இன்றைய காலகட்டத்தை ஒப்பிடும் போது எண்பதுகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தன. எனவே மக்கள் சினிமாவைப் பார்ப்பது மட்டுமல்லாமல் ‘கேட்கவும்’ செய்தார்கள். ஆம், சினிமாவின் கதை வசனங்களை ‘ஒலிச்சித்திரமாக’ கேட்டு மகிழ்வது அப்போதைய டிரெண்டாக இருந்தது. அந்த வரிசையில் புகழ்பெற்ற சினிமா என்றால் அது ‘திருவிளையாடல்’தான். அது கோயில் விழாவாக இருந்தாலும் சரி, காதுகுத்து நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதன் எல்.பி.ரிகார்டை ஒலிக்க விடுவார்கள். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ‘டொடடாய்ங்’ என்கிற சத்தம் ஒலிப்பது கேட்கவே குதூகலமாக இருக்கும்.
திருவிளையாடலுக்கு அடுத்தபடியாக ஒலித்தது ‘பராசக்தி’ திரைப்படத்தின் வசனங்கள். குறிப்பாக நீதிமன்றத்தில் சிவாஜி ஆவேசமாக வாதாடும் காட்சியை நின்று கேட்டு விட்டுத்தான் மக்கள் நகர்வார்கள். (ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.) ஒலிச்சித்திரம் என்னும் கலாசாரம் இன்றைக்கு ஏறத்தாழ இல்லாவிட்டாலும் 80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் சற்று உயிர் வாழ்ந்தது. இந்த வரிசையில் ஹிட் என்பது ‘விதி’ திரைப்படத்தின் கதை – வசனம். இதிலும் கோர்ட் சீன்தான் புகழ்பெற்றது. உணர்ச்சிகரமாக நிகழும் வாதப் – பிரதிவாதங்களை ஒலிச்சித்திரமாகக் கேட்டு மகிழ்ந்தவர்கள் அதிகம்.

விதி – தெலுங்குப் படத்தின் ரீமேக்
1984-ல் வெளியான ‘விதி’, ஒரு வெற்றிகரமான தெலுங்குப் படத்தின் ரீமேக். ‘நியாயம் காவாலி’ (நியாயம் வேண்டும்) என்கிற தெலுங்குப் படம், டி.ராமேஸ்வரி எழுதிய ‘கொத்த மலுப்பு’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் வெற்றி காரணமாக, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிறகு ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ‘விதி’.
டப்பிங் படங்களின் பிரதான பாத்திரங்களின் பெயர்கள், உதட்டசைவுகளுக்கு எளிதாகப் பொருந்தும்படி எப்போதும் சுருக்கமாகவே இருக்கும். எனவே இந்தப் படத்தின் ஹீரோவின் பெயர் ராஜா. ஹீரோயின் பெயர் ராதா. (தயாரிப்பாளர் கே.பாலாஜியின் பெரும்பாலான படங்களில் இப்படித்தான்). ராஜா பணக்கார வீட்டுப் பையன். ராதா ஒரு கோர்ட் குமாஸ்தாவின் மகள். ராதாவை முதன்முறையாகச் சந்திக்கும் போதே காதலில் விழுகிறான் ராஜா. (ஹீரோக்களுக்கு இதுவொரு கெட்ட பழக்கம்). துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். ஆனால் ராதா அவனைத் தொடர்ந்து புறக்கணிக்கிறாள்.
‘நீ இல்லையென்றால் செத்து விடுவேன்’ என்று குடித்து சாலையில் புரண்டு எமோஷனல் பிளாக்மெயில் விடுக்கிறான் ராஜா. ‘ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்’ மாதிரி இம்மாதிரியான கொனஷ்டைகளுக்கு எளிதில் கவிழ்ந்து விடுவது நாயகிகளின் வழக்கம். (ஏனென்றால் அவர்கள் அவ்வாறே அபத்தமாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்). அனுதாபத்தில் விழும் நாயகி பிறகு காதலிலும் விழுகிறாள். ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி தன் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான் ராஜா. கர்ப்பமடையும் ராதா, திருமணத்துக்காக வலியுறுத்தும் போது ‘இதற்கு என்ன சாட்சி?’ என்று எகத்தாளமாகப் பேசுகிறான் ராஜா.
வெகுண்டெழும் ராதா, தன்னைப் போல் வேறு எந்தப் பெண்ணும் இப்படிப் பாழாகக்கூடாது என்னும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறாள். இதற்காக ‘சகுந்தலா தேவி’ என்கிற, பெண்ணுரிமைக்காகப் பாடுபடுகிற வழக்கறிஞரின் உதவியைக் கோருகிறாள். ராஜாவின் தந்தையும் ஒரு பிரபலமான வக்கீல். எனவே இந்தப் பரபரப்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தனது இந்தத் தார்மீகப் போராட்டத்தில் ராதா வெற்றியடைந்தாளா... அவளுக்கு நீதி கிடைத்ததா?
‘ரோட் சைட் ரோமியோ’ ராஜாவாக மோகன்
ராஜாவாக மோகன். ராதாவாக பூர்ணிமா. ஒரு நாயகனும் நாயகியும் நடித்து தொடர்ச்சியாக ஹிட் அடித்தால், அந்த ஜோடியை ராசியாகக் கருதுவது சினிமாவின் ஒரு மரபு. அந்த வகையில் இந்த ஜோடி பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறது. ஒரு ‘நைஸ் ஜென்டில்மேன்’ பாத்திரத்தில் நடித்து ஏராளமான இளம்பெண் ரசிகர்களைப் பெற்ற மோகனுக்கு இதில் சற்று எதிர்மறையான பாத்திரம். பூர்ணிமாவைத் துரத்தித் துரத்திக் காதலித்து, தன் நோக்கம் நிறைவேறியவுடன் பணக்காரத் திமிரில் எகத்தாளமாகப் பேசி ஏமாற்றுவார். பார்வையாளர்களின் எரிச்சலைச் சம்பாதிப்பார்.
அழகு என்பதைத் தாண்டி பூர்ணிமா ஒரு நல்ல நடிகை என்பதற்கான தடயங்கள் இந்தப் படத்தின் சில காட்சிகளிலிருந்தன. தான் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி மனம் புழுங்குவது, குடும்பத்தின் எதிர்ப்பால் மனஉளைச்சல் அடைவது, தன் வாழ்க்கையைக் குலைத்தவனை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதற்காக மனஉறுதியுடன் இருப்பது என தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார்.
நீதியை எளிதில் அடைய முடியாத எளியவர்களுக்காக, குறிப்பாகப் பெண்களுக்காகப் போராடும் வழக்கறிஞராக சகுந்தலா தேவி. இது போன்ற கம்பீரமான, கண்ணியமான பாத்திரம் என்றால் சுஜாதாவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழைத் துல்லியமாக உச்சரிப்பதற்கு அதிக முயற்சி எடுக்கும் நடிகைகளில் ஒருவர். “என்ன சார்... இப்படியொரு நல்ல தமிழில் எழுதியிருக்கீங்க. நான் எப்படிப் பேசி நடிப்பேன்... என்னால முடியுமான்னு தெரியல” என்று வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் சுஜாதா புலம்ப, ‘உன்னால் முடியும்’ தைரியமூட்டி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் முதுகெலும்பே ‘சகுந்தலா தேவி’ பாத்திரம்தான். இதற்குத் தகுந்த நியாயம் செய்திருக்கிறார் சுஜாதா.

பூர்ணிமாவின் தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன். (ரைமிங்கா இருக்கே?!) ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் தலைவர் பாத்திரத்தை, அதன் பிரத்யேக அச்சத்தைச் சிறப்பாகப் பிரதிபலித்திருப்பார். “பொண்ணுங்களுக்கு ஃபீஸ் வாங்காத வக்கீலா இருப்பவங்களே அவங்க அம்மாக்கள்தான்... என்ன தப்பு செஞ்சாலும் சப்போர்ட்டுக்கு வந்துடுவாங்க" என்று வீட்டில் வெடிப்பார் பூர்ணம். தன் மகளைப் பற்றிப் பிரபல வக்கீல் மலினமாகப் பேசும் போது அவமானத்தில் கூனிக்குறுகி நிற்பார். மோகனின் தந்தையாகவும் பிரபல வக்கீல் ‘டைகர்’ தயாநிதியாகவும் நடித்தவர் ஜெய்சங்கர். ஒரு செல்வந்தனின் திமிரையும் தனது வாதத்திறமையின் மீதுள்ள மிகையான பெருமிதத்தையும் சரியான உடல்மொழியில் வெளிப்படுத்தியிருந்தார்.
சர்ப்ரைஸ் விசிட் தரும் பாக்யராஜ்
ஓர் எதிர்பாராத தருணத்தில் இயக்குநர் பாக்யராஜ் வரும் காட்சியொன்று ரகளையாக இருக்கிறது. ‘ராதா கேஸ் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்று பத்திரிகையாளர் கேட்கும் போது தனது ஸ்டைலில் பாக்யராஜ் பதில் சொல்வது சிறப்பு. அதை விடவும் அப்போது நடக்கும் படப்பிடிப்பில் வரும் துண்டுக்காட்சி அட்டகாசமானது. ‘ஏதாவது நாலு பத்தினி பேரைச் சொல்லுங்க’ என்று மரத்தடியில் பஞ்சாயத்து செய்பவர்களை பாக்யராஜ் கேட்பதும், பிறகு “ஏன் உங்க அம்மா, மனைவி பெயரைச் சொல்லலை?" என்று மடக்குவதும் புத்திசாலித்தனமான நகைச்சுவையைக் கொண்டது. இந்தக் காட்சியில் பாக்யராஜின் உதவி இயக்குநர்களாக லிவிங்ஸ்டன், இளமுருகு போன்றவர்களைக் காண முடிந்தது.

‘டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்’ என்கிற விஷயமே இப்போதைய தலைமுறைக்கு அதிகம் தெரியாது. ஆன்ட்ராய்ட் போனில் ஒரு விரலால் தட்டச்சி பழகியவர்கள். ஆனால் முறையான தட்டச்சுப் பயிற்சியைத் தருவதற்கு அப்போது நிறையப் பயிற்சி நிலையங்கள் இருந்தன. வேலைக்கு விண்ணப்பிக்க டைப்பிங் தெரிவது ஆதாரமான தேவையாக இருந்தது. பதின்ம வயது இளைஞர்களுக்குத் தட்டச்சுப் பயிற்சியை விடவும் காதலுக்குத் தோதான இடமாக இந்த நிலையங்கள் இருந்தன. இந்தப் படத்தின் ஹீரோ ராஜாவும் இதைப் பயன்படுத்தி நமக்கே எரிச்சல் வரும் அளவுக்கு ராதாவுக்குக் காதல் இம்சை தருகிறான். பயிற்சி நிலைய உரிமையாளராக வரும் மனோரமா, தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார். குறிப்பாக கோர்ட் சீனில் இவர் சாட்சி சொல்லும் காட்சியில் திரையரங்கம் நிச்சயம் அதிர்ந்திருக்கும்.
இந்தத் திரைப்படத்தின் கோர்ட் சீன்தான் இதன் முக்கியமான பலம். அதுவரை சுமாராகப் பயணிக்கும் காட்சிகள், நீதிமன்றத்தில் ஏற ஆரம்பித்ததுமே பரபரப்பாகி விடுகிறது. ஜெய்சங்கரும் சுஜாதாவும் மாறி மாறி தங்கள் தரப்பு வாதங்களைச் சுடச்சுட எடுத்து வைக்கும் காட்சிகளில் அனல் பறக்கிறது. நீதிமன்றத்தில் தனது பிளாஷ்பேக்கை உணர்ச்சிகரமாக சுஜாதா சொல்வது ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் இந்த நீதிமன்றக் காட்சிகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறதா என்று கேட்கக்கூடாது. ‘சினிமாட்டிக்’ அல்லது அந்தக் கால சினிமாவின் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் கே.விஜயன். நீண்ட அனுபவம் உள்ளவர். சிவாஜியின் படங்களை நிறைய இயக்கியிருக்கிறார். ரீமேக் படம்தான் என்றாலும் அந்த வாசனை வராத அளவுக்குத் திறமையாக உழைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே கதையும் ஆரம்பித்து விடுகிறது.
வசனகர்த்தா ஆரூர்தாஸின் திறமை பளிச்சிட்ட படம்
மோகனும் அவரது மனைவி சத்யகலாவும் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு மாணவன் நிறையப் பரிசுகளை வாங்கிக் குவிப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு அந்தச் சிறுவனைக் கண்டு ஆசையாக இருக்கிறது. “யாருப்பா உங்க அப்பா?” என்று சத்யகலா விசாரிக்க, அந்தச் சிறுவனோ அவரது கணவன் மோகனை நோக்கிச் சட்டென்று கைகாட்டுகிறான்... சத்யகலாவுக்கு மட்டுமல்ல, மோகனுக்கும் அதிர்ச்சி.
அந்தப் பள்ளியின் தாளாளராக இருப்பவர் பூர்ணிமா. “அவங்கதான் என் அம்மா” என்கிறான் சிறுவன். குழப்பமடையும் சத்யகலா, பூர்ணிமாவிடம் சென்று இதைப் பற்றி விசாரிக்க ‘பிளாஷ்பேக்’கின் மூலம் இந்தக் கதை விரிகிறது. ‘தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவனையே தேடிச் சென்று திருமணம் செய்து கொள்வதில்தான் ஒரு பெண்ணின் ஒழுக்கம் இருக்கிறது’ என்கிற விபரீதமான செய்தி நீண்ட காலமாகத் தமிழ் சினிமாவில் பதிவாகிக் கொண்டிருந்தது. இந்த மரபை உடைத்து ‘தன்னைப் பாழ் படுத்தியவனைச் சட்டத்தின் முன்னால் துணிச்சலாக நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், தனியாகவும் வாழப் பழகிக் கொள்கிற ‘ராதா’வின் பாத்திரம் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சிறப்பான வசனகர்த்தாக்களுள் ஒருவர் ஆரூர்தாஸ். நீண்ட காலம் துறையில் பணியாற்றிய அனுபவசாலி. ‘பாசமலர்’ உள்ளிட்டுப் பல வெற்றித் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும தனித்தனியான அணிகள் இருந்த சமயத்தில் இருவருக்குமே எழுதி அவர்களின் அன்பைச் சம்பாதித்தவர். கால மாற்றத்தால் ஒதுங்கியிருந்த ஆரூர்தாஸை, மறுபடியும் எழுத அழைத்து வந்தவர் தயாரிப்பாளர் கே.பாலாஜி. இதன் மூலம் ஆரூர்தாஸிற்கு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு ஆரூர்தாஸின் உணர்ச்சிகரமான வசனங்களும் ஒரு முக்கிய காரணம். இந்திப்பட வாசனை அடித்தாலும் சங்கர் - கணேஷின் பாடல்களும், பின்னணி இசையும் உறுதுணையாக நின்றன.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்கி, ஆண்களைக் காப்பாற்றும் அநீதி இன்றும் கூட தொடரும் நிலையில், தன்னை சீரழித்த அயோக்கியனைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி துணிச்சலாகத் தண்டனை வாங்கித் தந்த பெண்ணின் கதை இது. ‘விதியே’ என்று சோர்ந்து அமர்ந்து விடாமல் மதியால் வென்ற மங்கையின் கதையும் கூட. இன்றும் கூட பார்ப்பதற்குச் சுவாரஸ்யமான படம் ‘விதி’.