``ஒருநாள் ஆஸ்கர் விருதுக்கு நான் பரிந்துரைக்கப்படுவேன்" என்று 2012-ம் ஆண்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் முன்னாள் அமெரிக்கக் கால்பந்து வீரரும் இந்நாள் திரைப்பட இயக்குநருமான மேத்யூ A செர்ரி. அவருடைய கனவு இந்த ஆண்டு நிறைவேறியுள்ளது.

2020-ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுகளில் `சிறந்த ஷார்ட் அனிமேட்டட் திரைப்படமாக' செர்ரி இயக்கிய `ஹேர் லவ் (Hair Love)' படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இவருடைய தன்னம்பிக்கைக்கு மட்டுமல்ல, இவர் இயக்கிய திரைப்படத்துக்கும் ஏராளமான பாராட்டுகள் உலகெங்கிலுமிருந்தும் குவிந்துகொண்டிருக்கின்றன.
தலைமுடியை அழகாக சீவி சிங்காரித்துக்கொள்வது எவ்வளவு பெரிய வேலை என்பது பெண்களுக்கு மட்டுமே புரியும். ஃப்ரீ ஹேர் முதல் பிரெஞ்சு பிரைடு (French Braid) வரை எந்த வகை ஹேர்ஸ்டைலாக இருந்தாலும், அதை நாள் முழுவதும் கலையாமல் படிந்த நிலையில் வைத்துக்கொள்வது என்பது பெண்களுக்கான மிகப் பெரிய சவாலும்கூட.

ஒரு முடி உடைந்து தரையில் விழுந்தாலும் தங்களின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதுபோல உணரும் ஏராளமான பெண்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றனர். அந்த அளவுக்குப் பெண்மைக்கும் தலைமுடிக்கும் பிணைப்பு இருக்கிறது. இந்த உணர்வை தன்னுடைய 6 நிமிட குறும்படம் மூலம் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் மேத்யூ.
சூரியன் உதித்ததும் கதையின் நாயகியான அந்த 5 வயதுச் சிறுமியைச் சீண்டி எழுப்புகிறது அவளுடைய செல்லப் பூனை. நாள்காட்டியில் அன்றைய நாளன்று பதியப்பட்டிருக்கும் இதய வடிவத்தைப் பார்த்து படபடவென எங்கோ கிளம்புகிறாள் அவள். முக ஒப்பனைகள் முடிந்த பிறகு, சிகை அலங்காரம் செய்யத் தயாராகிறாள்.
ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுமியான அவளுக்குத் தலையை ஒழுங்காகப் படிய வைப்பதில் சிக்கல். இருப்பினும், சிகை அலங்காரம் செய்வதில் கைதேர்ந்த தன்னுடைய தாயின் காணொளியைப் பார்த்து அதேபோன்று அலங்காரம் செய்யத் தொடங்குகிறாள். ஆனால், தோல்வியே கிடைக்கிறது.
இதைப் பார்த்த அச்சிறுமியின் தந்தை, தன் மகளின் தலைமுடியை சரிசெய்ய முயல்கிறார். அவருக்கும் தோல்வியே கிடைக்கிறது. இறுதியாகத் தன் மனைவியின் ஒரு சிகை அலங்கார காணொளியைப் பார்த்து அதேபோன்று செய்து தன் மகளைத் தயார் செய்கிறார். பிறகு, மருத்துவமனையில் இருக்கும் தன் தாயைப் பார்க்கச் சிட்டாகப் பறக்கிறாள் சிறுமி.

மகளுடைய சிகை அலங்காரத்தைக் கண்ட தாய் நெகிழ்கிறாள். ஆனால், ஒற்றை முடிகூட இல்லாமல், மொட்டையடித்து இருக்கும் தன் அம்மாவைக் கண்ட சிறுமிக்கு அதிர்ச்சி. என்றாலும், மகளின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் தாயை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்வதுபோல் முடிகிறது அந்தக் குறும்படம்.
பொதுவாகவே, ஆப்பிரிக்க மக்களின் இயற்கையான தலைமுடியைப் பெரும்பாலானவர்கள் கேலி செய்வதுண்டு. அதுபோன்ற பார்வையை இத்திரைப்படம் மாற்றும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மனிதம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

ஆஸ்கர் மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட மேத்யூ, `` `ஹேர் லவ்' குறும்படம் எடுத்ததற்கான காரணம் அனிமேஷனில் பிரதிநிதிகள் அதிகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. மேலும், நாங்கள் கறுப்பு முடியை இயல்பாக்க விரும்பினோம்" என்றுகூறி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளிச் சென்றார்.