சினிமா
Published:Updated:

விருமன் - சினிமா விமர்சனம்

விருமன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
விருமன் - சினிமா விமர்சனம்

மூத்த நடிகர்களான ராஜ்கிரணும் பிரகாஷ்ராஜும், சரண்யாவும் இதுவரை என்ன செய்து நம்மைப் பார்க்கவைத்துப் பழக்கியிருக்கிறார்களோ அதையே இந்தப் படத்திலும் செய்கிறார்கள்.

முப்பதாண்டுகளுக்கு முந்தைய கதையில் இப்போதைய முன்னணி ஹீரோ ஒருவர் நடித்தால் அதுதான் ‘விருமன்.'

வருசநாட்டு தாசில்தார் பிரகாஷ்ராஜ். பணத்திற்காக சொந்தங்களைக்கூட போட்டுத்தள்ளத் தயங்காத பேராசைக்காரர். அவரின் அகம்பாவத்தால் மனைவி சரண்யா உயிர் விட நேர்கிறது. இதைக் கண்டு கொதித்தெழுகிறார் பிரகாஷ்ராஜின் நான்கு மகன்களில் கடைக்குட்டியான கார்த்தி. அம்மா சாவிற்குக் காரணமான அப்பாவைப் பழிவாங்குவதும் தன் அண்ணன்களை அப்பாவிட மிருந்து மீட்பதுமே அவரின் வாழ்நாள் லட்சியமாகிறது. இதனால் ‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்' கதையாக கார்த்தியும், ‘அட்டமத்து சனியை வட்டிக்கு வாங்கிய' நிலையாக பிரகாஷ்ராஜும் சண்டையும் சொலவடைகளுமாக சோதிப்பதே மீதிக்கதை.

கார்த்தி - திரையில் முதன்முறை தோன்றியபோது இருந்த அதே எனர்ஜி. நையாண்டி, துள்ளல் எனப் படம் முழுக்க நிறைக்கிறார். அந்நியப்பட்டு நிற்கும் சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் கார்த்தி புண்ணியத்தில்தான் ஓரளவிற்கு எடுபடுகின்றன. அதிதி ஷங்கர் சில இடங்களில் அளவாய், அழகாய் நடித்திருக்கிறார். சில இடங்களில் இன்னமும் பயிற்சி வேண்டும்.

மூத்த நடிகர்களான ராஜ்கிரணும் பிரகாஷ்ராஜும், சரண்யாவும் இதுவரை என்ன செய்து நம்மைப் பார்க்கவைத்துப் பழக்கியிருக்கிறார்களோ அதையே இந்தப் படத்திலும் செய்கிறார்கள். சூரி காமெடியில் ஒன்றிரண்டு இடங்களில் நிஜமாகவே சிரிப்பு வருகிறது. இதுதவிர, கருணாஸ், வடிவுக்கரசி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம்புலி, ஜி.எம். சுந்தர், இளவரசு, ஓ.ஏ.கே. சுந்தர் எனப் பக்கம் கொள்ளாத அளவிற்கு நடிகர்கள். ஆளுக்கு இரண்டு வசனங்கள், காட்சிகள்.

யுவனின் இசையில் பாடல்களிலும் அந்த இரண்டு நிமிட நாட்டுப்புற இசையிலும் தெக்கத்தி வாசம் தெறிக்கிறது. பின்னணி இசை... ம்ஹும்! எழில் கொஞ்சும் தேனியை இன்னும் அழகாய்க் காட்டுகிறது செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவு.

விருமன் - சினிமா விமர்சனம்

குடும்ப அமைப்பில் உறவுகளுக்குள் நிலவும் முரண்களை நெகிழ்ச்சியாய் நெஞ்சம் கனக்கச் சொல்வதுதான் இயக்குநர் முத்தையாவின் பலம். ஆனால் இந்தப் படத்தில் அது மருந்துக்கும் வேலைக்காகவில்லை. அதனாலேயே ஏற்கெனவே யூகிக்க முடிந்த காட்சிகள் இன்னமும் நம்மை அயர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

மண்ணின் குணத்தைப் பேசுவதாக இயக்குநர் நினைக்கலாம். ஆனால் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட பிரிவினரை ‘வன்முறையானவர்கள்' என்கிற பிம்பத்திலேயே அடைக்கும் பிற்போக்குத்தனமே அவரின் முயற்சியில் தெரிகிறது. மறுபக்கம் ‘அரசியல் பேசணுமே' என, பொண்ணுன்னா யார் தெரியுமா என வசனம்வைத்துவிட்டு இன்னொரு பக்கம், ‘சேலையைக் கட்டிக்க' என இகழும்போது அவரின் அரசியல் போதாமை பல்லிளிக்கிறது. ஆண்கள்தான் பெண்ணினக் காவலர்கள் என்கிற ‘ஹீரோயிசத்தை' இனியாவது தவிர்க்கலாம்.

பழைமைவாதத்தில் ஊறிப்போன மனதை காலத்திற்கேற்றாற்போலத் தகவமைத்திருந்தால் கிராமத்து விருமன் கொண்டாடப்பட்டிருப்பான்.