
1992ல் அரசியலுக்கு வருவீங்களான்னு கேட்டதுக்கு இப்படி பதில் சொல்லிருக்காரே!
"தூங்கி முடித்ததும் அதிகாலையில் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?"
"சென்டிமெண்ட் பார்க்கும் வழக்கம் இல்லை. படுக்கையை விட்டு எழுந்ததும் அன்றைக்கு நான் போக வேண்டிய ஷூட்டிங் பற்றிய நினைப்புதான் முதலில் வரும்."
"லேட்டஸ்டாக சந்தோஷத்தைக் கொடுத்த நிகழ்ச்சி..?"
"ஏற்கெனவே போயிருந்தாலும் முதன்முதலாக அண்மையில் என் மனைவியுடன் சிங்கப்பூருக்குச் சென்று வந்தது."
"சினிமாவைத் தவிர வேறு பொழுதுபோக்கான விஷயம்...?"
" கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் அரட்டையடிப்பது உண்டு. புத்தகங்களும் படிப்பேன்..."
"எந்த மாதிரி புத்தகங்கள்...?"
“வார இதழ்கள் முதற்கொண்டு எல்லாமும் படிப்பேன், படிப்பதற்காக வாங்கிய நிறைய புத்தகங்களைப் படிக்க நேரமில்லாமல் அடுக்கி வைத்திருக்கிறேன்"

"பிடித்த நடிகர்...?"
"எம்.ஜி.ஆர்."
"பிடித்த நடிகை...?"
"சாவித்திரி"
"பிடித்த டைரக்டர் யார்.. யார் டைரக்ஷனில் மீண்டும் நடிக்க விரும்புகிறீர்கள்?"
"எல்லா டைரக்டர்களையும் பிடிக்கும். இன்னார் டைரக்ஷனில்தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று தனிப் பட்ட விருப்பம் எதுவுமில்லை."
"உங்கள் பையனின் சுவையான சுட்டித்தனம் ஏதாவது...?"
"வரும் டிசம்பரில்தான் என் மகன் பிரபாகரனுக்கு இரண்டு வயது பூர்த்தியாகிறது. இந்த வயதில் அவன் என்னைப் போலவே உடற்பயிற்சி செய்வது, சண்டை போட்டுக் காட்டுவது என்று செய்கிறான். வீட்டில் எல்லோரும் அதை ரசித்துப் பார்ப்போம்."
" 'மே டே' என்றொரு ஆங்கிலப் படத்தில் நீங்கள் நடிக்கப் போவதாகப் பரபரப்பான விளம்பரங்கள் வந்தன. அந்தப் பட வேலைகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது?"
"டைரக்டர் ஆர்.கே. செல்வமணி 'தாயகம்' என்னும் படத்தை எடுத்து முடித்ததும். 'மே டே' பட வேலைகள் துவங்கும்."
"நடிக்க வராதிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?"
"நடிக்க வராதிருந்தால் மதுரையில் உள்ள எங்கள் ரைஸ் மில் பணியிலேயே தொடர்ந்திருப்பேன்."
"கனவு காணும் வழக்கம் உண்டா..?"
"நிறைய கனவுகள் காண்பேன். வெளியில் சொன்னால் எல்லோரும் சிரித்து விடுவார்கள். அதனால், என்ன கனவு என்று கேட்காதீர்கள்."
"மீண்டும் மீண்டும் போக விரும்பும் இடம்..?"
“வடபழனி முருகன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மன திருப்திக்காக நான் அடிக்கடி போகும் இடங்கள் இவை!"
"நடிகர் சரவணன் தோற்றத்தில் உங்களைப் போலவே இருக்கிறார். நடிப் பிலும் உங்களைக் காப்பியடிப்பதாகச் சொல்லப்படுகிறது.. அவரைப் பற்றி..?"
"அவர் நடித்த படம் எதுவும் இது வரை நான் பார்க்கவில்லை. அதனால் கருத்து சொல்ல எதுவுமில்லை."
"தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் விஷயம் ஏதாவது..."
"சினிமாவில் மூன்று தடவை மார்க்கெட் போயிருக்கிறது. மீண்டும் மீண்டும் போராடி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். கிடைக்கவில்லையே என்று ஏங்கும் நிலையைக் கடந்துவிட்டேன்."

"விஜய்காந்த் என்ற பெயர் ரஜினி காந்த் போல வத்ததா? உங்களின் இயற்கை பெயர் என்ன?”
"என்னுடைய இயற்பெயர் விஜய ராஜ். 'இனிக்கும் இளமை' படத்தில் 'விஜய்காந்த்' என்று என்னை அறிமுகம் செய்தார் டைரக்டர் எம்.ஏ. காஜா."
"ரஜினி, கமல், கார்த்திக்... 'தேவர் மகனில்' சிவாஜி என்று முன்னணி ஹீரோக்கள் எல்லோரும் பாட ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் எப்படி?”
"பாடும் அளவுக்கு எனக்குக் குரல் வளமும் இல்லை. பாடும் விருப்பமும் எனக்கு இல்லை."
"உங்களின் ரசிகர் மன்றத்தைப் பலமாக்கி அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?”
“நிச்சயமாக இல்லை."
"ஜெயலலிதா ஆட்சிப் பற்றி...?”
"நோ கமென்ட்"
"உங்களைப் பற்றிய ஒரு விமரிசனம்... ஒற்றை வரியில்..?"
“பழைய விஜயராஜ்தான் இன்றைய விஜய்காந்த்".
- ம.கா. சிவஞானம்