இந்தத் தீபாவளி ரேஸில் ரஜினியின் 'அண்ணாத்த', விஷாலின் 'எனிமி', சிம்புவின் 'மாநாடு' ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சிலபல காரணங்களால் 'மாநாடு' ரிலீஸ் பின் வாங்கியது. இப்போது விஷாலின் பட ரிலீஸிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக 'எனிமி' படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது...
‘‘எங்க 'எனிமி'யை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ல வாங்க ரெடியா இருந்தாங்க. ஆனா, நாங்க தியேட்டர்ல வரணும்னு விரும்பினோம். அதுவும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனா, தீபாவளிக்கு 'அண்ணாத்த'வை மட்டும்தான் எல்லா தியேட்டர்கள்லேயும் வெளியிட திட்டமிடுவதாக கேள்விப்படுறேன். எங்க படமும் தீபாவளிக்கு வர்றதுக்கு, தயாரிப்பாளர் சங்கம் உதவி செய்யணும்னு தாழ்மையோடு வேண்டுறேன். ஒரே ஒரு பெரிய படம் (அண்ணாத்த) மட்டும் வெளியானா அது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமில்ல. தியேட்டர்கள்ல நூறு சதவிகித இருக்கை வசதியோடு ரெண்டு படங்கள் நாலு நாள்கள் ஓடினாலே ரெண்டு பேருக்குமே போதுமான அளவுக்கு ஷேர் வந்துடும்.

ஒரு பெரிய படத்தையோ, ஒரு சூப்பர் ஸ்டார் படத்தையோ 900 தியேட்டர்கள்ல ஓட்டி கண்டிப்பா அவங்க நல்ல பெயர் வாங்க முடியாது. அப்படி ஒரே படத்தை எல்லா தியேட்டர்லயும் வெளியிட்டா பல தியேட்டர்களில் நாற்பது சதவிகித புக்கிங்கிற்கு மேல வராது. அப்படி அனைத்து தியேட்டர்லயுமே அந்தப் படத்தை ஓட்டி, அனைவருமே அதைப் பார்த்தால் 150 கோடி ரூபாய் ஷேர் வரணும்.
அது வரலாற்றிலேயே நடந்ததா சரித்திரமும் அல்ல. என் படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் தேவையில்லை. எனக்கு 250 தியேட்டர்களே போதும். என் படத்து மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அது சின்ன ஷேர்தான். அதை கண்டிப்பா அடைய முடியும்னு நம்பிக்கை இருக்கு. இந்த 250 தியேட்டர்களும் எல்லா ஏரியாலயும் கலந்து எனக்கு கிடைக்க சங்கம் உதவணும். அப்படி ரிலீஸ் பண்ண முடியாம போனா, அதுக்கு எதிரா கட்டாயம் போராடுவேன். அது யாராக இருந்தாலும் அவருக்கு எதிராகப் பேசுவேன்.
நேர்மையா ஒரு தொழில் பண்றோம். மோனோபொலி தன்மையும், இன்னொரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த ஆடியோ மூலம் பேசுறேன். இந்த தருணத்துல அனைவரும் ஒற்றுமையா இருந்தா மட்டும்தான் இதை ஓவர்கம் பண்ண முடியும்" என்றி வினோத் பேசியிருக்கிறார்.
அந்த ஆடியோ உண்மைதானா, பிரச்னை என்ன என்று 'எனிமி' படத்தின் தயாரிப்பாளரான வினோத்திடமே பேசினேன்.
‘‘நான் இதுக்கு முன்னாடி மலையாளம், தமிழ்னு 15 படங்கள் தயாரிச்சிருக்கேன். தனுஷுடன் சேர்ந்தும் பல படங்கள் தயாரிச்சிருக்கேன். ‘லென்ஸ்‘, ‘வெள்ளையானை‘, ‘திட்டம் ரெண்டு‘ சமீபத்துல நான் தயாரித்த படங்களாகும். ‘எனிமி‘ என்னோட 15வது படம்.
இன்னுமும் ஆடியோவில் பேசினது மாதிரி நிலைதான் நீடிக்குது. ‘தியேட்டர்காரங்க எல்லாருமே ‘அண்ணாத்த‘வுக்கு பின்னாடிதான் போறாங்க‘னு சங்கத்துலேயும் சொல்றாங்க. எனக்கு அப்படித் தோணல. ஏன்னா, ஒரு ஊர்ல நாலு சிங்கிள் தியேட்டர்கள் இருந்தால், அந்த நாலிலும் ஒரே ஒரு படத்தை திரையிடணும்னு விரும்புவாங்களா? அதுல நிச்சயம் 'எனிமி'க்கும் ஒரு தியேட்டர் அமையும்.
அப்படி இல்லாமல் ஒரே ஒரு படம் மட்டும் வர நேரும்னா அதை சங்கம் சரி பண்ணனும். அப்படிப் பண்ணலைனா தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் வரும். தீபாவளி மாதிரி பெரிய விழாக்கள்ல கண்டிப்பா ரெண்டு படங்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும். தமிழ்நாட்டுல அப்படிப் பல படங்கள் ஓடியிருக்கு'' என்கிறார் வினோத். அவரிடம், ''இந்த விஷயம் விஷாலுக்கு தெரியுமா... என்ன சொன்னார் அவர்?'' எனக் கேட்டேன்.
"இது பத்தி இன்னும் அவர்கிட்ட பேசல. இப்பத்தான் இந்த விவகாரம் ஆரம்பிச்சிருக்கு. விரைவில் அவர்கிட்ட பேசணும்" - எனச் சொல்லும் வினோத், அடுத்து பிரபுதேவா நடிப்பில் ‘பொய்க்கால் குதிரை‘யைத் தயாரித்து வருகிறார்.