சினிமா
Published:Updated:

வீரமே வாகை சூடும் - சினிமா விமர்சனம்

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விஷால்

அபத்தமும் அரதப்பழசுமான காட்சிகள் நிறைந்த முதல் பாதிக்கு இரண்டாம் பாதி பரவாயில்லை.

எதிரிகளை வழக்கம்போல காடு, மலை எல்லாம் தேடித் துரத்தி விஷால் பழிவாங்குவதே இந்த ‘வீரமே வாகை சூடும்.’

போலீஸ் தேர்வெழுதிவிட்டு வேலையில் சேரக் காத்திருக்கிறார் விஷால். அவரின் தங்கைக்கு அந்த ஏரியா ரவுடியால் ஒரு சிக்கல் நேர, அதை மொத்தக் குடும்பமும் எதிர்கொள்கிறது. மறுபக்கம் உடன் படிக்கும் மாணவியை மிரட்டிப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் கூட்டம் ஒன்று. மூன்றாவது திசையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன ஆலையை மூடச் சொல்லிப் போராடும் ‘போராளி.’ இந்த முக்கோணத்தின் மையப்புள்ளியாக அவருக்கே தெரியாமல் உருவெடுக்கிறார் விஷால். அதன்பின் நடக்கும் அதிரடி அடிதடிகளே கதை.

விஷாலின் கரியரில் ப்ளஸ் ஒன் எனச் சொல்லிச் சென்றுவிடுமளவிற்குத்தான் இருக்கிறது இந்தப் படம். கதாபாத்திரமும் புதிதில்லை. அதில் விஷால் செய்வதும் புதிதில்லை. சரி, மற்றவர்களாவது ஏதாவது செய்வார்கள் எனப் பார்த்தால், ‘அதுக்கெல்லாம் ரொம்ப வேலை பார்க்கணும். அட போங்கப்பா’ என்கிற ரீதியிலேயே எல்லாவற்றையும் அணுகியிருக்கிறார் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன். முதல் பாதியில், எந்தப் படத்திலும் வராத ஏதாவது ஒரு புதிய காட்சியைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு இண்டர்வெல்லில் பாப்கார்ன் வாங்கித் தரலாம்.

காமெடி என்கிற பெயரில் கால்ஷீட் கொடுத்தால் போதும் என வந்துபோகும் யோகிபாபு, தேவைக்கும் அதிகமாகவே ரியாக்‌ஷன்களைக் கொட்டும் டிம்பிள் ஹயாதி என ஒரு கதாபாத்திரம்கூட படத்தில் கவனம் ஈர்ப்பதாய் இல்லை. ரவீனா, மாரிமுத்து, இளங்கோ குமரவேல், துளசி என எல்லாரும் டிட்டோ.

வீரமே வாகை சூடும் - சினிமா விமர்சனம்

‘தித்திக்கிறதே கண்கள்’ வின்டேஜ் யுவன். பாடலில் நம்முள் நாஸ்டாலஜியாவைக் கிளறுபவர் பின்னணி இசையில் ஏமாற்றுகிறார். படத்தின் ப்ளஸ் அனல் அரசு, ரவி வர்மா சண்டைக் காட்சிகள் மட்டுமே. கவின் ராஜின் ஒளிப்பதிவு ஒரு ஆக்‌ஷன் படத்துக்கான மீட்டரில் அப்படியே இருக்கிறது.

அபத்தமும் அரதப்பழசுமான காட்சிகள் நிறைந்த முதல் பாதிக்கு இரண்டாம் பாதி பரவாயில்லை. அதிலும்கூட வில்லனைத் தேடிச்செல்லும் ஹீரோவின் எலி - பூனை விளையாட்டும் ஒரு கட்டத்தில் பழைய பாதையில் சறுக்கிச்செல்கிறது. கவனிக்கத்தக்க இடத்திலிருக்கும் விஷால் போன்ற ஒரு ஹீரோவே, ‘இனிமே உன் பொண்ணை யாருக்கு வேணும்னா கட்டி வை’ என்பது போன்ற பிற்போக்குத்தனமான அபத்தங்களைப் பேசுவது தமிழ்சினிமாவில் மாறவேண்டியது நிறைய இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஒருபக்கம் இதைப் பேசும் ஹீரோ கதாபாத்திரம் மறுபக்கம் பெண்களைக் காக்கப் போராடுவதாய் கட்டமைக்கப்படுவதே இயக்குநரின் அரசியல் போதாமைக்கு சாட்சி.

வீரமே வாகை சூடும் - சினிமா விமர்சனம்

‘இவ்வளவு யோசிச்சா போதும்’ என, பார்த்துச் சலித்த சராசரிக் காட்சிகளை அடுக்காமல் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் வாகை சூட வாய்ப்பிருந்திருக்கலாம்.