“எனக்கும் அந்த அவமானம் நடந்திருக்கு!” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.
#Ananda VikatanPressMeet
24 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள். இந்தப் பயணத்துல உங்களால மறக்க முடியாத பாராட்டு எது?
- ஜெனிஃபர் ம.ஆ

“மறக்க முடியாத பாராட்டுன்னா அது என் ஆரம்பக்காலத்துல கிடைச்சதுதான். அப்போ அம்மாவோட அடிக்கடி ஹாலி டேவுக்கு சிங்கப்பூர் ட்ரிப் போவோம். ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்துக்கு அப்புறம் ஒருதடவை அப்படி நாங்க சிங்கப்பூர் போய்ட்டு திரும்ப வந்தப்போ இங்கே ஏர்போர்ட்ல நான் முன்னாடி நடந்து வந்துகிட்டிருந்தேன். அம்மாவும் அக்காவும் பின்னாடி வந்துகிட்டிருந்தாங்க. அப்போ அங்க இருந்த ஆபீஸர்ஸ் அம்மாவை கை காட்டி, ‘அதுதான் யுவனோட அம்மா’ன்னு சொன்னாங்க. எனக்குக் கேட்டவுடனே ஒருமாதிரி ஷாக். ‘சரி நம்மளையும் மக்கள் ஏத்துக் கிட்டாங்க’ன்னு நான் புரிஞ்சுகிட்ட தருணம் அது.”
இந்த லாக்டெளன்ல இசைரீதியா புதுசா என்ன முயற்சி பண்ணிப் பார்த்தீங்க?
- ர.சீனிவாசன்
“முதல் ஒருவாரம் எல்லாரையும் போலவே எனக்கும் ‘இதை எப்படிக் கடக்கப்போறோம்’னு நிறைய கேள்விகள் இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு எடிட்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். ரமலானுக்கு மியூசிக்கலா ஒரு சீரிஸ் பண்ணலாம்னு மனைவி ஒரு ஐடியா கொடுத்தாங்க. அப்படித் தொடங்குனதுதான் ‘யா நபி’ பாடல். அந்தப் பாட்டை நான் அரேஞ்ச் பண்ணி எடிட்டும் பண்ணினேன். இந்த ஒரு பாட்டுக்கே நிறைய எனர்ஜி செலவானதால அடுத்தடுத்து பாட்டுகள் பண்ணமுடியல.”

அப்பா உங்ககூட பகிர்ந்துகிட்ட அனுபவங்கள், பண்ணின அறிவுரைகளில் உங்களால மறக்கமுடியாதது எது?
-தேவன் சார்லஸ்
“அப்பா இதுவரைக்கும் இப்படிப் பண்ணு அப்படிப் பண்ணுன்னெல்லாம் சொன்னதே இல்ல. நான் என்னெலாம் படம் பண்ணுறேன்னுகூட அவருக்குத் தெரியாது. ஒரே ஒரு தடவை ஒரு பாட்டு அம்மாவுக்குப் போட்டுக் காட்டுறப்போ அப்பாவும் கேட்டார். அந்தப் பாட்டுல ‘உனக்காக சாகிறேன்’ சாயல்ல சில வார்த்தைகள் வரும். ‘பாடல்களில் எதிர்மறை வார்த்தைகள் வேணாம். அந்த நெகட்டிவ் எனர்ஜி பாடுறவங்களையும் தொத்திக்கும். முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கலாம்’னு சொன்னார். அந்த ஒரு அறிவுரைதான் அவர் எனக்குக் கொடுத்தது. ஆனா, அடி வாங்கியிருக்கேன். சின்னப்பையனா இருந்தப்போ அப்பாவோட நேரம் செலவழிக்கிற வாய்ப்பு எப்பவாவதுதான் கிடைக்கும். அப்படி ஒருநாள் ‘பீச்சுக்குப் போலாம்’னு சொன்னார். கார்ல ஏறிக் கிளம்புறப்போ அவரைப் பார்க்க சில தயாரிப்பாளர்கள் வந்துட்டாங்க. அப்பா அவங்ககூட பேசுறதுக்கு உள்ள போயிட்டார். நான் வெளியே காருல உட்கார்ந்து, ‘பீச்சுக்குப் போலாம், பீச்சுக்குப் போலாம்’னு கத்திக்கிட்டு ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தேன். விறுவிறுன்னு வெளியே வந்து ‘பட்’னு ஒரு அடி. ‘கீப் கொயட்’னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டார். அந்த ஒருதடவைதான் அவர் என்னை அடிச்சது.”
உங்க டிஷர்ட் போட்டோ இவ்ளோ வைரலாகும்னு எதிர்பார்த்தீங்களா?
- சனா
“இவ்ளோ வைரலாகும்னு நான் எதிர்பார்க்கல. சும்மா யதேச்சையா பண்ணுனதுதான். ஆனா அந்த டிஷர்ட்ல இருந்த ‘I am a tamil speaking Indian’ங்குற வார்த்தைகள் உண்மைதானே. அதுல எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இப்பவும் இல்ல. என்னோட கருத்து அது. ஏன்னா எனக்கு சில கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கு. வெற்றிமாறன் சாருக்கு நடந்த மாதிரியே எனக்கும் ஏர்போர்ட்ல ஒரு அனுபவம் இருந்திருக்கு. நான் நிறைய பயணிக்கிறவன். ஒருமுறை கீழக்கரை போய்ட்டு திரும்ப மதுரை வந்தப்போ அங்கே இருக்கிற ஆபீஸர்ஸ் என்கிட்ட இந்தில ஏதோ கேட்டாங்க. ‘எனக்குப் புரியல’ன்னு சொன்னேன். உடனே அவங்க எல்லாரும் அவங்களுக்குள்ள ஜோக் அடிச்சு என்னைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாம இப்போ பாம்பே ஏர்போர்ட் போய் அங்கே இருக்குற எல்லாப் பணியாளர்களும் தமிழில்தான் பேசணும்னு சொன்னா அது தப்புதானே? அப்புறம் ஏன் இங்கே மட்டும் இந்தியில பேசணும்னு எதிர்பார்க்குறாங்க? இந்தியாவோட அழகே இவ்ளோ வேற்றுமைகளிலும் ஒற்றுமையா இருக்கிறதுதானே. நான் இந்தி மொழியை எதிர்க்கல. நிறைய இந்திப் படங்கள் இசையமைச்சிருக்கேன். இந்திப் பாடல்கள் பாடியிருக்கேன். எனக்கு அந்த மொழி மேல எந்த வெறுப்பும் கிடையாது. அதைத் திணிக்காதீங்கன்னுதான் சொல்றேன். அந்த டிஷர்ட் பார்த்தப்போ எனக்கு இந்தக் கசப்பான அனுபவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அதனாலதான் அந்த டிஷர்ட் போட்டேன். மத்தபடி எனக்கு எந்த அரசியல் அஜெண்டாவும் கிடையாது.”

சினிமாவுல சாதியை மையப்படுத்திய படங்கள் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. இதை எப்படிப் பார்க்குறீங்க?
-தேவன் சார்லஸ்
“அவங்கவங்களுக்குத் தேவையானதை அவங்கவங்க பண்ணிக்கிறாங்க. நான் முன்னாடியே சொன்னமாதிரி இந்த நாடு வேற்றுமையிலும் ஒற்றுமையா இருக்கிற நாடு. இங்கே எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாம சமமா இருக்கணுங்கிறதுதான் என் கருத்து.”
நா.முத்துகுமார் உங்கள் இசையில் எழுதுனதுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு எது?
- ம.காசி விஸ்வநாதன்
“முத்துவோட எல்லாப் பாடல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்தப் பாட்டு கேட்டாலும் அந்தப் பாட்டுக்கு நானும் அவரும் எப்படில்லாம் ஒர்க் பண்ணுனோம்ங்கிறதுதான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். என் கண்ணைப் பார்த்தே எனக்கு அந்த வரிகள் ஓகேவா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவார். அப்படி ஒரு புரிதல் இருந்தது எங்களுக்குள்ள. ‘ஒருநாளில்’ பாட்டுக்கு நான் டியூன் கம்போஸ் பண்ணி முதல் நாள் கொடுத்துட்டேன். அன்னிக்கு நைட்டே செல்வாவோட உட்கார்ந்து முத்து அதுக்கு வரிகள் எழுதிட்டாரு. மறுநாள் செல்வா என்னைக் கூப்பிட்டு வரிகள் வாசிச்சுக் காமிச்சதும் அன்னிக்கே ரெக்கார்டிங் போய்ட்டேன். அந்த ஒரு இரவு முழுக்க நாங்க மூணு பேரும் அந்தப் பாட்டைத் திரும்பத் திரும்ப லூப்ல கேட்டுக்கிட்டே இருந்தோம். இப்படி நிறைய ஞாபகங்கள். லேட்டஸ்டா ராம் இயக்கிய படத்துக்கு ஒர்க் பண்ணுனப்போ கூட இப்போ இந்த இடத்துல முத்து இருந்திருந்தா நல்லா இருக்குமே’ன்னு தோணுச்சுதான். ஆனா என்ன பண்ணுறது?”
நீங்க அப்பாவோட ட்யூன்களில் இருந்து இன்ஸ்பையராகி சில பாடல்கள் போட்ருக்கீங்க ‘மேகம் கருக்குது மழ வரப் பாக்குது’ மாதிரி. அப்படி நீங்க இன்ஸ்பையராகி ஆனா நாங்க இன்னும் கண்டுபிடிக்காத பாடல்கள் எதுவும் இருக்கா?
- சனா
“ ‘யாரோ யாருக்குள் இங்கே யாரோ’ பாட்டு ‘ஏதோ மோகம்’ பாட்டுல இருந்து இன்ஸ்பையராகி போட்டதுதான். ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாட்டுல வர்ற மூணு நோட்ஸ் வச்சுதான் ‘இதுவரை இல்லாத உறவிது’ பாட்டு போட்டேன். இந்தமாதிரி நிறைய இருக்கு. மூணு நோட்ஸ் இன்ஸ்பையர் ஆகுறதுல தப்பில்ல.”
இப்போ இருக்குற இசையமைப்பாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? உங்க ப்ளேலிஸ்ட்ல லேட்டஸ்ட்டா ரிப்பீட்ல ஓடுற பாடல் எது?
- ர.சீனிவாசன்
“நான் எல்லா இசையமைப்பாளர்களோட பாடல்களையும் கேட்பேன். ஜி.வி, தமன், இமான் எல்லாருமே அடிக்கடி பேசிப்போம். சமீபத்துலன்னா அனிருத் ‘டாக்டர்’ படத்துக்குப் போட்ட ‘நெஞ்சமே’ பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. மத்தபடி இப்போ பழைய பாடல்கள்தான் நிறைய கேட்டுகிட்டு இருக்கேன்.

அப்பாவால கிடைச்ச விஷயங்கள் நிறைய இருந்திருக்கும். அப்பாவால மிஸ் பண்ணுன விஷயங்கள்னு ஏதாவது இருக்கா?
- மா.பாண்டியராஜன்
“மிஸ் பண்ணுனதுன்னா அப்பாவுடன் சின்ன வயசுல நேரம் செலவழிக்க முடியாமப் போனதுதான். என் நண்பர்கள் எல்லாரும் அவங்க அப்பாவுடன் நேரம் செலவழிக்கிறதைப் பார்க்கிறப்போ நமக்கு அப்படி இல்லையேன்னு தோணும். ஆனா அம்மா என்னை ரொம்ப ஏங்கவிட்டதில்ல. அப்பா ஸ்தானத்துல இருந்தும் என்னை ரொம்ப பாத்துகிட்டாங்க. அதனால நான் அம்மா செல்லம். அண்ணன்தான் அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். அண்ணன் அளவுக்கு அப்பாகூட நான் உரையாடினதுமில்ல.”
வாழ்க்கையில ஒரு மோசமான காலகட்டத்துல மது குடிக்க ஆரம்பிச்சதா நீங்களே ஒரு நேர்காணல்ல சொல்லியிருந்தீங்க? அதென்ன காலகட்டம், அந்த மதுப்பழக்கத்திலிருந்து எப்படி மீண்டிங்கன்னு பகிர்ந்துக்க முடியுமா?
- நித்திஷ்
“அம்மா இறந்த சமயம் அது. நம்மளை இத்தனைநாளா தாங்கின தூண் இனி இல்லங்கிறதை என்னால ஏத்துக்க முடியல. அதுவரைக்கும் எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவங்க இழப்பைத் தாங்கிக்க முடியாமதான் அந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சேன். ஆனா, அந்தச் சமயத்துலயும், ‘இது நாம இல்லையே... நாம இதெல்லாம் பண்ண மாட்டோமே’ன்னு உள்ள தோணிகிட்டேதான் இருந்தது. அந்தச் சமயத்துல சினிமாவை விட்டே விலகியிருந்தேன். அம்மாவோட கடைசி நாளில் பெட்ல இருந்து அவங்க கை சட்டுனு கீழே விழுந்தது. டாக்டர்ஸ் வந்து செக் பண்ணிட்டு அவங்க இறந்துட்டதா சொன்னாங்க. ‘போன நிமிஷம் வரை அந்தக் கையில இருந்த ஆன்மா அதுக்குள்ள எங்கே போச்சு’ங்குற கேள்வி துரத்திகிட்டே இருந்தது. அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாமுக்குள்ள கொண்டு போச்சு. இந்தமாதிரியான சமயங்களில் எல்லாருக்குமே ஒரு பிடிப்பு தேவைப்படும். அப்படி இஸ்லாம் எனக்கான ஒளியைக் கொடுத்துச்சு. மீண்டு வந்தேன்.”
நெப்போடிசம்தான் இப்போ ரொம்பவே விவாதிக்கப்படுற விஷயம். இந்த வாரிசு ஆதிக்கத்தை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?
- ர.சீனிவாசன்
“நான் எந்தப் பிரச்னைனாலும் அதோட இரண்டு பக்கங்களையும் பார்க்க முயற்சி பண்ணுவேன். இதுலயும் அப்படித்தான். நெப்போடிசம் நிச்சயமா இருக்கு. அதை மறுக்கவே மாட்டேன். அதுவும் சினிமா மட்டுமில்ல, எல்லாத் துறைகளிலும் இருக்கு. தெரிஞ்சே அதைப் பண்ணுறது வேற. ஆனா, இப்போ நான் ஒரு காமெடி படம் தயாரிக்கிறேன்னு வச்சுக்கோங்களேன், அதுல நடிக்க எனக்கு சட்டுனு மனசுல வர்ற ஆள் பிரேம்ஜியாதான் இருக்கும். அவர் என் குடும்பம், ஸோ, குடும்பத்துக்காகப் பண்ணுறேன்னு அர்த்தம் கிடையாது. எனக்கு அவரை நல்லாத் தெரியும், அதனால அவர் பண்ணலாம்னு தோணும். உங்ககிட்ட வந்து நான் ஒரு ப்ளெம்பர் சொல்லுங்கன்னு கேட்டா உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச ப்ளெம்பரைத்தானே நீங்க சொல்லுவீங்க. அதுமாதிரிதான் இதுவும். இதை ஒரு அடிப்படை மனித சுபாவமா பார்க்கிறேன். நெப்போடிசமா பார்க்கல.”
அப்பா- அண்ணன் - நீங்க, மூணு பேரும் பொருந்திப்போற விஷயம் எது? வேறுபடுற விஷயம் எது?
- அய்யனார் ராஜன்
“மூணு பேரும் ஒத்துப்போற விஷயம்னா அது கண்டிப்பா இசை. அப்புறம் குடும்பம். வேறுபடுகிற விஷயம்னா அம்மாவோட நினைவு நாள் மாதிரியான நிகழ்வுகளுக்கு அவங்க போவாங்க. நான் போகமாட்டேன். ஏன் வரலன்னு அவங்க கேட்கவும் மாட்டாங்க. நான் இஸ்லாமுக்கு மாறப்போறேன்னு சொன்னப்போ அப்பாவும் அண்ணனும் சப்போர்ட்தான் பண்ணினாங்க. எனக்கான வெளியை அவங்க மதிக்கிறாங்க. அந்தப் புரிதல் எங்களுக்குள்ள எப்பவுமே இருக்கும்.”
அப்பா காப்பிரைட் பிரச்னைகளை பேசினப்போ அவருக்கு ஆதரவாவும் எதிராவும் நிறைய கருத்துகள் வந்தது. நீங்க ஒரு இசையமைப்பாளரா காப்பிரைட் பிரச்னையை எப்படி அணுகுறீங்க?
- வெ.நீலகண்டன்
“காப்பிரைட் பிரச்னையை நாம இனியும் முறைப்படுத்தலன்னா இதுக்கு அப்புறம் வரப்போற இசையமைப்பாளர்கள் ரொம்பவே சிரமப்படுவாங்க. அதுக்காகவாவது இந்த காப்பிரைட் பிரச்னையை ஸ்ட்ரீம்லைன் பண்ணித்தான் ஆகணும்.”

யுவன் தனியிசை ஆல்பம் ஒண்ணு வெளியிட்டு ரொம்ப நாளாகுது. எப்போ எதிர்பார்க்கலாம் ஒரு மாஸான ஆல்பத்தை?
- சுதர்சன் காந்தி
“பஞ்சாபிப் பாடகர் பாட்ஷாவோட ஒரு பாடல் ஒர்க் பண்ணியிருக்கேன். அதுதான் அடுத்து வெளியே வரும். இதுதவிர, லாக் டெளன்ல நிறைய பாடல்கள் கம்போஸ் பண்ணி வச்சிருக்கேன். இப்போ அதுக்கான ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் வேலைகள் போய்கிட்டிருக்கு. சீக்கிரமே அந்தப் பாடல்களை நீங்க கேட்பீங்க”
அடுத்த வாரம்...
யுவன் இசையில் இளையராஜா பாடின அளவுக்கு ராஜா இசையில் யுவன் பாடினது இல்ல.. இது பத்தி அப்பாகிட்ட கேட்டிருக்கீங்களா?
சோஷியல் மீடியாவுல நடக்குற ராஜா - ரஹ்மான் சண்டையை எப்படிப் பார்க்கிறீங்க?
அம்மா முன்னாடி ஒரு நேர்காணல்ல உங்களை ஹீரோவா பார்க்க ஆசைப்படுறதா சொல்லியிருந்தாங்க... எப்போ ஹீரோவா என்ட்ரி?