
சிபிராஜ் நேற்று பயிற்சி முடிந்து, இன்று பதவியேற்ற போலீஸ்போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்.
நேர்மையான போலீஸுக்கும், கருணையற்ற கிரிமினலுக்கும் இடையே நடக்கும் மோதலைக் காட்டும் மற்றுமொரு போலீஸ் ஸ்டோரிதான் இந்த ‘வால்டர்.’
கும்பகோணத்தின் ஏ.எஸ்.பியாக விறைத்த உடலும், கசங்காத காக்கியுமாய் வேலை பார்க்கிறார் சிபிராஜ். நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன. சில மணி நேரம் கழித்து குழந்தைகள் கிடைத்துவிட்டாலும் மறுநாளே சொல்லி வைத்தாற்போல இறந்துபோகின்றன. இதன் பின்னாலிருக்கும் மர்மத்தை சிபிராஜ் தோண்ட, பெரிய நெட்வொர்க்கின் வரை படம் விரிகிறது. அந்த நெட்வொர்க்கின் தலைவனை ஹீரோ கண்டுபிடித்து, தண்டிப்பதுதான் மீதிக் கதை.
சிபிராஜ் நேற்று பயிற்சி முடிந்து, இன்று பதவியேற்ற போலீஸ்போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். ஆனால், உணர்ச்சிகளை வெளிப்படுத்தத்தான் பாவம் ரொம்பவே தடுமாறுகிறார். இந்தக் கதைக்கு எந்தவிதத்திலும் தேவைப்படாத ஹீரோயின் கதாபாத்திரம் என்பதால், ஷிரின் காஞ்ச்வாலா ஒரு காட்சியில் கூட ஒட்டவில்லை. முதல் 20 நிமிடங்கள் சமுத்திரக்கனியும் கடைசி 20 நிமிடங்கள் நட்டியும் ஓரளவு கவனிக்க வைக்கிறார்கள். பவா செல்லதுரைக்கு வில்லத்தனம் வரவேயில்லை. மற்ற அனைவரும் ஒன்று நடிக்கவே மறுக்கிறார்கள்; இல்லையெனில், மிகை நடிப்பை அள்ளி வழங்குகிறார்கள்.

தர்மபிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் மிகவும் சுமார் ரகம். கும்பகோணத்தைக் கழுகுப் பார்வையில் பார்க்க அழகாக இருக்கிறதுதான். அதற்காகப் படத்தில் அந்த ஆங்கிளை மட்டும் ஐம்பது இடங்களில் வைத்து சலிப்பைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி.
`ஒரு படம் இயக்க ஒரே ஒரு வித்தியாச ஒன்லைன் மட்டுமே போதும்’ என இயக்குநர் நினைத்திருப்பார்போல! ஏனோதானோ திரைக்கதையும், கண்டபடி முன்பின் பாயும் காட்சியமைப்புகளும் த்ரில்லருக்குத் தேவையான குறைந்தபட்ச நியாயத்தைக்கூடச் செய்யவில்லை. இவை போதாதென லாஜிக்கும் கும்பகோணம் தாண்டி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வழியாகப் போய் கடலில் கலக்கிறது.

நான்கைந்து பேரை சந்தேகப்படவைத்து, இறுதியாக ஒரு ட்விஸ்ட்டில் வில்லன் யாரெனக் காட்டும் பழைய டெம்ப்ளேட்தான். ஆனால் கதை போகும்போக்கில், ‘அட சட்டுனு சொல்லுங்கப்பா’ என முணுமுணுக்க வைக்கிறதே தவிர, புருவம் உயர்த்தச் செய்யும் ஒரு குட்டி புத்திசாலித்தனம்கூட இல்லை. `என்கவுன்ட்டர் செய்தால்தான் நேர்மையான போலீஸ்’ என்ற அபத்தத்தை இன்னமும் எத்தனை தமிழ்ப்படங்களில்தான் பார்ப்பது?
ரசிகர்களை ஏமாற்ற நினைக்காமல் மெனக்கெட்டிருந்தால் `வால்டர்’ நிமிர்ந்து நின்றிருப்பார்.