“இப்பவும் நான் அரசியல்வாதிதான்! - பாலா படத்துக்கு நான் ரெடி!” விஷால் சொல்லும் ரகசியங்கள்

“நான் லவ் பண்றேன்!”
கான்ஸ்டபிள் வாழ்க்கையை ‘லத்தி' படத்தின் மூலம் சொல்ல வரும் விஷாலிடம் லத்தி, நடிகர் சங்கம், குப்பம் தேர்தல், முதல்வர் ஸ்டாலின், காதல், கல்யாணம் என்று எல்லாமே பேசலாம்... பேசினேன்.
“உதவி கமிஷனர் என அதிரடி பண்ணிட்டு ‘லத்தி'யில் கான்ஸ்டபிள் ஆகிட்டீங்களே?”
“உண்மைதான். உயர் அதிகாரியா பல படங்கள் செய்திருக்கிறேன். இயக்குநர் வினோத்குமார் ஒரு கான்ஸ்டபிள் வாழ்க்கையைக் கொண்டுவந்து சொன்னார். நிறைய சர்ப்ரைஸ் கதையில் இருந்தது. ரியாலிட்டிக்கு ரொம்ப பக்கமாக இருந்தது. காவல்துறை அதிகாரி ஒருத்தர்கிட்ட பேசும்போது ‘மாநிலத்தில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. அவர்களை நிர்வகிக்கிற அதிகாரிகள் மிகவும் குறைவுதான். நடப்பு நிலைமையைச் சமாளிக்கிறது கான்ஸ்டபிள்ஸ் பொறுப்புதான்’னு சொன்னார். அவங்ககிட்டே இருக்கிற எளிமையான ஆயுதம் லத்திதான். அதனோட வேல்யூ பத்தியும் படம் பேசும்.


முதல் தடவையாக, கல்யாணம் ஆகி ஏழு வயதுப் பையனுக்குத் தகப்பனா நடிக்கிறேன். ‘அவன் இவனு'க்குப் பின்னாடி இதில் நடிப்பதற்கான நல்ல இடங்கள் இருக்கு. நடிக்க வந்த 19 வருஷத்தில் இவ்வளவு அடிபட்டது கிடையாது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அடிபட்டு கேரளாவில் தங்கி சிகிச்சை எடுத்தேன். இனிமேல் ரொம்ப கவனமாக இருந்து படங்கள் செய்யணும்னு நினைச்சிருக்கேன். அடுத்து செய்கிற ‘மார்க் ஆண்டனி’யில் தந்தை மகனாய் டபுள் ஆக்டிங் பண்றேன். படத்திற்குத் தேவைன்னா எதையும் செய்யணும்னு முடிவோடு இருக்கேன். ‘லத்தி’ படத்தில் சுனைனாவுக்கு நல்ல ரோல். கேமராமேன் பாலசுப்ரமணியெம் இதில் கதையைத் தூக்கிச் சுமந்திருக்கார். நிச்சயம் முக்கியமான படமாக ‘லத்தி’ இருக்கும். என் உள்ளுணர்வில் உணர்கிற விஷயம் இது. என் உயிர் நண்பர்கள் ரமணா, நந்தா ரெண்டு பேரும் தயாரிக்கிறார்கள். இப்படி புரடியூசர்கள் கிடைத்தால் இன்னும் சந்தோஷமாகவும் மன நிம்மதியாகவும் படங்கள் செய்ய முடியும்.”


“எங்கே பார்த்தாலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் நீங்கள் போட்டியிடப்போவதாகச் செய்தி பரபரப்பாக வெளிவந்ததே... என்ன விஷயம்?”
“குப்பம் தொகுதி எனக்குப் பழக்கமானதுதான். நடிக்க வர்றதுக்கு முன்னாடி மூணு வருஷம் அங்கேதான் இருந்தேன். ஜீப் எடுத்துக்கிட்டு ஒரு இடம் பாக்கி விடாமல் சுத்துவேன். ஆனால் இப்ப பாருங்க, இந்தத் தகவல் எல்லாம் சேகரிச்சுக்கிட்டு, எல்லாத்தையும் முடிச்சுப் போட்டு, நான் முன்னாள் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடப் போறதா செய்தி பரப்பிட்டாங்க. எனக்கு போன் மேலே போன் வந்து பதில் சொல்லி மாள முடியலை. எல்லாப் பக்கமிருந்தும் வருது. வாழ்த்து சொல்லியும் பேசுறாங்க. சத்தியமாக அப்படி ஒரு எண்ணமே இல்லை. தாங்க முடியாமல் ஒரு ட்வீட் தட்டி விட்டேன். அப்படியும் அடங்க மாட்டேங்குது. என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் போனை ஆஃப் பண்ணி வைக்க வேண்டியதாகிப் போச்சு.”


“ஸ்டாலின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க..?”
“நானும் உதய்யும் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து ஸ்டாலின் அங்கிள் எனக்குப் பழக்கம். நான், உதய், மகேஷ், ஐ.பி.செந்தில், டி.ஆர்.பி.ராஜா எல்லோரும் நண்பர்களாக இருந்தோம். காலேஜ் படிக்கும்போது ஸ்டாலின் அங்கிள் பிரசாரத்திற்குப் போகும்போது நாங்களும் வேனுக்குள்ளே உட்கார்ந்திருப்போம். இந்த ஆட்சி நல்லாப் போகுது. மக்கள்கிட்ட ஒரு சந்தோஷம் இருக்கு. அவரை அணுக சுலபமா இருக்கு. அவரோட உழைப்பு ஆச்சர்யமாக இருக்கு. எனக்கு நடிகர் சங்கம் கட்டடம் கட்டி முடிக்கும்போது கலைஞர் ஐயா, ஸ்டாலின் அங்கிள் பெயர்கள் கண்டிப்பாக கல்வெட்டில் இடம்பெறணும்னு நினைச்சேன். அது நடந்திடும்னு எனக்கு சந்தோஷமா இருக்கு. மக்கள் எதைச் சொன்னாலும் அவர் கேட்டுக் கொண்டு அதற்கு ஆவன செய்கிறார். மக்கள் நலனுக்கான ஆட்சிதான். அதில் ஒண்ணும் சந்தேகமே வேண்டாம்.”
“நடிகர் சங்கத்தை எப்போ கட்டி முடிப்பீங்க?”
“நடுவில் கட்டடம் கட்டுவதை நிறுத்தி வெச்சு, மூன்றரைக் கோடிக்கு மேலே செலவு ஆகியாச்சு. எதிரணி சதி செய்து எலெக்ஷன் முடிவு வரத் தாமதமாகி உறுப்பினர்கள் நிலைமை கஷ்டமாகிவிட்டது. எவ்வளவோ நலிந்த உறுப்பினர்கள் இருக்காங்க. நேரத்திற்கு அவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போச்சு. அவங்க நல்லது கெட்டதுகளில் பங்கேற்க முடியாத நிலைமை துயரம். இப்போ உறுப்பினர்கள் கூடி பேங்கில் கடன் பெற்றுக் கட்டடம் ஆரம்பிக்க சம்மதம் சொல்லியிருக்காங்க. ஆரம்பிச்சிடுவோம். இரண்டு வருஷத்திற்குள் முடித்துவிடலாம். நிச்சயம் சென்னையோட மிகப்பெரிய அடையாளமாக நடிகர் சங்கக் கட்டடம் இருக்கும். இனி பணிகள் நடைபெறுவது எந்தக் காரணத்தைக் கொண்டும் நிற்காது. எங்கள் குழுவின் அத்தனை பேரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது.”

“நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஆர்.கே.நகர் தேர்தல்னு ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இறங்குனீங்க...”
“நடிகர் சங்கம் நிறைய ஊழல்களில் திளைச்சுப் போய் நின்னது. அதைச் சரி பண்ண எல்லோரும் கூட சேர்ந்து இறங்கியதால அதில் நிறைய மாற்றங்கள் செய்ய முடிந்தது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னால் எதுவும் செய்ய முடியலை. செய்ய விடலை. கலையுலகிற்கு அடிப்படை தயாரிப்பாளர்கள்தான். அந்தச் சங்கத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியலை என்பதுதான் உண்மை.
அப்புறம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டது வேற விஷால். அ.தி.மு.க-வில் ஒருத்தருக்கொருத்தர் சேர்ந்துக்கிறதும் மறுபடியும் சண்டை போட்டுக்கறதும் எரிச்சலா இருந்தது. ‘நாடு கெட்டுப்போச்சு, பாத்தியா’ன்னு கேட்காமல் நானே இறங்கினால் என்னன்னு தோன்றிவிட்டது. அம்மாகிட்டே 10,000 ரூபாய் கொடுன்னு வாங்கிட்டுப் போய் வேட்புமனு தாக்கல் பண்ணிட்டேன். யார் தூண்டுதலும் இல்லை. ஒரு சாமான்ய மனிதனின் எரிச்சல் இது. எனக்கு அரசியல் பிசினஸ் கிடையாது. சமூக சேவை. மக்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கணும். அவங்க வயித்தை நிரப்பணும். வயித்துல அடிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதுக்குப் பின்னாடி அந்த ஆட்சியாளர்கள் என்னைத் தொடர்ந்து கார்னர் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. இப்பவும் நான் அரசியல்வாதிதான். ஆனால் எந்தக் கட்சியும் சார்ந்து அல்ல.”
“நீங்க பாலா படத்தில் நடிக்கப்போறதா செய்தி அடிபட்டதே..?”
“பாலா எப்ப கூப்பிட்டாலும் உடனே ஒரு மேஜிக்குக்கு ரெடியாக இருப்பேன். நான் படிச்சது லயோலா காலேஜ். ஆனால் அதைவிடப் பெரிய காலேஜ் பாலா காலேஜ். இந்த ‘லத்தி’ படத்தில்கூட கடைசியில பத்து நிமிடக் காட்சியிருக்கு. நான் அவரை மனதில் வச்சுக்கிட்டுத்தான் நடிச்சேன். ‘அண்ணே, ஏதாவது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். நாங்க ஒன்று சேர்ந்தால் அதற்கான விஷயமும் பெருசா இருக்கும். நான் ரெடி. பாலா அண்ணே ரெடியான்னு காலம் போயிட்டு இருக்கு.”
“சரி, கல்யாணம் எப்போ பிரதர்!”
“காலம் வரும்போது நிச்சயமாக. அந்தக்காலம் பக்கமாக வரும்னு நினைக்கிறேன். நல்ல செய்தி சொல்றேன். ஆனால் காதல் திருமணம்தான்.”
“என்ன... லவ்ல இருக்கீங்களா?!”
“நம்மள ஒருத்தர் வந்து இன்னும் ஒழுங்கு பண்ணணும். அப்பா, அம்மா செஞ்சு வைக்கிற கல்யாணத்துல நான் செட் ஆவேனான்னு தெரியல. உங்ககிட்ட ஏன் பொய் சொல்லணும். யெஸ்... லவ் பண்றேன். அந்தப் பொண்ணு யாருங்கிற கேள்விக்குக் கொஞ்சம் பொறுத்து பதில் சொல்றேன். ப்ளீஸ் வெய்ட்!”