சினிமா
Published:Updated:

யார் இந்த வம்சி?

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

ஒவியம்: கோபிஓவியன்; படம்: கிரண்சா

விஜய்... இந்த ஒற்றைப் பெயருக்கு அத்தனை வலிமை இருக்கிறது. அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் விஜய் ஒரு படத்தைப் பாதி முடிக்கும்போதே இவரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறும். நான்கைந்து இயக்குநர்களின் பெயர்களும் சோஷியல் மீடியாக்களில் சுழலும். அந்த லிஸ்டில் ஒரு இயக்குநர் ஃபைனல் சுற்றுக்கு முன்னேறுவார். அப்படித்தான், ‘மாஸ்டர்’ வந்தபோதும், இப்போது கையில் இருக்கும் ‘விஜய் 65’ படத்திற்கும் நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா, பாண்டிராஜ், எஸ்.ஜே.சூர்யா எனப் பல இயக்குநர்களின் பெயர்கள் பேசப்பட்டு, இறுதியாக நெல்சன் கமிட்டானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லாக்டெளனால் தாமதமாகிறது. ஆனால், ‘விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்’ என்ற கேள்வி அதற்குள் வந்துவிட்டது.

வம்சி
வம்சி

இந்த லிஸ்டிலும் சில இயக்குநர்கள் பெயர்கள் இருக்க, டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபலி பெயர்தான் மேலோங்கி நிற்கிறது. விஜய்க்கும் அட்லிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்க, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து இந்தக் கூட்டணியில் படங்கள் உருவாகின. அதே போல, ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜின் வொர்க் பிடித்துப்போக, மீண்டும் ஒரு புதிய படத்தில் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. அந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வந்தன. ஆனால், லோகேஷிற்கு கமலுடன் ‘விக்ரம்’ இருப்பதால் விஜய்யுடன் இணையும் படம் தாமதமாகும். அதற்குள் வேறொரு இயக்குநருடன் படம் பண்ணிவிடலாம் எனக் கதைகள் கேட்டபோதுதான், டோலிவுட் இயக்குநர் வம்சியின் என்ட்ரி.

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் வம்சியும் நெருக்கம். இவர்கள் கூட்டணியில் 2019-ல் வெளியான ‘மஹரிஷி’ இரண்டு தேசிய விருதுகளைத் தட்டிச்சென்றது. மகேஷ் பாபுவும் விஜய்யும் நண்பர்கள். ‘கில்லி’, ‘போக்கிரி’ ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள் மகேஷ்பாபு நடித்து அதனை விஜய் தமிழில் ரீமேக் செய்தவை. சென்ற வருடம், கிரீன் இந்தியா சேலஞ்சில் மகேஷ்பாபு மரக்கன்று நட்டு வைத்து ட்விட்டரில் விஜய்யை டேக் செய்ய, உடனே அதனை ஏற்று விஜய்யும் மரக்கன்றை நட்டு வைத்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கின.

யார் இந்த வம்சி?

எங்கு பார்த்தாலும் இயக்குநர் வம்சி பேச்சாக இருக்கிறதே! யார் இந்த வம்சி?

சாப்ட்வேர் துறையில் பணியாற்றிய இளைஞன், சினிமாமீது அதீத காதல் இருந்ததால், உதவி இயக்குநராக ஆசைப்பட்டார். மார்தாண்ட் கே.வெங்கடேஷ் எனும் பெயரை பல தெலுங்குப் பட டைட்டில்களில் பார்க்க முடியும். புகழ்பெற்ற எடிட்டர். அவருடைய தம்பி ஷங்கர், வம்சியின் நெருங்கிய நண்பர். இயக்குநர் ஜெயந்த் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு வெங்கடேஷ்தான் எடிட்டர். அந்த வகையில், இயக்குநர் ஜெயந்திடம் வாய்ப்பு கேட்டு ‘ஈஸ்வர்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்துள்ளார். இதுதான் நடிகர் பிரபாஸ் நடித்த முதல் படம். இதில் பிரபாஸிற்கும் உதவி இயக்குநராக இருந்த வம்சிக்கும் நல்ல நட்பு உருவானது. இந்தப் படம் முடித்த பிறகு, ‘வர்ஷம்’, லாரன்ஸ் இயக்குநராக அறிமுகமான ‘மாஸ்’, பாலகிருஷ்ணாவுடைய ‘பத்ரா’ ஆகிய படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தை முடித்தவுடன், தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் கதை சொல்லி, தன்னுடைய நண்பர் பிரபாஸை வைத்து ‘முன்னா’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக டோலிவுட்டில் அறிமுகமானார், வம்சி. பிரபாஸ், இலியானா ஆகியோர் நடித்த இந்தப் படம் ஆவரேஜ்தான். இரண்டு வருடங்கள் கழித்து ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரை வைத்து ‘பிருந்தாவனம்’ எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார்.

அதன்பின் இவர் பெயர் நன்கு பரிச்சயமானது. அடுத்ததாக, ‘யவடு’. ராம் சரண், அல்லு அர்ஜுன் என இரண்டு ஹீரோக்களை ஒரே படத்தில் நடிக்க வைத்தார். ராம் சரண் இறந்துபோக, அவருடைய முகத்தை அல்லு அர்ஜுனுக்கு வைத்துவிடுவார்கள். ராம்சரண் முகம் இருப்பதால் தன்னை ஒரு கூட்டம் கொல்லத் துடிக்கிறது என்பதை அறிந்த அல்லு அர்ஜுன், ராம் சரண் யார் என தேடிப் போக, அதில் உடையும் சஸ்பென்ஸ்கள்தான் படம். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படமும் சூப்பர் ஹிட்! பிறகு, ‘ஊப்பிரி’. தமிழில் ‘தோழா’. நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஹிட். இவரது கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம், 2019-ல் வெளியான ‘மஹரிஷி’. மகேஷ்பாபு ஹீரோ, பூஜா ஹெக்டே நாயகி. பக்கா கமர்ஷியல் எண்டர்டெயினராக வெளியான இப்படம் மகேஷ்பாபுவுக்கு 25வது படமும்கூட. நல்ல ரெஸ்பான்ஸ்!

யார் இந்த வம்சி?

தற்போது, விஜய்யின் 66வது படத்தை வம்சி இயக்குகிறார், அதை டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது வம்சியின் 6வது படம். ‘ஊப்பிரி’ தவிர, வம்சி இயக்கிய எல்லாப் படங்களையும் இவர்தான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் உறுதியானால், தமிழ் - தெலுங்கு பைலிங்குவலாக வெளியாகும். விஜய் படங்கள் ஆந்திராவில், தெலங்கானாவில் வெளியாகுமே தவிர, இதுவரை அவர் பைலிங்குவல் படம் நடித்ததில்லை. தன்னுடைய மார்கெட்டை இன்னும் விரிவுபடுத்த இந்த ரூட்டைக் கையில் எடுத்துள்ளார், விஜய்.

லோகேஷ், நெல்சன் போன்ற இளம் இயக்குநர்களோடு பயணிக்கத் தொடங்கிய விஜய், தற்போது வம்சி போன்ற இயக்குநர்களுடன் சேரும்போது படத்திற்கு வேறொரு ஃப்ளேவர் கிடைக்கும். விஜய்யின் படம் 60% முடியும் தறுவாயில் இருக்கும்போதுதான், அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அப்படி ‘விஜய் 66’ குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இயக்குநர் வம்சி - நடிகர் விஜய் காம்பினேஷனில் படம் உருவானால், அது கம்ப்ளீட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.