Published:Updated:

"`வெந்து தணிந்தது காடு 2'-க்கு ரெடியாகச் சொன்னார் கௌதம் அண்ணா... நிறைய சர்ப்ரைஸ் இருக்கு!"- இளங்கோ

சிம்பு, இளங்கோ

"32 படங்கள் முடிச்சிட்டேன். இப்போ 'வெந்து தணிந்தது காடு' எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கு. எங்கே போனாலும், 'அட, நம்ம சிம்பு ஃப்ரெண்ட்!'ன்னு செல்ஃபி எடுத்துக்குறாங்கப்பா!" - இளங்கோ

Published:Updated:

"`வெந்து தணிந்தது காடு 2'-க்கு ரெடியாகச் சொன்னார் கௌதம் அண்ணா... நிறைய சர்ப்ரைஸ் இருக்கு!"- இளங்கோ

"32 படங்கள் முடிச்சிட்டேன். இப்போ 'வெந்து தணிந்தது காடு' எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கு. எங்கே போனாலும், 'அட, நம்ம சிம்பு ஃப்ரெண்ட்!'ன்னு செல்ஃபி எடுத்துக்குறாங்கப்பா!" - இளங்கோ

சிம்பு, இளங்கோ

இளங்கோவை நீங்கள் சமீபத்திய தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவின் நண்பனாக, 'முத்து எங்க நம்பிக்கை' என க்ளைமாக்ஸில் சிம்புவோடு தோள்கொடுத்து நிற்பவராக நடித்தவர். தெக்கத்திச் சீமையான ராமநாதபுரத்துக்காரர். 'கொம்பன்' படத்தில் ஆரம்பித்த திரை உலகப் பயணம் தற்போது 'வெந்து தணிந்தது காடு'க்குப் பிறகு 'இந்தியன் 2' தாண்டி நீண்டு கொண்டே போகிறது.

42 வயதில் 32 சினிமாக்களில் நடித்துவிட்டு தனக்கான பெரிய பிரேக்குக்காகத் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் இளங்கோவிடம் இப்போது எதையோ சாதித்த திருப்தி கண்களில் பளிச்சிடுகிறது.

"ஆமா நண்பா! 'இந்தியன் 2', அப்புறம் என்னோட ஃபேவரைட் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனோட 'வெந்து தணிந்தது காடு - இரண்டாம் பாகம்'ன்னு நிறைய பெரிய படங்கள் கைவசம் வெச்சிருக்கேன். VTK படத்தின் க்ளைமாக்ஸ்ல சிம்புவோட கார்ல உட்கார்ந்து வர்ற சீன்ல அவரோட இரண்டாம் பாகத்துக்கன லீடுல என்னையும் காட்சிப்படுத்தி இருந்தது எனக்கே ஸ்வீட் சர்ப்ரைஸா இருந்தது. கௌதம் சாரை நான் 'அண்ணே'ன்னுதான் கூப்பிடுவேன். அவரும், 'இளா'னு அன்பா கூப்பிடுவார். சின்ன ரோல்தானே பண்ணினான்னு நினைக்க மாட்டார். அதோட அவருடன் மோகன்.ஜி இயக்கத்துல 'ருத்ர தாண்டவம்' படம் பண்ணினப்போ நானும் அவரும் ஒரே ஃப்ரேம்ல நடிச்சிருப்போம். ரொம்ப அன்பா வாஞ்சையா பழகுவாரு. கொஞ்சம்கூட ஈகோ இல்லாத மனுஷன்.

கௌதம் மேனன், இளங்கோ
கௌதம் மேனன், இளங்கோ

'டேய் இளா... எதாவது மாற்றுக்கருத்து இருந்தா சொல்லுடா!'ன்னு ஷூட்டிங்ல உரிமையா சொல்லுவார். நாம அதிகப்பிரசங்கித்தனமா ஏதாச்சும் சொன்னாக்கூட, 'டேய் சூப்பர்டா... நல்ல பாயின்ட்!'னு தட்டிக் கொடுப்பார். 'வெந்து தணிந்தது காடு' படத்தோட வெற்றியை என் சொந்த அண்ணனோட வெற்றியாத்தான் நான் பார்க்கிறேன். முதல் பாகத்துக்கு இவ்வளவு பாராட்டுகள் குவியுறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. அண்ணன் இரண்டாம் பாகத்துக்கே ரெடி ஆகிட்டாரு. அதுல நிறைய சர்ப்ரைஸ்கள் வெச்சிருக்காரு. நானும் அவரோட கதைக்குள்ள இருக்கிறேன். 'அடுத்த பாகத்துக்கு ரெடியா இருடா இளா!'ன்னு அண்ணன் சொன்னார். அதுவே மிகப்பெரிய கொடுப்பினை!"

"சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க!" என்று கேட்டேன்.

"என்னோட பேரு இளங்கோ. ராமநாதபுரம் சொந்த ஊர். அப்பா பாண்டியன், அரசுப்பேருந்து ஓட்டுநரா இருந்து ரிட்டையர்டு ஆனவர். எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமான்னாலே அவ்ளோ பிடிக்கும். ஸ்கூல் கட் அடிச்சதே படம் பார்க்கத்தான். எல்லாவிதமான படங்களும் பார்ப்பேன். வீட்டுல டின்னு கட்டிடுவாங்க. ப்ளஸ் டூ-வுல கோட்டை விட்டதும் வீட்ல துபாய்க்கு ஃப்ளைட் ஏத்திவிட்டாங்க. அங்கே ஒரு கம்பெனில ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன். தனிமை அவ்ளோ துயரமா இருந்துச்சு. நாள்பூரா, வருஷக் கணக்கா ஒரே மாதிரி வேலை செஞ்சு சலிச்சுப் போச்சு. கடுப்பாகி, துபாயும் வேணாம். ஒண்ணும் வேணாம்னு முடிவு செஞ்சு ஊருக்கு வந்துட்டேன்.

பெத்தவங்களுக்கு நான் என்ன பண்ணப்போறேன்னு கவலை. எனக்கோ இவங்க அடுத்து ஏதாச்சும் நம்ம மேல திணிக்கிறதுக்குள்ள நாம காசை சேர்த்துக்கிட்டு சென்னைக்கு ஓடிப்போயிரணும்னு ராம்நாட்ல பிரியா டிவிங்கிற லோக்கல் சேனல்ல காம்பியரிங் பண்ணினேன். குறும்படங்கள் இயக்குறது, திருவிழால ஆட்டம் பாட்டம்ன்னு ஜாலியா இருந்தேன்.

இளங்கோ
இளங்கோ

அப்பல்லாம் நடிப்பைவிட இயக்கம்தான் என் சாய்ஸா இருந்தது. எப்படியாச்சும் சினி ஃபீல்டுக்குள்ள நுழையணும்னு எல்லாப் பக்கமும் முயற்சி செஞ்சிட்டு இருந்தேன். ப்ராங் ஷோ பண்ணுற 'கட்ட எறும்பு' சேனல் ஸ்டாலின் தம்பியும் நானும் 'மதுப்பிரியன்'ன்னு ஒரு குறும்படம் பண்ணினோம். ஹீரோ நான்தான். திரைப்பட விழாக்களுக்கும் அது போனுச்சு. அப்பல்லாம் தமிழ் சினிமால கமர்ஷியல் இயக்குநரா வரணும்னு ஆசைப்பட்டேன். அப்புறமா சித்தப்பா ஒருத்தர் மூலமா 'நாடோடிகள்' படத்துல உதவி இயக்குநரா வேலை செய்ய கிட்டத்தட்ட வாய்ப்பு வந்து அதுவும் கைநழுவிப்போனது. சோர்வா ஊருல இருந்தப்பதான் 'கொம்பன்' பட ஷூட்டிங் ராமநாதபுரத்தில் நடக்க ரெடி பண்ணிட்டு இருந்தார் முத்தையா சார். அவர்கிட்ட உதவி இயக்குநரா வாய்ப்பு கேட்டேன்.

'எலேய் தம்பி... படம் டிஸ்கஷன், கதை எல்லாம் முடிச்சு, ஆர்ட்டிஸ்ட் ஃபைனல் பண்ணி ஷூட்டிங் லொக்கேஷன் பார்த்துட்டு திரியுறேன். இப்பப்போயி அசிஸ்டெண்ட் டைரக்டர் வாய்ப்பு கேட்குறே?'ன்னு சிரிச்சார். அப்புறம் என் ஆர்வத்தைப் பார்த்து நான் ராம்நாடுக்காரன்கிறதால லொக்கேஷன் மேனஜரா வேலைக்குச் சேர்த்துக்கிட்டாரு. படத்துல ஆர்வமா லொக்கேஷன் ஃபிக்ஸ் பண்ணிக்கொடுத்தேன். அப்பத்தான் மதுரையில இருந்து ராம்நாடுக்கு கார்ல வேல்ராஜ் சாரோட லொக்கேஷன் பார்க்கப் போய்க்கிட்டு இருந்தேன். 'இளங்கோ...நீ எதிர்காலத்துல என்ன பண்றதா உத்தேசம்?'ன்னு கேட்டார். நானும் என் சினிமா டைரக்‌ஷன் ஆசையைச் சொன்னேன்.

'யப்பா... பாக்கு இடிக்கிற நேரத்துல பத்து வருஷம் ஓடிப்போயிருமப்பா... நீ உதவி இயக்குநரா இருந்து கதை ரெடி பண்ணி, தயாரிப்பாளரைப் பிடிச்சு கதை சொல்லி, படம் பண்ணுறதுக்குள்ள 15 வருஷம் ஆகிரும். நான் சொல்லுறதைக் கேளு. ஆளு வாட்டசாட்டமா ஒருமாதிரி இருக்கே... நீ பேசாம நடிக்கலாம். அப்பிடி இப்படினு உள்ளே நுழைஞ்சிரு. சினிமால நடிச்சு ஒரு படத்துல உன்னை நிரூபிச்சிட்டேனா எல்லாம் உனக்குள்ள வந்துரும்!'ன்னார்.

கமல், இளங்கோ
கமல், இளங்கோ

அதுவும் சரினு நினைச்சுட்டு இருந்தப்போ, 'கொம்பன்' படத்துலயே சின்ன ரோல்ல அடியாளா நடிக்க வாய்ப்பு தானா அமைஞ்சது. அதன்பிறகு 'பைரவா', 'கருப்பன்', 'என்.ஜி.கே'ன்னு நடிக்க ஆரம்பிச்சுட்டேன். 'திரௌபதி' படத்துல மெயின் வில்லனா நடிச்சேன். இப்படியே 32 படங்கள் முடிச்சிட்டேன். இப்போ 'வெந்து தணிந்தது காடு' எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கு. எங்கே போனாலும், 'அட, நம்ம சிம்பு ஃப்ரெண்ட்!'ன்னு செல்ஃபி எடுத்துக்குறாங்கப்பா!" என்றவரிடம், "கல்யாணம் காட்சி எப்போ?" என்று கேட்டேன்.

"நிலையான ஒரு இடத்தை தமிழ் சினிமால பிடிச்சிட்டு சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்குவேன். பிராசஸ் போய்க்கிட்டு இருக்கு!" என்று வெட்கப்பட்ட இளங்கோவை வாழ்த்தினேன்.

உங்கள் கனவுகள் வசமாகட்டும் இளங்கோ!