“விரைவில் ‘தனி ஒருவன்-2’ ‘எம்.குமரன்-2’ ” - விகடன் பிரஸ்மீட்டில் ஜெயம் ரவி எக்ஸ்க்ளூசிவ்

விகடன் பிரஸ்மீட்: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.
குடும்பங்களும் குழந்தைகளும் கொண்டாடும் மோஸ்ட் வான்டட் ஹீரோ ஜெயம் ரவி. ஆக்ஷன், காதல், காமெடி என எல்லா ஏரியாக்களிலும் ரகளை செய்யும் ரவி, ‘பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’ படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். ‘விகடன் பிரஸ்மீட்’டுக்காக நாம் அணுகியதும் உற்சாகத்துடன் ஓகே சொன்னவர், விகடன் பத்திரிகையாளர்களின் அத்தனை கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் சொன்னார்.
கல்லூரிக்காலத்தில் ஜெயம் ரவி ஓட்டிய பைக்கை எடுத்துவந்து அவரிடம் காட்டியது, ரவி அக்காவின் ஆச்சர்ய விசிட் மற்றும் சுவாரஸ்ய உரையாடல், மேலும் சினிமாவில் ரவியின் நண்பர்களான விக்ரம் பிரபு, சிபி, யோகிபாபு, மிர்ச்சி சிவா, நதியா, இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோரும் வீடியோக்கள் வழியே எழுப்பிய கேள்விகள் (சுரேஷ்கிருஷ்ணாவின் ‘ஆளவந்தான்’ படத்தில் ரவி உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்) என்று இடையிடையே சில சின்னச்சின்ன சர்ப்ரைஸ் மொமன்ட்கள். மேற்கண்ட ஸ்வீட் சர்ப்ரைஸ்கள் அத்தனையும் ஜெயம்ரவி பிரஸ் மீட் வீடியோக்களில் காத்திருக்கின்றன.

விகடனுக்கும் உங்களுக்குமான உறவு பற்றிச் சொல்லுங்கள்... - சுதர்சன் காந்தி
“சின்ன வயசிலிருந்து விகடனைப் பார்த்துட்டு இருக்கேன். இந்த ஈவன்ட் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். 25 படம் முடிச்சிருக்கேன். இப்ப 26வது படம் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. என்னோட எல்லாப் படங்களுக்குமே விகடன் விமர்சனம் செய்திருக்காங்க. நல்லது, கெட்டது சொல்லியிருக்காங்க. நான் தமிழ் சரளமா படிக்கக் கத்துக்கிட்டது விகடன் மூலமாகத்தான். விகடன் விமர்சனங்கள்ல நான் கத்துக்க வேண்டியது பத்திச் சொல்லியிருக்காங்க. அதை கவனமா உள்வாங்கிக் கத்துக்கிட்டிருக்கேன். 2015-ல் எனக்கு ‘ரோமியோ ஜூலியட்’, ‘பூலோகம்’, ‘தனி ஒருவன்’னு மூணு படங்கள் சூப்பர் ஹிட். இதுல ‘பூலோகம்’ நான் ரொம்ப கஷ்டப்பட்டுப் பண்ணின படம். அதுல என் உழைப்பு ஸ்பெஷலா தெரியும். அந்த வருஷம் எல்லா அவார்ட்ஸும் ‘தனி ஒருவ’னுக்குத்தான் கிடைச்சது. ஆனா, விகடன் எனக்கு `சிறந்த நடிகர்’னு ‘பூலோகம்’ படத்துக்குக் கொடுத்தப்ப, விகடன்மீது கூடுதல் மரியாதை வந்துச்சு.”
``உங்களோட சின்ன வயசில சினிமாதான் உங்க கனவா இருந்ததா?’’ - வெ. நீலகண்டன்
“சின்ன வயசில கனவுகள் நிறைய இருந்திருக்கு. மிலிட்டரியில சேரணும்... ஸ்போர்ட்ஸ் மேனா ஆகணும்னு எல்லாம் ஆசைப்பட்டிருக்கேன். அப்பா தயாரிப்பாளர், அண்ணன் இயக்குநர் என்பதால் நடிச்சுதான் பார்க்கலாமேன்னு இறங்கிட்டேன். ‘ஒருதடவ செலவு பண்ணுவேன். ஒர்க்கவுட் ஆகலைன்னா... நீ டிகிரி படிச்சிருக்கே, போய் வேலையைப் பாரு’ன்னு அப்பா சொல்லிட்டார். அதனால என்னை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினேன். அதுக்கு தயாரிப்பாளர் பையன் என்கிற தகுதி மட்டும் போதாது. அதனால பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். கராத்தே கத்துக்கிட்டேன். மும்பைக்குப் போய் கிஷோர் நமீத்கபூர் இன்ஸ்டிடியூட்ல ஆக்டிங் கத்துக்கிட்டேன்.’’

`` `ஜெயம்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு அனுபவம்... முதல் காட்சி என்ன எடுத்தாங்க?’’ - சனா
‘`முதல் நாளை மறக்கவே முடியாது. உடுமலைப்பேட்டையில் படப்பிடிப்பு. மாந்தோப்புல ‘கோடிகோடி மின்னல்கள்’ பாடலின் சில ஷாட்ஸ் ஷூட். முதல் ஷாட் நல்லா பண்ணிட்டேன். ‘நீயும் ஹீரோயினும் டச் பண்ணும்போது படபடன்னு அடிக்கும். நரம்பெல்லாம் துடிக்கும்’னு அண்ணன் காட்சியைச் சொல்லும்போதே, ‘நீங்க எதுவும் சொல்லத் தேவையில்ல. அப்படித்தான் இருக்கோம்’னு சொன்னேன். ஹீரோயினைத் தேடுற மாதிரி ஒரு காட்சியில் சரியா நடிக்க வரல. அப்ப தோணுச்சு, யாராவது அத பார்த்துட்டு ‘நடிப்பைத் தேடுறார் போலிருக்கு. அது வரல போலிருக்கு’ன்னு நினைச்சிடுவாங்கன்னு. அந்த சீனை தனியாப் போய் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். தண்டவாளத்துல நிறைய கற்கள் இருக்குதுன்னு அப்பாகிட்ட சொன்னால்கூட, அதுல நடந்து வரச் சொல்வார். வலிக்குதுப்பான்னு சொன்னாக்கூட, ‘ஷாட் முடிச்சதும் வீட்ல போய் மருந்து போட்டுக்கலாம்’பார்.”
``அண்ணனோட இயக்கத்துல ஆறு படங்கள் நடிச்சிருக்கீங்க. அவர் உங்களுக்குக் கதைகள் சொல்லி, இன்னும் எடுக்கப்படாமல் இருக்கும் படங்கள் உண்டா?’’ - துளசிதரன்
‘‘எடுக்காத படங்கள் நிறைய இருக்கு. ஆனா, எடுக்க முடியாத படம்னு எதுவுமே கிடையாது. அண்ணன் நிறைய கதைகள் வச்சிருக்கார். அதெல்லாம் ஒவ்வொண்ணா நாங்க பண்ணத்தான் போறோம். என்னை வெச்சோ அல்லது வேற ஒரு ஹீரோவை வச்சோ பண்ணதான் போறார். அந்த வரிசையில் அவர் ‘எம்.குமரன்’ பார்ட் 2 கதையும் ஒண்ணு வச்சிருக்கார். ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் உள்ள இன்னொரு கதையும் ரெடியா இருக்கு. இது தவிர ‘தனி ஒருவன் 2’ ரெடியாகிடுச்சு. நாங்க தனித்தனியா பிசியானதால அது தள்ளிப்போச்சு.’’

``சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க பார்த்து ஆச்சர்யப்பட்ட நடிகர் யார் ?’’ - ஹரிபாபு
“நிச்சயம் கமல் சார்தான். அவரை ஒரு சயின்டிஃபிக் ஆக்டர்னு சொல்லுவேன். நடிப்புல ரொம்ப அழகா சயின்ஸை நுழைப்பார். சார்லி சாப்ளின் ரொம்பப் பிடிக்கும். அவரும் அப்படித்தான். அதேபோல் அல் பசினோவைப் பிடிக்கும்.”
``கமல் படங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச படம் எது ?’’ - ஹரிபாபு
“ ‘16 வயதினிலே’ சப்பாணி கேரக்டரைவிட என்னங்க இருக்கு? ‘நாயகன்’ படத்துல பையன் இறந்தவுடன், அவர் அழும் காட்சி நடிப்புக்கான பாடம்னுதான் சொல்லணும். ‘குணா’, ‘மகாநதி’, ‘பஞ்சதந்திரம்’னு சொல்லிக்கிட்டே போகலாம். இப்போ ‘விக்ரம்’ பார்த்தேன். இந்தப் படம் ஜெயிச்சே ஆகணும்னு ஆசைப்பட்டேன். அந்தப் படம் அறிவிச்சபோதே நிச்சயமா அது ஹிட்டுதான். பழைய ‘விக்ரம்’ படமெல்லாம் செம முயற்சி. அந்தச் சமயத்துல அந்த பட்ஜெட்ல சயின்ஸ் பிக்ஷன் படம் பண்றது சாதாரண விஷயமில்லை. இந்த ‘விக்ரம்’ வெற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம். சினிமாவில் சம்பாதிச்சு சினிமாவுலேயே போட்டு அதுக்காக தன்னை அர்ப்பணிக்கிற கலைஞன் கமல் சார்.”
``தாம் தூம் படத்துல கங்கனா ரணாவத்துடன் நடிச்சிருக்கீங்க. அவங்க கரியரை கவனிக்கிறீங்களா? சினிமா தாண்டி கங்கனாவின் அரசியல் நகர்வுகளை எப்படிப் பார்க்கிறீங்க ?’’ - ர.சீனிவாசன்
“கங்கனா அப்போவே பயங்கர போல்டான பெண். ‘தாம் தூம்’ ஷூட்டிங்ல ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் லஞ்ச் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அப்போ அங்கிருந்த வாட்டர் பாட்டிலையே பார்த்துட்டு எதையோ யோசிச்சுகிட்டு இருந்தாங்க. என்னடா இந்தப் பொண்ணு சாப்பிடாமல் வாட்டர் பாட்டிலையே பார்த்துக்கிட்டு இருக்காங்களே, அப்படியென்ன அந்த பாட்டில்ல இருக்குன்னு நான் கேட்டேன். ‘இந்த வாட்டர் பாட்டில் கம்பெனி குலுமணாலியில என் வீட்டுப் பக்கத்துலதான் இருக்கு. அந்தச் சின்ன வீட்டில் இருந்து இன்னைக்கு யாருடைய தயவும் இல்லாமல் தனி நபரா சினிமாவுக்கு வந்து, எனக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சிருக்கேன்னு நினைச்சுப் பெருமைப்பட்டுட்டு இருக்கேன்’னு சொன்னாங்க. ஒரு வாட்டர் பாட்டிலுக்குப் பின்னாடி, இவ்ளோ பெரிய பிளாஷ்பேக்கான்னு நினைச்சேன். அவங்க தைரியமா இருக்காங்கன்னா அது அவங்க அமைச்சுக்கிட்ட வாழ்க்கை. அவங்களுடைய கருத்துகளை அவங்க தைரியமா சொல்றாங்க. அது அவங்கவங்க முடிவு. அதுல தலையிடவே முடியாது. அவங்களுக்கு எது நல்லதுன்னு நினைக்கிறார்களோ அதைப் பண்றாங்க. தமிழ்ல இன்னும் நிறைய நல்ல படங்கள் அவங்க பண்ணணும்னு ஆசைப்படுறேன்.”

``ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஜீவாவுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றிச் சொல்லுங்க...’’ - சுதர்சன் காந்தி
“ஜீவா சார் மாதிரி ஒரு டெக்னீஷியனை நான் பார்த்ததில்லை. கேமராவை எங்கே வைக்கச் சொல்றாரோ அதுதான் ஃப்ரேம். ஒளிப்பதிவு, இயக்கம் தாண்டி முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது அவருடைய எடிட்டிங் சென்ஸ். அது பயங்கரமா இருக்கும். அவர்கூட வொர்க் பண்ணியிருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு அவர் பொண்ணு சனா, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக வேலை செஞ்சிருக்காங்க. அவங்க அப்பா மாதிரி அவங்களும் இயக்குநராகணும்னு வந்திருக்காங்க. நிச்சயமா அவங்க நல்லா வருவாங்க.’’
``ஜெயம் ரவியோடு நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடலாம்னு முன்னாடி சொல்வாங்க. அசின், ஜெனிலியா, சதா, ஹன்சிகான்னு நிறைய பேரைச் சொல்லலாம். உங்க ஹீரோயின்கள் ஒவ்வொருத்தர்கிட்டேயும் பிடிச்ச விஷயங்கள் சொல்ல முடியுமா?’’ - அய்யனார் ராஜன்
“நீங்க சொல்றது பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம். இப்போ என்ன சொல்றாங்கன்னா, ஜெயம் ரவிகூட நடிச்சவங்க எல்லோரும் கல்யாணமாகி செட்டிலாகிட்டாங்கன்னு சொல்றாங்க. ஜெனிலியா, அசின், ஸ்ரேயா, இப்போ சமீபமா நயன்தாரான்னு எல்லோருக்கும் கல்யாணமாகிடுச்சு. பர்பாமென்ஸா பாவனாவை ரொம்பப் பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா இருக்கும். ஜெனிலியாவுடைய குறும்புத்தனமான விஷயங்கள் பிடிக்கும். இப்போவும் அதே அன்போட பேசுவாங்க. கொஞ்சம்கூட மாறலை. எங்களுக்கு அவங்க இப்போவும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஹாசினிதான். ஸ்ரேயா ரொம்ப ப்ரெண்ட்லி. பார்த்தா மணிக்கணக்கா பேசுவோம். அசின் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்.”

``நீங்களும் நயன்தாராவும் ஒரு படத்துல நடிக்கிறீங்கன்னு ஒரு தகவல் வந்துச்சே! உண்மையா?’’ - சுதர்சன் காந்தி
‘`உண்மைதான். அஹமத் சார்தான் டைரக்டர். கல்யாணத்துக்குப் பிறகு, அவங்க கலந்துக்கிற ஷூட்டிங் இந்தப் படமாதான் இருக்கும். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறோம். த்ரில்லர் ஜானர்ல நல்ல படமா இருக்கும்.”
அடுத்த வாரம்...
* ‘தாம் தூம்’ வரைக்கும் லவ்வர் பாய் இமேஜ், ‘பேராண்மை’ படத்துக்குப் பிறகு சமூகம் சார்ந்த படம். இந்த மாற்றம் யதார்த்தமா அமைஞ்சதா, இல்லை நீங்க அமைச்சுக்கிட்டீங்களா?
* பொதுவா ரீமேக் பண்ணும்போது அதோட சாயல் இங்கேயும் தெரிஞ்சிடும்னு சொல்வாங்க. அந்தச் சாயல் தெரியாக்கூடாது என்பதற்காக நீங்க எடுத்த முயற்சிகள், முன் தயாரிப்புகளைச் சொல்லுங்க?
* கதைத் தேர்வில் அப்பா, அண்ணனின் தலையீடு இருக்குமா?
* உங்களைப் பத்தி வந்ததிலேயே நீங்க அதிர்ச்சியடைஞ்ச கிசுகிசு எது?