சினிமா
தொடர்கள்
Published:Updated:

விக்ரம் - சினிமா விமர்சனம்

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி

விட்டுப்போன கோடுகளை சரியாய் இழுத்துப் புள்ளிகளோடு இணைக்கிறது பிலோமின் ராஜின் படக்கோவை.

கிளாசிக் கமலை ரசித்து அவருக்காகவே காட்சிகளை இழைத்து மாஸ் மசாலாவைத் தூவி நாஸ்டாலஜியா நினைவுகளையும் சேர்த்துக் கிளறினால் அதுதான் ‘விக்ரம்.’

இரண்டு டன் எடையுள்ள போதைமருந்து மூலப்பொருளை மாபியாவிடமிருந்து கைப்பற்றிப் பாதுகாப்பாகப் பதுக்கிவைக்கிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ் ஜெயராம். இதனால் மாபியாவின் கோபத்திற்கு ஆளாகி உயிரை விடுகிறார். அதன்பின்னும் தொடர்ச்சியாய் சில கொலைகள் நடக்க, அவற்றை விசாரிக்க பகத் பாசில் தலைமையிலான குழு களமிறங்குகிறது. ஒருபக்கம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் கொலையாளி, மறுபக்கம் சரக்கைத் தொலைத்துவிட்ட கோபத்தில் மூர்க்கமாய்த் திரியும் ‘வேட்டி வகையறா’ கும்பலின் தலைவன் விஜய் சேதுபதி... இந்தக் கொடூர அதிகாரப் போட்டியில் கமலின் பங்கு என்ன, அவரின் பின்னணி எப்படிப்பட்டது என விரிவதுதான் மீதிக்கதை.

விக்ரம் - சினிமா விமர்சனம்

ரகளையாய், ஆக்ரோஷமாய், ஆர்ப்பாட்டமாய் ஒரு கமலைப் பார்த்து எத்தனை நாள்களாகின்றன? அவ்வளவு காத்திருப்பிற்கும் மொத்தமாய் இரண்டாம் பாதியில் நியாயம் செய்கிறார் கமல். ‘பாத்துக்கலாம் வுடு’ எனத் தோளைக் குலுக்குவதாகட்டும், முதல்பாதியின் முக்கியக் காட்சியில் நக்கலாய் சிரிப்பதாகட்டும், ‘உம் கொட்டு என்னா?’ என க்ளைமாக்ஸில் சதாய்ப்பதாகட்டும், எண்பதுகளின், தொண்ணூறுகளின் கமர்ஷியல் ‘வசூல்ராஜா’வை மீண்டும் கண்முன் கொண்டுவந்து அசரடிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவர்காட்டும் பிரயத்தனம், அடுத்தடுத்த தலைமுறைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

முதல்பாதி முழுக்க முழுக்க பகத் பாசிலின் படம்தான். கமல் படத்தில் அவரளவிற்கு ஒரு நடிகர் வெளித்தெரிவது என்பது கிட்டத்தட்ட அசாத்தியமே! பகத் என்னும் மகத்தான கலைஞனுக்கு இந்தப் படத்தில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. கேமரா தன்னை எந்தக் கோணத்தில் காட்டினாலும் அத்தனை ஆங்கிளிலும் ஸ்கோர் செய்து சிக்ஸர் அடிக்கும் வல்லமை வெகு இயல்பாகக் கைவருகிறது அவருக்கு. பெரிதாய் பரபரப்புகள் இல்லாத முதல்பாதியில் பார்ப்பவர்களைத் திரையோடு ஒன்றவைப்பது இவரின் நடிப்புத்திறனே!

பிரத்யேக உடல்மொழிக்காக விஜய்சேதுபதி உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. மிரட்டல் பார்வை, நக்கல் பன்ச்கள் ஆகியவை ஓகே! ஆனாலும் வித்தியாசமாய் அறிமுகமாகும் அவர் இறுதியில் வழக்கமான வில்லனாகிப்போவதும் அவருக்கான காட்சியமைப்புகள் மிகக் குறைவாக இருப்பதும் படத்தில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணாமல் போவதுதான் பெருங்குறை.

விக்ரம் - சினிமா விமர்சனம்

கடைசி கடைசியாய் சூர்யா. மிகச்சில நிமிடங்களே என்றாலும் அவர் வரும் காட்சிகளில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது அவரின் எனர்ஜி. ரகசியங்கள் காக்கும் காவல்துறை அதிகாரி ரோலுக்கு செம்பன் வினோத் பக்கா பொருத்தம். இதுபோக நரேன், சந்தானபாரதி, இளங்கோ குமரவேல், காயத்ரி, ஜாபர் சாதிக் என திரைகொள்ளாத அளவிற்கு நடிகர்கள். அவரவருக்கு முடிந்தமட்டும் கதை நகர்வதற்குப் பங்களித்திருக்கிறார்கள். இவர்களுள் தனியாய்த் தெரிவது சந்தேகமே இல்லாமல் வசந்தி (எ) ஏஜென்ட் டினா.

மாஸ் படங்களென்றால் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்துவிடுவார் போல அனிருத். கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் படமென்றாலும் நம்மைச் சோர்வடையச் செய்யாமல் அதிரடிக்கிறது அவரின் இசை.

ஆக்‌ஷன் த்ரில்லரில் ஒளிப்பதிவுதான் முக்கியமான கதைசொல்லி. அதைச் செவ்வனே செய்திருக்கிறார் கிரிஷ் கங்காதரன். லோகேஷ், கிரிஷ் இருவருக்குமே இரவும் இருளும் மிகப்பிடித்த களமென்பதால் கிரிஷ் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ‘அடுத்தென்ன, சண்டைதான்’ என ஒரு ஆக்‌ஷன் படத்தில் யூகிப்பது எளிதுதான். ஆனால் அவை அனைத்தையும் முன் பார்த்திடாத வகையில் வடிவமைத்து ஒவ்வொருமுறையும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் அன்பறிவ். தத்ரூபமான துப்பாக்கிகள், மர்மம் கூட்டும் செட்கள் என இவர்களுக்கு கச்சிதமாய் ஒத்துழைக்கிறது சதீஸ் குமாரின் கலை இயக்கம்.

விக்ரம் - சினிமா விமர்சனம்

விட்டுப்போன கோடுகளை சரியாய் இழுத்துப் புள்ளிகளோடு இணைக்கிறது பிலோமின் ராஜின் படக்கோவை. தன் முந்தைய படத்தை இந்தப் படத்தோடு பொருத்தமாய் இணைத்து, அதில் தன் ஆதர்ஷ நாயகனின் ‘விக்ரம்’ படத்தையும் ஒட்டி எல்லாரையும் திருப்திபடுத்தும் திரைக்கதையை அளித்தவகையில் லோகேஷுக்கு வெற்றியே! போக, ஆக்‌ஷன் படம்தானே எனப் பரபரவென இழுத்துச் செல்லாமல் முதல்பாதியில் நேரமெடுத்து விவரிக்கும் தன்மையும் சிறப்பு.

ஆனால் படத்தின் பிரதான பிரச்னை ஓரிடத்தில்கூட ஒட்டாத எமோஷனல் காட்சிகள். ‘பேரன் மீதான பாசம்’ என்கிற லாஜிக்கில் கட்டமைக்கப்படும் மொத்தக் கதையையும் நியாயப்படுத்த ஒரே ஒரு பாடல்காட்சி எப்படிப் போதும்? குண்டு வைத்து குடும்பத்தையே அழிக்க நினைக்கும் பகத் போன்றதொரு ஆளுக்கு இழப்பு நிகழும்போது எப்படி அதற்காகக் கலங்க முடியும்? இரண்டாம் பாதியில் அவிழும் எல்லா முடிச்சுகளையும் முன்பாதியிலேயே நம்மால் யூகித்துவிட முடிவதால், ‘அப்புறம், அடுத்து அதானே?’ என்கிற ரீதியிலேயே படம் பார்க்க முடிகிறது.

விக்ரம் - சினிமா விமர்சனம்

இவைதவிர கமர்ஷியல் படங்களுக்கே உரிய லாஜிக் மீறல்கள். அதிகாரியை நடுவே உட்கார வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறையும் ரவுடிகளும் என்பது தொடங்கி பல்லாயிரம் கோடி பரிவர்த்தனை செய்யும் உள்ளூரின் பாப்லோ எஸ்கோபர் அண்ட் கோ, பெரும்பாலும் கத்தி, பழைய துப்பாக்கிகளையும் தூக்கிச் செல்வது வரை ஏகப்பட்ட ‘ஏன்’கள். போக, கதை நடக்கும் நிலப்பரப்போ காலமோ யதார்த்தத்திற்குப் பல மைல்கள் தூரத்தில் இருப்பதும் இயல்பாகவே ஒரு அந்நியத்தன்மையைக் கொண்டுவந்துவிடுகிறது.

மேக்கிங்கில் மிரட்டி, பார்ப்பவர்களைத் திரையோடு கட்டிப்போட்டுப் படம் முடியும்வரை வேறெதைப் பற்றியும் யோசிக்கவிடாமல் செய்யும் கமர்ஷியல் மேஜிக்கை எல்லாராலும் நிகழ்த்திவிட முடியாது. அப்படிப் பார்க்கும்பட்சத்தில் தன் ஆதர்ச நாயகனைக் கொண்டே அந்த மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் லோகேஷ்.