Published:Updated:

“சமூகத்தின் மனச்சாட்சியை ‘விட்னஸ்’ உலுக்கியிருக்கிறது!”

தீபக்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபக்

இது கம்யூனிஸ்ட்களை முதன்மைப்படுத்துகிற படம் என்று அவர்கள் நினைப்பதால் மௌனம் காக்கலாம். ஆனால், தூய்மைப்பணியாளர்கள் குறித்த அம்பேத்கரின் மேற்கோளுடன்தான் படமே தொடங்குகிறது.

முதல் படத்திலேயே சமூகம் கவனம் குவிக்க வேண்டிய விஷயத்தில் கரிசனம் செலுத்தியவர் ‘விட்னஸ்' பட இயக்குநர் தீபக். மலக்குழி மரணங்களின் பின்னுள்ள அரசியல் பிரச்னைகளைப் பதிவு செய்த படம் தந்தவரிடம் பேசினேன்.

``ஒளிப்பதிவாளர், இயக்குநராக நீங்கள் உருவான கதையைச் சொல்லுங்கள்...’’

‘‘சொந்த ஊர் தஞ்சாவூர். விஸ்காம் படித்து முடித்து பல பத்திரிகைகளுக்கு ப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினேன். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைத் தலைவர் பேராசிரியர் மு.இராமசுவாமிதான் என்னை ஒளிப்பதிவுக்கலை படிக்கத் தூண்டினார். எல்.வி.பிரசாத் அகாடமியில் பாலுமகேந்திரா, சன்னி ஜோசப் போன்ற பல ஆளுமைகளின் வழிகாட்டலின்கீழ் படித்தேன். ‘கலகக்காரர் தோழர் பெரியார்' உள்ளிட்ட மு.இராமசுவாமி மேடையேற்றிய பல நாடகங்களுக்குப் புகைப்படக் கலைஞராகப் பயணித்தேன். கன்னட இயக்குநர் எம்.எஸ்.சத்யு, மீரா ஜாஸ்மினை வைத்து இயக்கிய ‘இஜுடு' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஜி.எஸ்.பாஸ்கரின் உதவியாளராகப் பணிபுரிந்தேன். ‘அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தில் தேனி ஈஸ்வரிடம் உதவி ஒளிப்பதிவாளர், ‘மின் பிம்பங்கள்' பால கைலாசத்திற்கான ஆவணப்படப் பணிகள், சோகோ நிறுவனத்திற்கான ஆவணப்படங்கள், ஒளிப்பதிவாளர் பௌசியாவுடன் இணைந்து விளம்பரப்படங்கள் எனப் பல்வேறு பாதைகளில் பயணித்திருக்கிறேன். ‘ஹோரா ஹோரி' தெலுங்குப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறேன். இந்த எல்லா அனுபவங்களுமே பல விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கின்றன.’’

“சமூகத்தின் மனச்சாட்சியை ‘விட்னஸ்’ உலுக்கியிருக்கிறது!”

``இயக்குநராக முதல் படம். மலக்குழி மரணங்கள் குறித்து ‘விட்னஸ்' எடுக்கும் தைரியம் எப்படி வந்தது?’’

‘‘பல்வேறு களங்களில் பணிபுரிந்தாலும் சமூக அக்கறை என்பது என் அடிநாதமாக இருந்தது. தனிமையை மையப்படுத்தி ‘nobody's darling' என்ற குறும்படத்தை இயக்கியிருந்தேன். அதைப் பார்த்து தமிழின் முக்கியத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. வாய்ப்பு உறுதியாகிக் களவேலைகளை நானும் வசனகர்த்தா முத்துவேலும் தொடங்கிவிட்டோம். இடையில் அந்தப் படம் ஆரம்பிக்காமலே நின்றுபோனாலும் மூன்றரை ஆண்டுகள் நான் விடாமல் களப்பணிகளைத் தொடர்ந்தேன். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் விஜயானந்த், செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த தோழர் சீனுவை அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களைச் சந்தித்துப் பேசினோம். ‘கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, மலக்குழி மரணங்களைப் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் பழனிக்குமார் ஆகியோரின் நட்பு கிடைத்தது. கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மலக்குழியில் மரணமடைந்தபோது பழனிக்குமாருடன் நான் சென்றேன். கோவையின் மையப்பகுதியில் இருந்து வெள்ளலூர் என்ற புறநகர்ப் பகுதிக்கு விசிறியடிக்கப்பட்ட அவர்களின் துயரம் அறிந்தேன்.

இதேபோல் சென்னையிலும் அடித்தட்டு மக்கள் குடியேற்றப்பட்ட செம்மஞ்சேரி பற்றி அறிய விரும்பினேன். விஜயானந்த் மூலம் தோழமை தெய்வநாயகம் என்ற தன்னார்வ நிறுவன ஊழியர் உதவியுடன் செம்மஞ்சேரி குழந்தைகளுக்குப் புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே அவர்களின் வாழ்க்கையை நான் கற்றுக்கொண்டேன். ஏற்கெனவே தெலுங்கு சினிமாவில் பரிச்சயம் இருந்ததால் ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி' நிறுவனத்திடம் கதை சொன்னேன். வணிக அம்சங்கள் இல்லாத சமூக அக்கறையுடைய கதை என்றாலும் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு முன்வந்த தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத், இணை தயாரிப்பாளர் விவேக் குச்சிபோட்லா மற்றும் எக்ஸ்க்யூட்டிவ் புரொட்யூசர் நட்ராஜ் பிள்ளை ஆகியோர்தான் ‘விட்னஸ்' உருவாகக் காரணம். அவர்களுக்கு நன்றிகள்.

“சமூகத்தின் மனச்சாட்சியை ‘விட்னஸ்’ உலுக்கியிருக்கிறது!”

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்தார். முதல்நாள் மதியம் 2 மணிக்குத் தொடங்கும் படப்பிடிப்பு மறுநாள் காலை 6 மணிக்கு முடிந்தாலும் முழுமனத்துடன் ஒத்துழைத்தார் நடிகை ரோகிணி. படத்தின் முக்கியமான போராளி பாத்திரத்துக்கு உண்மையான களச்செயற்பாட்டாளரே நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த நான், 2018-லேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை செயலாளர் தோழர். ஜி.செல்வாவிடம் சொல்லிவிட்டேன். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். செம்மஞ்சேரி மக்களும் பல காட்சிகளில் நடித்திருந்தார்கள். ‘விட்னஸ்' பலபேரின் கூட்டுழைப்பால் உருவான படைப்பு ஆவணம். இத்தனைபேரின் ஒத்துழைப்பு இந்த வெற்றியைச் சாதித்திருக்கிறது.’’

“சமூகத்தின் மனச்சாட்சியை ‘விட்னஸ்’ உலுக்கியிருக்கிறது!”

``தலித் சினிமா பற்றிப் பேசக்கூடிய பலரே ‘விட்னஸ்' திரைப்படம் குறித்து மௌனம் காக்கிறார்களே?’’

‘‘இது கம்யூனிஸ்ட்களை முதன்மைப்படுத்துகிற படம் என்று அவர்கள் நினைப்பதால் மௌனம் காக்கலாம். ஆனால், தூய்மைப்பணியாளர்கள் குறித்த அம்பேத்கரின் மேற்கோளுடன்தான் படமே தொடங்குகிறது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் மூவரின் சிந்தனை வழிகாட்டுதல்களும் சமூக மாற்றத்துக்கு முக்கியம் என்று நினைப்பவன் நான். ஆனால் தலித் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டுப் போகக்கூடாது என்று நினைக்கும் குறுகிய மனோபாவம், கம்யூனிஸ்ட்கள் போன்ற சமூக ஜனநாயகச் சக்திகளிடமிருந்து விலகல் மனப்பான்மை, தலித் மக்களுக்குள்ளும் நிலவும் உட்சாதி முரண்கள் இவையெல்லாம்தான் இந்த மௌனத்தின் பின்னால் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அவர்கள் பேசாவிட்டால் பரவாயில்லை. மலக்குழி மரணங்களில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் சமூகவலைதளங்களில் இந்தப் படம் பற்றி எழுதுகிறார்கள். சமூகத்தின் பலதரப்பைச் சேர்ந்தவர்களின் மௌனங்களையும் இந்தப் படம் உடைத்திருக்கிறது. அந்தவகையில் சமூகத்தின் மனச்சாட்சியை ‘விட்னஸ்' உலுக்கியிருக்கிறது என்பது மகிழ்ச்சிதான்!’’

அழுத்தமாய்ப் புன்னகைக்கிறார் தீபக்.