Published:Updated:

விட்னஸ் - சினிமா விமர்சனம்

விட்னஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
விட்னஸ் - சினிமா விமர்சனம்

முதல் படத்திலேயே சமூகம் கவனிக்க வேண்டிய கனமான விஷயத்தை சமரசமின்றிப் பதிவு செய்த அறிமுக இயக்குநர் தீபக்குக்குப் பாராட்டுகள்.

மலக்குழி மரணங்கள் என்னும் சமகால அநீதிக்கு எதிரான குரலே இந்த ‘விட்னஸ்.'

சென்னையின் மையப்பகுதியில் இருந்து செம்மஞ்சேரிக்கு விசிறியடிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர் இந்திராணியின் (ரோகிணி) மகன் பார்த்திபன் (தமிழரசன்) நீச்சல் பயிற்சியாளர். திடீரென்று ஒருநாள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. தன் மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களை எதிர்த்து ஒரு தாய் நடத்தும் நீதிக்கான போராட்டமே மீதிக் காட்சிகளாக விரிகின்றன.

விட்னஸ் - சினிமா விமர்சனம்

மகனை இழந்து உடைந்து நொறுங்கும் தாயாக, மகனின் மரணத்துக்கு நீதி கோரி உறுதியுடன் போராடும் போராளியாக, தூய்மைப்பணியாளராகப் பல்வேறு அவமானங்களை எதிர்கொள்ளும் தொழிலாளியாக என்று இந்திராணி என்னும் பாத்திரமாகவே மாறியிருக்கிறார் ரோகிணி. தமிழரசன் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். கட்டுமானப் பொறியாளராக இருந்து ரோகிணியின் போராட்டத்துக்குத் தோள்கொடுக்கும் பெண்ணாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் துணிச்சல் முகம் காட்டியிருக்கிறார். நிஜத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியாக இயங்கும் ஜி.செல்வா, படத்திலும் போராட்டங்களை முன்னெடுக்கும் கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறார். சண்முக ராஜன், ஸ்ரீநாத், ராஜீவ் ஆனந்த், சுபத்ரா ராபர்ட், அழகம்பெருமாள் எனப் பலரும் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இயக்கத்துடன் இணைந்து தீபக்கின் கேமரா பரந்துபட்ட சென்னையின் நிலப்பரப்பையும் அடர்த்தியான நீதிமன்ற அறைகளையும் படம் பிடித்திருக்கிறது. துயரின் வலியை இசையாய் மாற்றியிருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி.

முதல் படத்திலேயே சமூகம் கவனிக்க வேண்டிய கனமான விஷயத்தை சமரசமின்றிப் பதிவு செய்த அறிமுக இயக்குநர் தீபக்குக்குப் பாராட்டுகள். மலக்குழி மரணங்கள் என்பதைச் சில காட்சிகள் வழியாக மட்டும் சொல்லி நகராமல் அதற்கான காரணங்கள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தை ஒழிப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் குறைபாடுகள், அரசு இயந்திரத்தின் அலட்சிய மனப்பான்மை என்று பல விஷயங்களை நீதிமன்றக் காட்சிகள் விளக்குகின்றன. குறிப்பாக க்ளைமாக்ஸ், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அதிர்ச்சியைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.

விட்னஸ் - சினிமா விமர்சனம்

அதேநேரம் முதல்பாதியில் ஆங்காங்கே ஆவணப்படத் தன்மை தலைகாட்டுகிறது. நீதிமன்றக் காட்சிகளில் எதிர்த் தரப்பு வாதங்களை அழுத்தமாகக் காட்சிப்படுத்தாததால், அதிகார வர்க்கத்தின் தந்திரங்கள் சரியாகப் பதியப்படவில்லை.

இப்படி சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் ‘மலக்குழி மரணங்கள் தொடர்பான வழக்கில் இதுவரை ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை' என்ற எதார்த்தத்தை நம் முகத்தில் அறைந்து சொல்வதுடன் இந்த மானுடத்துயரத்துக்கு நம்மையும் சாட்சி ஆக்கிவிடுகிறது இந்த ‘விட்னஸ்.'