அத்தியாயம் 1
Published:Updated:

“வந்தா வோட்டு போடுவீங்களா?”

விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயகாந்த்

கிராமத்து மக்களுடன் ஒரு நாள்... விஜயகாந்த்...

மிழ்நாட்டுல எனக்குப் பிடிச்ச ஒரே விஷயம் கிராமங்கள்தான் . பக்கா கிராமத்துக்குப் போகணும்னு ஆசை. கூப்பிட்டுப் போறீங்களா? ” என்றார் விஜயகாந்த்.

‘நெறைஞ்ச மனசு' பட ஷூட்டிங் கிளம்பவேண்டியவரை, அப்படியே நாரணாபுரம் அழைத்துப் போகத் தயாரானோம். ஈரோடு மாவட்டக் கிராமம் அது!

விஜயகாந்த்
விஜயகாந்த்

உடுமலைப்பேட்டையிலிருந்து கார் சீறிக் கிளம்பியபோது காலை மணி ஏழு. தழையத்தழையக் கட்டிய வேட்டி - சட்டை காற்றுக்கு அடங்காத தலைமுடி முறுக்கிய மீசை, சிவப்பேறிய விழிகள் என உற்சாகமாக வந்தார் விஜயகாந்த்.

ஒரு மணி நேரப் பயணத்தில் வந்து சேர்ந்தது நாரணாபுரம் . வானம் பார்த்த பூமி!“ அவசரமா கௌம்பிட்டோம்ல. ஒரு டீ குடிப்போமா? ஏய் ... வண்டியை நிறுத்துப்பா" கார் நிற்க, நாரணாபுரத்தில் காலடி வைத்தார்." டேய் ... கேப்டன் வந்திருக்காருடா! ” கையில் நியூஸ் பேப்பருடன் நின்றிருந்த ஒரு லுங்கி, பரவசத்தில் அலறினார். கடைக்காரர் முகத்தில் பிறவிப்பயன் அடைந்த சந்தோஷம்.

" உடுமலைப்பேட்டையில் இருக்கீங்கனு அங்கே ஓடியாந்தோம் . ரெண்டு நாளா உங்களைப் பார்த்துறணும்னுதான் தேடி அலையறோம். கும்பிடப்போன சாமி குறுக்க வந்துச்சும்பாங்களே... அப்பிடி வந்து நிக்கிறீங்க! ” - குஷியில் ஒரு சித்தப்பா சிரிக்க, "அவனைக் கொஞ்சம் அடக்குப்பா... எல்லாரையும் முந்திக்கிட்டு அவனே பேசிட்டிருக்கான்” என்று இன்னொருத்தர் முன்னால் வந்து, “எங்க ஊருக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷமுங்கோ...'' என்று மைக் பிடிக்காத குறையாக உரையாற்ற ஆரம்பித்தார். மக்கள் விட்டால்தானே!

பெருங்கூட்டம் மொய்த்துவிட்டது. ஆசையாகத் தொடுகிறார்கள். கை குலுக்குகிறார்கள். 'கேப்டன் ..... தலைவா ...” எனக் கதறுகிறார்கள். விலகி வெளியே வருவதற்குள் பெரும்பாடாகிப் போனது.

" எவ்வளவு நாளா விவசாயம் இல்லைங்க ? ' ' என விசாரித்தார் விஜயகாந்த் .

"குடிக்கக்கூட தண்ணி இல்லீங்களே. இதுல பயிரு பச்சையை எங்கே பாக்குறது? எல்லாக் கிணறும் காலி தண்ணித் தொட்டி மாதிரி ஆகிப் போச்சு. அரசாங்கமும் தரையைத் தோண்டிப் பாக்கிறாங்க. எவ்வளவு தோண்டியும் தண்ணி வந்தபாடில்லை. அப்படியே வந்தாலும், பத்து நிமிஷமோ, பதினஞ்சு நிமிஷமோ வத்திப்போயிடுது!" என்றார் ஒரு பெரிசு ஆற்றாமையோடு.

“அது சரி , எங்க பாடு கெடக்கட்டும் ..... நீங்க என்ன இந்தப் பக்கம்? எல்லாம் டவுன் பக்கம் படத்தை எடுக்கும் போது , நீங்க இந்தப் பட்டிக் காட்டுப்பக்கம் வந்திருக்கீங்க” என்றதும், விஜயகாந்த் முகத்தில் புதுப் புன்னகை.

விஜயகாந்த்
விஜயகாந்த்

"நிறைய அடிதடி , போலீஸ் படங்கள் பண்ணினாலும் , சின்னக்கவுண்டர் ' , ' வானத்தைப் போல ' மாதிரி படங்களைத்தானே நீங்க ஞாபகம் வெச்சிருக்கீங்க ? அதான் , கிராமத்துப் படம் பண்ண வந்துட்டேன். 'விளையாத காட்டுல விளைஞ்ச வைரம் மாதிரி ஒரு வேஷம் பண்றேன் . படத்துல என் பேரு அய்யனார்! ” அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார் .

"நீங்களே அந்த அய்யனார் மாதிரி எங்களைக் காக்கிற சாமிதானே ராசா ! ” என்றார் , தடுமாறி நடந்து வந்து கன்னம் தடவிய ஒரு பெரியாத்தா . " ஆத்தா , அப்படியெல்லாம் சொல்லாதீங்க . நானும் உங்கள்ல ஒருத்தன் . என் கலரைப் பார்த்தாலே தெரியுதுல ” என்று சிரிக்கட்டி , அவரது கைகளைப் பிடித்துக்கொண்டார் . பாட்டியின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் .

ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார் .

" ஐயா சாமி , இப்படிக் கலகலனு பழகுறீங்களே ... பொள்ளாச்சிப் பக்கம் சினிமாக்காரங்க நெறைய வருவாங்க . ஆனா , ஒருத்தரும் இந்த ஊர்ப் பக்கம் வரமாட்டாங்க . கார்ல போறப்போ ' டாட்டா ' கூடக் காட்டமாட்டாங்க .

நீங்கதான் இம்புட்டுப்பேசறீங்க . இப்படி எங்களோட ஒண்ணுமண்ணா வந்து நின்னாத்தானே ஒரு பிடிப்பு வரும் . அதான் , எல்லோருக்கும் உங்களைப் பிடிக்குதுங்கய்யா ! " என்று தோள் துண்டைச் சரி செய்தபடி ஒரு பெரியவர் சொல்ல , விஜயகாந்த் மலர்ந்தார் !

விஜயகாந்த்
விஜயகாந்த்

"கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா ? " என்று கேட்டதற்கு , ஒருத்தர் பித்தளைப் பானையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார். ஏங்க .. குடிக்கத் தண்ணி கேட்டா குளிக்கத் தண்ணி கொண்டு வர்றீங்க ... ' ' சிரித்துவிட்டார் கேப்டன் .

" எங்க வீட்டுக்கு வாங்க ... ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க ! ” என்று ஆளாளுக்கு அழைக்க ஆரம்பித்தார்கள் . " ஆசையாதான் இருக்கு. ஆனா , உங்க எல்லோர் வீட்டிலும் ஒரு வாய்ச் சோறு சாப்பிட ஆரம்பிச்சா , இன்னிக்கு மத்தியானம் மன்சூர் அலிகான்கூடச் சண்டை போடமுடியாதே ! ” என்றதும் , " ஆமா ... அடிதடி மல்லுக்கட்டுனா சினிமால பொளக்கறீங்களே , அது எப்பிடிங்க ? ' ' ஆர்வமாகக் கேட்டார்கள் .

" எல்லாம் ஒரு வேகம்தான் . ஊர்ல உலகத்துல நடக்கிற அநியாயத்தைப் பாக்கிறப்போ ஒரு வெறி வரும்ல . அதையெல்லாம் மொத்தமா சேர்த்து வெச்சு வாய்ப்பு கிடைக்கிறப்போ வெளுத்து எடுத்துர்றதுதான்!”

- நா.கதிர்வேலன்

படங்கள் - கே.கார்த்திக்கேயன்

(22.08.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)