சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“வெற்றிதான் இங்க எல்லாம்னு நம்மை நம்ப வெச்சுட்டாங்க!” - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் சேதுபதி

பிறந்த உயிர்கள் எல்லாமே இந்த உலகத்துல நிலைச்சு நின்னா, இந்த உலகம் தாங்காது. இந்தப் பயணம் முடிந்து, வேற பயணத்துக்குப் போவதுதான் மரணம்னு நினைக்கிறேன்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்புக்கான ரசிகர் கூட்டம் ஒருபுறமென்றால், அதே அளவு அவரின் பொருள் பொதிந்த பேச்சுக்கும் உண்டு. தன் புகழையும் பெருமையையும் பேச்சில் வெளிக்காட்டாத யதார்த்தமான, எளிமையான சொல்லாடல் அவருடையது. நடிப்புக் கலையைக் கைவசப்படுத்தியவர், பேச்சுக்கலையையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். அவரின் அறிவின் தெளிவில் வந்து விழும் வார்த்தைகளும் வாக்கியங்களும் சோஷியல் மீடியாவில் எப்போதும் வைரல்தான். தீபாவளி மலருக்காக, அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும்...

``ஒருவருக்குக் காதல் எத்தனை முறை வரலாம்?''

``இவ்வளவு முறைதான் நிகழணும்னு எந்த கண்டிஷனும் இல்லை. போற போக்குல அந்தப் பூக்கள் பூத்துட்டுதான் இருக்கும். அவங்கவங்க நாகரிகம் பொறுத்து அந்தக் காதலை வெளிப்படுத்துவதா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கலாம். சில சமயம் காதலையும் காமத்தையும் பக்கத்துல வெச்சுப் பார்ப்பதால் இந்தக் கேள்வி வருதான்னு தெரியலை. காதல் ஒரு மனுஷனுக்கு மனுஷன் மேல் மட்டும்தான் இருக்கணும்னு அவசியமில்லை. சிலருக்குப் பொருள்கள் மேல இருக்கலாம். பலருக்குச் செல்லப்பிராணி, இசை மேல இருக்கலாம். வேறு சிலருக்குப் புத்தகம் மேல இருக்கலாம். ஆனா, வாழறதுக்குக் காதல் அவசியம்.''

“வெற்றிதான் இங்க எல்லாம்னு நம்மை நம்ப வெச்சுட்டாங்க!” - விஜய் சேதுபதி

``எதுவரை புகழ் நிலைத்திருக்கும்?''

``புகழை நாம தக்க வெச்சுக்கணும்னு நினைக்காத வரைக்கும் புகழ் நிலைத்திருக்கும்.''

``முயற்சியும் வீழ்ச்சியும்?''

``பசித்தால் அவனவன் சாப்பிடப் போறான். முயற்சிங்கறது திணிக்கப்பட்டுச் செய்யப்படறதா இருக்கக்கூடாது. இதைச் சாதிக்கணும், அதைச் சாதிக்கணும்னு எந்த நிர்பந்தமும் இருக்கக்கூடாது. எல்லாரும் ஏதாவது சாதிச்சே ஆகணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. நாம ஒரு விஷயத்தை அடைய ஆசைப்படுறோம். அதுக்கு நிச்சயம் முயற்சி பண்ணணும். அதுக்கு முயற்சி பண்ணாம இருக்கிறது தப்பு. அவரவர்களுக்கு விருப்பமானதை அவரவர்கள் தேடிக்குவாங்க. நம்ம மண்டையை அமைதியா விட்டாலே, அதுவே எதையாவது தேடும். அதை நூல் பிடிச்சு நாம தேடிப்போனாலே போதும். தேவையில்லாம எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுக் கொட்டிக்க வேணாம். மன்மதக் கலை மட்டுமல்ல, மானுடக்கலையும் சொல்லித் தெரிவதில்லை!''

``மதங்களும் பிரிவினைகளும்!''

``மனுஷங்க எல்லாம் ஒண்ணாக்கூடி ஒத்துமையா மகிழ்ச்சியா வாழ்றதுக்காக மதத்தைத் தோற்றுவிச்சிருக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா அதை வெச்சே மனுஷங்களைப் பிரிச்சு ஆள்வாகன்னு தெரிஞ்சிருந்தா, மதங்களே உருவாகாம இருந்திருக்கும்னு தோணும். இப்ப உலகம் முழுவதும் பிரிவினைவாதிகள்கிட்ட சிக்கிட்டு மனுஷன் தவிக்கிறான். மனுஷன அறிவு சார்ந்து எந்தக் கேள்வியும் கேட்கவிடாமத் தடுக்குது மதம்.''

"சாதி...''

``சாதி ஒழிப்பு சாத்தியமான்னு கேட்டால் தெரியலைங்க. இதன் வலையில் சிக்காமலிருக்க ஒரே வழி... பகுத்தறிவு மட்டும்தான். நமக்குக் கஷ்டம் கொடுக்கறவன் நம்ம சாதியா இருந்தால் இனிக்காது. அந்தக் கஷ்டத்திலிருந்து நம்மைக் காப்பாத்தறவன் வேற சாதிக்காரனா இருந்தால் அது கசக்காது. ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாத்த கோடிக்கணக்குல பணம் தேவைப்பட்டால், எந்தச் சாதின்னு பார்த்தா உதவி செய்யறாங்க... அந்த உயிரைக் காப்பாத்தணும்னு உதவி பண்ணுறாங்க. சாதியைப் பார்த்து இல்லையே!''

``குடும்ப உறவுகளும் பிரச்னைகளும்!''

``நாம பார்க்குற வேலைகள்தான் வேற வேற. ஆனா, எல்லோருக்கும் கூடு ஒண்ணுதான். அது குடும்பம்ங்கற கூடு. குடும்பத்துல ஒரு பிரச்னை போனா இன்னொரு பிரச்னை வரத்தான் செய்யும். ஆனா, அந்த உறவுகளுக்கு மத்தியிலிருக்கும் அன்பு எப்போதுமே மாறாது. மாறவும் கூடாது! நமக்கு திடீர்னு பணத்தேவை வந்தால், ஏற்கெனவே உழைச்சு சம்பாதிச்ச காசு, அந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவி பண்ணும். அதுமாதிரிதான் குடும்பச் சண்டைகள் வந்தால்... இந்த அன்பு, கேடயம் மாதிரி இருந்து நாம பிரியாமப் பார்த்துக்கும்.''

``நண்பனும் பகைவனும்!''

``உண்மையான நண்பனை, பகைவனைக் கண்டுபிடிக்கத் தனி மெஷின் எல்லாம் கிடையாது. நண்பனையோ, பகைவனையோ திட்டமிட்டு உருவாக்க முடியாது. தானா காலப்போக்குல கிடைக்கிறதுதான் எல்லாம். நட்பு ஆத்மார்த்தமா நிகழ்வது. இன்னைக்கு நண்பனா இருக்கறவன் நாளைக்கு எதிரியா மாறலாம். எதிரியா இருக்கறவன் நண்பனாக மாறலாம். இது லைஃப்போட சர்ப்ரைஸ்.''

``குழந்தைகளும் கற்பனையும்!''

``குழந்தைகள் பேரறிவாளிகள். குழந்தைகளை எப்படி ஸ்கூல்ங்கிற காம்பவுண்ட்டுல அடைச்சு வைக்கிறோமோ, அதேபோல அவங்களோட அறிவையும் பாடப் புத்தகம்ங்கிற காம்பவுண்ட்டுல அடக்கிடுறோம். இதையெல்லாம் தாண்டினதுதான் அவங்களோட அறிவு. அது எல்லையற்றது. புதுசா உலகத்துக்கு வரவங்களுக்கு, பழசைச் சொல்லிக்கொடுக்கறது எப்படி அப்டேட் செய்யறதாகும்? அதுக்காக சொல்லிக்கொடுக்க வேண்டாம்னு சொல்லலை. புத்தகத்துல இருக்கறதுதான் சரி... அதுதான் அறிவுன்னு சொல்லக்கூடாது. குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்கணும். கேள்வி கேட்குறது தப்புன்னு சொல்லித்தரக்கூடாது. அவங்க கற்பனை என்னும் பறவை சிறகடிச்சுப் பறக்க நாம ஒத்துழைக்கணும்.''

``வெற்றி தோல்வி ஏன் முக்கியம்?''

``இரண்டுமே ஒரு அனுபவம்தான். வெற்றிதான் இங்க எல்லாம்னு நம்மை நம்ப வெச்சுட்டாங்க. வெற்றியோ, தோல்வியோ அதுமேல இருக்கிற பிரஷர் மனுஷனுக்கு அவசியமில்லாதது. நீங்க படிச்சதை, கத்துக்கிட்டதை உங்க வாழ்க்கையில செயல்படுத்தப் பார்ப்பீங்க. அதுக்கு நீங்க மட்டும் போதாது, உங்க கூட ஓடவும் ஆள் வேணும். அவருடன் போட்டி போடும்போது... அவர் திறமையை நீங்க பார்ப்பீங்க. நம்ம திறமை என்னன்னு அவங்க பார்ப்பாங்க. அப்படிப் புரிஞ்சுக்கிட்டு ஓடுறதுதான் மகத்தான அனுபவம். அதில் வெற்றியோ தோல்வியோ எதுவுமே இல்லை. அனுபவமே பிரதானம். சுயம்தான் சிறந்த பாடம்.''

``உங்கள் இலக்கு!''

``அந்த மாதிரியெல்லாம் எதுவுமே இல்லை. அடுத்த ஷாட் நடிக்கும்போது புரிஞ்சுட்டு நடிக்கணும்னு நினைக்கறேன். இந்தக் கேள்வி கேட்கும் நீங்க, இதைப் படிக்கிறவங்க எல்லாரையும் புரிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். இதைப் படிச்சதும் எல்லோரும் என்னைப் பிடிச்சு, `சூப்பரப்பு... சூப்பரப்பு'ன்னு பாராட்டணும்னு நினைச்சேன்னு வைங்க... அப்போதான் என் இலக்கு தவறுன்னு எடுத்துப்பேன். ஒரு காமெடில கவுண்டமணி, `தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு வச்சு பக்கத்துல உட்கார்ந்துக்கோ'ன்னு சொல்லுவாரு. என்னைக் கேட்டால், அந்தக் கல்வெட்டுல பொறிச்சு வச்சுட்டு ஓடிப்போய்டுவேன். என்கிட்ட ஏதாவது பிடிச்சிருந்தாக்கூட அது என்னுடையது இல்லை. அந்தக் காலகட்டத்துல அந்த எனர்ஜி, அந்த எண்ணங்கள்... எல்லாமே என்னுடன் பயணித்த மனிதர்கள் மூலமா எனக்குக் கிடைச்சதுதான். அந்த நேரத்துல அந்த வேலையை அதுக்கு உண்டான நேர்மையுடன் செய்வதுதான் என் இலக்கு.''

“வெற்றிதான் இங்க எல்லாம்னு நம்மை நம்ப வெச்சுட்டாங்க!” - விஜய் சேதுபதி

``அறிவுத் தேடல்!''

``இந்த உலகத்துல முதல் ஒரு செல் உயிரினமா தோன்றி... நமக்குக் கண்ணு, காது, மூக்கு, கை கால்கள் எல்லாம் வர எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும். நம்ம தேவைக்குத் தகுந்த மாதிரிதான் இயற்கை நம்ம மானுட வளர்ச்சியில் ரியாக்ட் பண்ணியிருக்கும். அது எல்லா உயிருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். அப்படிப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தின் இன்ஸ்பிரேஷன் எல்லாப் படைப்பிலும் இருக்கு. நான் ஒரு வேலையைச் செய்யும்போது, அதைப் பற்றிய தேடல் இருக்கும்போது... அந்த அறிவைத் தேடி நானும் போறேன்; அதுவும் என்னைத் தேடி வருது. திடீர்னு நம்ம மூளையில சில ஐடியாக்கள் தோன்ற இதுதான் காரணம்னு தோணும். `எண்ணம்போல் வாழ்க்கை'ன்னு அதைத்தான் சொல்றாங்கன்னு நினைக்கறேன்.''

``எதன்மேல் உங்களுக்கு மயக்கம் அதிகம்?''

``சிந்தனையின் மீது... எண்ண ஓட்டத்தின் மீது! சிலதையெல்லாம் புரிஞ்சுக்கும்போது ஒரு பரவச நிலைக்குப் போறேன். இந்த உலகத்தின் தொடக்கத்தையும், இந்த அண்டத்தையும் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் மயக்கம் கொள்கிறேன். எல்லாமும் நாமதான், நாமதான் எல்லாமே. ஒரு விதையைப் பார்த்து ஆலமரம், `உன்கிட்ட எதுவுமே இல்லை'ன்னு சொல்ல முடியாது. அதேபோல, அந்த விதையும் ஆலமரத்தைப் போல தன்கிட்ட எதுவுமே இல்லைன்னு நம்பவும் கூடாது. நம்மிடம் அபரிமிதமான சக்தியிருக்கு. நாம அதை நம்பணும். அவ்வளவுதான்.''

``மரணத்தைப் பற்றி உங்கள் பார்வை?''

``பிறந்த உயிர்கள் எல்லாமே இந்த உலகத்துல நிலைச்சு நின்னா, இந்த உலகம் தாங்காது. இந்தப் பயணம் முடிந்து, வேற பயணத்துக்குப் போவதுதான் மரணம்னு நினைக்கிறேன். ஆசாபாசங்கள்தான் மரணத்தைப் பார்த்து பயப்பட வைக்குது. இந்தப் பயணம் இனிமையானது. இந்தப் பயணம் முடியும்போதுதான் தெரியும், இந்த உலகத்துல புனிதமான ஆன்மான்னு எதுவுமே இல்லைன்னு. இருக்கும்போது இவன் பெரிய ஆள், அவன் பெரிய ஆள்னு கொண்டாடுறோம். பயணம் முடியும்போதுதான் நாம எல்லோரும் ஒரே ஆள்தான்னு புரிஞ்சுக்கறோம். கடவுளுக்கு நிகரானவர், அல்லது மிகக் கேவலமானவர் என இந்த உலகம் சொல்லும் எல்லோருக்கும் இங்க ஒரே முடிவுதான். அது மரணம். மரணம் இங்குள்ள எல்லா உயிர்களுக்கும் கிடைத்த மாபெரும் வரம்.''

``கடவுள் நேரில் தோன்றினால்?’’

``ஹாய் சார்... ஹவ் ஆர் யூ சார்... நைஸ் டு மீட் யூ சார்!''