சினிமா
தொடர்கள்
Published:Updated:

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?- விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக 15 ஆண்டுகள், ஹீரோவாக 10 ஆண்டுகள், சட்டமன்ற உறுப்பினராக ஒன்றரை ஆண்டுகள் எனப் பரபரப்பாக இயங்கிவருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஷூட்டிங் ஒரு பக்கம், தொகுதி வேலைகள் ஒரு பக்கம், தி.மு.க இளைஞரணி ஒரு பக்கம் எனப் பம்பரமாகச் சுழன்று திரிந்தாலும் ‘டயர்டா... எனக்கா... நெவர்' என அவருக்கே உரிய புன்னகையோடு விகடன் பிரஸ் மீட்டுக்கு ஓகே சொல்லி, வருகை தந்தார். சினிமா, அரசியல், குடும்பம் என எல்லா ஏரியாவிலிருந்தும் நம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உதயநிதி கொடுத்த சுவாரஸ்ய பதில்கள் இங்கே...

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?-  விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

`` ‘கலகத் தலைவன்' - இந்தத் தலைப்புக்கான காரணம் என்ன?’’ - உ.சுதர்சன் காந்தி

‘‘எனக்குக் கதை சொல்லி, நான் ஓகே சொன்னதுக்குப் பிறகும்கூட இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்கலை. நான்தான் ‘என்ன டைட்டில் வெச்சிருக்கீங்க'ன்னு இயக்குநர் மகிழ் திருமேனி சார்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன். ரொம்ப நாள் சொல்லவேயில்லை. திடீர்னு ஒரு நாள் வந்து, ‘கலகத் தலைவன்' எப்படியிருக்கு?'ன்னு கேட்டார். ‘நல்லா இல்லை'ன்னு சொல்லிட்டேன். ‘இல்ல உதய், யோசிச்சுப் பாருங்க'ன்னு சொன்னார். ‘இன்னும் சில ஆப்ஷன்கள் கொடுங்க'ன்னு கேட்டேன். ஆனா, மகிழ் சார் இந்த டைட்டில்ல பிடிவாதமா இருந்தார். ‘சரி. படத்துல டைட்டில் எப்படி வருமோ அதைக் காட்டுங்க’ன்னேன். அவர் காட்டினார். அப்புறம், படத்தையும் போட்டுக் காட்டினார். படம் பார்த்த பிறகு, டைட்டில் சரிதான்னு தோணுச்சு. கலகத்தை உருவாக்கும் ஒருவனைப் பற்றிய படம்தான் இது.

மகிழ் திருமேனியுடைய படங்களுக்குத் தனி ரசிகர்கள் இருக்காங்க. ‘மனிதன்' படத்துக்கு அப்புறமாவே, ‘இதுவரை நான் பண்ணாத ஏதோ ஒண்ணை இதுல பண்ணணும்’னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன். ‘ஆர்ட்டிகிள் 15' படத்தை ‘நெஞ்சுக்கு நீதி'ன்னு தமிழ்ல ரீமேக் பண்ணிணேன். ஆனா, போனி கபூர் சார் என்கிட்ட ‘பதாய் ஹோ' படத்தைத் தமிழ்ல ரீமேக் பண்ணத்தான் கேட்டார். ‘காமெடி படம் நிறையா பண்ணிட்டேன் சார். வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க'ன்னு கேட்டபோதுதான், ‘ஆர்ட்டிகிள் 15’ சொன்னார். அதைத் தமிழ்ல பண்ணிணேன். அதே மாதிரிதான் ‘கலகத் தலைவன்' படமும். ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்திப் பேசியிருக்கோம். எனக்கும் இதுல ரெண்டு கெட்டப் இருக்கு. நிச்சயம் சுவாரஸ்யமா இருக்கும்.''

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?-  விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``நீங்க நடிக்கலாம்னு எப்போ, எப்படி முடிவெடுத்தீங்க? அதுக்கு வீட்ல என்ன ரெஸ்பான்ஸ் வந்தது?’’ - அருந்ததி

‘‘தயாரிப்பாளரா படங்கள் பண்ணிட்டு இருந்தேன். அப்போ டோலிவுட்ல இருந்து சில தயாரிப்பாளர்கள் வந்து கதை சொல்லி, ‘நீங்க நடிக்கணும்’னு சொன்னாங்க. எனக்கு அதுல ஆர்வமில்லைன்னு சொல்லிட்டேன். இப்படி நான் நிறைய நிராகரிச்சுக்கிட்டே இருந்தேன். ‘ஆதவன்' ஷூட்டிங்கின்போது கே.எஸ்.ரவிக்குமார் சார்தான் என்கிட்ட ‘உதய், எல்லோரும் உன்னை நடிக்க வைக்கச் சொல்றாங்க. வழக்கமா நான் கெஸ்ட் ரோல் பண்ணுவேன்ல. இந்த முறை நீயும் வா'ன்னு சொல்லி நடிக்க வெச்சார். எனக்கு நிறைய டயலாக் இருந்தது. அப்புறம், நானும் அவரும் பாதிப்பாதியா பிரிச்சுக்கிட்டோம். ‘நல்லாருந்தால் மட்டும்தான் படத்துல வைக்கணும். எனக்குப் பிடிக்கலைன்னா எடிட்ல தூக்கச் சொல்லிடுவேன்'னு சொல்லிட்டுதான் நடிச்சேன். அப்புறம், இயக்குநர் ராஜேஷுடைய ‘பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தை நாங்கதான் விநியோகம் பண்ணிணோம். அப்போ எங்களுக்குள் நல்ல நட்பு உருவாச்சு. ‘உங்களுக்கு நடிக்க ஆர்வமிருக்கா?'ன்னு கேட்டார். ‘ஏதாவது லைன் இருந்தா சொல்லுங்க'ன்னு சொன்னேன். அவர் சொன்னது ரொம்பப் பிடிச்சுப்போய் ஓகே சொல்லிட்டேன். அப்படித்தான் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆரம்பமாச்சு. நடிக்கிறேன்னு வீட்ல சொன்னேன். மனைவி, ‘முயற்சி பண்ணிப் பாரு. ஆனா, எதுக்கும் இன்னொரு முறை நல்லா யோசிச்சுக்கோ. தேவையா உனக்கு?'ன்னு சொன்னாங்க. அம்மா ‘சினிமாலாம் எதுக்கு, வேண்டாம்'னு சொன்னாங்க. அப்பா ‘உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு'ன்னு சொன்னாங்க.’’

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?-  விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``முதல் படம் ஜெயிச்சிடுச்சு. ஆனா, ரெண்டாவது படத்துக்கு ரெண்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க. ஏன்?’’ - மனோ

‘‘ ஒரு கல் ஒரு கண்ணாடி' எனக்குக் கிடைச்ச வெற்றி இல்லை. ராஜேஷ் சாருடைய எழுத்து, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் சாருடைய பாடல்கள்... இது எல்லாத்துக்கும் கிடைச்ச வெற்றி. அந்தப் படம் நாங்க பிளான் பண்ணிணதைவிட பட்ஜெட் அதிகமாகிடுச்சு. 120 நாள் ஷூட்டிங் நடந்தது. நீங்க பார்க்குறது பாதிப் படம்தான். மத்ததெல்லாம் எடிட்ல போயிடுச்சு. ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, ‘எப்படியும் இந்தப் படம் நஷ்டமாகும்'னு தயாரிப்புத் தரப்புல இருந்து பேசிக்கிட்டோம். படம் முழுமையா முடிஞ்சு பார்க்கும்போது, எல்லோரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க. பாடல்களும் ஹிட்டாகிடுச்சு. ‘நம்ம படம் ஓடிடும் போல. போட்ட காசை எடுத்திடலாம் போல'ன்னு நினைச்சேன். ஆனா, தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு எனக்கே ஆச்சர்யம்தான். இந்தப் படம் ஹிட்டானவுடனே, ‘நடிக்கிறதை நிறுத்திடலாம். எந்த ஹீரோவுக்கும் 100% சக்சஸ் இருக்காது. நமக்கு இருக்கட்டும்’னு நினைச்சு ஆறேழு மாசம் அடுத்த படத்தைப் பத்தி யோசிக்காமலே இருந்தேன். ‘சுந்தரபாண்டியன்' ஹிட்டானவுடன் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனைக் கூப்பிட்டுக் கதை கேட்டு ‘இது கதிர்வேலன் காதல்' பண்ணினேன். அவரை அவர் ஸ்டைல்ல படம் பண்ணவிடாமல் அந்தப் படம் சரியா போகலை. அப்புறம், சந்தானத்துடன் மீண்டும் சேர்ந்து ‘நண்பேன்டா' பண்ணிணேன். நாங்களே காமெடின்னு நினைச்சு ஒண்ணு பண்ணிக்கிட்டிருக்கோம்னு போரடிச்சுப்போய் கொஞ்சம் சீரியஸான படங்கள் பண்ண ஆரம்பிச்சேன்.’’

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?-  விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``நீங்க விஜய் ரசிகர்னு நிறைய இடங்கள்ல சொல்லியிருக்கீங்க. அவரை வச்சுதான் உங்களுடைய முதல் படத்தையும் தயாரிச்சீங்க. அஜித்துக்கும் உங்களுக்குமான நட்பு பத்திச் சொல்லுங்க.’’ - அதியமான்

‘‘எப்போ பார்த்தாலும் பாசமாப் பேசுவார். தம்பி துரை தயாநிதி கல்யாணத்துலதான் அஜித் சாருடன் ரொம்ப நேரம் இருந்தேன். எல்லோரும் சொல்ற மாதிரி அவரைப் பார்க்கவே வியப்பா இருக்கும். அவருடைய ப்ரசென்ஸே பாசிட்டிவிட்டியைத் தரும். அவருடைய ‘துணிவு' படத்தை வெளியிடுறது சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே டீல் முடிஞ்சிடுச்சு. எல்லார் மாதிரியும் நானும் ஆவலா காத்துக்கிட்டிருக்கேன். இன்னும் படம் பார்க்கலை. வினோத் நல்லா பண்ணியிருப்பார்னு நம்புறேன்.''

``திராவிட இயக்கம் சினிமாவை ஒரு பிரசார ஊடகமா பயன்படுத்தி ஜெயிச்சது வரலாறு. நீங்க சினிமாவை எப்படிப் பார்க்கிறீங்க?’’ - ர. சீனிவாசன்

‘‘அப்போ சினிமா மட்டுமே ஊடகமா இருந்தது. இப்போ அப்படியில்லை. சோஷியல் மீடியா வந்திடுச்சு. இருந்தாலும் சமூகப் பொறுப்புள்ள படங்களும் வந்துக்கிட்டுதான் இருக்கு. அந்த மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்குது. நான் முடிஞ்ச அளவுக்கு சமூகப் பொறுப்போடு படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன். சில படங்களை வசூலை மட்டுமே மனசுல வெச்சுக்கிட்டுப் பண்றோம். ‘நெஞ்சுக்கு நீதி' எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அடுத்து நான் பண்ணிக்கிட்டிருக்கிற ‘மாமன்னன்' என் கரியர்ல பெஸ்ட் படமா இருக்கும்னு நம்புறேன். வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் மாதிரியான இயக்குநர்கள்கூட வொர்க் பண்ணணும்னு நினைக்கிறேன்.''

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?-  விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``இந்தக் கூட்டணிகளை நாங்க எதிர்பார்க்கலாமா?’’ - சுதர்சன் காந்தி

‘‘ஒரு படம்னு ஆரம்பிச்சா 90 நாள்கள் தேவைப்படுது. இதுதவிர, டப்பிங் வேலைகள் இருக்கு. சென்னைன்னா பரவாயில்லை. தொகுதி, கட்சின்னு வேலைகள் நிறைய இருக்கும்போது, நான் ஏதோ ஒரு ஊர்ல நடிச்சுக்கிட்டு இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. அதனால, ‘மாமன்னன்' என் கடைசிப் படமா இருக்கட்டும்னு பிளான் பண்ணிணேன். அதுக்குப் பிறகு கமல் சார் ஒரு கதை சொன்னார். ‘நல்லாருக்கு சார். நான் தயாரிக்கிறேன்'னு சொன்னேன். ‘இல்ல, நான் தயாரிக்கிறேன். நீங்க நடிங்க'ன்னு சொன்னார். நான் தயங்கினேன். ஆனா, அவர் ‘நீங்கதான் நடிக்கணும்'னு சொல்லிட்டார். இப்போ வேலைகள் போய்க்கிட்டிருக்கு. ரொம்ப சுவாரஸ்யமா, வித்தியாசமா, இதுக்குப் பிறகு ஏதாவது கதை வந்தால், நடிப்பேன்.''

``உங்க மனைவிகிட்ட லவ் சொல்லும்போது அவங்க உங்ககிட்ட ‘தாத்தா, அப்பா மாதிரி அரசியலுக்குப் போகமாட்டீங்கில்ல’ன்னு கேட்டுதான் ஓகே சொன்னதா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாங்க. அப்போ உண்மையிலேயே அரசியல் ஐடியா இல்லையா? இல்ல, காதலுக்காகப் பொய் சொன்னீங்களா?’’ - பிரேம் குமார்

‘‘அவங்க நிறைய தெலுங்குப் படங்கள் பார்த்துட்டு, அரசியல்வாதிகள் பத்தி மோசமான அபிப்ராயம் வச்சிருந்தாங்க. அரசியல் எனக்கு சுத்தமா விருப்பம் இல்லைன்னு சொன்னாங்க. எனக்கும் விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். அப்போ நிஜமாவே ஐடியா இல்லைதான். எதுவும் பிளான் கிடையாது. சினிமாவுல நடிக்க வரும்போதுகூட கேட்டாங்க. ‘நீ அரசியலுக்கு வரக்கூடாதுன்னுதானே சொன்ன. சினிமாவுக்கு வரக்கூடாதுன்னு சொல்லலையே'ன்னு கிண்டலா கேட்டிருக்கேன். அவங்களும் சினிமாவுலதான் இருக்காங்கங்கிறதால பிரச்னை இல்லை. சமீபமா ‘பேப்பர் ராக்கெட்'னு ஒரு வெப் சீரிஸ் இயக்கியிருந்தாங்க. அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதை அவங்கதான் இயக்குனாங்கன்னு நம்பவேயில்லை. ‘உண்மையாவே நீதான் எழுதினியா?'ன்னு கேட்டேன். இப்போ ‘பேப்பர் ராக்கெட் 2' பண்ணப்போறாங்க. அதை நான்தான் தயாரிக்கிறேன். தவிர, இன்னொரு படத்துக்கான பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு. அதுல நான் ஹீரோ இல்லை, அதையும் சொல்லிடுறேன்.

‘கலகத்தலைவன்’ எப்போ கழகத் தலைவர்?-  விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

நான் அரசியலுக்கு வந்தபிறகு அவங்க ரொம்ப உறுதுணையா இருக்காங்க. தாத்தாவுடைய பணிகள், அப்பாவுடைய உழைப்பு எல்லாம் பார்த்திருக்காங்க. இளைஞர்கள் நிறைய பேர் அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறாங்க. நான் பிரசாரத்துல பேசினதையெல்லாம் பார்த்துட்டு ‘நீ இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததேயில்லை'ன்னு ஆச்சர்யப்பட்டாங்க. ‘நீ படமெல்லாம் விட்டுட்டு முழுமையா அரசியலுக்கு வந்திடு. அதுதான் உனக்கு சரியா இருக்கும்'னு சொன்னாங்க.’’

`` ‘கலகத் தலைவன்’ உதயநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரா மாற வாய்ப்பிருக்கா?’’ - சுகுணா திவாகர்

“அதுக்கு நிறைய உழைப்பு தேவைப்படுது. கடந்த மூணு வருஷமாதான் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். சட்டமன்ற உறுப்பினரா இருக்கேன். கட்சியில அப்படி திடீர்னு நியமிக்க முடியாது. அதுக்குன்னு தேர்தல் இருக்கு. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படணும். அதுக்கு இன்னும் நிறைய தயார்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். அது என் இலக்கு கிடையாது.”

``நீங்க அரசியலுக்கு வந்த பிறகு, அப்பாவும் அம்மாவும் சொன்ன அறிவுரைகள் என்ன?’’ - மோனிகா

‘‘எப்போ நடிக்கிறதை நிறுத்தப்போறன்னு அம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க. நான் நடிக்கிறது அம்மாவுக்குப் பிடிக்கலை. இப்போகூட புதுப்படம்னு சொன்னதும் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ‘மாமன்னன்’தான் கடைசிப் படம்னு சொன்ன, இப்போ ஏன் புதுப்படம் பூஜை போட்டிருக்கன்னு கேட்டாங்க. அப்புறம், இந்தப் படத்துடைய கதையைச் சொல்லி, ஏன் நடிக்கிறேன்னு சொன்னேன். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், குறிப்பா அரசியல்ல. ஒரு விஷயத்தைச் சொன்னார்னா, அதைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணுவார். நான் சரியா தொகுதிக்குப் போறேனான்னு கவனிச்சுக்கிட்டே இருப்பார். தேர்தல் முடிஞ்ச அடுத்த நாள்ல இருந்தே தொகுதியிலதான் இருப்பேன். மத்தவங்க எல்லாம் அப்பாகிட்ட ‘என்னங்க, தம்பி எப்போவும் தொகுதியிலயே இருக்காப்ல. எங்களை எல்லாம் எங்க தொகுதியில மதிக்கமாட்டாங்க’ன்னு சொன்னாங்க. ‘அது புதுப்பொண்டாட்டி இல்லையா... அப்படிதான் இருக்கும்’னு அப்பா கிண்டல் பண்ணினார்.’’

``கருணாநிதிக்கு ‘உடன்பிறப்பே’, ஸ்டாலினுக்கு ‘உங்களில் ஒருவன்’, உங்களுக்கு?’’ - சுதர்சன் காந்தி

‘‘எப்பவும் தமிழக மக்களுக்குச் செல்லப்பிள்ளையா இருக்க ஆசைப்படறேன்.’’

அடுத்த வாரம்...

* சமீபமா விஜய்யை எப்போ சந்திச்சீங்க?

* ரஜினியுடன் சினிமாவில் இணைந்து வேலை செய்ய வாய்ப்பிருக்கா?

* சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் ஆச்சர்யப்பட்ட விஷயம், தேர்தல் பிரசாரத்துல நீங்க சரளமாகப் பேசியது. எப்படி அந்த மேஜிக் நடந்தது?

* நீங்க ஏழு வருஷம் காதலிச்சுத் திருமணம் பண்ணிக்கிட்டீங்க. இந்தத் தலைமுறையினர் காதலை எப்படிப் பார்க்கிறாங்கன்னு நினைக்கிறீங்க?