சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “கார்த்தியைத்தான் இப்போ டார்ச்சர் பண்றேன்!” - ஜெயம் ரவி

ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயம் ரவி

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

`` `தாம் தூம்' வரைக்கும் லவ்வர் பாய் இமேஜ், `பேராண்மை' படத்துக்குப் பிறகு சமூகம் சார்ந்த படம். இந்த மாற்றம் யதார்த்தமா அமைஞ்சதா, இல்லை நீங்க அமைச்சுக்கிட்டீங்களா?’’ - பிரேம்குமார்

``எல்லோருக்கும் வாழ்க்கையிலும் கரியரிலும் ரொம்ப முக்கியம் இந்த டிரான்ஸ்பர்மேஷன். இல்லைன்னா வாழ்க்கை போரடிக்கும். நான் நல்லா டான்ஸ் ஆடுறேன், ஃபைட் பண்றேன், காமெடி வொர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லுவாங்க. அதையே பண்ணிக்கிட்டு இருந்தா எனக்கு போர் அடிச்சிடும். அதனாலதான் வித்தியாசமா `மிருதன்', `கோமாளி'ன்னு பண்ணிக்கிட்டிருக்கேன். `பேராண்மை' படத்தில் எனக்குக் கிடைச்ச திருப்தி வேறு எந்தப் படத்திலும் கிடைக்கலை. என்னால இப்படியெல்லாம் பண்ண முடியும்னு எனக்கு என்னையே அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஜனநாதன் சார். அவர் இப்போ இல்லைன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. சமூகம் சார்ந்த விஷயங்களை அவரைத் தவிர வேறு யாராலும் இப்படிச் சொல்ல முடியாது. நீங்கள் கேட்கிற மாதிரி இந்த டிரான்ஸ்பர்மேஷன் ஒரு திட்டமாகவே மாறிடுச்சு. ஏன் புதுசா முயற்சி பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன். அப்பதான் எனக்கு `நிமிர்ந்து நில்' கிடைச்சது. அதுக்கப்புறம் என்னுடைய எல்லாப் படத்திலும் ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். எந்த வகையிலும் ஆடியன்ஸுக்கு நான் என்டர்டெயின்மென்ட்ல குறை வைக்கலை. ஒரு விஷயத்தை வலிந்து திணிக்கவுமில்லை.’’

விகடன் பிரஸ்மீட்: “கார்த்தியைத்தான் இப்போ டார்ச்சர் பண்றேன்!” - ஜெயம் ரவி

``இயக்குநர் ஜனநாதன் உங்ககிட்ட அரசியல் ரீதியா ஏதாவது பேசியிருக்கிறாரா? அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள் ...’’ - சுகுணா திவாகர்

``ரொம்ப சிலர்தான் சினிமா, குடும்பம் ரெண்டிலும் நெருக்கமா இருப்போம். அப்படி ஒருத்தர் ஜனா சார். என் குடும்ப விழா எல்லாத்திலும் அவர் இருப்பார். எப்போ எனக்கு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அவர்கிட்ட தான் பேசுவேன். சிறந்த அறிவாளி அவர். ரொம்ப சீரியஸானவர்னு நினைப்பாங்க; ஆனா, அவர் செம ஜோவியல். அவர் மாதிரி நக்கல் பண்ண முடியாது. சினிமா, அரசியல், சமூகம் பத்தி அவருக்கு இருக்கிற அறிவு அளப்பரியது. அவர் கம்யூனிசம் பேச மட்டும் செய்யலை; கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்தார். எல்லாரையும் சமமா நடத்தினார். சமமாப் பழகினார். அவருடைய இழப்பு ஈடு செய்யமுடியாதது.’’

``கதைத் தேர்வில் அப்பா, அண்ணனின் தலையீடு இருக்குமா?’’ - அருண் பிரசாத்

``22 வயசுல நான் சினிமாவுக்கு வந்துட்டேன். அப்போ எனக்கு மெச்சூரிட்டி ரொம்ப கம்மி. அதனால, அப்பாவும் அண்ணனும் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க. எனக்குக் கொஞ்சம் பக்குவம் வந்த பிறகு, இது நல்லா இருக்கு, அது நல்லா இருக்குன்னு நான் அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணஆரம்பிச்சேன். ‘சரி, அவன் தயாராகிட்டான், ஃப்ரீயா விட்ருவோம்’னு அப்பா கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சார். `பூலோகம்' படமெல்லாம் பண்ணும்போது, நானாதான் முடிவெடுக்க ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் அவர்களுடைய வழிகாட்டுதல் இருந்துச்சு. இப்பவும் இருக்கு. அது தேவைப்படும்போது எனக்குக் கிடைக்கும். ஒரு குழப்பம் வந்தா அவங்ககிட்ட போய் நின்னுடுவேன். இப்போ எனக்குப் பொறுப்பு அதிகமாகியிருக்கு. இப்போ நிறைய முடிவுகள் நான்தான் எடுத்துக்கிட்டிருக்கேன். நல்லதோ கெட்டதோ, கத்துக்கிட்டுப் பண்ணிக்கிட்டிருக்கேன்.''

விகடன் பிரஸ்மீட்: “கார்த்தியைத்தான் இப்போ டார்ச்சர் பண்றேன்!” - ஜெயம் ரவி

``படிக்கும்போது எந்த விளையாட்டுல அதிக ஆர்வம் இருந்துச்சு? ஒலிம்பிக்ல ஈட்டி எறிதல்ல தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பயோபிக்ல நீங்க நடிச்சா பொருத்தமா இருக்கும்னு சமூக வலைதளத்துல ஒரு பேச்சு இருந்தது. கவனிச்சீங்களா?’’ - சுதர்சன் காந்தி

``ஸ்கூல் டைம்ல ஃபுட்பால், வாலிபால், கிரிக்கெட்டில் நான்தான் கேப்டன். தனிப்பட்ட திறமைகள்ல ஜாவ்லின் த்ரோல நான் ரெக்கார்டு பிரேக் பண்ணியிருக்கேன். ஷாட்புட்ல முதல் பரிசு வாங்கியிருக்கேன். டிராக் ஈவன்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். என் ரசிகர்கள் நிறைய பேர் என்கிட்ட ‘யுவராஜ் சிங் மாதிரியே இருக்கீங்க. அவர் பயோபிக்ல நடிக்கணும்’னு சொல்லியிருக்காங்க. அவர் கிரேட் பிளேயர். நிறைய சாதனைகள் பண்ணினவர். பயோபிக் படங்களுக்குத் தனி மதிப்பு இருக்கு. நிச்சயமா அந்த மாதிரி வாய்ப்பு வரும்போது பண்ணணும்ங்கிற ஆசை இருக்கு.''

விகடன் பிரஸ்மீட்: “கார்த்தியைத்தான் இப்போ டார்ச்சர் பண்றேன்!” - ஜெயம் ரவி

``மத்த ஹீரோக்களை வெளியிடங்களில், நடிகர் சங்கக் கூட்டங்களில் பார்க்க முடியுது... ஆனா, நீங்க ஷூட்டிங் விட்டா வீடு, வீடு விட்டா ஷூட்டிங்னு இருக்கீங்களே, ஏன்? - சூர்ய கோமதி

``கிட்டத்தட்ட அப்படிதான். ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போவேன். வேற எங்கேயும் போகமாட்டேன். மனைவிகூட டின்னர், அவ்வளவுதான். ஆரம்பத்துல நல்லா சுத்திக்கிட்டுதான் இருந்தேன். ஆனா, அதெல்லாம் எதுக்குனே தெரியாமல் சுத்திக்கிட்டு இருந்திருக்கேன். பிறகு புரிஞ்சுக்கிட்டு, தேவையில்லாமல் எங்கேயும் வெளியே போறதில்லை. சினிமாவுல ரொம்ப நெருக்கமான நண்பர்கள் சிபி, ஜீவா, ஆர்யா, கார்த்தி, சூர்யா சார் இவங்களைப் பார்க்கப் போவேன், அவ்வளவுதான்.’’

``பொதுவா ரீமேக் பண்ணும்போது அதோட சாயல் இங்கேயும் தெரிஞ்சிடும்னு சொல்வாங்க. அந்தச் சாயல் தெரியக்கூடாது என்பதற்காக நீங்க எடுத்த முயற்சிகள், முன்தயாரிப்புகளைச் சொல்லுங்க?’’ - அதியமான்

‘‘ஒரு படம் பார்த்து நல்லா இருக்குன்னுதான் அதைக் காசு கொடுத்து ரைட்ஸ் வாங்குறோம். இல்லைன்னா அதை ரீமேக் பண்ண வேண்டியதில்லை. அவங்க சாயல் தெரியாம இருக்க நான் எதுவுமே பண்ணலை. அதை அப்படியே டிட்டோதான் பண்ணியிருக்கேன். அதை ஏன் நான் மாத்திக்கப் போறேன்? மாத்தணும்னு நினைச்சிருந்தா நான் வேற ஏதாவது பண்ணிட்டுப் போயிருக்கலாம்.’’

விகடன் பிரஸ்மீட்: “கார்த்தியைத்தான் இப்போ டார்ச்சர் பண்றேன்!” - ஜெயம் ரவி

``உங்க கல்லூரி நாள்களில் நீங்க குறும்படம் ஒண்ணு டைரக்ட் பண்ணியிருந்தீங்க. அதுல உங்க அண்ணன் நடிச்சிருந்தார். அந்த மெமரீஸ் சொல்ல முடியுமா?’’ - ஜெனிஃப்ரீடா

‘‘பயங்கரமா ரிசர்ச் பண்ணியிருக்கீங்க... உண்மைதான். காலேஜ் டைம்ல ஒரு ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ணியிருக்கேன். என் அண்ணனும் இயக்குநர் ‘பொம்மரிலு’ பாஸ்கரும் அப்போ காலேஜ் மேட்ஸ். என் ஷார்ட் பிலிம்ல அண்ணன்தான் ஹீரோ, எனக்கு அசிஸ்டென்ட் டைரக்டர் எல்லாம். ஒரு ஆக்ஸிடென்ட் சீக்வென்ஸ். என் வீட்ல என்னை நைட் பைக் ஓட்ட விடமாட்டாங்க. அதனால, பாஸ்கர் அண்ணனும் ராஜா அண்ணனும் போனாங்க. பாஸ்கர் அண்ணா கேமரா ஹான்டில் பண்ணினார். அண்ணன் பைக் ஓட்டிட்டிருந்தார். ஒரு காருடைய ஹெட்லைட் பாஸாகும்போது அதை ஆக்ஸிடென்ட் ஆகுற மாதிரி எடுக்கலாம்னு தோணுச்சு. கொஞ்ச நேரத்துல பாஸ்கரண்ணா ஆஸ்பிட்டல்ல இருக்கறதா போன் வந்துச்சு. ரியலிஸ்ட்டிக்கா எடுக்கறதுக்காக அவர் நிஜமாவே அந்தக் கார் பக்கத்துல போய் மண்டையில அடிபட்டிருக்கார். ‘ஒரு குறும்படத்துக்கு இவ்வளவு ஓவரா இருக்கு‘ன்னு அவர்கிட்ட சொன்னேன். இன்னைக்கு பாஸ்கர் அண்ணனும் பெரிய டைரக்டர் ஆகியிருக்கார்.’’

``உங்களைப் பத்தி வந்ததிலேயே நீங்க அதிர்ச்சியடைந்த கிசுகிசு எது?’’ - நிவேதா

‘`என்னைப் பற்றி என்ன கிசுகிசு வந்திருக்குன்னு சத்தியமா ஞாபகமில்ல. என்னைப் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் பெருசா கவலைப்பட மாட்டேன். ஏன்னா, ஊரே என்னைப் பற்றி கிசுகிசு சொன்னாலும் என் ரசிகர்கள், குடும்பத்தில் இருக்கிறவங்க என்னை நம்புனா போதும். வேற என்ன இருக்கு?”

``சக ஹீரோக்களில் பலரும் உங்க நண்பர்கள்... நீங்க அடிக்கடி போன் பண்ணி டார்ச்சர் பண்றது யாரை, உங்களுக்கு போன் பண்ணி டார்ச்சர் பண்றது யார்?’- அருந்ததி

“சிபி, ஜீவா, ஆர்யா, கார்த்தி இவங்ககிட்ட அடிக்கடி போன் பண்ணிப் பேசுவேன். சிபியும் நானும் பேச ஆரம்பிச்சா மணிக்கணக்கா பேசுவோம். ஜீவா பன்ச் எங்க கேங்க்ல பேமஸ். ஆர்யா பத்தி உங்க எல்லோருக்குமே தெரியும். செம ஜாலியான பையன். இப்போ சமீபமா, ‘பொன்னியின் செல்வன்’ படத்துல கார்த்தியுடன் நடிக்கிறதால ரொம்ப க்ளோஸாகிட்டோம். அவர் வந்தியத்தேவனா நடிக்கிறார். நான் அருண்மொழிவர்மனா நடிக்கிறேன். அதனால, எங்க ரெண்டு பேருக்கும்தான் பெரும்பாலான காட்சிகள் இருக்கும். எங்கே போனாலும் ஒண்ணாவே சுத்துவோம். குதிரை ஏற்றத்திற்கான பயிற்சிக்கு ஒண்ணாதான் போவோம். எனக்கு அதுல அனுபவம் குறைவு. கார்த்திதான் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். அதனால, இப்போ நான் அடிக்கடி போன் பண்ணி டார்ச்சர் பண்றது கார்த்தியைத்தான். ஆனா, அவர் ரொம்ப ஸ்வீட்!”

அடுத்த வாரம்...

* `பொன்னியின் செல்வன்' படத்தின் ஆஃப் கேமரா மெமரீஸ் பத்திச் சொல்லுங்க?

* ஓ.டி.டி வந்த பின், ரீமேக் இனி சாத்தியமா? அப்படிச் சாத்தியம்னா என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்?

* இந்தக் கதையை ஏன் செலக்ட் பண்ணினோம்னு நினைச்சதுண்டா?

* இப்பல்லாம் ஹீரோக்கள் வில்லனா நடிக்கிறது ஃபேஷனா இருக்கு. நீங்க வில்லனா நடிக்க ஓகே சொல்வீங்களா?