சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

`` ‘மாமன்னன்' கதை கேட்ட அடுத்த நிமிஷமே ஓகே சொன்னீங்கன்னு மாரி செல்வராஜ் சொன்னார். அவரோடு ஒர்க் பண்ணின அனுபவம் எப்படி?’’ - அதியமான்

‘‘பத்து நிமிஷத்திற்குள்ளே ஒரு லைன் தான் அவர் சொன்னார். முழுக்க அது அரசியல் படம். இதைக் கடைசிப் படமாகப் பண்ணலாம்னு நினைச்சேன். அவரோட ‘பரியேறும் பெருமாள்', ‘கர்ணன்' எனக்குப் பிடிக்கும். சுத்தி வளைக்காமல் கதை சொல்றது, அவரோட ஷாட்ஸ் எல்லாமே கவனிக்க வைக்கும். இந்தக் கதை நிச்சயமா ஒரு விவாதத்தை உருவாக்கும், சர்ச்சையைக் கிளப்பும். அதைப் படம் வரும்போது பார்ப்பீங்க. மாரி ஒரு மேஜிஷியன். அவர் வேலை வாங்குகிற விதம் நல்லாருக்கும். ஷூட்டிங் போர்க்களமாக இருக்கும். ‘நெஞ்சுக்கு நீதி' என்ன தைரியத்தில் செய்தேனோ, அதே தைரியத்தில் இதையும் செய்திருக்கேன். இன்னும் ஒரு சான்ஸ் கிடைத்தாலும் மறுபடியும் மாரி செல்வராஜ் இயக்கத்துல நடிக்க ஓகே சொல்லிடுவேன். ரொம்ப டைம் எடுப்பார். 80 நாளில் முடிச்சிடலாம்னு சொன்னார். 120 நாள் எடுத்தார். இப்பக்கூட போன் பண்ணி ‘ஒரு சீன் எடுத்தால் நல்லாருக்கும்னு தோணுது. ஒரு நாள் வேணும்'னு கேட்டார். சரின்னு சொல்லிட்டேன். ஏன்னா அவர் படங்கள் பிடிக்கும்.''

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``பகத் பாசிலோடு வேலை செய்த அனுபவம் எப்படி?’’ - சுதர்சன் காந்தி

‘‘மாரி 70 டேக் எடுப்பார். சீன் பேப்பர்கூட காட்ட மாட்டார். ‘ஃப்ரஷ்ஷா வாங்க பிரதர்'னு சொல்லுவார். சீன் எடுத்துட்டு திடீர்னு ‘பிடிக்கலை, மறுபடியும் எடுப்போம்'னு சொல்வார். ‘நான் நடிக்கிறது உங்களுக்குத் திருப்தியா'ன்னு ஆரம்பத்தில் கேட்டதுக்கு ‘எனக்கு சொல்லத் தெரியலை. கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன்'னார். பகத்திற்கும் மாரிக்கும் நல்லா செட்டாகிடுச்சு. அவங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. எவ்வளவு எடுத்தாலும் ‘நாளைக்கும் ஒரு தடவை எடுத்துப் பார்க்கலாம்'னு பகத் சொல்வார். பகத் நல்ல நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘மாமன்னன்' படத்தில் நானும் கீர்த்தி சுரேஷும் அங்கங்கே இருப்போம். பகத் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருப்பார். ஆனால் எல்லோரையும் ஓரந்தள்ளி வச்சிட்டு, ‘சின்ன பசங்க எல்லோரும் தள்ளி நில்லுங்க'ன்னு சொல்ற மாதிரி வடிவேலு சார் நடிச்சிருக்கார். அவருக்கு தேசிய விருதுக்கு வாய்ப்பு இருக்கு. ‘மாமன்னன்'னா வடிவேலு சார்தான்.''

``அம்மா கோயிலுக்குப் போவார், அப்பா போக மாட்டார். இவங்களுக்கு இடையில் சிக்கின அனுபவம் இருக்கா?’’
- நிவேதா


‘‘நானும் கோயிலுக்குப் போறதில்லை. சினிமாவில் நடிக்கும்போதும் சுத்திப்பார்க்கப் போகும்போதும் மட்டும் கோயிலுக்குப் போவேன். எங்க வீட்டில் பூஜையறை இருக்கு. அதில் முன்னோர்கள் படங்கள் ஒரு பக்கம் இருக்கும். மறுபக்கம் அம்மாவோட சாமிகள் இருக்கும். என் முன்னோர்களை மட்டும் வணங்குவேன். எனக்கும், என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஈ.சி.ஆர் பக்கம் ஏழெட்டு வருஷத்துக்கு முன்பு வீடு கட்டினேன். அம்மா வந்து பார்த்திட்டு ‘என்ன உதயா, பூஜையறையே இல்லை'ன்னு சொன்னாங்க. அவங்க ஆசைக்காக இப்ப பூஜையறை கட்டி வச்சிருக்கேன்.''

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம்னு சொன்னீங்க. அந்த ரகசியத்தை இப்ப சொல்ல முடியுமா?’’
- வினி சர்பனா


‘‘இரண்டு தடவை சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். அவர் வாங்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்கார். இப்போ ஆளுநரை மாத்தணும்னு கேட்டுட்டு இருக்கோம். நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு தன்னெழுச்சி இயக்கமாகப் போராடி, அதில் எல்லோரும் ஒன்றுசேரணும். அடுத்து சட்டப்படியாகவும் நடவடிக்கை எடுத்திட்டிருக்கோம்.''

``2001-ல தாத்தா கைது செய்யப்பட்டபோது, அவர் மறைந்தப்போ அடக்கம் செய்ய இடம் கிடைக்காதபோது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?’’
- வெ.நீலகண்டன்


‘‘நாங்க பிறந்து வளர்ந்ததெல்லாம் கோபாலபுரம்தான். தாத்தாவைப் பார்த்துக்கிட்டே வளர்ந்தது நல்ல அனுபவம். கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருப்போம். தாத்தா வருவது தெரிந்ததும் உள்ளே ஓடுவோம். அவருக்கு கிரிக்கெட்னா உயிர். சச்சின், தோனி பிடிக்கும். டெஸ்ட் மேட்ச்கூட உட்கார்ந்து பார்ப்பார். தாத்தா கைதான அன்னிக்கு கிருத்திகாவிற்குப் பிறந்தநாள். வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போனால் அப்பாவைக் கைது பன்றதுக்காக போலீஸ் வெளியே நிக்கிறாங்க. அப்புறம்தான் தாத்தா கைதானது தெரியுது. அங்கே ஓடினோம். ராத்திரியோட ராத்திரியா ஜெயிலுக்குக் கொண்டு போறாங்க. அடுத்த நாள்தான் எங்கள பார்க்க அனுமதிச்சாங்க. தாத்தா தைரியமா இருந்தார். ‘என்னடா, வெளியே பிரச்னையா இருக்கா'ன்னு கவலைப்பட்டார். ‘அப்பா நல்லா இருக்காரா'ன்னு விசாரித்தார். அவருக்கு இதெல்லாம் சாதாரணமாகத் தெரியும். தாத்தாவுக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததும் எனக்கு சங்கடமாப்போச்சு. நானும் கனி அத்தையும் அப்பாகிட்டே போய், ‘நாம் தாத்தாவை மெரினாவுக்கு எடுத்துட்டுப் போய் அடக்கம் செய்யலாம்'னு சொன்னோம். ‘என்ன, விளையாடுறீங்களா? சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகிடும். சட்டப்படி போராடுவோம்'னு சொன்னார். தாத்தா இறந்தபிறகும் ஒரு போராட்டம் பண்ணி ஜெயிச்சுட்டுத்தான் போனார்.''

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``விஜயகாந்த் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ - பிரேம் குமார்

‘‘அவர் கலைஞர் மேலே ரொம்பப் பாசமாக இருப்பார். நான் முன்னாடி ஸ்னோ பௌலிங் நடத்திக்கிட்டு இருக்கும்போது நடிகர்களை வச்சு ஸ்டார் பௌலிங் நடத்திக் கொடுத்தார். அதில் வந்த தொகையை நடிகர் சங்கத்திற்குக் கொடுத்தோம். தாத்தா இறந்த பிறகு, அழுது தவித்து அவர் வெளியிட்ட வீடியோ பார்த்தாலே அவருடைய பாசம் புரியும். நான் தேர்தல்ல ஜெயிச்சதும் முதலில் அவரைத்தான் போய்ப் பார்த்தேன். அவரோட மகன்கள் இரண்டு பேர்கிட்டேயும் எப்பவும் தொடர்பில் இருக்கிறேன். அடிக்கடி அவர் உடல்நலம் பற்றி விசாரிச்சுக்கிட்டே இருப்பேன். அவர் ஆரோக்கியமாக நல்லபடியா திரும்பி வரணும்.''

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``உங்களுக்கும் கனிமொழிக்கும் தி.மு.க-வில் அடுத்து யார் பொறுப்புக்கு வருவார்கள் என்பதில் பனிப்போர்னு சொல்றாங்களே?’’ - செந்தில் கரிகாலன்

‘‘யார் சொல்றாங்க? நீங்கதான் சொல்றீங்க. அப்படி ஒரு விஷயமே இல்லை. பாட்டியை அடிக்கடி போய்ப் பார்ப்பேன். அத்தைகிட்ட அடிக்கடி பேசுவேன். அவங்க துணைப் பொதுச்செயலாளர் ஆனபோது வாழ்த்து சொன்னேன். நாடாளுமன்றத்திலும் மகளிரணியிலும் அவங்க பணி சிறப்பாக இருக்கு.''

``தேர்தல் பிரசாரத்துல ‘எய்ம்ஸ்' செங்கல்லைக் காட்டிப் பேசினது வைரலாச்சு... அதற்கான ஐடியா யாருடையது?’’
- மௌரீஷ்


‘‘என்னுடையதுதாங்க. மதுரை போயிட்டு விருதுநகருக்குப் பிரசாரம் போனபோது, மாவட்டச் செயலாளர் மணிமாறன் ‘எய்ம்ஸ் கட்டடம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. செங்கல் மட்டும் இருக்கு'ன்னு சொன்னார். உள்ளே பார்த்தால் அவர் சொன்னமாதிரியே ஒண்ணுமே இல்லாம இருந்துச்சு. விருதுநகர் நெருங்கும்போது, ‘ஒரு செங்கல்லை எடுத்து வைப்பா'ன்னு ஓட்டுனர்கிட்டே சொன்னேன். அவர் பயந்து எதுக்குன்னு கேட்டார். ‘எடுத்து வைப்பா. நான் பேசிட்டு இருக்கும்போது கொடு'ன்னு சொன்னேன். அப்புறம் அதை எடுத்துக் காட்டிப் பேசினேன். பயங்கர வைரலாச்சு. ஒரு விஷயத்தை இயல்பான நகைச்சுவையோடு சொன்னா, மக்கள் அதை நல்லபடியா எடுத்துக்கிறாங்க. இப்பக்கூட பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா 95% வேலை முடிஞ்சிடுச்சுன்னு சொன்னார். இன்னும் செங்கல்லுக்கு வேலை இருக்கும்போல.''

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

``கமல், மணிரத்னம் கூட்டணி மறுபடியும் அமைய நீங்கள்தான் காரணமா?’’ - ர.சீனிவாசன்

‘‘யாருமே எதிர்பார்க்கலை. நானே எதிர்பார்க்கலை. ஹெச்.வினோத் படத்திற்குப் பிறகுதான் இந்தப் படம் ஆரம்பமாகுது. ‘இது அரசியல் படம் இல்லையே'ன்னு மட்டும் கேட்டேன். ‘இல்லை'ன்னு கமல் சார் சொன்னார். ‘சரி, ஓகே’ன்னு சொல்லிட்டேன்.''

``தயாரிப்பாளர் உதயநிதிக்குப் பிடிச்ச இயக்குநர் யார்? நடிகர் உதயநிதிக்குப் பிடிச்ச இயக்குநர் யார்?’’ - சே.ஹரிபாபு

‘‘தயாரிப்பாளரா எனக்கு எழில் சார் பிடிக்கும். சொன்ன பட்ஜெட்டைவிட, சொன்ன நாளைவிட குறைச்சு முடிச்சுக் கொடுத்துடுவார். எதைக் கொடுத்தாலும் அது லாபமாக வந்து நிக்கும். ‘சரவணன் இருக்க பயமேன்' பெரிய லாபம். ஒரு நாளைக்கு மூணு சீன்கூட எடுக்கிற திறமை அவருக்கு இருக்கு. ஒரு நடிகராக எனக்கு வெற்றிமாறன் படத்தில் நடிக்கணும்னு பிரியம் இருக்கு. அது ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரியாது. மாரி செல்வராஜ் என்னை வேற விதத்தில் வேலை வாங்குறதும் பிடிக்கும்.''

“விஜயகாந்த் நல்லபடியா திரும்பி வரணும்!” - விகடன் பிரஸ்மீட் - உதயநிதி ஸ்டாலின்

`` ‘இந்தியன் 2' மறுபடியும் தொடங்கப்பட்ட பின்னணி என்ன?’’
- அதியமான்


‘‘பின்னணியில் ஏன் நடக்குது? யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்குத்தானே? அதை எப்படி வெளியே சொல்றது? ஒண்ணுமில்லை, சில சின்னக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. பேசி சமாதானம் செய்து வச்சோம். ‘விக்ரம்' வெற்றிக்குப் பிறகு அது மாதிரி பெரிய படமான ‘இந்தியன் 2' ஏன் பாதியிலேயே நிக்கணும்னு நினைச்சோம். இப்ப நல்லபடியாகப் போகுது.''

விகடன் டீம்
விகடன் டீம்

``உங்க அம்மா, மனைவி, தங்கச்சி, மகள் பத்திச் சொல்லுங்க!’’
- மோனிகா


‘‘அம்மா கண்டிப்பானவங்க. சின்னப் பிள்ளையா இருக்கும்போது படிக்கலைன்னா அடிப்பாங்க. தங்கச்சி ரொம்ப தைரியமான பொண்ணு. தாத்தாவுக்கே பயப்படமாட்டாங்க. தாத்தா, அப்பாகிட்டே பயப்படாமல் நேரடியாகப் பேசுவாங்க. மகள் இப்போதான் படிச்சுக்கிட்டு இருக்காங்க. எப்படி வர்றாங்கன்னு பார்க்கணும். மனைவி கிருத்திகா என் பொறுப்பையும் சேர்த்துப் பார்க்கிறாங்க. சினிமா, கட்சி வேலையா பாதி நாள் வீட்டிற்குக்கூட சரியாகப் போக மாட்டேன். வீட்டை நல்லபடியாகப் பார்த்துக்கிறாங்க. அதோடு திறமையா சினிமா வேலையையும் சேர்த்துப் பார்க்கிறாங்க.''