்பாடு பண்ணுவேளா... மாடு மேயக்க அனுப்புவேளா?” என்று ஏக்கத்துடன் கேட்கும் காட்சி போன்றவற்றில் உருக வைத்து விடுவான்.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் போல, இந்தச் சிறுவன் கேட்கும் இரண்டு கேள்விகள் இந்தப் படத்தில் முக்கியமானவை. “பல்லக்குல வர்ற சாமிக்கு கால் வலிக்கும்னா, பல்லக்குத் தூக்கி வரவாளுக்கு கால் வலிக்காதா?” என்கிற கேள்வியை இவன் எழுப்புகிற காட்சி முக்கியமானது. இன்னொரு காட்சி மிகுந்த புகழ்பெற்றது. இன்றும் கூட நினைவுகூரப்படுவது. “பாலுன்றது உங்க பேருன்னா... தேவர்–ன்றது நீங்க வாங்கின பட்டமா?” என்று கேட்கும் காட்சி. தன் கன்னத்தில் அறை விழுவது போன்ற உணர்வை சத்யராஜ் அடைவார். உண்மையில் சாதியப் பித்துப் பிடித்த அனைவரின் முகத்திலும் விழும் அறை அது.

வேதம் புதிது
வேதம் புதிது

‘இளையராஜா’ இல்லாத பாரதிராஜா படம்

பாரதிராஜா + இளையராஜா + வைரமுத்து கூட்டணி என்பது எப்போதுமே ஸ்பெஷல். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதைத் தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு நேர்ந்த பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதுவரையான பாரதிராஜாவின் படங்களை இன்னமும் அதிகமான உயரத்திற்குக் கொண்டு சென்றது ராஜாவின் இசை. ஆனால் இந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவிற்கும் இளையராஜாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘வேதம் புதிது’ படத்தில் ராஜாவின் இசை அமையாமல் போனது துரதிர்ஷ்டம்.

இந்தத் திரைப்படத்திற்கு தேவேந்திரன் இசையமைத்திருந்தார். ஆனால் ‘ராஜாவின் இசைக்கு தன்னுடைய இசை ஒன்றும் சோடை போனதில்லை’ என்பதை நிரூபித்தார். அந்த அளவிற்கு இனிமையான பாடல்களும் பின்னணி இசையும் அமைந்திருந்தன. ‘கண்ணுக்குள் நூறு நிலவா’ என்பது சூப்பர் ஹிட்டான பாடல். ஷண்முகப்பிரியா ராகத்தில் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. எஸ்.பி.பியும் சித்ராவும் தங்களின் குரலால் இந்தப் பாடலை கூடுதல் இனிமையாக்கியிருந்தார்கள். ‘கொல்லை துளசி எல்லை கடந்தால், வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?’ என்று பாடல் வரிகளில் பட்டையைக் கிளப்பியிருந்தார் வைரமுத்து. ‘மந்திரம் சொன்னேன் வந்து விடு’ என்கிற இன்னொரு அருமையான பாடலை மனோவும் சித்ராவும் பாடியிருந்தார்கள். ‘புத்தம் புது ஓலை வரும்’ என்பது சித்ரா பாடிய ஓர் அருமையான மெலடி பாடல். ‘மாட்டு வண்டி சாலையிலே’ பாடலில் உருக்கத்தைக் கொட்டியிருந்தார் மலேசியா வாசுதேவன்.

பாரதிராஜாவின் கண்ணாக விளங்கும் ஒளிப்பதிவாளர் கண்ணனின் மாயாஜாலம் இதிலும் களை கட்டியிருந்தது. ‘கண்ணுக்குள் நூறு நிலவா’ பாடல் மிகுந்த அழகுணர்ச்சியுடன் படமாக்கப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை கோயிலின் பின்னணியில் பாடல் காட்சிகள் பதிவாகின. தனது சிறப்பான எடிட்டிங்கிற்காக தேசிய விருதை வென்றார் மோகன்ராஜ். சமூகப் பிரச்னையைப் பற்றிய பேசிய திரைப்படம் என்கிற பிரிவிலும் தேசிய விருது கிடைத்தது.
வேதம் புதிது
வேதம் புதிது

சர்ச்சையைத் தீர்த்து வைத்த எம்.ஜி.ஆர்

‘வேதம் புதிது’ திரைப்படத்திற்கும் எம்.ஜி.ஆருக்கும் தொடர்பான சில தகவல்கள் இருக்கின்றன. அவர் கடைசியாகப் பார்த்து ரசித்த திரைப்படம் ‘வேதம் புதிது’தான். இந்தத் திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சாமியார் - பல்லக்கு காட்சி தொடர்பானது. சம்பந்தப்பட்ட காட்சியை சென்சார் செய்திருந்தால் கூட பரவாயில்லை. படத்தையே வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் கொந்தளித்துப் போன பாரதிராஜா “இந்தப் படத்தைக் கொளுத்தினாலும் கொளுத்திப் போடுவேனே தவிர, உங்கள் தடைக்கு அஞ்ச மாட்டேன். அப்படி நான் கொளுத்தினால் தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று ஆவேசமானார். அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், இந்தச் சர்ச்சையை நீக்க முன்வந்தார். படம் அவருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தின் உள்ளடக்கத்தை மிகவும் ரசித்த எம்.ஜி.ஆர் “நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி சர்ச்சையைத் தீர்த்து வைத்தார். சத்யராஜின் சிறப்பான நடிப்பைப் பார்த்து அவரது கையில் முத்தமிட்டு மகிழ்ந்தார்.

கே. கண்ணன் எழுதிய ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற நாடகம்தான் ‘வேதம் புதிது’ திரைப்படமாக உருமாறியது. இந்தப் படத்தில் வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல் சில காட்சிகளில் நடிக்கவும் செய்தார். இந்தப் படத்தின் மூலம் கிடைத்த புகழ் காரணமாக ‘வேதம் புதிது கண்ணன்’ என்று அறியப்பட்டார். படத்தில் வெளிப்பட்ட சமூக நீதி வசனங்கள் ஆழமாகவும் சிறப்பாகவும் அமைந்ததற்குக் கண்ணனின் எழுத்து ஒரு முக்கியமான காரணம்.

படம் ஆரம்பிக்கும் போது சரி, முடியும் போதும் சரி, பாரதிராஜாவின் குரலில் ஒலிக்கும் முன்னுரையும் பின்னுரையும் படத்தின் ஆதாரமான மையம் எனலாம். பாலுத் தேவர் ‘பாலு’வாக மாறுவதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி. 'நமக்குள் உறைந்திருக்கும் சாதிய மனோபாவங்களை எப்போது உதறப் போகிறோம்?' என்கிற கேள்வியைச் சம்மட்டி அடியாகக் கேட்கிறது, இந்த ‘வேதம் புதிது’.