கட்டுரைகள்
Published:Updated:

“ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேங்க்ஸ்..!” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
யுவன் ஷங்கர் ராஜா

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

#AnandaVikatanPressMeet

“யுவன்னாலே எல்லாருக்கும் தீம் மியூசிக்தான் ஞாபகத்துக்கு வரும். நீங்க இசையமைச்சதிலேயே உங்க மனசுக்கு நெருக்கமான தீம் மியூசிக் எது?”

- நித்திஷ்

“மங்காத்தாதான். அளவா மூணே நோட்ஸ். அதை எப்போ கேட்டாலும் அந்த கேரக்டர் ஞாபகத்துக்கு வரணும்னு முடிவு பண்ணி வொர்க் பண்ணுன தீம் அது. ‘தென்பாண்டிச் சீமையிலே’ பி.ஜி.எம் கேட்டா வேலுநாயக்கர் ஞாபகத்துக்கு வருவார்ல... அதேமாதிரி! ஆனா, அந்த தீம் இவ்ளோ பெரிய ஹிட்டாகும்னு நானே எதிர்பாக்கல. அந்த ரீச், அந்தப் படத்துல வேலை பார்த்த காலகட்டம்னு எல்லா வகையிலயும் ரொம்ப நெருக்கமான தீம் அது.”

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

“ ‘அரவிந்தன்’ மூலமா 16 வயசில் இசையமைப்பாளரா தமிழ் சினிமாவுக்கு வந்துட்டீங்க. முதல் படமே சீனியர் நடிகரோடு கனமான கதை. எப்படி அந்த வயசில் கதையை உள்வாங்கி இசையமைக்க முடிஞ்சது?”

- சனா

“ரொம்ப அழுத்தமான கதை அது. முதல்ல பாட்டுகள் எங்கெல்லாம் வரணும்னு மட்டும் நானும் இயக்குநரும் முடிவு பண்ணினோம். அந்த வயசுல எனக்கு அனுபவம்னு பெருசா எதுவும் இல்ல. அவ்ளோ முதிர்ச்சியா இருந்ததாவும் தோணல. என்னோட பெரிய பலம்னு நான் நினைக்கிறது, அந்தந்த மூடுக்கேத்த மாதிரி என்னால மியூசிக் பண்ண முடியும். ஒவ்வொரு கேரக்டரும் அந்தந்தக் காட்சில எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பாங்கன்னு கண்ணை மூடி யோசிச்சு அதுக்கேத்தமாதிரி ஒர்க் பண்ணினேன். முதல் பாட்டு பவதாரிணிதான் பாடினாங்க. அம்மா சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு வர்ற கீபோர்டு எல்லாம் அண்ணனுக்குத் தான் போகும். அவர்கிட்ட அடம்பிடிச்சு ஒரு ஓட்டை கீபோர்டு வாங்கி முதல்ல டிரெய்லருக்குத்தான் மியூசிக் பண்ணினேன். அது பிடிச்சுப் போகவும் மொத்தப் படத்துக்கும் பண்ணச் சொல்லிட்டாங்க.

இதுல இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. இதுவரைக்கும் இதை நான் எங்கேயுமே பகிர்ந்துகிட்டதில்ல. நான் இசையமைக்க வந்ததுக்கு முதல் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். எனக்கு பைலட் ஆகணும்ங்கிறதுதான் லட்சியம். சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சே பார்த்ததில்ல. அதுநாள் வரைக்கும் ஸ்கூல்ல ‘இளையராஜா பையன்’னு எனக்கு ஸ்பெஷல் மரியாதை இருக்கும். அந்த டைம்லதான் ரஹ்மான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சியடைஞ்சு வந்துகிட்டிருந்தார். அதனால கவனம் மெல்ல மெல்ல ரஹ்மான் பக்கம் திரும்ப ஆரம்பிச்சது. என் கஸின் ஒருத்தரே ஒருநாள் என்கிட்ட, ‘இனி உன் அப்பாவெல்லாம் ஒண்ணும் கிடையாது. ரஹ்மான்தான் எல்லாம்’னு சொன்னார். எனக்கு ரொம்பவே ஷாக். ஏன்னா, அப்பாவுக்கு அப்புறம் அண்ணன்தான் அந்த இடத்துக்கு வருவாருன்னு நாங்க எல்லாருமே நம்பிட்டு இருந்தோம். அண்ணனுக்கு எல்லாத் திறமையும் இருந்தும் ஏனோ அந்த டைம்ல க்ளிக் ஆகல. அன்னிக்கு நைட் முழுக்க மனசுல என் கஸின் சொன்னதுதான் ஓடிக்கிட்டே இருந்தது. ‘அப்பாவோட மரபு விட்டுப்போய்டக்கூடாது. அது தொடர்ந்துகிட்டே இருக்கணும்’னுதான் முதல் படத்துக்கு ஓகே சொன்னேன். ஸோ, இதுக்காக ரஹ்மானுக்கு நான் நன்றி சொல்லணும்!”

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

“யுவன் இசையில் அப்பா பாடுன அளவுக்கு அப்பா இசையில் யுவன் பாடினது இல்ல. இதுபத்தி அவர்கிட்ட எப்பவாவது கேட்டிருக்கீங்களா?”

- வெ.நீலகண்டன்

“கேட்டதில்ல. ஏன்னா, அவர் இசைல ‘சாய்ந்து சாய்ந்து’ பாடும்போதே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒரு சங்கதியை என்னால பாடவே முடியல. அப்பாதான் ரெக்கார்டு பண்ணிட்டிருந்தாரு. நார்மலா அவர்கூட போன்ல பேசுறப்பவே எங்கே இருந்தாலும் எழுந்து நின்னுதான் பேசுவேன். அதனால இன்னும் கஷ்டமா இருந்தது. ஒருகட்டத்துல, ‘டாடி நீங்க ரூமுக்குப் போய்ட்டு வாங்க. நான் பாடி வைக்கிறேன். எனக்கு சுத்தமா வரல’ன்னு சொன்னேன். அப்பா கிளம்பினதுக்கு அப்புறம் கெளதம்தான் வந்து பாட்டை ரெக்கார்டு பண்ணினார்.”

“கார்த்திக் ராஜாகூட தொடர்ச்சியா உங்களை ஒப்பிடுவதை எப்படிப் பார்க்கிறீங்க?”

- மா.பாண்டியராஜன்

“நான் இதுக்கு எப்பவுமே சொல்ற பதில் ஒண்ணுதான். அவர் என்னைவிட ரொம்பவே திறமைசாலி. அவர் அப்பாவோட ஸ்கூல்ல இருந்து வர்றவர். நான் இசைன்னு எதுவுமே முறையா கத்துக்கிட்டதில்ல. அண்ணன், அக்கா எல்லாம் மியூசிக் கிளாஸ் போறப்பவும் நான் வெளியே விளையாடிக்கிட்டிருப்பேன். அண்ணன் வேற பாதை. நான் வேற பாதை. அதனால ஒப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல. ஏனோ அவருக்கு சரியா படங்கள் அமையல. ஆனா, இப்பவும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. ஒரு சரியான படம் அமையுறப்போ அவர் உயரத்துக்குப் போய்டுவார்.”

“ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேங்க்ஸ்..!” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

“ரஹ்மான் சார் பத்தி அப்பாவும் நீங்களும் பேசிக்குவீங்களா?”

- கிருஷ்ணா

“நிறைய பேசினதில்ல. ‘ரங்கீலா’ பட சமயத்துல அதுல ஒரு பாட்டை அப்பாவுக்குப் போட்டுக் காமிச்சோம். `யாயிரே’தான் அந்தப் பாட்டுன்னு நினைக்கிறேன். அதைக் கேட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டார். ‘சவுண்டிங்காவும் டெக்னிக்கலாவும் நல்லா இருக்கு’ன்னு பாராட்டினார். அவ்ளோதான்.”

“வாலி, வைரமுத்து - இவர்கள் இரண்டு பேருடனும் முதல் தடவை கம்போஸ் செய்த அனுபவம் எப்படி இருந்தது?”

- பஷீர்

“வாலி அங்கிளோட முதல் தடவை ஒர்க் பண்ணினது பத்தி அவ்வளவா ஞாபகமில்ல. ஆனா அவர்கூட எப்ப ஒர்க் பண்ணினாலும் ஜாலியா இருக்கும். ‘பாணா காத்தாடி’ படத்துல வர்ற ‘தாக்குதே கண் தாக்குதே’ ட்யூனுக்கு முதல்ல வேறமாதிரி எழுதியிருந்தார். ‘இல்ல அங்கிள், இதுக்கு இப்படி வேணாம். நான் சொல்றமாதிரி மாத்திக்கொடுங்க’ன்னு போன் பண்ணிச் சொன்னேன். ‘யோவ்... புரிஞ்சிடுச்சுய்யா... நான்தான் வேற மாதிரி நினைச்சுட்டேன். இப்பப் பாரு, எப்படி எழுதித் தர்றேன்னு’ சொல்லி உடனே எழுதித் தந்தார். கொஞ்சம்கூட ஈகோ இல்லாதவர். யாரா இருந்தாலும் சமமா நடத்துவார். ‘யோவ்... இதை இப்படி மாத்திக்கலாமாய்யா?’ன்னு நம்மகிட்ட கேட்பார். அவர் இருந்த உயரத்துக்கு அப்படிலாம் கேட்கணும்னு அவசியமே இல்ல. ஆனாலும் தயக்கமே இல்லாமக்கேட்பார். அதனாலேயே அவர்கூட ஒர்க் பண்ண நல்லா இருக்கும்.

ரொம்ப நாளாவே வைரமுத்து சார்கூட ஒர்க் பண்ணணும்னு ஆசை. அம்மாகிட்ட சொன்னேன் ‘நான் வைரமுத்து அங்கிளோட சேர்ந்து ஒரு படம் வேலை பார்க்கணும்’னு. அம்மா அப்பாகிட்ட சொன்னாங்க. அப்பா ‘அவனுக்கு இஷ்டம்னா தாராளமா பண்ணட்டும்’னு சொல்லிட்டார். ‘இடம் பொருள் ஏவல்’லதான் சேர்ந்து வேலை பார்க்கிற சந்தர்ப்பம் அமைஞ்சது. அவரை சந்திச்சப்போ அப்பாவும் அவரும் சேர்ந்து ஒர்க் பண்ணுன அனுபவங்கள் பத்தி நிறைய பகிர்ந்துகிட்டார்.”

“மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பாடியிருக்கீங்க. இன்னொருத்தர் இசையில் ‘இது நம்மால பாடிட முடியுமா’ன்னு உங்களை பயப்பட வெச்ச பாட்டு ஏதாவது இருக்கா?”

- சுகுணா திவாகர்

“பயப்பட வெச்சதுன்னு சொல்லமுடியாது. ஆனா ரொம்பத் தயங்க வெச்ச பாட்டு ‘கடல் ராசா’தான். ட்யூன் எனக்கு முன்னாடியே ரஹ்மான் சார் ஆபீஸ்ல இருந்து அனுப்பிட்டாங்க. அதுல ஒரு ஹை பிட்ச் வரும். அதைப்பத்தி யோசிச்சுக்கிட்டே ரெக்கார்டிங் போனேன். நான் போன நேரம் அவர் இல்ல. ‘சார் தொழுகைக்குப் போயிருக்கார். வர லேட்டாகும். நீங்க ரெக்கார்டிங் போறதா இருந்தா போய்டலாம்’னு அவர் ஆபீஸ்ல சொன்னாங்க. ‘இல்ல. அவர் வந்ததுக்கு அப்புறமே பாடுறேன்’னு சொல்லி வெயிட் பண்ணினேன். ஏன்னா, ஒரு கம்போஸர்தான் பாடுறவருக்கு ஈஸியா சொல்லித் தரமுடியும். அவர் வந்து நான் கஷ்டம்னு நினைச்ச போர்ஷனை எப்படிப் பாடுறதுன்னு சொல்லிக் கொடுத்தார். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது.”

“சமூக வலைதளங்கள் எல்லாரையுமே பாடகர்கள் ஆக்கிவிடுகின்றன. ‘இசையை இப்படி லைட்டா டீல் பண்ணுறாங்களே’ன்னு உங்களுக்குத் தோணியிருக்கா? சமூக வலைதளம் வழியே உங்களைக் கவர்ந்த இசைக்கலைஞர்கள் யாராவது இருக்காங்களா?”

- அய்யனார் ராஜன்

“சோஷியல் மீடியாவுல நல்லா பாடுறவங்களுக்கு நானே பர்சனலா மெசேஜ் பண்ணிப் பேசுவேன். ‘நேர்கொண்ட பார்வை’ல ‘அகலாதே’ பாட்டு பாடின ப்ருத்வி இப்படி சோஷியல் மீடியா வழியே எனக்கு அறிமுகமானவங்கதான். சமீபத்துலகூட ஒரு கிட்டார் ப்ளேயர் வாசிக்கிறதை இன்ஸ்டாகிராம்ல பார்த்து அவர்கிட்ட பேசி அவரை ‘குருதி ஆட்டம்’ படத்துல ஒர்க் பண்ண வெச்சிருக்கேன்.”

“கோவா படத்தில் வரும் ‘ஏழேழு தலைமுறைக்கும்’ பாட்டு உங்கள் குடும்பமே சேர்ந்து பாடியிருக்கும். யாருடைய ஐடியா அது? எப்படி இருந்தது அந்த அனுபவம்?”

- தேவன் சார்லஸ்

“அது வெங்கட் பிரபு ஐடியா. ‘அம்மன் கோயில் கிழக்காலே’ பாட்டு சாயல்ல வேணும்னு அவர் சொல்ல, அதை அப்படியே கங்கை அமரன் அப்பா பாட்டா எழுத, நாங்க எல்லாரும் சேர்ந்து பாடினோம். ஆனா, படத்துக்கும் அந்தப் பாட்டுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. படத்துல அந்தப் பாட்டை எதுக்கு வெங்கட்பிரபு வெச்சார்னே தெரியல. ஆனா, எங்களுக்கு ஜாலியா இருந்தது.”

“ ‘யுவனுக்குப் பாட்டு வரிகள் பிடிச்சிட்டா அவரே அந்தப் பாட்டைப் பாடிடுவாரு’ன்னு சிநேகன் ஒருமுறை சொல்லியிருந்தார். அப்படி இந்தப் பாட்டை நான்தான் பாடுவேன்னு நீங்க சொன்ன பாடல்கள் என்னென்ன?”

- காசி விஸ்வநாதன்

“நான்தான் பாடுவேன்னு சொல்லியெல்லாம் எந்தப் பாட்டும் பாடினது இல்ல. யார் பாடுறதுங்கிறதெல்லாம் இயக்குநர்களோட சாய்ஸ்தான். வேற பாடகர்கள் பாடி அது இயக்குநருக்குப் பிடிக்காம அப்புறம் அதை நான் பாடின சம்பவங்களும் இருக்கு. நான் பாடி அது இயக்குநருக்குப் பிடிக்காம வேற பாடகர்களை வெச்சு ரெக்கார்டு பண்ணுன அனுபவமும் இருக்கு. இந்த விஷயத்துல இயக்குநர்களுக்கு என்ன வேணுமோ அதுதான் பண்ணுவேன்.”

“ரஹ்மான் வீட்ல உங்களுக்கு ஒரு ரசிகர் இருக்கார்னு கேள்விப்பட்டோம். அமீனுக்கும் உங்களுக்குமான நட்பு எப்படிப்பட்டது?”

- தேவன் சாார்லஸ்

“ரஹ்மான் சாரும் நானுமே அப்பப்போ சாட் பண்ணிப்போம். அவர் பையன் அமீன் கூட பேட்மின்டன் ஆடுவேன். அமீனும் நானும் நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். அவங்கவங்க வொர்க் பத்திப் பேசிப்போம். அமீனை எனக்காக ஒரு பாட்டு பாடச்சொல்லிக் கேட்ருக்கேன். ஒரு தனியிசைப் பாடல் அது. அவருக்கு இனிதான் ட்ராக் அனுப்பணும்.”

“உங்க பொண்ணு ஜியா எவ்ளோ சுட்டி?”

- சுதர்சன் காந்தி

“ரொம்ப ரொம்ப சுட்டி. இந்த லாக்டௌன் முழுக்க தாத்தாவோட பேஸ்டைம்ல பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்பா இத்தனை வருஷமா இசை, பயணம்னு ஓடிக்கிட்டே இருந்தவர். லாக்டௌன்ல அவர் அதையெல்லாம் மிஸ் பண்ணி வருத்தப்படக்கூடாதேன்னு தினமும் ஜியாவை அவர்கூட பேச வெச்சேன். ரெண்டு வயசுல இருந்தே அப்பாவோட எந்தப் பாட்டு போட்டாலும் ‘இது தாத்தா பாட்டு’ன்னு சரியா சொல்லுவாங்க. ஒருநாள் டெஸ்ட் பண்ணுறதுக்காக எம்.எஸ்.வி அங்கிளோட பாட்டை ஓட விட்டேன். எதுவுமே சொல்லல. ஆனா அப்பா பாட்டை மட்டும் எப்படியோ கண்டுபிடிச்சடுறாங்க. எப்படின்னு எனக்கே புரியல.”

“சமூக வலைதளங்களில் ராஜா-ரஹ்மான் ரசிகர்களுக்கு இடையே பலகாலமா ‘யார் பெஸ்ட்’டுங்குற சண்டை நடந்துகிட்டே இருக்கு. இதை எப்படிப் பார்க்கிறீங்க?”

- சுகுணா திவாகர்

அது ஆரோக்கியமான போட்டியா இருக்குறவரை எந்தப் பிரச்னையும் இல்ல. எல்லா ரசிகர்களுக்கும் அவங்களுக்குப் பிடிச்சவங்க மேல ஒரு அபிமானம் இருக்கும்தானே. அதுக்காக இன்னொருத்தரைத் தாழ்த்திப் பேசுறது மட்டும் வேணாமே. வார்த்தைகளால யாரையும் காயப்படுத்திடாத ஆரோக்கியமான போட்டின்னா எனக்கும் ஓகேதான்.

அடுத்த வாரம்...

  • `` `வலிமை’ படத்தில் என்ன மாதிரியான தீம் மியூசிக், பாடல்களை எதிர்பார்க்கலாம்?’’

  • ``தமிழ் சினிமாவில் மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவாகச் செயல்படுத்தப்படுகிறதாக சில அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவதை எப்படிப் பார்க்கிறீங்க?"

  • "விஜய்கூட வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பாட வைப்பீர்களா? அந்தப் பாட்டு என்ன ஜானரில் இருக்கும்?"