சினிமா
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”
விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”

``நடிப்பில் உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார்?’’

- சீனிவாசன்

``வெளிநாட்டுல ஆர்சன் வெல்ஸ் பிடிக்கும். என்னை ரொம்பப் புரட்டிப் போட்ட நடிகர். அவர் நம்மூர் குருதத் மாதிரி. அவரே நடிகர், அவரே இயக்குநர்னு எல்லாமும் அவரே செய்வார். நம்மூர்ல கமல் சார், ரஜினி சார் சொல்லலாம். அப்புறம், அண்ணன் சூர்யா படங்களும் பிடிக்கும். நான் நடிக்கப்போறேன்னு சொன்னப்போ ‘நடிக்கறதுன்னா நீ உன்னை மாத்திக்கணும். அதுக்கான பயிற்சிகளைக் கத்துக்கணும்’னு சொன்னார். ஏன்னா, அண்ணா நடிக்க வந்தபோது அவரைப் பலரும் கிண்டல் பண்ணினாங்க. டீமோட்டிவேட் பண்ணினாங்க. அது எனக்குத் தெரியும். சமூகத்துல ஒரு மனுஷனா, ஒரு நடிகரா ஒவ்வொரு விதத்திலேயும் அவர் தன்னைத் தயார் பண்ணிக்கிட்டார். என் பக்கத்திலேயே இருக்கற பெரிய ஒரு ரெஃபரன்ஸ் பாயின்ட் எங்க அண்ணாதான்.’’

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”
ஆர்சன் வெல்ஸ்
ஆர்சன் வெல்ஸ்

`` ‘பொன்னியின் செல்வன்' ஷூட்ல எப்போதெல்லாம் பதற்றமா இருந்தீங்க?’’

- சுதர்சன் காந்தி

‘‘காதல் காட்சிகளில் நடிக்கும்போது எல்லாம் பதற்றமா இருக்கும். ஏன்னா, வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய். தவிர, ஃபிட்னஸ் வேலைகள் நிறைய இருந்தது. தொடர்ந்து பதினைந்து நாள் ஃபைட் சீன் இருந்தது. இதுக்கு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். குந்தவை, நந்தினி, பூங்குழலின்னு பெண்கள்கிட்ட பேசுறபோது எல்லாம் வேற வேற தொனி இருக்கும். நந்தினி கிட்ட அவன் அறிவாளியா தெரியணும். குந்தவைகிட்ட அவன் அழகா தெரியணும். பூங்குழலிகிட்ட நக்கலா இருக்கணும். அந்த வித்தியாசம் காட்டறது சவாலா இருந்தது.’’

``ஒரு கதையைத் தேர்வு செய்யணும்னா, அதில் என்னென்ன விஷயங்கள் எதிர்பார்ப்பீங்க?’’

- கார்த்திகா ஹரிஹரன்

‘‘ஒவ்வொரு கட்டத்திலும் அது மாறிட்டே இருக்கும். ‘மெட்ராஸ்' ரிலீஸின் போது ஆல்பர்ட் தியேட்டர்ல படம் பார்த்தேன். அப்ப இடைவேளை விடுறதுக்கு முன்னாடி என்னை தியேட்டர் ஆப்ரேட்டர் கூப்பிட்டுப் பேசினார். அவர், `இன்டர்வெல் பிளாக் வரப் போகுது. இப்ப என்ன நடக்குதுன்னு பாருங்க'ன்னார். இடைவேளை விட்டு லைட் போட்டாங்க. தியேட்டர்ல யாரும் சீட்டை விட்டு எழுந்திரிக்கல. அவர் என்கிட்ட `இந்தப் படம் ஹிட்'டுன்னார். அதைப்போல, இன்னொரு படம் பார்த்தேன். அதுவும் என் படம்தான். கதை தொய்வடையும் காட்சிகள் வரும்போது எல்லாரும் தியேட்டரில் மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் கதை கேட்கும்போது, பார்வையாளர்களுக்கு எங்கேஜிங்காகவே இருக்கணும்னு நினைக்கறேன். ஏன்னா, மக்கள் எதுக்கும் கவனம் கொடுக்கறது குறைஞ்சிக்கிட்டே வருது. எந்தக் கதையா இருந்தாலும் மனித உறவுகளோட இருந்தால், அதில் எளிதா ஒட்டிக்க முடியும். ‘மக்கள் கொடுக்கற காசுக்கு நம்ம படம் திருப்தியா இருக்கணும்'னு அண்ணாவும் சொல்வார். அது மனசுலயே இருக்கு.''

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”

``பயோபிக் நடிக்கணும்னு ஆசை இருக்குதா? யாரோட பயோபிக்ல நடிக்கணும்னு விரும்புறீங்க?’’

- வெங்கட்

‘‘அப்படி நான் யோசிக்கல. இருந்தாலும் சமீப காலமா வரலாறு ரொம்பப் பிடிக்குது. வரலாற்றுக் கதைகள்ல இருந்து ஒரு கேரக்டர் எடுத்து நடிக்கறதை விரும்புறேன். வந்தியத்தேவனுக்குப் பெரிய வரலாறு இல்லை. ஆனா, கல்வெட்டுகள்ல அவரைப் பற்றிச் சொல்லியிருப்பாங்க. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் வெளிக்கொண்டு வரணும்னு ஆசை இருக்கு.''

``நீங்க ‘பருத்தி வீரன்'ல நடிக்க வர்றதுக்கு முன்னாடி உங்களை வேற யாரும் நடிக்க அணுகியதுண்டா?’’

- கே.ஜி.கார்த்தி

‘‘இயக்குநர் பிரியா `கண்ட நாள் முதல்' படத்துக்காக என்னை நடிக்கக் கேட்டாங்க. ‘எனக்கு நடிக்க வராது, விட்ருங்க’ன்னு சொல்லிட்டேன். அது நான் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகியிருந்த ஆரம்பக் காலம். எனக்கும் அப்ப நடிப்புல சுத்தமாவே ஐடியா இல்ல. அப்புறம் ஒருமுறை மணி சாருடன் ஒரு ஃபங்ஷனுக்குப் போயிட்டு அவரை கார்ல ஏத்திவிட்டுட்டுத் திரும்புறேன். அங்கே பாலாஜி சக்திவேல் சார் நின்னுட்டிருந்தார். சூர்யா சார் தம்பியா நீங்க? ஏன் இன்னும் நடிக்காமல் இருக்கீங்க?'ன்னு கேட்டார். அப்பவும் நான் நடிக்கப்போகலை. ‘பருத்தி வீரன்' நடிச்சதுக்கு காரணம், ஞானவேல்ராஜா அண்ணா, அப்பான்னு எல்லாரும் என்னை ‘நீ ஒருதடவ நடிச்சுத்தான் பாரேன்'னு சொன்னாங்க. மணி சாரும் ‘நீ ட்ரை பண்ணு’ன்னு சொல்லி அனுப்பி வச்சார்.''

மனைவி ரஞ்சனியுடன்
மனைவி ரஞ்சனியுடன்
மகள் உமையாளுடன்
மகள் உமையாளுடன்

`` ‘ஆய்த எழுத்து'ல சூர்யாவோட தம்பி ரோலுக்கு ஆடிஷனுக்கு வரச் சொல்லி மணிரத்னம் ஆபீஸ்ல இருந்து போன் வந்ததாமே ..?’’

- சுதர்சன் காந்தி

‘‘சித்தார்த் ரோலுக்குத்தான் கேட்டாங்க. ‘சூர்யாவோட தம்பி மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு'ன்னு மணிரத்னம் சொல்லும்போது, யாரோ ஒரு நலம் விரும்பி, ‘சூர்யா தம்பியே இருக்காரே, அவர்கிட்ட கேட்கலாமே'ன்னு சொல்லவும்தான் என்கிட்ட கேட்டாங்க. நான் என்ன சைஸ்ல இருப்பேன்னு மணி சாருக்குத் தெரியாது. ‘நாம உதவி இயக்குநர் ஆகணும்னு நினைக்கிறோம், நடிக்கக் கூப்பிடறாங்களே’ன்னு குழப்பம். வீட்லே, ‘மணிரத்னமே கூப்பிடுறாரே, போயிட்டு வா'ன்னு அனுப்பினாங்க. நான் அப்போ 110 கிலோ இருந்திருப்பேன். அவர் ஆபீஸ்ல நான் கதவைத் திறந்துட்டு உள்ள போனப்ப, மணி சார் எக்ஸ்பிரஷன்ஸ் மாறவுமே எனக்குப் புரிஞ்சிடுச்சு. நானும் உடனே அவர்கிட்ட ‘நடிக்கற ஆர்வம் இல்ல. உங்ககிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்ணணும்னுதான் அமெரிக்காவுல இருந்தே வந்தேன். இந்த சான்ஸை அதுக்குப் பயன்படுத்திக்கறதுக்காகத்தான் வந்தேன்'னு சொன்னேன். ‘Your are most welcome'னு சொன்னார். அப்போ ‘யுவா' (‘ஆய்த எழுத்து' இந்தி வெர்ஷன்) ஷெட்யூலை முடிச்சிருந்தாங்க. தமிழ்ல படம் தொடங்கலை. ‘ஆய்த எழுத்து' தொடங்கினதுல இருந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.’’

விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”
விகடன் பிரஸ்மீட்: கார்த்தி - “வந்தியத்தேவன் பெரிய லவ்வர் பாய்!”

``தியா - தேவ் பத்தித் சொல்லுங்க. உங்களுக்கும் அவங்களுக்கும் எவ்வளவு நெருக்கம்..? உங்க குழந்தைகள் உமையாள், கந்தன் என்ன படிக்கிறாங்க?’’

- சூர்ய கோமதி

‘‘எங்க வீட்ல முதல் குழந்தை தியா. அதனால், எல்லோருக்கும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ரொம்ப சென்சிட்டிவ். தியாவுடைய புரிதலும், எதையும் வெளிப்படுத்துற விதமும் அழகா இருக்கும். இங்க இருந்தாலும், மும்பை போனாலும் ஊருக்குப் போய் எங்க ஆத்தாகூட இருந்தாலும், அந்தந்தச் சூழலுக்கு ஏத்த மாதிரி அவங்களை மாத்திக்கிறாங்க. தேவுக்கு ஸ்போர்ட்ஸ், படிப்புன்னு எல்லாம் நல்லா வருது. அவங்க அப்பா மாதிரி நிறைய விஷயங்கள் மெனக்கெடுறார். பேஸ்கட் பால் விளையாடுவார். உமையாள் நான்காம் வகுப்பு படிக்கிறாங்க. கந்தனுக்கு ஒன்றரை வயசுதான் ஆகுது. ஆனா, இப்போவே வாய் ஜாஸ்தியா இருக்கு. நான் வீட்ல இருந்தா தியா, தேவ், உமையாள், கந்தன் நாலு பேருடன் Four corners, Crocodile crocodile இந்த மாதிரி எனக்குத் தெரிஞ்ச விளையாட் டெல்லாம் சொல்லிக் கொடுத்து, அவங்களை ஏமாத்தி ஜெயிப்பேன்.’’ (சிரிக்கிறார்)

``உங்களோடு வொர்க் பண்ணின ஹீரோயின்களில் செம ஃப்ரெண்ட்லின்னு யாரைச் சொல்வீங்க? அதேபோல, உங்க மனைவி ரஞ்சனியும் எந்த ஹீரோயினும் ரொம்ப நெருக்கம்?’’

- ஹரிபாபு

‘‘முதல் பட ஹீரோயின் பிரியாமணியில இருந்து எல்லோருடனும் இன்னமும் நட்பான தொடர்பில்தான் இருக்கேன். சமீபமாகூட, ரீமா சென் கூப்பிட்டாங்க. ‘கோவாவுல செட்டிலாகிட்டேன். ஃபேமிலியோட வா'ன்னு சொன்னாங்க. அனுஷ்காவும் என் மனைவி ரஞ்சனியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.’’

அடுத்த வாரம்

* சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க யாரோட ரசிகர்... அவர் படம் பார்த்த தியேட்டர் மொமன்ட் ஒண்ணு?

* ஏன் அறிமுக இயக்குநர்களுக்கு நீங்கள் அதிகம் வாய்ப்பு தருவதில்லை?

* சூர்யா, ஜோதிகா ரெண்டு பேருமே சில கருத்துகளை முன் வைக்கும்போது அரசியல் ரீதியாக நெருக்கடிகள் வந்தது. அப்போ உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

 * சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணின்னு தொடர்ச்சியா நான்கு படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கலை. அப்போ உங்க மனநிலை என்ன?