குடிநீர்ப் பிரச்னையை இந்த அளவிற்கு உக்கிரமாகப் பேசிய வேறெந்த தமிழ் சினிமாவாது இருக்குமா என்று தெரியவில்லை. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1981-ல் வெளிவந்த ‘தண்ணீர் தண்ணீர்’, தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தின் நீர்ப்பிரச்னையை முகத்தில் அறையும் உக்கிரத்துடன் மிக ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறது.
படம் பார்த்து முடிக்கும் போது நமக்கே நாக்கு வறண்டு, 'ஒரு குவளைத் தண்ணீர் கிடைத்தால் தேவலை’ என்று உணரவைக்கும் அளவிற்கான அழுத்தமான திரைப்படம்.
நீருக்காகப் போராடும் ஒரு தென்தமிழக கிராமத்து மக்களின் நடைமுறை அவலங்களை, அரசியல் நையாண்டியுடனும் கூர்மையான கிண்டல்களுடனும் அற்புதமாகப் படமாக்கியுள்ளார் பாலசந்தர்.

சில காட்சிகள் சற்று நாடகத்தனமாக தோன்றினாலும், படம் பேசும் கருப்பொருள் முக்கியமானது. மனிதனின் ஆதாரமான தேவைகளுள் ஒன்று குடிநீர். இதைத் தருவது ஓர் அரசாங்கத்தின் அடிப்படையான கடமைகளுள் ஒன்று. ஆனால் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் இதைக் கண்டு கொள்வதில்லை. அதற்கு மாறாக இயற்கை வளங்களைச் சுரண்டும் வணிகசக்திகளுடன் மறைமுகமாக கைகோத்துக்கொண்டுள்ளன.
எண்பதுகளின் காலக்கட்டத்திலேயே இந்தத் திரைப்படம் பேசும் செய்தி மிக முக்கியமானதாக உணரப்பட்டது எனும் போது நீரை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலம் மிகுந்திருக்கிற சமகாலத்தில் இந்தத் திரைப்படத்தின் முக்கியத்துவம் பல மடங்கு பெருகியிருக்கிறது எனலாம்.
மளிகை, வாடகை, ஸ்கூல் ஃபீஸ் போல ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் குடிநீருக்கான செலவும் கணிசமாக ஏறிக்கொண்டேயிருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் ஒரு விஷயம், அரிதான பொருளாக, விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருப்பதின் பின்னால் உள்ள மோசடிகளும் சதிகளும் என்ன? தமிழ் சினிமா இதைப் பற்றி மேலதிகமாகவும் சமூகப் பொறுப்புடனும் பேச வேண்டும்.
நாடகத்துறையின் வழியாக தமிழ் சினிமாவிற்கு வந்த படைப்பாளிகளுள் முக்கியமானவர் கே.பாலசந்தர். பல சமூக நாடகங்கள், சினிமாவாக உருமாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையைப் பற்றிப் பேசுகிற நாடகத்தை, சினிமாவாக மாற்ற பாலசந்தர் முன்வந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
நாடகம் எனும் போது அது சில கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே இயங்க முடியும். ஆனால் சினிமா எனும் ஊடகத்தில் சாத்தியங்கள் அதிகம். ஒரு நாடகத்தை அப்படியே சினிமாவாக மாற்றினால் சலித்துப் போகும் அபாயமுண்டு. நாடகத்தின் ஜீவன் கெடாதவாறும், சினிமா என்னும் ஊடகத்திற்கு ஏற்றபடியும் உருமாற்றுவதற்கு அபாரமான கலைத்திறனும் நுண்ணுணர்வும் தேவை. அதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார் பாலச்சந்தர்.

எனவேதான் இந்தத் திரைப்படத்திற்கு அந்த வருடத்தின் 'சிறந்த தமிழ்த் திரைப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருது கிடைத்ததோடு, ‘சிறந்த திரைக்கதை’ பிரிவிலும் விருது கிடைத்தது.
தென் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம் ‘அத்திப்பட்டி’. குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத கடுமையான வறட்சியுள்ள பகுதி. ‘வானம் பார்த்த பூமி’யாக உள்ள இந்தப் பிரதேசத்தில் பல வருடங்களாக மழை பொய்த்துப் போவதாலும் அரசியல்வாதிகள் வெறும் ஓட்டுப் பொறுக்கிகளாகவே இருப்பதால் ஊர்மக்கள் பலர் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். என்றாலும் எஞ்சியுள்ள சிலர் நம்பிக்கையுடன் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவையான ‘தண்ணீர்’ என்கிற விஷயம் அந்த ஊரில் எத்தனை ஆடம்பரமான பொருள் என்பதையும் அதை அடைவதற்காக அந்த மக்கள் எத்தனை சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் படம் முழுவதும் வரும் காட்சிகள் நமக்கு உணர்த்திபடியே இருக்கின்றன.
படத்தின் தொடக்க காட்சியே சுவாரஸ்யமானது. தலையில் ஒரு பானைத் தண்ணீரை சுமந்தபடி சிரமத்துடன் நடந்து வருகிறான் ஒரு சிறுவன். ‘காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வையை பொருணை நதி..’ என்கிற பாரதியின் பாடல் அச்சிடப்பட்ட துண்டுச்சீட்டு கீழே கிடக்கிறது.
அந்தச் சீட்டு காற்றில் பறந்து திரும்பும் போது அதில் ஒரு முன்னணி நடிகரின் புகைப்படம் தெரிகிறது. பானையைச் சுமந்தபடியே கஷ்டப்பட்டு கீழே குனிந்து அந்தப் புகைப்படத்தை எடுக்கும் சிறுவன், அதை ஆவலுடன் பார்த்தபடியே வருகிற போது கவனம் குலைந்து பானை சரிந்து தண்ணீர் மண்ணில் விழுந்து சில நொடிகளில் உறிஞ்சப்படுகிறது. சிறுவன் அழுதபடியே ஆவேசமாக மண்ணைத் தோண்டுகிறான்.

சினிமா நடிகர்களின் மீதுள்ள மோகம் காரணமாக, தமிழக மக்கள் தங்களின் ஆதாரமான விஷயங்களை மிக எளிதாகப் பறிகொடுக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய காட்சியில் அழுத்தமாக உணர்த்திவிட்டார் பாலசந்தர். புகைப்படத்தில் இருந்த நடிகர் யார் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது. ஆம்... பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரஜினிகாந்த்’தின் புகைப்படம்தான் அது.
டைட்டில் கார்டு ஓடும் போது அதன் பின்னணியில் சில காரசாரமான வசனங்கள் துண்டு துண்டாகக் கேட்கின்றன. படத்தைப் பார்த்து முடித்த பிறகு இந்தத் துண்டிக்கப்பட்ட வசனங்கள் எங்கெங்கே ஒலித்திருக்கும் என்பதை யூகிப்பது சுவாரஸ்யமானது. இவை சென்சார் துறையால் ஆட்சேபிக்கப்பட்டிருக்கலாம். எனவே அவற்றைத் துண்டித்துப் படத்தின் தொடக்கத்தில் இயக்குநர் இணைத்திருக்கிறார் என்று யூகிக்கத் தோன்றுகிறது.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, இடைநிலைச் சாதியைச் சேர்ந்த இளைஞன் விரும்புகிறான். திருமணம் செய்யவும் துணிகிறான். ஆனால் மகளின் தகப்பனார் தயங்குகிறார். “சட்டம் ஒத்துக்கிடலாம்.. ஆனால் சனங்க மனசு ஒத்துக்கணுமே.. எங்களுக்கு நடக்கற கொடுமையைப் பொறுக்க முடியாம.. பலரும் மாதாகோயிலுக்கும் பள்ளி வாசலுக்கும் போயிட்டாங்க" என்று வருகிற வசனம் ஓர் உதாரணம்.
‘நம்ம ஊருக்கு தண்ணியே வராதா?” என்று ஒரு முதியவரின் குரல் ஆதங்கத்துடன் கேட்க “உலகம் அழியும் போது பிரளயம் வருமாம். அப்ப நம்ம ஊருக்கும் தண்ணி வரும். அதைக் குடிச்சிக்கிட்டே நாம போய்ச் சேர்ந்துடலாம்” என்று பதில் வரும். மிகுந்த கொந்தளிப்பு கலந்த இம்மாதிரியான கறுப்பு நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள் படம் முழுவதும் வெளிப்படுகின்றன. (கதை-வசனம்: கோமல் சுவாமிநாதன்).

மக்களின் ஆதாரமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் அரசு இயந்திரம் எத்தனை மெத்தனமாகவும் அலட்சியமாகவும் இருக்கிறது என்பதை இதில் வரும் ஒரு சுவாரஸ்யமான காட்சி மிக வலுவாக உணர்த்தி விடுகிறது.
கோவில்பட்டிக்கு வருகை தரும் மந்திரியிடம் ‘அத்திப்பட்டி’ கிராம மக்கள் நீர்ப்பிரச்னை தொடர்பாக ஒரு மனு தருகிறார்கள். அந்த மனுவை போலியான கரிசனத்துடன் வாங்கும் மந்திரி ‘அவசியம் கவனிக்கச் சொல்லுங்க’ என்று தன் உதவியாளரிடம் தருகிறார். அவர் அதை கலெக்டரிடம் தர.. இப்படியே.. ஒவ்வொரு படிநிலை அதிகாரி வழியாகச் சென்று கடைசியில் அந்த மனு பியூன் பாக்கெட்டிற்குச் செல்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் அரசு அதிகாரிகள் இவர்களை விடவும் இயந்திர மனோபாவத்தோடு இருக்கிறார்கள். ‘நம்மளுக்கு எதுக்கு வம்பு’ என்கிற சுயநல மனப்பான்மையுடன் இயங்குகிறார்கள்.
நடிகைகளின் தோற்றத்தைப் பற்றிய சிறு விவரத்தையும் ஆர்வமுடன் பிரசுரிக்கும் ஊடகங்களும் மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்தத் துறைகளில் அடிப்படை மனச்சாட்சியுடன் இருக்கிற அரிதான ஆசாமிகளும் இல்லாமலில்லை. ஆனால் அவர்களால் எதையும் செய்ய முடியாமல் அதிகாரத்தால் கட்டிப் போடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவை தொடர்பான காட்சிகள், இந்தத் திரைப்படத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான காட்சிகள் உக்கிரம் குறையாமல் சொல்லப்பட்டிருக்கும் அதே சமயத்தில் குறும்பாகவும் சில இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியொரு காட்சி இது.
கூழைக்கும்பிடு போட்டு ஓட்டு வாங்கிச் செல்லும் அரசியல்வாதிகள், பிரச்னையைத் தீர்க்காமல் தொடர்ந்து ஏமாற்றுவதால் அப்போது வருகிற தேர்தலைப் புறக்கணிப்பது என்று அத்திப்பட்டி கிராமம் முடிவு செய்கிறது. தேர்தல் நாளன்று ஊரே குழுமி ‘எலெக்ஷன் பூத்’ முன்னால் வெறுமையான கண்களுடன் நிற்கிறது.
‘யாராவது ஓட்டு போட வாங்களேன்” என்று எலெக்ஷன் அதிகாரி கெஞ்ச, கிராமத்து மக்களில் இருந்து ஒருவன் மட்டும் துணிச்சலாக உள்ளே சென்று வருகிறான். ‘ஊர் கட்டுப்பாட்டை மீறியவனின் மீது’ கிராமமே ஆத்திரத்துடன் பாய முற்பட, அவன் சொல்லும் பதிலைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா என்றே நமக்குத் தெரியாது. அப்படியொரு எதிர்பார்க்காத பதில் அது.

நதியையும் கடலையும் பெண்ணாகவும் தாயாகவும் வழிபடும் பூமி இது. ஆனால் இங்கு ‘நீர்’ என்பது ஒருபுறம் வணிகமாகவும் இன்னொரு புறம் அரசியலாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. நீரை மையப்படுத்தி தங்களின் பிழைப்பை ஓட்டும் அரசியல் கட்சிகள் பல இங்கு உண்டு. அவை பிரச்னையைத் தீர்க்காமல் அவற்றை ஊதி வளர்ப்பதிலேயே ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றன.
‘நதி நீர் இணைப்புத் திட்டம், கால்வாய்த் திட்டம், குடிநீர்த் திட்டம்’ என்று கோடிக்கணக்கான செலவில் போடப்படும் திட்டங்கள் வெறும் பெயரளவில் சம்பிரதாயமாக அறிவிக்கப்பட்டு ஊழல் கான்ட்டிராக்டர்களின் வழியாக அரசியல்வாதிகளுக்குப் பெரும்நிதியைக் கொண்டு சேர்க்கும் சுரங்கங்களாக உள்ளன.
இது தொடர்பான கிண்டலும் படத்தில் உண்டு. அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் பல அரசியல் கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். ‘அதனாலேயே அந்த மரம் பட்டுப் போய் விட்டதாக’ சரிதா சொல்லும் ஒரு வசனத்தில் மிக ஆழமான கிண்டல் உண்டு.
இந்தத் திரைப்படத்தில் வரும் பாத்திரங்களில் மக்களுக்கு நன்கு அறிமுகமான முகம் என்று பார்த்தால் அது ‘சரிதா’ மட்டுமே. ஆனால் அவரை ஹீரோயின் என்று சொல்ல முடியாமல் ஒரு இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே சித்திரித்ததில் இயக்குநரின் பங்கு பெரிது.
சரிதாவை ‘திராவிடப் பேரழகி’ எனலாம். பெரிய, பளபளப்பான கரிய விழிகளில் தன் நடிப்பு முழுவதையும் அநாயசமாகக் கொண்டு வந்து விடுவார். ஒரு புஷ்டியான குழந்தையை நினைவுப்படுத்தும் களங்கமில்லாத முகமும் உடல் அமைப்பும் கொண்ட சரிதாவை ஒரு மிகச் சிறந்த நடிகையாக மதிப்பிடலாம். இவருக்கேற்ற நடிப்புத் தீனியை வழங்கிய இயக்குநர்களுள் முக்கியமானவராக பாலசந்தரை சொல்ல வேண்டும்.
‘செவந்தி’ என்கிற பாத்திரத்தின் வழியாக படம் முழுவதும் நிறைந்து வழிகிறார் சரிதா. குடிநீர் இல்லாமல் அந்தக் கிராமமே சிரமப்படும் போது இருபது மைல் நடந்து சென்று ‘தேனூத்து’ என்கிற குட்டையில் இவர் நீர் சுமந்து வரும் காட்சியுடன் படம் தொடங்குகிறது.

இடுப்பில் அடுக்கப்பட்ட இரண்டு பானை, தலையில் ஒரு பெரிய பானை, முந்தானையில் தொங்கிக்கொண்டே வரும் கைக்குழந்தை, ஆட்டிற்கு இலை என்று அத்தனையையும் சுமந்துகொண்டு வரும் தொடக்க காட்சியிலேயே ஒரு கிராமத்துப் பெண்ணின் சித்திரத்தை நம் மனதில் அழுத்தமாகப் பதித்து விடுகிறார் சரிதா. வெயில் சூடு தாங்காமல் ஒரு மெலிதான ஒற்றை மரம் தரும் கஞ்சத்தனமான நிழலில், இவர் பாரத்துடன் கால் சூட்டை ஆற்றிக்கொள்ளும் காட்சி நெகிழ வைக்கக்கூடியது.
எத்தனையோ ஆண்டுகளாக இந்தியக் கிராமத்துப் பெண்கள், பல தூரம் நடந்து சென்று தண்ணீர் சுமந்து திரும்புகிறார்கள். அவர்களின் பெரும்பான்மையான நேரத்தையும் சக்தியையும் அந்த நீர்க்குடங்கள் அன்றாடம் எளிதில் உறிஞ்சிக் கொள்கின்றன. இந்தப் பெண்களின் ஒரு கச்சிதமான பிரதிநிதியாக சரிதா தோற்றமளிக்கிறார்.
R.K.ராமன், ராஜ்மதன், குகன், பாபு மோஹன் அருந்ததி ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் வந்த பாபு மோஹன்தான் பிற்பாடு ‘பூ விலங்கு’ மோகனாக அறியப்படுகிறார். போலவே வாத்தியராக நடித்த ஆர்.கே. ராமனுக்கு ‘வாத்தியார் ராமன்’ என்கிற அடைமொழி ஒட்டிக்கொண்டது. ஏ.கே.வீராச்சாமி, ராதாரவி போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.
‘சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி’ என்கிற புகழோடு காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சியே தமிழக கிராமங்களில் பிரபலமாக இருந்த காலகட்டம். ஒருபுறம் திராவிட இயக்கமும் இன்னொரு புறம் கம்யூனிஸக் கட்சிகளும் நுழைந்தன. விவசாயக் கூலி உயர்விற்காகப் போராட்டம் நடத்திய இடதுசாரி கட்சிகள் ‘உழுகிறவனுக்கே நிலம் சொந்தம்’ என்று முன்வைத்த கோஷங்கள், பண்ணையாளர்கள் மற்றும் மிராசுகளின் ஆக்கிரமிப்பை அசைத்துப் பார்க்கத் தொடங்கியது, இந்தக் காலக்கட்டத்தில்தான்.

இந்த அரசியல் மாற்றத்தின் சாயல்களும் இந்தத் திரைப்படத்தில் பிரதிபலிக்காமல் இல்லை. சிவப்புத் துண்டு அணிந்த இளைஞன் ஒருவன், சரியான கூலி தராமல் ஏமாற்றும் முதலாளிகளையும் ஊழல் அரசியல்வாதிகளையும் எதிர்க்கத் துணிகிறான். அதிகாரத்தின் மூர்க்கத்தனமான ஒடுக்குமுறை காரணமாக இவன் தீவிரவாதிகளின் பக்கம் சென்று விடுவதாக இறுதிக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது.
அடித்தட்டு மக்களின் எந்தப் பிரச்னையையும் அரசாங்கம் கவனிக்காமல் போனால் அது தீவிரவாதம் வளர்வதற்கு அடிப்படையான காரணமாக இருக்கிறது என்கிற ஆதாரமான விஷயத்தை இந்தத் திரைப்படம் போகிற போக்கில் சுட்டிக் காட்டுகிறது.
கம்யூனிஸ இளைஞனுக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருத்திக்கும் இடையில் உருவாகிற காதல் காட்சிகளும் படத்தில் வருகின்றன. ஆனால் நடைமுறைச் சிக்கல் காரணமாக இந்த ஜோடி பிரிய வேண்டியிருக்கிறது. ஒரு ஆண் குளிப்பதை மறைந்திருந்து ஒரு பெண் ஆசையுடன் பார்க்கும் காட்சி, இந்தத் திரைப்படத்தில் மட்டும்தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தொழிற்சாலைக் கழிவுகள், கிணற்று நீரில் கலப்பதால் ஊர் மக்களுக்கு ஏற்படும் ஊனமும் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்களை கண்ணதாசனும் வைரமுத்துவும் எழுதியிருந்தார்கள்.
“கண்ணான பூ மகனே… கண்ணுறங்கு தூளியிலே’ என்கிற சுசீலா பாடிய பாடல் மிகப் பிரபலமானது. நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான வரிகளால் கண்கலங்க வைத்திருப்பார் வைரமுத்து. ‘என் கண்ணீர் பெருகிவந்து உன் உறக்கத்தைக் கலைக்கும் வரை.. தூங்கு மகனே..’ என்கிற வரிகளுடன் கூடிய இந்த தாலாட்டுப் பாடல், கிராமத்து மக்கள் அனுபவிக்கும் பல பிரச்னைகளின் வலுவான ஒற்றைச் சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது.

மழையை ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து போகும் ஊர் மக்கள், உற்சாகத் துள்ளலுடன் பாடும் ‘மேகம் திரளுதடி..’ பாடலும்.. அதன் முன்னோட்டமும் காட்சியமைப்பும் சுவாரசியமானது. சற்று மிகையான நாடக பாணியில் இருந்தாலும் மழைத்துளிகள் தன் மேல் பட்ட அனுபவத்தை சரிதா விவரிப்பது அற்புதமான காட்சி.
பி.எஸ்.லோக்நாத்தின் அற்புதமான ஒளிப்பதிவு, அந்த வறண்ட நிலத்தின் உஷ்ணத்தையும் வறட்சியையும் பல காட்சிகளின் வழியாக நமக்குள் எளிதாக கடத்திக் கொண்டு வந்து விடுகிறது.
விக்கலால் தவிக்கும் வெளியூர்க்காரன், தண்ணி கேட்டு தவிக்கும் போது ‘இந்த ஊர்ல இன்னொருத்தன் பொண்டாட்டியைக் கேட்டா கூட பாவமில்லை. குடிக்கத் தண்ணி கேட்கறது பெரும்பாவம்’ என்பது போன்ற வசனங்கள், அந்த ஊரின் வறட்சியை மிக ஆழமாக பிரதிபலிக்கின்றன.
அந்த வெளியூர்க்காரர் எடுக்கும் முயற்சியால் கிராமத்தின் குடிநீர் தேவை சிறிதளவில் தற்காலிகமாக பூர்த்தியாகிறது. ஆனால் அதே முயற்சியை கிராமத்து மக்கள் ஏன் தன்னிச்சையாக முன்பே எடுக்கவில்லை என்கிற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. அவர்களின் அறியாமையும் எளிதில் ஒன்றுபடாத தன்மையும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
தண்ணீர் எடுத்து வரும் ஆசாமி, போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பதை அறியும் கிராம மக்கள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் அவரால்தானே நமக்கு தண்ணீர் கிடைக்கிறது என்கிற நடைமுறையை உணர்ந்து அவரைப் பாதுகாப்பதாக முடிவெடுக்கும் காட்சி உணர்வுபூர்வமானது. குறிப்பாகக் காவல்துறையில் பணிபுரியும் தன் கணவரிடமிருந்து, வெள்ளைச்சாமியை மறைத்து வைக்க சரிதா எடுக்கும் முயற்சிகளும் தியாகங்களும் மனதை நெகிழ்விப்பதாக உள்ளன.
ஊருக்கே தண்ணீர் கொண்டு வந்த வெள்ளைச்சாமி, இறுதியில் தாகத்தினால் இறப்பது காவிய சோகத்துடன் கூடிய காட்சி.
அதிகார அரசியல், சாதி அரசியல், நீர் அரசியல் ஆகிய அனைத்துடனும் முட்டி முட்டி சோர்ந்து போன மக்கள், தன்னிச்சையாக ஆலோசனை செய்து தேனூத்திலிருந்து தங்களின் ஊருக்கு நீர் வருவதற்காக ஒரு பெரிய கால்வாயை வெட்டுகிறார்கள். ஒரு கிராமத்தின் மகத்தான உழைப்பில் நிறைவேறும் இந்தப் பணி, இறுதிக்கட்டத்தை அடையும் போது ‘இது சட்டவிரோதமான காரியம்’ என்று அரசு இயந்திரம் உள்ளே நுழைகிறது.
'பல முறை முட்டி மோதியும் எட்டிப் பார்க்காத அரசு, சொந்த முயற்சியில் பிரச்னையைத் தீர்க்க முனையும் போது இடையூறு செய்ய வந்து நிற்கிறதே’ என்று கிராமத்து மக்கள் கொதித்துப் போகின்றனர். ஆனால் அதிகாரம் காட்டும் மூர்க்கத்தின் முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
செவந்தி மறுபடியும் இருபது மைல் கடந்து நீர் சுமந்து வரும் துயரமான காட்சியோடு படம் முடிகிறது. எளியவர்களின் துயரம் எவராலும் தீர்க்கப்படாமல் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருப்பதுதான் என்கிற யதார்த்தமான வலியை இந்த இறுதிக்காட்சி நமக்குத் தருகிறது.
உலகப் போர்களின் காரணமாக, 1930-களில் பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்பட்ட காலகட்டம். பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழைக்கும் மக்கள் பணியிழந்து வறுமையில் வீழ்கின்றனர். அவர்களில் ஒருவன், அவர்களை ஒன்றிணைத்து ஒரு பண்ணையைச் சீர்ப்படுத்துகிறான். மழை பொய்த்துப் போவதால் அவர்கள் இணைந்து ஒரு பெரிய கால்வாயை வெட்டுகிறார்கள்.
மக்களின் ஒன்றிணைந்த அசாதாரண உழைப்பிற்கு எப்போதும் தோல்வியில்லை என்கிற நேர்மறையான காட்சியோடு அமெரிக்கத் திரைப்படம் நிறைகிறது. கால்வாய் பணி நிறைந்து நீர் விளைநிலைத்தில் பாய்வதை மக்கள் கொண்டாடும் காட்சியோடு படம் முடியும்.
கோமல் சுவாமிதாதன், இந்தத் திரைப்படத்தின் காட்சியால் தூண்டுதல் பெற்றிருக்கலாம். எனவே அதை தாம் எழுதிய நாடகத்தில் இணைத்திருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது.
வெகுசன திரைப்பட இயக்குநர்தான் என்றாலும் தன் திரைப்படங்களில் அசாதாரணமான கதைகளையும் களங்களையும் சமூகப் பொறுப்போடு கையாண்ட இயக்குநர்களில் முக்கியமானவர் கே.பாலசந்தர். இவர் திரைப்படங்களில் உள்ள மெலோடிராமா காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினர் சிலரால் கிண்டலடிக்கப்பட்டாலும், அப்போதைய காலகட்டத்தின் பின்னணியில் இணைத்துப் பார்க்கும் போதுதான் பாலசந்தரின் மகத்தான பங்களிப்பு நமக்குப் புரியும். அதன் முக்கியமான சாட்சி ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம்.

தண்ணீர்ப் பிரச்னையை இந்த அளவிற்கு மிக ஆழமாக பேசிய படத்தைப் போன்று வேறொரு திரைப்படம் இதுவரை கூட உருவாகவில்லை என்பதிலிருந்து பாலசந்தர் பெரிய முன்னோடிப் படைப்பாளி என்பதை நம்மால் உணர முடியும்.
தமிழ்ச் சமூகத்தின் ஓர் ஆதாரமான பிரச்னையை மிக நியாயமாகவும் ஆழமாகவும் உரையாடிய திரைப்படம் என்கிற வகையில் ‘தண்ணீர் தண்ணீர்’ இன்றும் கூட ஒரு முக்கியமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்தை முதலில் பார்த்த அனுபவத்தையும் இது குறித்த உங்களின் விமர்சனத்தையும் கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.