கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``சமீபமா விஜய்யை எப்போ சந்திச்சீங்க?’’ - சூர்யா கோமதி

‘‘விஜய் சார் யாரையும் அவ்வளவு க்ளோஸாக விடமாட்டார். ஆனா, நெருக்கமாகிட்டா ரொம்ப ஃப்ரெண்டாகிடுவார். நானும் அவரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தோம். இடையில கொஞ்சம் மனக்கசப்பாகிடுச்சு. ரெண்டு மூணு பேர் என்னைப் பத்தித் தப்பா அவர்கிட்டேயும், அவரைப் பத்திச் சில விஷயங்களை என்கிட்டேயும் சொல்லிட்டாங்க. அதனால, பெரிய இடைவெளி வந்திடுச்சு. அப்புறம் ஒரு நாள் நானே அவரைச் சந்திச்சுப் பேசி, இதுதான் நடந்ததுன்னு தெளிவா சொன்னேன். அவரும் புரிஞ்சுக்கிட்டார். அடிக்கடி போன்ல பேசிக்குவோம். அவர் செம பிஸியா நடிச்சுக்கிட்டிருக்கார். அடிக்கடி வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடுவார். தேர்தலுக்கு முன்னாடி போனேன். அதுக்குப் பிறகு போன்லதான் பேசிக்கிட்டு இருக்கோம். கடைசியா நியூ இயருக்குப் பேசினோம். ஆமா, ஒரு வருஷம் ஆகப்போகுதுல்ல!''

``ரஜினியுடன் சினிமாவில் இணைந்து வேலை செய்ய வாய்ப்பிருக்கா?’’ - செந்தில் கரிகாலன்

‘‘நிச்சயமா இருக்கு. அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு.''

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதா சொல்லப்படுகிறதே?!’’ - சரண்

‘‘வெளியில இருந்து பார்க்கும்போது அப்படித் தெரியலாம். நான் தப்பு சொல்லலை. நாங்க ரிலீஸ் பன்ற படங்கள்தான் வெளியில தெரியும். ஆனா, நான் எத்தனை படங்களைப் பார்த்து நிராகரிக்கிறேன்னு உங்களுக்குத் தெரியாது. நான் தினமும் ஒன்றரைப் படம் பார்ப்பேன். ஒரு முழுப் படம் பார்த்திடுவேன். இன்னொரு படம் எனக்குப் பிடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினதா இருக்கும். இப்போகூட என் போன்ல, என் ஐபேட்ல ரெண்டு மூணு படங்கள் இருக்கும். அவ்வளவு பேர் கேட்கறாங்க. பெரிய படங்கள் மட்டுமல்ல, சின்னப் படங்களும் பன்றோம். நாங்க பன்ற படங்கள் எல்லாம் ஓடிடுவதில்லை. நல்ல படங்களா இருந்தால் மக்கள் எடுத்துட்டுப் போறதுதான். அது என்னவோ, சமீபமா நாங்க பண்ணும் படங்களெல்லாம் ஹிட்டாகிடுது. அது எங்க கையில இல்லை. நாங்க வேணா நிறைய படங்கள் வெளியிடுவதைக் குறைச்சுக்கிறோம். ஆனா, நிறைய தயாரிப்பாளர்கள் உங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க, பரவாயில்லையா?’’

``இவ்வளவு பிஸி ஷெட்யூல்ல எப்படி படங்கள் பார்க்குறீங்க?’’- சுதர்சன் காந்தி

‘‘டிராவல்ல பார்ப்பேன், தூங்கப்போறதுக்கு முன்னாடி பார்ப்பேன். ரெட் ஜெயன்ட்ல அதுக்குன்னு தனி டீம் இருக்கு. அவங்க தினமும் படங்கள் பார்ப்பாங்க. பார்த்துட்டுப் பிடிச்சதுன்னா, எனக்கு அனுப்பிப் பார்க்கச் சொல்வாங்க. அது பெரிய ப்ராசஸ். அந்தப் படத்துடைய பட்ஜெட் என்ன, அந்தத் தயாரிப்பாளர் மேல ஏதாவது பஞ்சாயத்து இருக்கா, அதை எப்போ ரிலீஸ் பண்ணலாம், அதுக்கு முன்னாடி வாரம் என்னென்ன படங்கள் வரப்போகுது, அடுத்த வாரம் என்னென்ன படங்கள் ரீலீஸ் ஆகுது, இந்தப் படத்தை வெளியிடணும்னா எவ்வளவு செலவு பண்ணணும், எவ்வளவு விளம்பரப்படுத்தணும், ஓப்பனிங் கிடைக்குமா, அப்படிக் கிடைக்க என்னவெல்லாம் பண்ணணும்... இவ்வளவு விஷயங்கள் இருக்கு. இதை நான் தனியா பண்ண முடியாது. ஒரு டீம் இருக்காங்க. அதை சரியா பண்ணிட்டிருக்காங்க.''

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் ஆச்சர்யப்பட்ட விஷயம், தேர்தல் பிரசாரத்துல நீங்க சரளமாகப் பேசியது. எப்படி அந்த மேஜிக் நடந்தது?’’ - வெ.நீலகண்டன்

‘‘தேர்தல் பிரசாரத்துக்கு முன்னாடி கிராம சபைக் கூட்டங்களுக்குப் போய் மக்களோடு நிறைய பேச ஆரம்பிச்சேன். மத்த அரசியல்வாதிகள் மாதிரி எதுகை மோனையா பேசலை. நான் மக்கள்கிட்ட போனவுடன் ‘எப்படியிருக்கீங்க, சாப்பிட்டீங்களா'ன்னு சகஜமா பேச ஆரம்பிச்சிடுவேன். அப்போ நான் அவங்கள்ல ஒருத்தனா மாறிடுறேன். அதுக்குப் பிறகு, அதை ஒரு ஸ்டைலாவே மாத்திட்டேன். இதைத்தான் பேசணும்னு ரொம்பத் தயார் பண்ணிட்டுப் போனா, எனக்கு அது செட்டாகலை. அங்கங்கே என்னென்ன பிரச்னைகள் இருக்குன்னு மாவட்டச் செயலாளர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதைத் தொடர்புப்படுத்திப் பேசிடுவேன். அதுதான் அவங்களோடு என்னை ஈஸியா கனெக்ட்டாக்குச்சு. சந்தானம் போன் பண்ணி, ‘என்ன முதலாளி, உங்களுக்கு இப்படியொரு முகம் இருக்குன்னு தெரியாமப் போச்சே!'ன்னு சொன்னார். ஆர்யாவுக்கு செம ஷாக். சினிமாவுல டயலாக் பேசுறது வேற, மக்கள்கிட்ட பேசுறது வேற. அங்க ஒன் மோர் கேட்கமுடியாது. மனசுல இருந்து பேசணும். நிறைய பேர் பாராட்டினாங்க. அரசியல் மேடைகள்ல பேசிப்பேசி இப்போ சினிமா மேடைகள்ல பேசும்போது ‘நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா'ன்னு ஏதாவது பேசிடுறேன். அதனால எல்லோரும் பயப்படுறாங்க. மனசுல ஒண்ணை வெச்சுக்கிட்டு வெளியே பேசத் தெரியலை. என்ன தோணுதோ அதைப் பேசிடுறேன்.''

``நீங்க ஏழு வருஷம் காதலிச்சுத் திருமணம் பண்ணிக்கிட்டீங்க. இந்தத் தலைமுறையினர் காதலை எப்படிப் பார்க்கிறாங்கன்னு நினைக்கிறீங்க?’’- நிவேதா

‘‘நாங்க லவ் பண்ணும்போது செல்போனெல்லாம் கிடையாது. பேஜர்தான். நான் ஒரு பேஜர் வெச்சிருந்தேன். கிருத்திகாவுக்கு ஒரு பேஜர் வாங்கிக்கொடுத்தேன். லவ் இப்ப மாறிடுச்சான்னு தெரியலை. நான் இன்னும் கிருத்திகாவை அதே மாதிரிதான் லவ் பன்றேன். அதே அளவுக்கு பொசஸிவ்னெஸ் இருக்கு. ரெண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருக்கு. இப்போ இருக்கிற காதலும் அப்படித்தான் இருக்குன்னு நினைக்கிறேன். இப்போ ‘லவ் டுடே' படம் பார்த்தேன். நானும் கிருத்திகாவும் சண்டை போட்டுக்கிட்ட மாதிரிதான் இந்தப் படத்திலும் சண்டை போட்டுக்கிறாங்க. இளைஞர்களுக்கு அந்தப் படம் நல்லா கனெக்ட்டாகி இருக்கு. எனக்கும் கனெக்ட்டாகுது. சமீபத்துல அப்பா என்கிட்ட ‘என்ன படம் ஓடுது’ன்னு கேட்டார். ‘லவ் டுடே'ன்னு ஒரு படம் நல்லா ஓடுதுன்னு சொன்னேன். ‘நீதான் ரிலீஸா'ன்னு கேட்டார். ‘ஆமா. நான்தான் ரிலீஸ்'னேன். ‘வேற என்ன படம் ஓடுது'ன்னார். ‘காபி வித் காதல்'னேன். ‘அதுவும் நீதான் ரிலீஸா'ன்னு கேட்டார். ‘ஆமாம்’னேன். ‘இன்னும் வேறென்ன விட்டு வெச்சிருக்க'ன்னு கேட்டாங்க. ‘லவ் டுடே' பார்க்கச் சொன்னேன். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டிண்டர்னு படத்துல இருக்கும். அதெல்லாம் இவங்களுக்கு கனெக்டாகுமான்னு சந்தேகம் இருந்தது. ஆனா, அவங்களுக்கும் படம் பிடிச்சிருந்தது. அம்மாவுக்கும் பிடிச்சிருந்தது. படம் முடிஞ்சு வெளியே வந்ததும், ‘படம் ரொம்ப நல்லாருக்கு உதயா. நம்மளும் இதே மாதிரி போனை மாத்திக்கலாமா?'ன்னு கேட்டாங்க என் அம்மா. ‘ஆளை விடுங்கப்பா'ன்னு எஸ்கேப் ஆகிட்டேன்.''

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``பெரியப்பா அழகிரிக்கும் உங்களுக்குமான உறவு பத்திச் சொல்லுங்க?’’ - அரவிந்த்ராஜ்

‘‘அவர் பார்க்க முரட்டுத்தனமா இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, ரொம்ப சாஃப்ட். கோபாலபுரத்துல எல்லோரும் ஒரே வீட்லதான் இருந்தோம். பெரியப்பா பசங்க அஞ்சுகச்செல்வி, துரை தயாநிதி எல்லோரும் எனக்கு ரொம்ப நெருக்கம். ஒண்ணாவே வளர்ந்தோம். பெரியப்பாதான் எங்களையெல்லாம் பர்மா பஜாருக்குக் கூட்டிட்டுப் போய் எங்களுக்கு நிறைய பொம்மைகள், சைக்கிளெல்லாம் வாங்கித்தருவார். கோபத்துல எதாவது பேசிடுவாரே தவிர, ரொம்ப சாஃப்டான மனிதர். மூணு மாசத்துக்கு ஒருமுறை எங்கிட்ட போன்ல பேசிடுவார். சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரைப் போய்ப் பார்த்திடுவேன். என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்.''

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``தாத்தா உங்க படங்கள் பார்த்திருக்காரா ?’’ - சுதர்சன் காந்தி

‘‘முதல் படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' வெளியானப்போ தாத்தா என்னைக் கூப்பிட்டு, ‘என்னடா, படம் வெளியாகியிருக்காமே... சொல்லவேயில்லை'ன்னு கேட்டார். ‘ஆமா தாத்தா'ன்னு சொன்னேன். ‘பெரிய ஹிட் போலிருக்கு. என்கிட்ட காட்டவேயில்லை'ன்னார். ‘இல்ல தாத்தா. நீங்க பிஸியா இருப்பீங்க. அதான்'னு சொன்னேன். ‘எனக்கு உன் படத்தை உடனே பார்க்கணும். ஏற்பாடு பண்ணு'ன்னு சொன்னார். உடனே தாத்தாவுக்கும் பாட்டிக்கும் போட்டுக் காட்டினேன். படம் பார்த்துட்டு, ‘பரவாயில்லைடா. முதல் படம் மாதிரியே தெரியலை'ன்னார். அந்தப் படம் மட்டும்தான் பார்த்தார். அதுக்கு மேல அவருக்கு உடல்நிலை சரியில்லாமப்போயிடுச்சு. என்னுடைய ‘மனிதன்' படத்தை அவருக்குப் போட்டுக் காட்டணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, அது நடக்காமல்போனது ரொம்ப வருத்தம். இப்போ ‘நெஞ்சுக்கு நீதி' சமூகநீதியைப் பேசுற படமா இருந்தது. அதை தாத்தா பார்த்திருந்தா ரொம்பப் பெருமைப்பட்டிருப்பார்னு நினைக்கிறேன்.’’

‘` `நெஞ்சுக்கு நீதி’யில் நடித்திருக்கிறீர்கள். நிஜத்தில் சாதி, தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும்? ஓர் அரசியல் தலைவராக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’’ - சுகுணா திவாகர்

‘‘எல்லோருக்கும் ஒரே சமூக நீதிதான். அதைத்தான் படத்திலும் சொல்லியிருக்கோம். கல்வி மூலமா எல்லோருக்கும் அறிவு கொடுக்கலாம். நிச்சயமா ஜாதி பார்க்கக்கூடாதுன்னு ஒரு பிரசாரமாகவே பண்ணலாம்.”

`` ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனச் சொல்லி முதல்வர் பதவியேற்ற தருணம் எல்லோரையும் நெகிழ வெச்சது. மகனா உங்களுக்கு எப்படி இருந்தது?’’ - வெ.வித்யா காயத்ரி

‘‘ஒரு மகனா ரொம்பப் பெருமையா இருந்தது. அத்தனை வருட உழைப்பு. அவருக்குக் கட்டம் சரியில்லை, ஜாதகம் சரியில்லைன்னு என்னென்னவோ சொன்னாங்க. எல்லாத்தையும் தன் உழைப்பாலும் மக்கள் அன்பாலும் முறியடிச்சார். அந்தத் தருணம் உண்மையாவே ரொம்ப எமோஷனலா இருந்தது. அந்த வீடியோ பார்த்தாலே தெரியுமே. அப்பா சந்திக்காத வெற்றியும் கிடையாது; பார்க்காத தோல்வியும் கிடையாது. விடாமுயற்சிதான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கு. ஜெயலலிதா அம்மாவுக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்னா அது அப்பாதான். மத்தவங்க எல்லோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலை, நியமிக்கப்பட்டவர்கள். என் நண்பர் அன்பில் மகேஷ் அமைச்சரா பொறுப்பேற்கும்போது, அதைவிட எமோஷனலா இருந்தது.''

“பெரியப்பா அழகிரி என்மேல ரொம்பப் பாசமா இருப்பார்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``உங்களுக்கும் சந்தானத்துக்குமான நட்பு பத்திச் சொல்லுங்க. அவர்கிட்ட பிடிச்ச விஷயங்கள் என்னென்ன?’’ - அருந்ததி

‘‘எனக்கும் சந்தானத்துக்கும் நல்ல நட்பிருக்கு. சேர்ந்து படங்கள்ல நடிச்சு ரொம்ப வருஷமாச்சு. ஆனா, நாங்க அடிக்கடி பேசிக்குவோம், சந்திப்போம். அவர் படங்கள் தொடர்ந்து நான் விநியோகம் பண்ணிக்கிட்டிருக்கேன். கடைசியா ‘குலுகுலு' அவருக்காகத்தான் பண்ணினேன். படத்துல எப்படி கலகலன்னு ஜாலியா கலாய்ச்சுக்கிட்டு இருக்காரோ, நிஜத்திலும் அப்படித்தான். யாரையும் விட்டுவைக்கமாட்டார். சினிமாவுல அவருடைய வளர்ச்சி அபாரமா இருக்கு. சூப்பரா டான்ஸ் ஆடுறார், பயங்கரமா ஃபைட் பன்றார். பெரிய மாற்றம். அதுக்கு பின்னாடி அவருடைய கடின உழைப்பு இருக்கு. அது சாதாரணம் கிடையாது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.''

அடுத்த வாரம்

* கமல், மணிரத்னம் கூட்டணி மறுபடியும் அமைய நீங்கள்தான் காரணமா?

* உங்களுக்கும் கனிமொழிக்கும் தி.மு.க-வில் அடுத்து யார் பொறுப்புக்கு வருவார்கள் என்பதில் பனிப்போர்னு சொல்றாங்களே!

* ‘மாமன்னன்’ கதை கேட்ட அடுத்த நிமிஷமே ஓகே சொன்னீங்கன்னு மாரி செல்வராஜ் சொன்னார். அவரோடு ஒர்க் பண்ணின அனுபவம் எப்படி?

* தயாரிப்பாளர் உதயநிதிக்குப் பிடிச்ச இயக்குநர் யார்? நடிகர் உதயநிதிக்குப் பிடிச்ச இயக்குநர் யார்?