
சினிமா
டி.வி., மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர்... `ஆடை’ படத்துக்குப் பிறகு நடிப்பிலும் பிஸியாகிவிட்டார் ரம்யா. எனர்ஜி லெவலில் பிரமிக்கவைக்கிறார். ஒரு மாலையில் அவருக்கு `ஹாய்’ சொன்னபோது...
`ஓ காதல் கண்மணி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த மணி சார், `நீ நல்லா நடிக்கிறியே! ஏன் இத்தனை வருஷமா நடிக்கலை?’ன்னு கேட்டார். அப்பதான், `தொடர்ந்து என்னால நடிக்க முடியும்’னு நம்பிக்கை ஏற்பட்டுச்சு. கடந்த நாலு வருஷங்களில், ஐந்து படங்களில் நடிச்சிருக்கேன். இப்போ சமுத்திரக்கனி சாருக்கு ஜோடியா, `சங்கத்தலைவன்’ படத்தில் தைரியமான கிராமத்துப் பொண்ணா நடிச்சிருக்கேன்.
சின்னத்திரை, சினிமாப் பணிகளில் டார்கெட் எதுவும் வெச்சுக்க மாட்டேன். பிடிச்ச மாதிரி சினிமா வாய்ப்புகள் வரலைன்னா, வருஷக்கணக்கிலும் காத்திருப்பேன். தொகுப்பாளரா அதிக மெனக்கெடல் இல்லாம வேலை செய்தேன். ஆனா, நடிப்பில் அந்தக் கதாபாத்திரமாவே மாறணும். அதனால நடிப்புக்கு எனக்கு ஹோம்வொர்க் தேவைப்படுது. சினிமா, சின்னத்திரை இரண்டுமே எனக்குப் பிடிக்கும்” என்று புன்னகைக்கும் ரம்யா, மல்டி டாஸ்க்கிங் பற்றிப் பேசுகையில்...

``இப்போ சினிமா மற்றும் தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறேன். ஆக்டிவ்வா நடிக்கிறேன். சமையல் மற்றும் ஃபேஷன்லயும் எனக்கு ஆர்வம் உண்டு. ஆரோக்கியமான உணவுகள், ஃபிட்னெஸ் மற்றும் ஃபேஷன்னு எனக்குத் தெரிஞ்ச, நான் தேடித்தேடிக் கத்துக்கிற விஷயங்கள் மத்தவங்களுக்கும் உதவணும்னு, `Stay Fit with Ramya’ என்ற யூடியூப் சேனலை நடத்திட்டிருக்கேன். இதற்காக மக்களைச் சந்திக்கிறது, ஸ்க்ரிப்ட் வேலைகள்னு நிறைய நேரம் செலவிடுறேன். சில நிறுவனங்களின் இன்ஃப்ளூயன்ஸராகவும் இருக்கேன். அந்த வகையில என் வேலை என்னை பிஸியாவே வெச்சிருக்கு!
ஃபிட்னெஸ்ல எனக்கு ஆர்வம் வர, அதற்காகத் தினமும் நேரம் ஒதுக்குறேன். ஆரம்பத்தில் வெயிட் லிஃப்ட்டிங் செய்ய முடியுமான்னு தயங்கினேன். தொடர் பயிற்சியால் இப்போ
100 கிலோ எடையைச் சிரமமில்லாமத் தூக்குறேன். ஃபிட்னெஸ்னால தன்னம்பிக்கை கூடியிருக்கு. இரவு நேரப் பயணம் உட்பட பல விஷயங்கள்ல பயம் குறைஞ்சிருக்கு. என் ஃபிட்னெஸ் அனுபவம் பத்தி ஒரு புத்தகம் எழுதுறேன். மல்டி டாஸ்க்கிங் வேலைகள், என் உற்சாகத்தை அதிகரிக்குது. ஆர்வத்துக்கும் திறமைக்கும் எல்லையே இருக்கக் கூடாது!” - உற்சாகம் குறையாமல் பேசும் ரம்யா, மீடியாவில் பெண்கள் `பாடி ஷேமிங்’ செய்யப்படுவதற்கு, தன் அனுபவத்திலிருந்து பதிலளிக்கிறார்.
``மீடியாவில் உடல் பருமனா, கறுப்பா இருக்கிற பெண்கள் தொகுப்பாளரா சக்சஸ் பார்க்கலைன்னு தோணுது. குறிப்பா, மீடியாவில் ஒரு பெண்ணை பாடி ஷேமிங் பண்ணி, அதைப் பார்த்து பலரும் ரசிச்சு, ஒரு நிகழ்ச்சிக்கு வெற்றி கிடைக்கிறதெல்லாம் தவறான முன்னுதாரணம். சம்பந்தப்பட்ட பெண்ணே விளையாட்டா எடுத்துக்கிட்டாலும், பர்சனலா அவங்களுக்குள் வருத்தம் இருக்கும். ஆரம்பத்துல இதுபோன்ற சில அனுபவங்கள் எனக்கும் நடந்து வருத்தப்பட்டேன். ஆனா, ஒருகட்டத்துல `இது சரிவராது’ன்னு உணர்ந்து, மேற்கொண்டு என்னை யாரும் பாடி ஷேமிங் பண்ண நான் இடம் கொடுக்கலை.
யாரா இருந்தாலும், திறமைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படணும். ஒருத்தரைக் காயப்படுத்தி ஹியூமர் பண்ணவே கூடாது. அந்த வகையில வடிவேலு சார் சிறந்த பர்ஃபார்மர்; முன்னுதாரணம். அவர் மத்தவங்களைக் கேலிக்குள்ளாக்கி நகைச்சுவை பண்ணாம, தன்னை ஜோக்கரா காட்டித்தான் மக்களைச் சிரிக்கவெச்சார்; சாதிச்சார். யாரா இருந்தாலும், பணம் மற்றும் புகழ் சம்பாதிக்கிறதைவிட மக்களின் அன்பைச் சம்பாதிக்கிறதுதான் உண்மையான வெற்றி” என்னும் ரம்யாவின் முகத்தில் நிறைவான புன்னகை!