சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

விடுதலை படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
விடுதலை படத்தில்...

- கிருஷ்ணா

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் காடுகளில் ‘விடுதலை' படத்தை ஒரு தவம் போல உருவாக்கிவருகிறார் வெற்றிமாறன். தினம் தினம் திருவிழாக் கூட்டம் போல மக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார்கள். விஜய்சேதுபதி, சூரியை சந்திக்க ஆர்வம் காட்டுவது போலவே, வெற்றிமாறனிடம் பேசவும் பலர் நெருங்கி நிற்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘விடுதலை', அடுத்தடுத்த படைப்புகள் என்று வெற்றிமாறனிடம் நீண்டது உரையாடல்...

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

‘விடுதலை' திரைப்படம் தொடங்கியதிலிருந்து பலமுறை தாமதமாகியுள்ளது. காரணம் என்ன?

‘‘தாமதம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு திரைப்படமும் அதற்கான காலத்தை எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொன்றிலும் குறிப்பிட்டவற்றை கற்றுக்கொள்கிறோம். காடு மற்றும் மலைப்பரப்புகளில் கதை நிகழ்வதால், மற்ற இடங்களில் ஒரு நாளில் முடிக்க இயலும் காட்சிகளுக்கு இங்கு 3-4 நாட்கள் தேவைப் படுகின்றன. ஊரடங்கு தொடங்கி நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களால்தான் இந்த தாமதம். விஜய்சேதுபதிதான் தாமதத்திற்கான காரணம் என்று செய்திகள் வெளியாயின. இல்லவே இல்லை. நான் அவரிடம் முதலில் கேட்ட நாட்கள் எட்டு. ஆனால், 40 நாட்கள் வரை அவருக்கான காட்சிகளை எடுக்க தேவைப்பட்டன. அவருக்கான காட்சிகளை பலப்படுத்த கூடுதல் டீட்டெயிலிங் தேவைப்பட்டது. எப்போது அழைத்தாலும் முழு ஒத்துழைப்பை இப்படத்திற்குக் கொடுத்தார். க்ளைமாக்ஸை மிக விரிவாக காட்சிப்படுத்தி யிருக்கிறோம். இதுபோன்ற நிலப்பரப்பில் படப்பிடிப்பை நடத்தவேண்டிய சவால்கள் கதைக்குள்ளும் சில மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. அதனால் ஸ்கிரிப்ட் எழுதுவதிலும் சவால் இருந்தது. இதை பேலன்ஸ் செய்வதற்குத்தான் இந்தக் காலம் எடுத்துக்கொண்டது.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

இந்தக் கதையை எழுதுவதில் இருந்த சவாலை பற்றிக் கூறுங்கள்?

ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு அதன் மீது கட்டமைக்கப்பட்டதுதான் திரைக்கதை. அதன் தொடக்கமும் முடிவும் அக்கதையின் தாக்கத்தால் உருவானவை. சரி-தப்பு, நல்லவன்-கெட்டவன், உண்மை-தகவல்... இவை பற்றிய விவாதத்தையே இக்கதையின் சவாலாக நாங்கள் பார்க்கிறோம். தத்துவார்த்தரீதியாக இது ஒரு பரந்த வெளி. அதை முழுவதுமாகச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. ஒரு சவாலாக ஏற்று, முடிந்தளவுக்கு பணியாற்றி இருக்கிறோம்.''

‘வெக்கை’ படித்தவர்களுக்கு ‘அசுரன்’ பிடிக்காது என்று கூறியிருந்தீர்கள். எழுத்தாளர் பூமணியும் இதையே குறிப்பிட்டிருந்தார். ‘விடுதலை’-க்கும் இதேதானா?

‘‘இவ்வளவு முன்னதாக இதைப்பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. முழு படத்தையும் எடிட் செய்த பிறகே கூற முடியும். சிறு சிறு ஏமாற்றங்கள் இப்படத்திலும் இருக்கத்தான் செய்யும், ஆனால் பெரிய அளவில் ஏமாற்றம் இருக்காது.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

ஓர் இடைவெளிக்குப் பின் மீண்டுமொரு போலீஸ் படம். ‘விசாரணை'யில் இருந்து இந்தப் படம் எந்தவகையில் மாறுபட்டிருக்கும்?

‘‘புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கடைநிலைக் காவலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியே இக்கதை. காவல்துறையினர் பணியாற்றும் முறை, அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், அவர்களின் தினசரி வாழ்க்கை என அனைத்தும் சேர்ந்ததுதான் இப்படம்.''

சிறுமலையைத் தேர்வு செய்ததற்கான காரணம்?

‘‘சத்தியமங்கலம் வனப்பகுதியின் கடம்பூரில்தான் முதலில் படப்பிடிப்பு நடத்தினோம். இரவில் எடுக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருந்தன. அதற்கான அனுமதி அங்கு கிடைக்கவில்லை. மேலும், அங்கு தங்குவதற்கு டென்ட் முதல் கழிப்பிடம் வரை அனைத்தையும் நாங்களே அமைக்க வேண்டியிருந்தது. மழையால் அவை அனைத்தும் சேதமடைந்தன. அப்படியும் சுமார் 20 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு மேலும், அங்கு தொடர்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தோம். மீண்டும் எங்கு தொடர்வது என்று யோசித்தபோது ‘பிசாசு-2’ எடுக்கப்பட்ட சிறுமலை பற்றி ஆண்ட்ரியா என்னிடம் கூறினார். மிஷ்கினிடம் பேசினேன். சிறுமலையில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் காடு வைத்திருந்த தன் நண்பர் வினோத் பட்டை அவர் எனக்கு அறிமுகம் செய்தார். விவசாயம் கூட நடக்காத நிலம் அது. படப்பிடிப்புக்கு முதலில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. வனப்பகுதிக்கு எந்த பாதிப்பும் அளிக்கமாட்டோம் என்று உறுதி அளித்தபிறகே இதற்கான அனுமதி கிடைத்தது. வனத்தின் சுற்றுசூழல் பாதிக்காதவாறு தனித்துவமான லைட்டிங்கை கையாண்டி ருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். காட்டில் லைட்டிங் செய்வது மிகவும் சவாலான ஒன்று. புதிய முயற்சிகள் பலவற்றைச் செய்துள்ளார் வேல்ராஜ். அந்தவகையில் இப்படத்தில் வேல்ராஜும் ஒரு ஹீரோதான். கடம்பூரில் காட்சிப்படுத்திய சில கிராமத்துக் காட்சிகளை இங்கு எங்களால் எடுக்க முடியவில்லை. அருகிலேயே செட் அமைத்து அதற்கான படப்பிடிப்பை மேற்கொள்ள காமகோடி எஸ்டேட் உரிமையாளர்கள் அனுமதி அளித்தனர். அங்கே அந்தக் காட்சிகளை எடுத்தோம்.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்
“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்
“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

சிறிய அளவில் தொடங்கிய ‘விடுதலை', தற்போது பெரிய படமாக மாறியிருக்கிறதே?

‘‘எல்ரெட் குமாரைத் தவிர இப்படத்தை வேறு யாராலும் தயாரித்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை. 4 கோடி ரூபாய் வரை ஆகும் என்று அவரிடம் முதலில் கூறினேன். தற்போது பட்ஜெட் 40 கோடியை நெருங்கப்போகிறது. ஆனாலும், படத்தின் மீது என்னைவிட விட அதிக நம்பிக்கை வைத்து பணியாற்றி வருகிறார். இதுபோன்ற தயாரிப்பாளர் அமைவது அரிது. படத்தில் ரயில் விபத்து ஒன்றைப் படமாக்க விரும்பினேன். படத்தின் மொத்த பட்ஜெட்டாக நான் தொடக்கத்தில் கூறிய தொகையை விட அந்தக் காட்சிக்கு மட்டுமே இரண்டு மடங்கு தொகை தேவை. அதனால் அத்திட்டத்தைக் கைவிட்டிருந்தோம். ‘அந்தக் காட்சியை எடுத்தால் நன்றாக இருக்கும்' என்று தயாரிப்பாளர் அவராகவே சொல்ல, அதை விரைவில் படமாக்க உள்ளோம்.''

‘அசுர'னுக்குப் பிறகு ‘விடுதலை’க்குள் வந்ததற்கான காரணம்?

‘‘இந்தப் படத்தை ஒரு விபத்து என்றே கூறுவேன். மீரான் மைதீனின் ‘அஜ்நபி' நாவலைப் படமாக்கி, அதில் சூரி போன்ற ஒருவர் நடித்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம். வளைகுடா நாடுகளில் பிழைப்பு தேடிச் செல்லும் மனிதர்கள் வாழ்வே கதைக்களம். அதற்கான லொகேஷன்களை 2020 பிப்ரவரியில் பார்த்து வந்தோம். நாங்கள் திரும்பிய ஒரு வாரத்தில் அங்கு ஊரடங்கை அமல்படுத்தினார்கள். விரைவில் இங்கும் ஊரடங்கு போடப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்திலேயே நடப்பது போன்ற ஒரு கதையை அப்போது எழுதி முடித்தேன். இருந்தும் நிறைவடையாமல் வேறு ஒன்றைத் தேடியபோது ஜெயமோகனின் ‘கைதிகள்’ நெடுங்கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதையைப் படமாக்க மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்கு யோசனை இருந்தது. அப்போது சுப்ரமணியம் சிவா மூலமாக இதுகுறித்து ஜெயமோகனிடம் பேசியிருந்தேன். ஆனால் அது அப்போது நடக்கவில்லை.

‘விடுதலை'க்குத் தயாரானபோது, நான் எப்போதும் செய்யாத ஒரு தவறைச் செய்தேன். ஒரு கதையை எடுத்துப் பணியாற்ற தொடங்கும்முன் அதன் எழுத்தாளரிடம் அனுமதியைப் பெறுவது என் வழக்கம். ஆனால் ஜெயமோகனிடம் முன்பே பேசியிருந்தோமே என்ற எண்ணத்தில் ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கினேன். மூன்று வாரம் கழித்து ஜெயமோகனை அணுகினேன். அப்போது அக்கதையை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகக் கூறினார். அதுவரை நான் எழுதியிருந்த திரைக்கதையின் போக்கை அவரிடம் சொன்னபோது ‘துணைவன்’ சிறுகதையை எனக்கு அனுப்பிவைத்தார். என் மனதில் நினைத்திருந்த உலகத்தோடு இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடிந்ததால், இதையே படமாக்க முடிவெடுத்தேன்.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்
“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்
“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

சூரி மாதிரியான நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒருவரை அதற்கு முற்றிலும் மாறுபட்ட உங்கள் சினிமாவில் பொருத்திப் பார்த்தது எப்படி?

‘‘நான் ‘அசுர'னுக்குப் பின் எடுக்கப்போகும் படத்தில் சூரிதான் கதாநாயகன் என்பதை முன்பே முடிவு செய்திருந்தேன். அவர் பொருந்திப் போகக்கூடிய கதைகளையே தேடினேன். பெரிய கனவுகள், ஆசைகள் இல்லாத, தினசரி வாழ்க்கையை அன்றன்றைக்கு சந்திக்கும் எளிய மனிதர்கள் பற்றிய கதையை படமாக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. அப்படிப்பட்ட கதைக்காகவே நான் சூரியை மனதில் வைத்திருந்தேன். அவரிடம் உரையாடியபின் அவருக்கேற்ற வேறொன்றைப் பண்ணலாம் என்று தோன்றியது. புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உடல்வாகு சூரிக்கு மிக அருமையாகப் பொருந்திப் போனது.

விஜய்சேதுபதி நடித்திருக்கும் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு முதலில் பாரதிராஜாவிடம் பேசியிருந்தேன். பின்னர் படப்பிடிப்பு நடக்கும் சவால் மிகுந்த நிலப்பரப்பிற்குச் சென்றவுடன், சேது இப்படத்திற்குள் வந்தார்.''

விஜய்சேதுபதி வந்தபின் ‘வாத்தியார்' கதாபாத்திரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்தீர்கள்?

‘‘ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் ஆசானாக, அவர்களுக்கான சிந்தனையாளராக மட்டுமே பாரதிராஜா இருக்கையில் அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தேன். விஜய்சேதுபதி வந்தபிறகு அவர் உடல் தோற்றத்திற்கு ஏற்றவாறு ஆக்‌ஷன் காட்சிகளாகவும் சிலவற்றை யோசிக்க முடிந்தது. ஆனால் கதாபாத்திர வடிவமைப்பில் மிகச் சிறிய அளவே மாறியிருக்கிறது.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்
“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

‘விடுதலை'க்காக சூரியின் மெனக்கெடல்கள் ஏராளம். அதை அவரே குறிப்பிட்டுள்ளார். அவரும் விஜய்சேதுபதியும் இருப்பதால் இருவருக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலைமை உண்டானதா?

‘‘சூரிக்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம்தான் இந்தக் குமரேசன். அவரும் மிகச்சரியாகப் பொருந்திப் போயுள்ளார். ‘விடுதலை'யைப் பொருத்தவரை, குமரேசன் கதாபாத்திரம் வழியாகவே ஒரு புதிய உலகிற்குள் சென்று அதைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால் அங்கிருக்கும் வேறொரு கதாபாத்திரம்தான் (வாத்தியார்) அந்த மொத்தக் கதையையும் நகர்த்தக்கூடியதாக இருக்கும். அந்தக் கதாபாத்திரமே மற்ற அனைத்திற்கும் ஊன்றுகோலாக விளங்கும். ‘விடுதலை'யின் கதை நாயகன் சூரி. கதாநாயகன் விஜய்சேதுபதி.''

‘விடுதலை'யின் மற்றுமொரு ஆச்சரியம், கௌதம் வாசுதேவ் மேனன். அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

‘‘கௌதமிற்கே உண்டான நேர்த்தி மற்றும் ஸ்டைலைத்தான் இப்படத்தில் நாங்கள் படமாக்கியுள்ளோம்.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்
“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

கலை இயக்குநர் ஜாக்கியுடன் நீண்டகாலமாகப் பயணித்து வருகிறீர்கள். ‘விடுதலை'யில் புதிதாக என்ன முயற்சி செய்திருக்கிறீர்கள்?

‘‘ஜாக்சனிடம் நான் எப்போதும் வேடிக்கையாக, ‘நீங்கள் செய்யும் வேலை, உங்களால்தான் செய்யப்பட்டது என்று வெளியே தெரிந்தால்தான் உங்களுக்கான விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கும். அதுவரை அதற்கான வாய்ப்பில்லை' என்று சொல்வேன். எங்கு என்ன செய்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கமுடியாத வகையில்தான் அவரின் கலை நுணுக்கம் இருக்கும். அதுதான் அவரின் பலம். இந்தப் படத்துக்காக ரயில் தண்டவாளம் மற்றும் பாலம் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். அனுமதி வாங்கி உண்மையான இடத்திலேயே அதைப் படமாக்க முடியும் என்றாலும் அதில் சில வரைமுறைகள் உண்டு. ஜாக்சனின் இந்த செட் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.''

இளையராஜாவை இப்படத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது எழுந்தது?

‘‘அது ஓர் இயல்பான சந்திப்பு. இப்படியொரு படம் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன் சார் என்று அவரிடம் கூறினேன். பண்ணலாம் என்று கூறிய அவர், ‘எப்போது என்னிடம் கதை சொல்லப் போகிறீர்கள்’ என்று கேட்டார். ‘படத்தை எடுத்துவந்து விடுகிறேன் சார்’ என்றேன். பின்னர் ஒரே ஒரு பாடலுக்கான ஐடியாவைக் கூறினேன். காதல் தீம் ஒன்றையும் இசையமைத்துத் தந்தார். கடம்பூரில் படப்பிடிப்பு முடித்து 45 நிமிடங்கள் எடிட் செய்த படத்தை அவரிடம் காண்பித்தேன். முன்பு இசையமைத்திருந்த ‘காதல் தீம்' பொருந்திப் போகாததால் வேறொரு டியூன் போட்டுக் கொடுத்தார். அவரின் க்ளாஸிக் மெலடி வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கும். தாலாட்டு மாதிரியான ஒரு பாடல் இருக்கிறது. மொத்தம் 5 பாடல்களை இசையமைத்திருக்கிறார். அனைத்தும் நான் விரும்பிக் கேட்கும் பட்டியலில் இப்போது இருக்கின்றன.''

“கதை நாயகன் சூரி... கதாநாயகன் விஜய்சேதுபதி...” - ‘விடுதலை’ ரகசியம் சொல்லும் வெற்றிமாறன்

யாருக்கான விடுதலையை இந்தப் படம் பேசப் போகிறது?

‘‘எல்லோருக்குமான விடுதலையை பற்றி பேசும் படமே இது. நாம் ஒவ்வொருவரும் நம்மை வெவ்வேறு விதமான அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்கிறோம். நம்பிக்கை, கற்பிதம் என அவற்றிலிருந்து நகர்ந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதுதான் இந்தப் படம்.

தொடக்கத்தில் ஒவ்வொரு படத்திற்கும் அதிக காலத்தை எடுத்துக்கொண்டு, ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே செய்த நீங்கள் தற்போது அடுத்தடுத்து படங்கள் இயக்குகிறீர்கள். ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் சில படங்களில் பணியாற்றி யிருக்கிறீர்கள். அதைப் பற்றி?

‘‘எதுவும் நம் கையில் இல்லை. ‘விடுதலை’ படத்தை 30-40 நாட்களில் முடித்துவிடலாம் என்றே தொடங்கினோம். திட்டமிட்டிருந்ததை விட அதிக காலம் எடுத்துக்கொண்டது. திரை எழுத்தாளர் களுடைய பொற்காலமாகவே இந்த வெப் சீரீஸ் ரைட்டிங்கை நான் கருதுகிறேன். எழுதுவதற்கான கற்பனையும் பணம் போட முதலீட்டாளர்களும் தயாராக இருந்தால் ஒரு படைப்பை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம். என்னை உத்வேகப்படுத்தி முன்னோக்கி நகர்த்தி செல்லக்கூடிய, எனக்கு சவாலளிக்கக் கூடிய ஸ்கிரிப்ட்களிலேயே நான் பணியாற்றுகிறேன். அமீரும் நானும் இணைந்து ‘நிலமெல்லாம் இரத்தம்’ என்ற வெப் சீரீஸுக்கு திட்டமிட்டுள்ளோம். ‘விடுதலை’ படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. அடுத்ததாக ‘வாடிவாசல்’. இப்போதைக்காக என் லைன்-அப் இதுதான். ‘வாடிவாசல்' மிகுந்த நுணுக்கம் மற்றும் உழைப்பு தேவைப்படும் படமாக இருக்கும். அதை முடித்த பிறகே அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.''

விரைவில் விஜய்க்கு படம் செய்ய உள்ளீர்கள். கலர் ஃபுல்லாகவே பார்த்து பழக்கப்பட்ட விஜய்யை உங்கள் படத்தில் எப்படிக் காட்டப்போகிறீர்கள்?

‘‘அதைப்பற்றி இவ்வளவு முன்கூட்டியே பேசுவதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதற்காக கதைக்களம் முடிவானால்தான் அதைப்பற்றிக் கூற முடியும்.''