Published:Updated:

விடுதலை - பாகம் 1 - சினிமா விமர்சனம்

சூரி
பிரீமியம் ஸ்டோரி
News
சூரி

அடர்ந்து விரியும் வனத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது வேல்ராஜின் கேமரா. இளையராஜாவின் இசையில் ‘வழிநெடுக', ‘ஒன்னோட நடந்தா' பாடல்கள் இதம்.

இயற்கை வளங்களைச் சுரண்டுவதை எதிர்த்து ஆயுதம் ஏந்தும் போராளிகள் இயக்கம், அவர்களை ஒழிப்பதற்காக முகாம் அமைத்து மக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கும் காவல்துறை, அதில் மனச்சாட்சியுள்ள ஒரு காவல்துறைக் கடைநிலை ஊழியர் - எல்லாவற்றையும் இணைத்தால் அதுதான் ‘விடுதலை - பாகம் 1.’

அருமபுரியில் பன்னாட்டு நிறுவனத்தின் சுரங்கத்தைக் கொண்டுவர முனைகிறது தமிழ்நாடு அரசு. ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு மக்கள் படை என்னும் ஆயுதக்குழு அதை எதிர்த்து ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்துகிறது. அதன் தலைவர் பெருமாள் வாத்தியாரையும் (விஜய்சேதுபதி) மற்றவர்களையும் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காவல்துறை முகாமில் பணிக்குச் சேர்கிறார் குமரேசன் (சூரி). அவருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த தமிழரசி (பவானி ஸ்ரீ)க்கும் காதல் மலர்கிறது. பெருமாள் வாத்தியார் பிடிபட்டாரா இல்லையா என்பதைச் சொல்கிறது கதை.

செய்யாத தவற்றுக்கு மேலதிகாரியிடம் மன்னிப்பு கேட்க மறுத்து சுயமரியாதையை உறுதிசெய்வது, அதற்காகத் தண்டனைகள் அனுபவித்து வருந்துவது, காதலின் சந்தோஷத் தருணங்களில் திளைப்பது, தன் காதலி உட்பட பெண்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளை நிறுத்தத் துடிப்பது என்று குமரேசனாகவே கூடு பாய்ந்திருக்கும் சூரிக்கு, இது வாழ்நாள் படம். ஒரே ஒரு மன்னிப்பை எதிர்பார்த்து குமரேசனை வாட்டி வதைக்கும் ஈகோ உள்ள காவல்துறை அதிகாரியை அச்சு அசல் பிரதிபலித்திருக்கிறார் சேத்தன். தன் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லிக் குமுறும் இடத்தில் நம்மை உலுக்கிவிடுகிறார் பவானிஸ்ரீ. முதல் பாகத்தில் மிகச்சில காட்சிகள் வந்தாலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார் விஜய்சேதுபதி. மூணார் ரமேஷ், தமிழ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் போன்றவர்கள் தங்களுக்கான பாத்திரத்தில் பொருந்துகிறார்கள்.

அடர்ந்து விரியும் வனத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது வேல்ராஜின் கேமரா. இளையராஜாவின் இசையில் ‘வழிநெடுக', ‘ஒன்னோட நடந்தா' பாடல்கள் இதம். பெரும்பாலான இடங்களில் கதையுடன் சேர்ந்து பயணிக்கும் பின்னணியிசை சில இடங்களில் ஏமாற்றத்தை அளிக்கிறது.

விடுதலை - பாகம் 1 - சினிமா விமர்சனம்
விடுதலை - பாகம் 1 - சினிமா விமர்சனம்

காவல்துறையின் அன்றாட நடவடிக்கைகள், படிநிலைப்பாகுபாடுகள், அவர்களின் தந்திரங்கள், விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் சித்திரவதைகள் ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்தவகையில் வெற்றிமாறன் கவனம் ஈர்க்கிறார். அதேநேரம் தமிழ்நாடு மக்கள் படையின் சித்தாந்தம் என்ன, கோரிக்கைகள் என்ன, அந்த மக்கள் யார், மக்கள் போராளிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன, போராளிகளை ஆதரிப்பதால் சித்திரவதைப் படுத்தப்படுகிறார்களா, சித்திரவதைக்கு உள்ளாவதால் போராளிகளை ஆதரிக்கிறார்களா என்று பல கேள்விகளுக்கு முதல் பாகம் பதில் சொல்லவில்லை. தலா இரண்டு நல்ல போலீஸ், இரண்டு கெட்ட போலீஸ் எனக் கட்டமைக்கப்படும் காட்சிகள், ஆங்காங்கே வசன உச்சரிப்புகளுக்குப் பொருந்தாத உதட்டசைவுகள் ஆகியவை பலவீனம்.

எந்த முடிவுக்கும் வர முடியாமல் பாதியிலேயே நிற்பதால் முழு விடுதலை கிட்டவில்லை.