Published:Updated:

``அவங்க வருத்தப்படுறதைப் பார்த்தால்தான் வருத்தமா இருக்கு..!’’ - தேசிய விருது குறித்து மாரி செல்வராஜ்

Tamil Films

பாலுமகேந்திரா சார் சொல்லுற மாதிரிதான் சொல்லணும். `உலகத்துக்கே பிடிச்ச ஒரு படம், அதைக் கடைசியா பார்த்த அந்த நாலு பேருக்கு மட்டும் பிடிக்கலை’னுதான் எடுத்துக்கணும்.

Published:Updated:

``அவங்க வருத்தப்படுறதைப் பார்த்தால்தான் வருத்தமா இருக்கு..!’’ - தேசிய விருது குறித்து மாரி செல்வராஜ்

பாலுமகேந்திரா சார் சொல்லுற மாதிரிதான் சொல்லணும். `உலகத்துக்கே பிடிச்ச ஒரு படம், அதைக் கடைசியா பார்த்த அந்த நாலு பேருக்கு மட்டும் பிடிக்கலை’னுதான் எடுத்துக்கணும்.

Tamil Films

பொதுவாக தேசிய விருதுகள் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுவது ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாகிவிட்டது. லாபி செய்து விருது வாங்குவது, விருது தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விருது கொடுப்பது, அரசியல் அல்லது வணிக எதிர்பார்ப்புகளை நோக்கமாகவைத்து விருது வழங்குவது என, விமர்சனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அண்மைக் காலங்களில்கூட முருகதாஸ் போன்ற சில திரைப் பிரபலங்கள் தேர்வுக்குழு மீது வெளிப்படையாகவே விமர்சனம் வைத்தனர்.

தனுஷ்
தனுஷ்

அதேபோல சில முறை இப்படிப்பட்ட விமர்சனங்கள் சில வலுவான எதிரொலியையும் கண்டுள்ளன. `ரிக்‌ஷாகாரன்' படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டபோது அதை எதிர்த்து பின்னர் எழுந்த விமர்சனங்கள் அந்த விருதை, தான் திருப்பிக் கொடுக்கப்போவதாக எம்.ஜி.ஆரைச் சொல்லவைத்தன. என்றாலும், அது அதிகாரபூர்வமாக திருப்பித் தரப்படவில்லை என்பது வேறு.

கடந்த இரண்டாண்டுகளில், தமிழ்த் திரையுலகத்திலிருந்து வெளியான, புதிய முயற்சிகள் மேற்கொண்ட எந்தப் படத்துக்கும் ஒரு விருதுகூட கிடைக்காதது மீண்டும் இதுபோன்ற விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அதிலும் கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்த் திரையுலகம் மாற்று சினிமா நோக்கிய பயணத்தை மிகத் தீவிரமாகவே மேற்கொண்டிருக்கிறது. `மாநகரம்', `குரங்கு பொம்மை', `8 தோட்டாக்கள்', `லென்ஸ்', `தரமணி', `96', `பேரன்பு', `பரியேறும் பெருமாள்', 'கனா', `2.0', `வடசென்னை' என, சர்வதேசத் தரத்தில் பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் எல்லாம், பல பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாக்களில் பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றன, இன்னமும் குவித்தும்வருகின்றன.

96
96

வாழ்வியலைப் படமாக்குவதில் தமிழ், மலையாளம், பெங்காலி மொழித் திரைப்படங்கள் இந்தியாவிலேயே முன்னோடிகள் எனலாம். இந்த ஆண்டு, இந்த மூன்று மொழிகளும் சேர்த்தே ஏழு விருதுகள்தாம் பெற்றுள்ளன. அதிலும் மூன்று விருதுகள் அந்தந்த மொழிகளில் வந்த சிறந்த படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள். பொதுப்பிரிவுகளில் பெங்காலி மற்றும் மலையாள மொழிப்படங்கள் தலா இரண்டு விருதுகள் மட்டுமே பெற்றுள்ளன. தமிழுக்கு இந்தப் பிரிவுகளில் ஒரு விருதுகூட வழங்கப்படவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கட்சிக்குப் பெரிதாக ஆதரவு அளிக்காத தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி மொழி திரைக்கலைஞர்களை வேண்டுமென்று புறக்கணிக்கவே இப்படிப்பட்ட சூழல் ஏற்படுத்தப்படுகின்றன என்ற ஒரு மேலோட்டமான கருத்து சொல்லப்படுகிறது. அதிலும், கடந்த ஆண்டு ராம், வெற்றிமாறன், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் உட்பட பலத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் தமிழ்த்தேசிய இயக்கங்களுடன் இணைந்து காவிரி சிக்கலுக்காக ஐபிஎல்லை எதிர்த்துப் போராடினர். அதேபோல இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தியா முழுவதிலுமிருந்து பல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், `பா.ஜ.கவைப் புறக்கணிப்போம்’ என வெளிப்படையாகவே இரு முன்னெடுப்பை மேற்கொண்டனர். அதிலும் பல தமிழ் இயக்குநர்கள் பங்கெடுத்தனர். அதன் தாக்கம்தான் இப்படி இருக்கிறது என்பது பல திரை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஐபிஎல் போராட்டம் நடந்த அடுத்த ஒருவார காலத்தில்தான், கடந்த ஆண்டு தேசிய விருது வெற்றியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசியலில் எல்லாம் ஈடுபடாதவர் இயக்குநர் ஷங்கர். `காதலன்', `இந்தியன்', `ஜீன்ஸ்', `அந்நியன்', `சிவாஜி', `எந்திரன்' என இதுவரை அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அல்லது கலை இயக்கம் பிரிவில் விருதுவாங்கிவிடும். ஆனால், இந்தியாவின் முதல் நேட்டிவ் 3டி படமான `2.0'க்குக்கூட அந்த ஷங்கரின் வழக்கமான விருது கிடைக்காதது பலருக்கு ஏமாற்றமே.

2.0
2.0

தன் படத்துக்கு விருது வழங்கப்படாதது குறித்து, `பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜிடம் கேட்டபோது, ``இதுபத்தி நிறையபேர் என்கிட்ட கேட்டாங்க, நான் மூன்று நாளா யாருக்கும் பெருசா பதில் சொல்லாம தவிர்த்துட்டே வந்தேன். ஏன்னா எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. என் படத்துக்கு விருது கிடைக்காததைப் பத்தி நான்கூட பெருசா வருத்தப்படல. நான் புது இயக்குநர். எனக்கு என் படத்துக்கு விருது கிடைக்குமா கிடைக்காதான்னுகூட முதல்ல தெரியாது. ஆனா இண்டஸ்ட்ரீல எனக்கு முன்னோடிகளான எங்க டைரக்டர் ராம் சார், ரஞ்சித் சார், வெற்றிமாறன் சார் எல்லாருக்குமே `பரியேறும் பெருமாளு'க்கு விருது கிடைக்காதது ஒரு பெரிய வருத்தம். அவங்க வருத்தப்படுறதைப் பார்த்தால்தான் எனக்கு வருத்தமா இருக்கு," என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ``பாலுமகேந்திரா சார் சொல்லுற மாதிரிதான் சொல்லணும். `உலகத்துக்கே பிடிச்ச ஒரு படம், அதைக் கடைசியா பார்த்த அந்த நாலு பேருக்கு மட்டும் பிடிக்கலை’னுதான் எடுத்துக்கணும். ஒண்ணு அந்த நாலு பேரு, இல்லைனா அதுக்கு முன்னாடி உள்ள தேர்வுநிலையில இருந்த நாலு பேரு, இல்லைன்னா அதுக்கும் முன்னாடி இருந்தவங்க. இதுல ஏதோவொரு நிலையில இருந்த நாலுபேருக்கு அந்தப் படம் புடிக்கல. ஆனா உலகத்துக்கே படம் பிடிச்சிருக்கு. அப்படித்தான் எடுத்துக்க முடியும்" என்றார்.

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள்

இதன் பின்னால் ஏதும் அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டபோது, ``எது வேணும்னாலும் காரணமாக இருக்கலாம். ஏன்னா ஒரு மொழியில வந்த எல்லா படங்களையும் ஒட்டுமொத்தமா புறக்கணிச்சிருக்காங்கன்னா நாம அங்க என்ன காரணத்த வேணும்னாலும் பொருத்திப்பார்க்கலாம்ல. ஏன்னா, என் படம் மட்டுமில்லாம `வடசென்னை’, `பேரன்பு’, `காலா’ மாதிரி பெரிய இயக்குநர்கள் எடுத்த படங்கள், மிகத் தீவிரமாக நேரடியாக அரசியல் பேசிய படங்கள்னு பல படங்களைப் புறக்கணிச்சிருக்காங்க. அப்படினா அரசியல் காரணம், தனிமனித காரணம்னு எதுவேணும்னாலும் சொல்லலாம். நீண்ட காலத்துக்குப் பிறகு 2018-ஐத்தான் தமிழ் சினிமாவின் பொற்காலம்னு சொன்னாங்க. ஆனா அந்தப் பொற்காலத்துல ஒரு தமிழ்ப் படம்கூட விருதுக்குத் தகுதியில்லைனு சொல்லுறமாதிரி இருக்கு. வெளிப்படையா பார்த்தா தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் இடையில இருக்குற தூரம்தான் தெரியுது" எனக் கூறிமுடித்தார் மாரி.

அதேபோல `பேரன்பு' இயக்குநர் ராமிடம் இதுகுறித்து கருத்து கேட்டபோது, ``என் படம் அங்க போட்டியில இருந்திருக்கு. அதனால நான் எதுவும் பேசவிரும்பல. இதப்பத்தி நோ கமென்ட்ஸ்", எனக் கருத்துகூற மறுத்துவிட்டார்.

பேரன்பு
பேரன்பு

கடந்த ஆண்டு விருதுத் தேர்வுக்குழுவில் இருந்த தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளைக் குறித்து கேள்வி கேட்டபோது, ``நான் விருதுக்குழுவுல இருந்திருக்கேன், அந்த அனுபவத்துல சொல்றேன், இங்க அரசியல் தலையீடு, லாபியெல்லாம் ஒண்ணுமே கிடையாது. எல்லாமே வெறும் விவாதம் சார்ந்ததுதான். `பேரன்பு', `பரியேறும் பெருமாள்' ரெண்டு படத்துக்கும் விருது கிடைக்காதது எஙகளுக்கே ஒரு பெரிய அதிர்ச்சிதான். மற்றபடி `வடசென்னை' படத்த கண்டிப்பா அதீத வன்முறையான படமா இருக்குன்னு சொல்லித்தான் தேர்வு செய்யாம இருந்திருப்பாங்க," என்றார்.

அப்படியென்றால் இங்கே என்ன சிக்கல். அதுவும் வடசென்னை அதீத வன்முறையாக இருந்தாலும் அது ஒரு வாழ்வியலைக் குறித்த படம்தானே என்றேன். ``ஆமா. அது ஒரு வாழ்வியலைப் பேசுன படம்தான். தமிழ் சினிமாவுல இருக்குற ஒரு முக்கியமான படம்தான். ஆனா அதையெல்லாம் யாரு எடுத்துச் சொல்லுறது? முதல்ல இங்க தமிழ் சினிமாவுக்கான சரியான பிரதிநிதித்துவம் இருந்ததா? நான் அந்தக் கமிட்டில உறுப்பினாராக இங்க இருந்து கிட்டத்தட்ட 10 இயக்குநர்களைப் பரிந்துரை செஞ்சேன். ஆனா யாருக்கும் அங்க போய் 25 நாள் தங்கி 90 படங்களைப் பார்த்து தமிழ் சினிமாவுக்காகப் பேசிப் போராட நேரமில்லை. அப்படி யாராவது ஒரு இயக்குநர் போனாதான் விருது கிடைக்கும். நான் தயாரிப்பாளரா அந்தக் கமிட்டியில உறுப்பினரா இருந்த சமயத்துலயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு `காற்றுவெளியிடை' படத்துக்காக விருதுன்னதும் எல்லாரும் சரின்னு சொன்னாங்க. ஆனா நான் சொன்ன வேறு சில பேருக்கு, `சார் நீங்க ஒரு தயாரிப்பாளரா பேசுறீங்க'ன்னு சொல்லி விட்டுட்டாங்க. நம்ம தமிழ்ப் படத்துக்கு சரியா ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னா இங்கயிருந்து நல்ல வலுவா பேசக்கூடிய ஓர் இயக்குநர் போனாதான் எல்லா நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கும்."

வடசென்னை
வடசென்னை

இதுக்குப் பேரு லாபி இல்லையா எனக் கேட்டபோது, ``இல்லவே இல்ல. இதுக்குப் பேரு ரெப்ரஸன்டேஷன். அத்தனை இயக்குநர்களும் 25 நாள் செலவழிக்க மறுத்ததுனாலத்தான் கடைசியில பல வருஷமா சினிமாவுல பெருசா பணிபுரியாத கார்த்திக் ராஜான்னு ஒரு ஒளிப்பதிவாளரக் கூப்பிட்டுக்கிட்டாங்க. ஏன்னா எல்லா மொழியிலையும் இருந்து ஒரு பிரதிநிதித்துவம் இருக்கணும்ங்கிறது அடிப்படை விதி. பாலுமகேந்திரா அந்த கமிட்டியில இருந்தப்போ சண்டைபோடுவார். பாரதிராஜா அவ்ளோ விவாதம் பண்ணுவார். அதேமாதிரிதான் ப்ரியதர்ஷன். அவங்கல்லாம் தேர்வுக்குழுவுல இருந்த காலத்துல அவங்க பேசுனாலே மற்றவங்க அமைதியாகிடுவாங்க. தமிழுக்கும் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைத்தது. அப்படி ஒரு இயக்குநர் இப்போ போகத் தயாரா?" எனக் கேள்விகேட்டார்.