சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் பொக்கிஷம்: விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்! - விஜய் அரசியலுக்கு வருவார்!

எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்

23.07.2008 ஆனந்த விகடன் இதழில்

‘‘ஒரு காலத்தில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்கள். இன்று நீங்கள் தொண்டர்களாக இருக்கிறீர்கள். நாளை..?!’’ என நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் சின்ன இடைவெளிவிட, புரிந்தும் புரியாத ரசிகர்கள் கூட்டம் அரங்கம் அதிரத் தடதடக்கிறது!

தனக்கெனத் தனிக்கொடி உயர்த்தி இருக்கிற விஜய், ‘‘நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனாலும், உங்க வேண்டுகோளுக்கு இணங்க இப்போ மன்றக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்துறேன். மக்களுக்குச் சேவை செய்ய நல்ல எண்ணம் இருந்தாலே போதும். அந்த எண்ணம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கு!’’ என்று சூசகமாக முடிக்க, படபடக்கிறது விஜய் கொடி!

“கோடம்பாக்கம் டு கோட்டை... விஜய் ராக்கெட் ரெடியா?”

என்று எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டால்... ‘‘விஜய் சார் (அப்படித்தான் சொல்கிறார்!) ‘என் மகன்’ என்கிற சின்னப் புள்ளியில் ஆரம்பிச்சு, இன்னிக்கு கோடானுகோடி ரசிகர்களின் தலைவன் என்கிற இடத்துக்கு வந்திருக்கார். ஒரு நாள் அவர் ‘நடிக்கணும்’னு சொன்னார். அந்த நிமிஷத்தில் இருந்தே நான்தான் அவரை டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். எங்க முதல் முயற்சி ‘நாளைய தீர்ப்பு’ எதிர்பார்த்த வெற்றியைத் தரலை. விஜய் சோர்ந்துபோனார். எல்லோருக்கும் விஜய்மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு. ஆனா, நான் ஒருத்தன் முழு உறுதியோடு இருந்தேன். படிப்படியா அவரை மேலே, மேலே கொண்டுவந்தேன். 20 வருஷ உழைப்புக்குப் பிறகு இப்போ எல்லாமே நான் எதிர்பார்த்த திசையில் போகுது.’’

எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்

‘‘அப்போ விஜய்யின் அடுத்த இலக்கு அரசியல்தானா..?’’

‘‘ விஜய் சாரிடம் இருக்கிற சமூக உணர்வுதான் என்னைக் கவர்ந்திருக்கு. மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக்க முடியாது. தன்னை நேசிக்கிற ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம் அவரிடம் இருக்கு.

ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டுவந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்... அதே மாதிரி சினிமாவில் விஜய்யையும் பெரிய அளவுக்குக் கொண்டுவந்திருக்கேன். இனி அடுத்தடுத்த எல்லைகளுக்கான பயணங்களில்தான் எங்கள் முழுக்கவனமும். விஜய்யும் அரசியலுக்கு வருவார்!’’

- நா.கதிர்வேலன்